இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1119மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1119)

பொழிப்பு: திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

மணக்குடவர் உரை: மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக.
இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத் தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: மலர் கண்ணாளின் முகம்போல் ஆகவிரும்பின் திங்களே! பலர் பார்க்கத் தோன்றாதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி.


மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்:
பதவுரை: மலர்-பூ; அன்ன-போன்ற; கண்ணாள்-கண்களையுடையவள்; முகம்-முகம்; ஒத்தியாயின்-ஒத்திருக்கவேண்டுகின்றாயானால்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின்;
பரிப்பெருமாள்: நீ மலர்போலுங் கண்ணினை யுடையாளது முகத்தை ஒப்பையாயின்;
பரிதி: செங்கழுநீர் போலும் கண்ணாள் முகத்திற்கு நிகராவை யாகில்;
காலிங்கர்: நீ இக்குவளை மலரன்ன கண்ணினை உடையாளது முகத்தை ஒப்பதோர் ஒளிநலம் உடையையாயின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்;

'மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்துக்கு ஒப்பானால்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'காதலியின் முகத்தை ஒக்க விரும்பினால்' என்று பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இம்மலர் போன்ற கண்களையுடைய இவள் முகத்தை ஒத்திருக்க விரும்புவாயானால்', 'மலர்போலுங் கண்ணையுடைய இவளது முகத்தை ஒத்திருக்க வேண்டுமானால்', 'மலர் போலும் கண்களையுடையாள் முகத்தை நீ ஒக்க விரும்புவாயானால்', 'மலர் போன்ற கண்ணுள்ள என் காதலியின் முகம்போல் பிரகாசமுள்ள பெண்ணாக நீ மாறிவிட்டால்' என்றபடி உரை தந்தனர்.

மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒத்திருக்க விரும்பினால் என்பது இத்தொடரின் பொருள்.

பலர்காணத் தோன்றல் மதி:
பதவுரை: பலர்-பலர்; காண-பார்க்க; தோன்றல்-வெளிப்படாதே; மதி-திங்கள்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலர் காணுமாறு தோன்றாதொழிக மதியே!
மணக்குடவர் கருத்துரை: இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.
பரிப்பெருமாள்: பலர் காணுமாறு தோன்றாதொழிக மதியே!
பரிப்பெருமாள் கருத்துரை: இது மதி ஒளியும் வடிவும் ஒருவாற்றால் ஒத்தது ஆயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.
பரிதி: பலர் காணத் தோன்றல் மதி என்றவாறு.
காலிங்கர்: இவள்போல் ஒரு வரம்பினை யுளவாய் ஓரிடத்து உறைதல் அன்றி இங்ஙனம் யாவரும் காணத் தோன்றக்கடவையல்ல மதியே! என்று மற்று அவள் கேட்ப இங்ஙனம் கூறினான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: இதுபோல யான் காணத் தோன்று மதியே; ; பலர் காணத் தோன்றாதொழி. பரிமேலழகர் கருத்துரை: தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.

'பலர் காணுமாறு தோன்றாதொழிக திங்களே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலரும் காணுமாறு நீ தோன்றாதே! நான் மட்டும் காணத் தோன்றுவாயாக மதியே', 'பலர் பார்க்கும்படியாகத் தோன்றாதே. நான் மட்டும் பார்க்கும்படி தோன்று மதியே!', 'மதியே பலர் காணுமாறு தோன்றுதலை ஒழிக', 'சந்திரனே! அதன் பிறகு இப்படிப் பலபேர் உன்னைப் பார்க்கும்படி வெளியே திரியக்கூடாது' என்றபடி பொருள் உரைத்தனர்.

பலரும் காணும்படி தோன்றாதே நிலவே! என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
என் காதலி பூண்ட நாண் நலமே அவளுக்குத் திங்கள்போல் ஒளி தருகிறது எனக் கூறும் பாடல்.

மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒத்திருக்க விரும்பினால், பலர்காணத் தோன்றல் நிலவே! என்பது பாடலின் பொருள்.
ஏன் பலர்காணத் தோன்றல் என்கிறான் காதலன்?

ஒத்தியாயின் என்பதற்கு ஒப்பாக விரும்புவாயானால் என்பது பொருள்.
தோன்றல் என்ற சொல் தோன்றாதே என்ற பொருள் தரும்.

நிலவுடன் இன்னும் சிறுது நேரம் கொஞ்சி உரையாட விரும்புகிறான் அவன். 'உன் முகத்தில் உள்ள களஙகம் போல் என் காதலிக்கு இல்லை; நீயும் என் காதலியின் முகத்தைப் போல் ஒளிவீச இயலுமானால் நானும் உன்னை விரும்புவேன்' என்று முன்னர் குறும்பாகக் கூறினான். காதலியைப் போல் திங்களுக்கு ஒளியில்லை என்று சொன்ன பிறகு நிலவுக்கு ஒரு அழகுக் குறிப்பு தருகிறான். 'என் காதலி முகம் ஒப்பதோர் ஒளிநலம் உடையையாயின் பலர் காணத் தோன்றாமல் இரு' என்கிறான். 'என் காதலியின் முகத்துக்கு அவள் அணிந்த நாண் என்னும் நற்குணமே ஒளிதருகிறது. நிலவே நீயும் நாண் பூண்டு பொதுவில் தோன்றாமல் இருந்தால் என் காதலியினது போன்ற முகப்பொலிவு பெறுவாய்' என்று நிலவுக்குத் தன் தலைவியின் ஒளிதிகழ் முகப்பொலிவு பற்றிப் பெருமிதத்துடன் பேசுகிறான்.

தலைவியின் முகம் நிலாவைவிட ஒளி மிகுந்து விளங்கக் காரணம் நிலாவுக்கு இல்லாத நாணம் உடையவள் என் காதலி என்று அவன் புகழ்ந்து உரைப்பதாக இச்செய்யுள் அமைந்தது.

பலர் காணத் தோன்றக்கூடாது என்று ஏன் காதலன் கூறுகிறான்?

பலர் காணத் தோன்றல் என்றால் பலரும் காணும் படி தோன்றாதே என்று பொருள். நிலவு பலர் காண்பதற்காகவே உண்டானதாயிற்றே!ஏன் காதலன் இப்படிக் கூறுகிறான் என்பதை உரையாசிரியர்கள் பலவிதமாக விளக்கினர்.

மணக்குடவர் 'மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது; என்று காரணம் கூறினார். மணக்குடவர் என்ன குணம் என்று சொல்லவில்லை ஆயினும் அது நாணத்தைக் குறிப்பது என்று உரையாளர்கள் எடுத்துக் கொண்டனர்.
காலிங்கர் 'இவள்போல் ஒரு வரம்பினை யுளவாய் ஓரிடத்து உறைதல் அன்றி இங்ஙனம் யாவரும் காணத் தோன்றக்கடவையல்ல மதியே!' என்று விளக்கினார்.
பரிமேலழகர் 'தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது' என்று உரை கண்டார்.

பின் வந்தவர்கள் உரைகளும் மேற்சொன்ன 'நாணம் கொள்', 'வரையறையோடு தோன்று (ஒழுக்கத்தைக் கடைப்பிடி)'. 'அவள் அவனது உரிமைப் பொருளாய் இருப்பதுபோல் நான் மட்டும் பார்க்கத் தோன்று' என்ற இவற்றில் ஒன்றைச் சார்ந்தே அமைந்தன.
இன்னும் சிலர் தேய்தல்/வளர்தல்,களங்கம், உடையது திங்கள்; அதனால் தோன்றக்கூடாது என்று உரைத்தனர்.
பலர் பார்த்தால் அழகு குறையும்; ஒருவருக்கு மட்டும் தோன்ற வேண்டும் என்றபடியும் உரை உள்ளது.
தன் காதலியின் முகத்தை வேறு ஆடவர் கண்டு மகிழக்கூடாது என்று கருதும் ஆடவரின் பொறாமையுள்ளம் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது ஒரு கருத்து.
இன்னும் 'முகத்திரை இட்டுக்கொள்', 'பரத்தை மாதிரித் திரியாதே' என்பன போன்ற நயமற்ற உரைகளும் உள்ளன.

பெண்ணை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றோ, வந்தால் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வா என்றோ வள்ளுவர் கூறவே மாட்டார்; நாண் கொண்ட பெண்கள் பொதுஇடங்களில் பிற ஆடவர் முன்னிலையில் தொடர்ந்து காட்சிப் பொருளாக நிற்கும் நிலை தவிர்ப்பர்; அந்த நாண் பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும்; அதுபோல் நிலவே பொது இடத்தில் நீயும் தனித்திருக்கத் துணியாதே என்கிறான் காதலன் என்பது கருத்தாக அமையலாம்.

தலைவியின் முகம் நிலாவைவிட ஒளி மிகுந்து இருப்பதற்குக் காரணம் அவள் நாணம் உடையவளாய் இருப்பதுதான்; எனவே நிலவே நீயும் நாண் கொண்டு பலர் காணத் தோன்றாதே என்ற குறிப்பு கொண்டு காதலன் கூறுகிறான்.

மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒத்திருக்க விரும்பினால், பலரும் காணும்படி தோன்றாதே நிலவே! என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி தோன்றாதிருந்தால் நிலவு இன்னும் ஒளிமிகும் என்னும் நாண் நலம்புனைந்துரைத்தல் பாடல்.

பொழிப்பு

மலர் போன்ற கண்களையுடைய இவள் முகம்போல் ஆகவிரும்பின் திங்களே! பலரும் காணுமாறு தோன்றாதே.