இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1112மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1112)

பொழிப்பு: நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்.
இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: (இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய், நின்அறிவு இருந்தவாறென்?
(மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: மனமே! ஒரு பூவைப் பார்த்தவுடன் பலபேர் காணப் பொதுவில் பூத்திருக்கும் அந்தப் பூ என் காதலியின் கண்ணுக்குச் சமானமாக இருக்கிறதென்று மயங்குகிறாயே!


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று மலர்காணின் மையாத்தி.


மலர்காணின் மையாத்தி நெஞ்சே:
பதவுரை: மலர்-பூ; காணின்-கண்டால்; மையாத்தி-நீ மயங்குகின்றாய்; நெஞ்சே-உள்ளமே.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்.
பரிப்பெருமாள்: நெஞ்சே! மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய்.
பரிதி: நெஞ்சே! தாமரை செங்கழுநீர் இவற்றைக் கண்டால் மயங்குகின்றாய்;
காலிங்கர்: நெஞ்சே! நீ மலர் கண்ட இடத்து மையலுறுதி;மதிப்பில்லை என்றவாறு.
பரிமேலழகர்: (இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே; தாமரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய்.
பரிமேலழகர் குறிப்புரை: மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல்.

'நெஞ்சே! மலர் கண்டால் மயங்குகின்றாய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சமே! குவளை, நீலம் முதலிய மலர்களைக் காணின் மயங்குகிறாய்', 'மனமே! ஒரு பூவைப் பார்த்தவுடன் மயங்குகிறாயே!', 'நெஞ்சே! தாமரை, குவளை, நீலம் முதலிய மலர்களைப் பார்த்தவுடன் மயங்குகின்றாயே!', 'நெஞ்சமே! மலர்களைக் கண்டால் மயங்கின்றாய் ' என்றபடி உரை தந்தனர்.

நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய் என்பது இத்தொடரின் பொருள்.

இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று:
பதவுரை: இவள்-இவளது; கண்-விழி; பலர்-பலர்; காணும்-பார்க்கப்படும்; பூ-மலர்; ஒக்கும்-நிகர்க்கும்; என்று-என்பதாக.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று.
மணக்குடவர் கருத்துரை: இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இவள்கண் பலரானும் காணப்படும் பூவையொக்கு மென்று.
பரிப்பெருமாள் கருத்துரை: இது கண் பூவினது நிறமொக்குமாயினும் குணமொவ்வா தென்று கூறியது. இவை இரண்டினானும் தான் கிட்டுதற்கு அருமை கூறினானாம்.
பரிதி: அவைகள் நாயகி கண்ணைக்கண்டால் நாணும். 'நாயகி கண்போல் வண்ணம் பெற்றோம்; விரகப் பார்வை அறியோம்' என்று தலையிறக்கிடும் என்றவாறு.
காலிங்கர்: எம்மால் காதலிக்கப்பட்ட இவள் கண்மலர் யாவரும் காணும் பூமலர் ஒக்கும் என்று கருதி.
பரிமேலழகர்: யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; நின்அறிவு இருந்தவாறென்?
பரிமேலழகர் கருத்துரை: இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.

'இவள் கண்மலர் யாவரும் காணும் பூமலர் ஒக்கும் என்று கருதி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' யான் மட்டும் காணும் இவள் கண்களைப் பலராலும் காணப்பெறும் பூக்களை ஒக்கும் என்று கருதி. என்னே உன் அறிவு!', 'பலபேர் காணப் பொதுவில் பூத்திருக்கும் அந்தப் பூ என் காதலியின் கண்ணுக்குச் சமானமாக இருக்கிறதென்று', 'இவள் கண் எல்லாப் பூக்களிலுஞ் சிறந்தது என அறியாத உன்னுடைய அறிவு எவ்வ்ளவு இழிவானது?', 'இவள் கண்கள் பலரும் காண்கின்ற தாமரை, குவளை, நீலம் முதலிய பூக்களை ஒக்கும் என்று( நின் அறிவு இருந்தவாறு என்னே!)' என்றபடி பொருள் உரைத்தனர்.

இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
எந்த மலரைப் பார்த்தாலும் அவளது கண்ணே மனதில் தோன்றுகிறது என்று காதலன் எண்ணுவதாக அமைந்த பாடல்.

இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய் என்பது பாடலின் பொருள்.
'பலர்காணும் பூ' குறிப்பது என்ன?

மையாத்தி என்ற் சொல்லுக்கு மயங்குகின்றாய் என்று பொருள். மை-மயக்கத்தை; யாத்தி-கொள்கிறாய் என்ற இரு சொற்கள் இணைந்து மையாத்தி என்று ஆனது.

காண்போர் யாவர் மனதுக்கும் இன்பம் தருவன மலர்கள் .
பார்க்கும் மலரெல்லாம் தனது காதலியின் கண்போலவே அவனுக்குத் தோன்றுகிறது. உடன் 'அது பலர் காணும் மலராயிற்றே' என்ற என்ணமும் உண்டாகி மயக்கம் கொள்கின்றான். ஏன்? அவளது கண்கள் அவனது உரிமைப் பொருள். அவனுக்கு மட்டுமே சொந்தம்; அவன் மட்டுமே சுவைக்கக் கூடிய அழகுநலன் கொண்டவையாம் அவை!
'நெஞ்சே! மலரைப் பார்த்தவுடனே அவள் கண்கள் போல் உள்ளது என்று மயங்குகிறாயே. இந்த ஒப்புமை தவறு. அம்மலரைப் பலரும் பார்ப்பார்கள் என்று உனக்குப் புரியவில்லையா?' என்று தன் நெஞ்சை விளித்துச் செல்லமாகக் கடிந்து கொள்வதாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

பலர்காணும் பூ என்றால் என்ன?

உரையாசிரியர்கள் பலரும் பலர்காணும் பூ என்பதற்குப் 'பலரால் காணப்படும்பூ' எனப் பொருள் கொண்டனர். இப்பூவோடு தலைவியின் கண்கள் ஒப்புமை செய்யப்பட்டு 'மலர் பலராற் காணப் பெறுவது; இவளது கண் தான் ஒருவனே காண்பதற்குரியது' என்பது இவர்தம் உரை.

மற்ற உரையாசிரியர்கள் மாறுபட்ட வகையில் இத்தொடருக்கு விளக்கம் தந்து பொருள் கொண்டனர்.
'நெஞ்சமே! இவளை விலகி நின்று பார்த்து மகிழ்ந்திருந்த காலத்தில், பலரும் கண்டு இன்புறும் நற்பூக்களைக் காணும் போதெல்லாம் இவள் கண்களைப் போல் அம்மலர்கள் இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தாய். இன்று அவளை மிக அருகில் பார்த்து மகிழ்ந்த பின்னர் தானே தெரிகிறது இவள் கண்களுக்கு அம்மலர்கள் ஒப்புமை ஆகாது என்று' என்பது ஒருவகை விளக்கம்.
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது என்பது வேறோர் வகையான உரை.

இவற்றில் 'மலர் பலராற் காணப் பெறுவது; இவள்கண் தான் ஒருவனே காண்பதற்குரியது' என்ற குறிப்புப் பொருளே 'பலர் காணும் பூ' என்ற தொடரைப் பொருந்த விளக்கும்.

இக்குறளில் ஒலிநயம் சிறப்புற அமைந்து செவிக்கு இன்பம் ஊட்டுவதை உணரலாம்.
விளிச் சொல்லைப் பின்னால் கொண்டு மலர்காணின் - பலர்காணும் என்ற இணைகள்உத்தி மூலம் கவித்திறம் தோன்ற ஆக்கப்பட்ட பாடல் இது (ச அகத்தியலிங்கம்).

'இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று, நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய்' என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மலர் கண்டேன்; காதலி கண் கண்டேன் என்று அவளது விழியின் நலம்புனைந்துரைத்தல் பாடல்.

பொழிப்பு

நெஞ்சே! பலரால் காணப்படும் பூவையொக்கும் இவளது கண் என்று கருதி மலர்களைக் கண்டால் மயங்குகிறாய்.