இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1113முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1113)

பொழிப்பு: மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி; முத்தே பல்; இயற்கை மணமே மணம்; வேலே மை உண்ட கண்.

மணக்குடவர் உரை: தளிர்போலும் மேனி: முத்துப்போலும் முறுவல்: நறுநாற்றம் போலும் நாற்றம்: வேல்போலும் உண்கண்: வேயொத்த தோளினை யுடையாளுக்கு.
இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின் வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று.

பரிமேலழகர் உரை: (கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது.) வேய்த்தோளவட்கு - வேய் போலும் தோளினையுடையவட்கு; மேனி முறி - நிறம் தளிர் நிறமாயிருக்கும்; முறுவல் முத்தம் - பல் முத்தமாயிருக்கும்; நாற்றம் வெறி - இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்; உண்கண் வேல் - உண்கண்கள் வேலாயிருக்கும்
(பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின், புனைந்துரையாயிற்று, 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்' என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.)

இரா சாரங்கபாணி உரை: மூங்கில் போலும் தோள்களையுடையவளுக்கு மாந்தளிர் மேனி, முத்துப்பல், இயற்கை மணமே மணம், வேல் மையுண்ட கண்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேய்த்தோள்அவட்கு மேனிமுறி முறுவல்முத்தம் நாற்றம்வெறி உண்கண்வேல்.


முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண்:
பதவுரை: முறி-தளிர்; மேனி-நிறம்; முத்தம்-முத்து; முறுவல்-பல்; வெறி-நன்மணம்; நாற்றம்-மணம்; வேல்-வேல்; உண்கண்-(மை)உண்ட கண்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தளிர்போலும் மேனி: முத்துப்போலும் முறுவல்: நறுநாற்றம் போலும் நாற்றம்: வேல்போலும் உண்கண்:
பரிப்பெருமாள்: தளிர்போலும் மேனி: முத்துப்போலும் முறுவல்: நறுநாற்றம் போலும் நாற்றம்: வேல்போலும் உண்கண்:
பரிதி: மாந்தளிர் மேனியும், முத்து நகையும், தாமரைப்பூ நாற்றமும், வேல்போல் கண்ணும்;
காலிங்கர்: நெஞ்சே! நிறமானது மாந்தளிர் ஒக்கும். முறுவல் கோவை முத்து நிரை ஒக்கும். நாற்றமெல்லாம் பல நறு நாற்றம் ஒக்கும். மை உண்டு அகன்ற கண்ணானது வடிவேலினை ஒக்கும்.
பரிமேலழகர்: (கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது.) நிறம் தளிர் நிறமாயிருக்கும்; பல் முத்தமாயிருக்கும்; இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்; உண்கண்கள் வேலாயிருக்கும்
பரிமேலழகர் குறிப்புரை: பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின், புனைந்துரையாயிற்று,

'தளிர் போன்ற நிறம், முத்துப் போன்ற பற்கள், நன்மணம், வேல் போன்ற மையுண்ட கண்கள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர். பரிதி தளிர் என்பதற்கு மாந்தளிர் என்றும் வெறிநாற்றம் என்பதற்கு தாமரைப்பூ நாற்றம் என்றும் பொருள் கொள்கிறார்; காலிங்கரும் தளிர் என்றதற்கு மாந்தளிர் என்றே கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தளிரே மேனி முத்தே பல், மலரே மணம், வேலே கண்', 'மாந்தளிர் மேனி, முத்துப்பல், இயற்கை மணமே மணம், வேல் மையுண்ட கண்', 'உடல் நிறம் தளிர் நிறமாயிருக்கும். பல் முத்துப் போலிருக்கும். அவளது இயற்கை மணம் நல்ல மணமாயிருக்கும். அவளது மையுண்ட கண்கள் வேல்போன்று இருக்கும்', 'நிறம் தளிர்; பல் முத்து; மணம் நன்மணம்; மையுண்ட கண்கள் வேல்' என்றபடி உரை தந்தனர்.

நிறம் தளிர், பல்முத்து, மணம் நன்மணம் , மையுண்ட கண் வேல் என்பது இத்தொடரின் பொருள்.

வேய்த்தோள் அவட்கு:
பதவுரை: வேய்-மூங்கில்; தோள்அவட்கு-தோள்களையுடையவளுக்கு.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேயொத்த தோளினை யுடையாளுக்கு.
மணக்குடவர் கருத்துரை: இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின் வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று.
பரிப்பெருமாள்: வேயொத்த தோளினை யுடையாளுக்கு.
பரிப்பெருமாள் கருத்துரை: இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின் வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று.
பரிதி: மூங்கில்போல் தோளும் உடையவள் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! எம் காதலியாகிய வேய்போலும் தோளினாட்கு.
காலிங்கர் குறிப்புரை: இவ்வகையால் இவ்வுருவுநலன் உடையாளை எங்ஙனம் பிரிந்தாற்றுமோ என்னும் குறிப்பினால் இனிது புனைந்து உரைத்தான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: வேய் போலும் தோளினையுடையவட்கு.
பரிமேலழகர் குறிப்புரை: 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்' என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.

'மூங்கிலை ஒத்த தோளினை உடையவளுக்கு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மூங்கில் போலும் தோளிக்கு', 'மூங்கில் போலும் தோள்களையுடையவளுக்கு', 'மூங்கில்போலுந் தோளினை உடையவளுக்கு', 'மூங்கில் போலும் தோளினையுடைய இவட்கு' என்றபடி பொருள் உரைத்தனர்.

மூங்கிலை ஒத்த தோள்களை உடையவளுக்கு என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
உறுப்பு நலன்கள் உருவக ஓவியமாக வரையப்பட்டுள்ள பாடல்.

மூங்கிலை ஒத்த தோள்களை உடையவளுக்கு நிறம்தளிர், பல்முத்து, மணம்நன்மணம் , மையுண்டகண்வேல் என்பது பாடலின் பொருள்.
தளிர் நிறம் எப்படி இருக்கும்?

முறி என்ற சொல்லுக்குத் தளிர் என்பது பொருள்.
மேனி என்ற சொல் இன்று பொதுவாக உடம்பு என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் இச்சொல்லுக்கு நிறம் என்ற பொருளும் உண்டு. இங்கு நிறம் என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது.
முத்தம் என்ற சொல் இங்கு குறிப்பது முத்து என்ற ஆபரணக்கல் ஆகும்.
முறுவல் புன்னகையைக் குறிக்கும் சொல். இங்கு ஆகுபெயராகப் பற்களைக் குறிக்கிறது.
வெறி மணம் என்னும் பொருளில் வந்துள்ளது.
நாற்றம் என்ற சொல்லும் மணம் என்ற பொருள் தருவதே. வெறிநாற்றம் இயல்பான மணம் என்று கொள்ளப்பட்டது.
உண்கண் என்பது மையுண்ட கண் என்று பொருள்படும்.
வேய் என்ற சொல்லுக்கு மூங்கில் என்பது பொருள்.

தளிர் நிறம் என்றால் என்ன நிறம்?

தளிர் என்பது துளிர் என்றும் சொல்லப்படும். தளிரானது இலையின் வளர்ச்சி நிலையில் - கொழுந்துக்கு அடுத்தபடியாக - இரண்டாவது படியில் உள்ள நிலை. (முழு நிலையில் இலை என்றும், தளரும் நிலையில் பழுப்பு என்றும், வீழ் நிலையில் சருகு என்றும் சொல்கிறோம்.)
தளிர் நிலையில் ஒரு நிறமாகவும் இலை நிலையில் வேறு நிறமாகவும் அமைவது உண்டு. இலையின் நிறம் பொதுவாகப் பச்சை என்றாலும் வேறு நிறங்களில் உள்ள இலையும் உண்டு.
இங்கு எந்தத் தாவரத்தின் தளிர் கூறப்படுகிறது? தொல்லாசிரியர்களில் பரிதியும் காலிங்கரும் மட்டும் மாந்தளிர் என்று குறிப்பிடுகின்றனர். மற்றவர்கள் தளிர் என்று மட்டுமே கூறினர். மாந்தளிர் என்றால் மாமர இலைக்குண்டானது. மாவிலை பச்சை நிறம். மாந்தளிர் மஞ்சளும் இளம்பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும். சங்கப்பாடல்களிலும் தளிர் நிறம் குறிக்கப்பெறுகிறது. அதற்கு உரையாசிரியர்கள் மாமை நிறம் என்று பொருள் கூறுவர்.
தளிர்நிறம் இன்று வழக்கத்தில் உள்ள மாநிறம் என்பதைக் குறிக்கலாம். அகராதியும் மாநிறத்துக்கு மாந்தளிர் நிறம் என்றே பொருள் கூறுகிறது.
மாநிறம் என்பது என்ன?
மாநிறம் பொதுநிறம் அல்லது புதுநிறம் என்று நடைமுறைப் பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. இப்பொழுது மாநிறத்தைக் கோதுமை நிறம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.
மாநிறத்துக்கு இணையான ஆங்கிலச் சொல் Brown/ tan colour ஆகும்.

மூங்கில் போல வழுவழுப்பான ஊறின்பம் தரக்கூடிய தோள்கள் உடையவள், தளிர் போன்ற நிறம் கொண்டவள் இவள் என்று காதலன் கூறுகிறான். இவளது பற்கள் முத்துக்கள் போன்றவை என்கிறான். முத்து மற்ற நிறங்களில் கிடைப்பதானாலும் வெண்முத்துப் பற்கள் என்ற பொருளையே அது சுட்டும். நிறம் மட்டுமல்லாமல் அதன் ஒளிர்வும் அவளது பற்களின் ஓளிவீச்சுக்கு ஒப்பிடப்படுகிறது. இவள் இயல்பாகவே முகர்ச்சி இன்பம் நல்கும் நறுமணம் வாய்க்கப்பட்டிருக்கிறாள். இவளது மைபூசிய கண்கள் வேல்வடிவத்தில் அமைந்து அழகு சேர்க்கின்றன. இவ்வாறு அவளது உறுப்பு நலன் புனைந்துரைக்கப் பெறுகிறது.

முறியையும், முத்துக்களையும், இயற்கைமணத்தையும், வேலையும், மூங்கிலையுமே தன் காதலி உறுப்புகளாகப் பெற்றிருக்கிறாள் என்று காதலன் உருவகமுகத்தான் புனைந்துரைக்கிறான். உருவகம் என்பது உவமானத்தையும் உவமேயத்தையும் வேற்றுமை நீக்கி ஒன்றென்னும்படி கருத்துத் தோன்றக் கூறுவது.
பல்வேறு பக்கங்களில் அழகிய வருணனையாகச் சொல்ல வேண்டிய ஒரு காட்சியை உருவக நடை எத்துணைச் செறிவுடன் தருகின்றது என்பதற்கு இக்குறளே அழகிய சான்றாக ஒளிர்கிறது எனலாம் என்கிறார் இ சுந்தரமூர்த்தி.

மூங்கிலை ஒத்த தோள்களை உடையவளுக்கு நிறம்தளிர், பல்முத்து, மணம் நன்மணம், மையுண்டகண்வேல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவளது நிறம், சிரிப்பு, நறுமணம், கண்வடிவம், தோள்வனப்பு இவற்றின் நலம்புனைந்துரைத்தல் பாடல்.

பொழிப்பு

மூங்கில் போலும் தோள்களையுடையவளுக்கு தளிரே மேனி, முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே கண்.