இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1117



அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1117)

பொழிப்பு (மு வரதராசன்): குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளதுபோல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லையே!

மணக்குடவர் உரை: குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?
இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: குறைந்து நிறையும் திங்களுக்குப் போலக் காதலி முகத்தில் களங்கம் உண்டோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மாதர் முகத்து மறுவுண்டோ.

பதவுரை: அறு-குறைந்த; வாய்-இடம்; நிறைந்த-நிரம்பிய; அவிர்-ஒளிரும், விளங்கும்; மதிக்கு-திங்களின்கண்; போல-ஒத்திருப்ப; மறு-களங்கம்; உண்டோ-உளதோ; மாதர்-பெண், காதலி; முகத்து-முகத்தின்கண்.


அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல;
பரிப்பெருமாள்: குறைவு இடம் நிறைந்த ஒளிர்மதிக்குப்போல;
பரிதி: குறையாமல் நிறைந்த பூர்ணமதிக்கு;
காலிங்கர்: நாடொறும் நாடொறும் கலைகலையாக அற்று அற்றுச் செல்கின்ற அறுவாய் மற்றொரு வழியால் நிறைவு பெற்ற மதியன்றே, ஒவ்வொரு நாளும் விரிகின்ற மதியமானது மற்று அதுதானும் அற்று அங்ஙனம் நிறைந்தவிடத்து;
பரிமேலழகர்: (இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல;
பரிமேலழகர் குறிப்புரை: இடம் - கலை.

'குறைந்த இடம் வந்து நிரம்பி ஒளிரும் மதி போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குறைந்த இடமெல்லாம் நாளும் வளர்ந்து நிறைந்த ஒளி திகழும் மதிபோல்', 'பிரகாசத்தில் மூளியாக இருப்பதே அதிகமாக உள்ள சந்திரனுக்கு இருக்கிறது போல, 'அவ் உடுக்கள் அங்ஙனம் கலங்குவதற்குக் காரணம் யாது குறைந்தும் நிறைந்தும் விளங்கும் திங்களின்', 'முன்குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் இருப்பதுபோல', என்றபடி உரை தந்தனர்.

குறைந்து பின்னர் நிறைந்து ஒளிரும் திங்களிடம் உள்ளது போல என்பது இப்பகுதியின் பொருள்.

மறுவுண்டோ மாதர் முகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?
மணக்குடவர் குறிப்புரை: இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.
பரிப்பெருமாள்: இம்மாதர் முகத்து மறுவுண்டோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்கு இவள் முகத்து மறுவில்லையாகலான் மதி ஒவ்வாது என்று கூறியது.
பரிதி: மாதர் முகம்போல மறுவற்றதுண்டோ என்றவாறு.
காலிங்கர்: பின்னும் யாவரும் அறிய முயற்கை என்பதோர் அடைகறை உடைத்து; மற்று அம்மதிக்குப் போல ஒரு மறு உளதோ நம் மாதரால் திருமுகத்திங்கள் என்று இங்ஙனம் பின்னும் நுவன்றான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: இம்மாதர் முகத்து மறு உண்டோ? [மறு-களங்கம்]
பரிமேலழகர் குறிப்புரை: மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.

இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ? என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்பெண் முகத்தில் களங்கம் உண்டோ?', 'பெண்கள் முகத்தில் களங்கம் உண்டா? (இல்லை)', 'மறு உள்ளதுபோல இம்மாதினுடைய முகத்தில் மறுவுண்டோ? இல்லையே!', என்றபடி பொருள் உரைத்தனர்.

இப்பெண் முகத்தில் களங்கம் உண்டோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குறைந்து நிறைந்து ஒளிரும் திங்களிடம் உள்ளது போல இப்பெண் முகத்தில் மறு உண்டோ? என்பது பாடலின் பொருள்.
'அறுவாய் நிறைந்த' என்பது என்ன?

காதலி முழுநிலவாக ஒளிர்கின்றாள்.

தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகி விளங்கித் தோன்றும் மதிக்கு உள்ளது போல, இவள் முகத்தில் களங்கம் யாதும் உண்டோ? - தன் காதலியின் முகத்தில் அந்தக் குறை இல்லை என்று அவள் முக நலம் பாராட்டுகிறான்.
காட்சிப் பின்புலம்:
களவொழுக்கத்தில் காதலியுடன் கூடிப் பெற்ற இன்பத்தை நினைந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான் தலைவன். அவளுடைய மென்மைத் தன்மையையும். மலர் போன்ற அவளது கண்களையும் நினைவிற்கொள்கிறான்; பசுமூங்கில் தோள், தளிர்மேனி, முத்துப்போன்ற பற்கள், இயல்பான நன்மணம் காண்பாரை ஈர்க்கும் மையுண்ட கண்கள் என்றிவற்றை எண்ணத் தொடங்குகிறான்; காதலியின் கண்களின் அழகு குவளை மலரில் இல்லை என்று புனைந்துரைக்கிறான்; அனிச்ச மலரின் காம்பின் சுமையைக்கூடத் தாங்க முடியாதது அவளது இடை எனப் பாராட்டுகிறான். அடுத்து அவளது முக அழகைப் பேசுகிறான். அவளது முகநலம் விண்மீன்களையும் சிமிட்டவைத்ததாம்; எது மதி, எது அவளது முகம் என அறியமுடியாமல் அவை திகைத்தனவாம்.
இவ்வாறு தான் நெருக்கமாக உணர்ந்த, காதலுக்குரியவளின் உறுப்பு நலன்களை எண்ணிக் கொண்டிருக்கிறான்.

இப்போது:
முதலில் விண்மீன்களைப் பார்த்து இவை ஏன் கலங்குகின்றன என்று எண்ணினான் காதலன். பின் அவை தன் காதலியின் முகத்துக்கும் நிலவுக்கும் வேறுபாடு அறியாமல் கலங்கின என்று அமைதியுற்றான். பின்னும் ஒரு கேள்வி அவனுள் எழுகிறது. எப்படி நிலவும் அவள் முகமும் ஒப்பாகும்? நிலவு நாள்தோறும் தேய்ந்து பின் நாள்தோறும் வளர்ந்துதான் முழுநிலவாய் ஒளிர்கிறது. நிலவுக்கு மறு ஒன்றும் உள்ளது. ஆனால் தேய்தல்-வளர்தல், மறுஉள்ளமை என் காதலிக்கு உண்டோ என்று செறுக்குடன் கேட்கிறான். நிலவுக்கும் காதலிக்கும் ஒப்புமை இல்லை; களங்கமில்லாதிருப்பதால் திங்களைவிட காதலியின் முகமே ஏற்றமுடையது என்று அவளது முக அழகை உயர்வாகப் பேசுகிறான்.

மறு என்பது எதைக் குறித்தது என்பது பற்றி இரு திறமான விளக்கங்கள் உள.
'வானில் உலவும் திங்கள் தேய்வதும் வளர்வதும் உண்டு. களங்கமும் பெற்றுள்ளது' என்பது ஒருசாரார் உரை. இவ்வுரையின்படி தேய்தல்/வளர்தல், மறு என்ற இரண்டு குற்றங்களைக் கொண்டது திங்கள் என்பது; 'குறைக்கப்பட்ட பிறையாய் இருந்து, பிறகு அக்குறைப்பகுதி சிறுது சிறுதாய் நிறைந்து, முழுமதியாகி விளங்கும். அத்தகைய களங்கத்தையுடைய மதியைப்போல, இவள் முகத்தில் ஏதேனும் களங்கமுண்டோ?' என்று அமையும். இதன்படி தேய்வதும் வளர்வதுமே மறு எனப்படுவது என்பது மற்றொரு வகை உரை.
இவற்றுள் தேய்தலும் வளர்தலும் மறு உள்ளமையும் இல்லாத பெண் முகம் என்ற பொருளில் அமைந்த முதல் வகையான உரை சிறந்தது.
நிலவில் தோன்றும் இம்மறு முயல் போன்ற உருவத்தில் உள்ளது எனப் பழைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

'அறுவாய் நிறைந்த' என்பது என்ன?

நிலவின் இயற்கை அது நாளும் சிறுது சிறிதாக முழுவதுமாக மறைந்து பின்னர் நாடோறும் சிறிது சிறிதாக வளர்ச்சியுற்று முழுநிலவன்று நிறைவடிவாகத் காட்சியளிப்பது. அறு என்பது அப்படிக் குறைந்திருந்ததைக் குறிக்கும் சொல். வாய் என்பது இடம் என்ற பொருள் தரும். அறுவாய் என்றால் குறைந்த இடம்; நிறைந்த என்பது நிரம்பிய என்ற பொருளில் வந்தது. அறுவாய் நிறைந்த என்பது குறைந்த இடம் நிரம்பிய எனப்பொருள்படும். இது குறைந்த இடம் நிரம்பி நிலவு வளர்வதைச் சொல்வது.
காலிங்கர் 'அறுவாய் நிறைந்த' என்றதை அடுக்குத் தொடர்கள் பெய்து இவ்விதம் விரித்துரைக்கின்றார்: 'நாடொறும் நாடொறும் கலைகலையாக அற்று அற்றுச் செல்கின்ற அறுவாய் மற்றொரு வழியால் நிறைவு பெற்ற மதியன்றே, ஒவ்வொரு நாளும் விரிகின்ற மதியமானது மற்று அதுதானும் அற்று அங்ஙனம் நிறைந்தவிடத்து'.
திங்களின் தேய்வையும் வளர்ச்சியையும் 'கலை' என்னும் அளவு கொண்டு குறிப்பர். கலை என்ற சொல் நிலாவின் பதினாறு வளர்ச்சி/தேய்வுப் பகுதிகளில் ஒன்றைச் சுட்டுவது.

வட்டமாகாமல் குறையாக இருந்து படிப்படியாக வளர்ந்து முழுவட்டமாக நிறைவது போன்று தோன்றுவது திங்கள். (திங்கள் தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை என்பது அறிவியல் உண்மை.) கவிஞர் அதை ஒரு குறையாகக் கொண்டு கவிதை புனைகிறார். கலைகள் அனைத்தும் நிறைந்திருந்தும் இம்மதியிடத்துள்ள மறு மறையாத களங்கமாக அல்லவா இருக்கிறது! என்று காதலன் சொல்வதாக உள்ளது இப்பாடல்.

குறைந்து நிறைந்து ஒளிரும் திங்களைப் போல இப்பெண் முகத்தில் களங்கம் உண்டோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதலியினது களங்கமற்றது என முக நலம்புனைந்துரைத்தல்.

பொழிப்பு

தேய்ந்து வளரும் திங்கள்இடம் உள்ள மறு போலக் காதலி முகத்தில் களங்கம் உண்டோ?