இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1115



அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1115)

பொழிப்பு (மு வரதராசன்): அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

மணக்குடவர் உரை: அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை.
இஃது இடையினது நுண்மை கூறிற்று.

பரிமேலழகர் உரை: (பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது.) அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.
(அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலரின் காம்பினைக் கிள்ளியெறியாமல் சூடினாள்; அதனால் வருந்தும் அவளுடைய நுண்ணிய இடைக்குப் பறைகள் மங்கலமாக ஒலியா. (இடை முரிந்து இறந்துபடுவாள். ஆதலின் சாப்பறை ஒலிக்கும் என்பது கருத்து.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை.

பதவுரை: அனிச்சப்பூ-அனிச்ச மலர்; கால்-காம்பு; களையாள்-கிள்ளாதவளாக, நீக்காமல்; பெய்தாள்-இட்டாள், சூடினாள்; நுசுப்பிற்கு-இடுப்பிற்கு; நல்ல-நன்மையானவற்றை (அறிவிக்கும்); படாஅ-ஒலிக்க மாட்டா; பறை-தோலினால் செய்யப்பட்ட இசைக்கருவி.


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்:
பரிப்பெருமாள்: அனிச்சப்பூவைக் காம்புகள் கழற்றாது மயிரில் அணிந்தாள்:
காலிங்கர்: நெஞ்சே! தனது இடையின் மென்மை அறிந்தே பிற பூக்களின் நொய்தாகிய அனிச்சப்பூத் தன்கூந்தலுள் பெய்தாள்; ஆயினும் அதனைக் காம்பு கழற்றாதிட்டு முடித்தாள்' அஃது ஓர் அறியாமயுண்டு.
பரிமேலழகர்:(பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது.) இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்;

'அனிச்சப்பூவைக் காம்பு கழற்றாது தன் கூந்தலுள் அணிந்தாள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஓர் அனிச்சமலரைக் காம்புடன் சூடினாள்;', 'இவள் தன் மென்மையைக் கருதாது அனிச்சமலரைக் காம்பு எடுக்காது சூடினாள்', 'இவள் தன் மென்மை கருதாமல் அனிச்சப்பூவைக் காம்பினை நீக்காமல் தலையில் சூடிக்கொண்டாள்', 'மிகவும் இலேசான அனிச்ச மலரேயானாலும் அதன் காமபை நீக்காமல் தலையில் சூடிக்கொள்வானாளானால்' என்றபடி உரை தந்தனர்.

'அனிச்சமலரை காம்பைக் கிள்ளாது தன் தலையில் சூடினாள்' என்பது இத்தொடரின் பொருள்.

நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இடையினது நுண்மை கூறிற்று.
பரிப்பெருமாள் : ஆதலின் அவள் நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை.
பரிப்பெருமாள் குறிப்புரை:எனவே இனி நெய்தல் பறையே ஒலிப்பது என்றவாறாயிற்று. இஃது இடையினது நுண்மை கூறிற்று.
காலிங்கர்: அதனால் இனி இவள் நுசுப்பிற்குப் பறைஒலி நல்லவாக எழாபோலும் என்று இங்ஙனம் இறந்துபடுவாள் போலும் எனப் பெரிதும் ஆற்றான் தலைமகன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.
பரிமேலழகர் கருத்துரை: அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.

'இவளது இடை முரிந்து இறந்துபடுவாள். எனவே பறை நல்லதாக ஒலிக்கமாட்டா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா', 'அதன் பாரத்தால் இவள் இடை முறியக்கூடுமாதலால், நல்ல இயங்கள் இனி இவள் பொருட்டு ஒலிக்கமாட்டா', 'இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் முழங்கா. (செத்தாற்குரிய நெய்தற்பறையே முழங்கும்.)', 'அதன் பிறகு அவளுடைய இடையைப் பற்றி நல்ல பேச்சு பிறக்காது. (இடை ஒடிந்து போயிற்று என்ற துன்பச் சொல்தான் பிறக்கும்)' என்றபடி பொருள் உரைத்தனர்.

இடைக்கு பறை நல்லதாக ஒலிக்கமாட்டா என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
அனிச்சமலரை காம்பைக் கிள்ளாது தன் தலையில் சூடினாள்; இடைக்கு நல்ல படாஅ பறை என்பது பாடலின் பொருள்.
'நல்ல படாஅ பறை' குறிப்பது என்ன?

மலர்க்காம்பின் எடை தாங்காது தனது இடுப்பு ஒடிந்துவிடுமே என்பதை அவள் உணராமல் இருக்கிறாளே!

தன் இடையின் நுண்மையை நினையாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களையாமல் கூந்தலிலே அணிந்தாள்! இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா! என்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் இருக்கின்றனர். காதலியைக் கூடிப் பெற்ற இன்பத்தை நினைந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான் அவன். அவளது வெவ்வேறு உறுப்புக்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வருகிறான். கடைசியாக அவளது கண் அழகு பற்றிக் கூறினான். காதலியின் கண்களின் அழகு குவளை மலரில் இல்லை எனவும் அவளது கண்கள் குவளை மலரையே வெட்கப்படச் செய்து தலைகுனிந்து நிலம் நோக்க வைக்கும் எனவும் புனைந்தான்.

இப்போது:
தனது காதலியின் சிறுத்த இடை தலைவனுக்குப் பெருங்காதலை உண்டாக்கியது. இல்லை என்று சொல்லக்கூடிய அளவு தோற்றப் பொலிவு தருவது அது. ஆதலால் அவளது உடலின் மேற்பகுதியின் சுமையை அந்த மெல்லிடை தாங்குவது இயலாது என்று எண்ணுகிறான் அவன். ஆனால் இதைப்பற்றி கொஞ்சம்கூட நினையாமல், அனிச்ச மலரின் காம்பைக் கிள்ளாமல் தன் கூந்தலில் அணிகிறாள். தலைவியின் மலரணியைக் காணநேர்ந்த காதலன், காம்பின் சுமையைத் தாங்க முடியாமல் அவளது இடை இறுத்துவிடுமே என்று, அஞ்சுகிறான். ஐயோ! இனி எப்படி நல்ல பறை ஒலிக்கும் என்று வருந்துகிறான்.

ஒரு பொருளையோ, கருத்தையோ அதன் இயல்பான தன்மையிலிருந்து மிகைப்படுத்திப் பாராட்டி, உயர்த்திச் சொல்லுவது 'உயர்வு நவிற்சியணி' என்பர் இலக்கண ஆசிரியர்கள். இடை ஒடுக்கத்தை மிகுத்துக் காட்டியதால் இச்செய்யுள் உயர்வு நவிற்சியணியில் அமைந்தது. பெண்ணின் இடையை மெல்லிடை, மின்னல் இடை, இல்லாத இடை, கொடியிடை, நூலிடை எனக் கவிஞர்கள் பாடுவர். ஆறு சிறுகால்களையுடைய சிறிய வண்டானது தனது மெல்லிய சிறகால் வீசும் காற்றுக்குக் கூட ஆற்றமாட்டாமல் துவண்டு விடும் (நள)தமயந்தியின் இடையானது என்று பாடினார் ஒரு புலவர்.
மலர்களுள் மிகவும் மென்மையானது அனிச்சமலர். அதன் காம்பும் மெல்லியதாகத்தான் இருந்திருக்கும். அந்தக் காம்பின் 'சுமை' கூடத் தாங்க இயலாத மென்மையான நுண்ணிடை என்று அவளுடைய இடை நலத்தைப் போற்றித் தலைவன் பாராட்டுகிறான் இங்கு. நுண்ணிய இடை கொண்டவள் என்பதைப் பாட வள்ளுவர் கையாண்டுள்ள உவமை மாறுபாடாக உள்ளது.

'நல்ல படாஅ பறை' குறிப்பது என்ன?

தன் காதலி, காம்பு நீக்காமல் மலர் சூடுவதைக் கண்ட அவன், ‘தன் மென்மையை அறியாமல் காம்புடன் சேர்த்து ஏன் அணிகிறாள்? இதன் எடை தாங்காமல் அவள் இடை முறியுமே! என் செய்வேன்! என இக்காட்சியில் வேதனையுறுகிறான்.

அனிச்சமலர்க் காம்பின் எடை தாங்கமுடியாமல் தலைவி இறந்துபடுவாள் எனவும் அதற்காகச் 'சாப்பறையன்றோ முழங்கும்' என்றபடி பெரும்பாலான உரையாசிரியர்கள் இக்குறளுக்குப் பொருள் கூறினர். நல்லதற்கும் பறைகொட்டலாம், ஒருவர் இறந்தாலும் அவ்விடத்தில் பறை என்னும் தோற்கருவி ஒலிக்கும். சாவிடத்தில் எழும் பறை ஒலி நல்ல ஒலி அல்ல. காதலியின் இடை இல்லாமலே போகப் போகிறது! அதனால் நல்ல படாஅ பறை அதாவது நல்ல பறை ஒலிக்கா எனக் கூறுகிறது என்றனர் இவர்கள். காதலியின் நலம்புனைய வந்த தலைவன் மகிழ்ச்சிகேடான ஒப்புமை கூறியா இடையைப் புகழ்வான்?

நாமக்கல் இராமலிங்கம் பறை என்பதற்குச் சொற்கள் என்றும் படா என்பதற்கு உண்டாகா என்றும் பொருள் கொண்டு 'மிகவும் இலேசான அனிச்ச மலரேயானாலும் அதன் காம்பை நீக்காமல் தலையில் சூடிக்கொள்வாளானால் அதன் பிறகு அவளுடைய இடையைப் பற்றி நல்ல பேச்சு பிறக்காது; இடை ஒடிந்து போயிற்று என்ற துன்பச் சொல்தான் பிறக்கும்' என்று உரை செய்தார்.
அனிச்ச மலரின் பாரம் தாங்காமல் பெண்ணின் இடுப்பு ஒடிந்துவிட்டதால், 'இப்படி ஆகிவிட்டதே! இனிமேல் ஒரு அனிச்சம்பூவைக் கூட விட்டு வைக்கக் கூடாது உலகில்' என்று அதற்கு சாவுப்பறை கொட்டத் தொடங்கினான் என்பது மற்றொருவர் தரும் விளக்கவுரை.
'காம்பைக் கிள்ளாமல் பூச்சூடியவளின் இடை பாரம் தாங்காமல் முறிந்து விழும் ஒலியைக் கூறுகிறது இப்பாடல்' என்றும் ஓர் உரை உள்ளது.

'நல்ல படாஅ பறை' என்றதற்கு பூக்காம்பு போன்றது பெய்தாலும் அவள் இடை இறந்துபடும்; அதனால் நல்ல பறை ஒலிக்காது என்பது பொருள்.

அனிச்சமலரை காம்பைக் கிள்ளாது தன் தலையில் சூடினாள்; இவளது இடை இறந்துபடும். எனவே பறை நல்லதாக ஒலிக்கமாட்டா என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மலர்க்காம்பின் எடையைக்கூட தாங்கமுடியாத காதலியினது இடையின் நலம்புனைந்துரைத்தல் பாடல்.

பொழிப்பு

அனிச்ச மலரின் காம்பினைக் கிள்ளியெறியாமல் சூடினாள்; அவளுடைய இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.