இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1100கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1100)

பொழிப்பு (மு வரதராசன்): கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.மணக்குடவர் உரை: கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின் வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல.
இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல.
(நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்: மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின், இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.)

வ சுப மாணிக்கம் உரை: கண்ணோடு கண் இணையும் பார்வை இசையின் வாய்ப்பேச்சுக்கு என்ன பயன் உண்டு?


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.

பதவுரை: கண்ணோடு-ஒருவர் கண்களொடு; கண்-இன்னொருவர் கண்கள்; இணை-சம அளவு; நோக்கொக்கின்-பார்வையால் ஒத்திருக்குமாயின்; வாய்ச்சொற்கள்-வாய்மொழிகள்; என்னபயனும்-எத்தகைய விளைவும்; இல-உளவாகா.


கண்ணோடு கண்இணை நோக்கொக்கின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின்;
பரிப்பெருமாள்: கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின்;
பரிதி: மனமும் கண்ணும் பொருந்திய பார்வை உண்டாகில்;.
காலிங்கர்: ஒருவனோடு ஒருத்தியிடை மற்று அவர் தம் கண்ணொடு கண் எதிர்ந்து நோக்குங்கால் நெஞ்சில் காதல் குறிப்புக் கண்ணில் புலப்படுமாறு இரண்டு நோக்கும் தம்மில் ஒக்கக் குளிர்ந்திருக்கப்பெறின்;
பரிமேலழகர்: காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்;
பரிமேலழகர் கருத்துரை: நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல்.

மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர், ஆகியோர் கண்களோடு கண்கள், காமக்குறிப்பில் நோக்கம் ஒத்த தன்மையைக் குறிப்பிடுகின்றனர். பரிமேலழகர் பதவுரையில் இவ்விதம் குறிப்பிட்டுக் கருத்துரையில் நோக்கால் ஒத்தல், 'காதல் நோக்கினவாதல்' என்பதாகும் என்று கூறுவார். பரிதியார் கண்களோடு மனமும் பொருந்திய பார்வை பற்றிப் பேசுகிறார். காலிங்கர் 'கண்ணொடு கண் எதிர்ந்து நோக்குங்கால் நெஞ்சில் காதல் குறிப்புக் கண்ணில் புலப்படுமாறு' என்று உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தலைவன் தலைவியருடைய இருவர் கண்களும் தம்முள் நோக்கு ஒத்துவிடின்', 'கண்களும் கண்களும் பொருந்தி பார்வையில் ஒத்துக் கொண்டால்', 'காதல் மிக்க இருவருடைய இருகண்களும் ஒத்த பார்வையுடையனவாயின்', '(காதலை உடைய இருவர்களுள்) ஒருவர் கண்களோடு மற்றவர் கண்ணிரண்டும் பார்வையால் ஒக்குமாயின்', என்றபடி உரை தருவர்.

கண்ணோடு கண் பொருந்தி தம்முள் நோக்கு ஒத்துவிடின் என்பது இப்பகுதியின் பொருள்.

வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல.
மணக்குடவர் கருத்துரை: இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்:வாயினாற் கூறும் சொற்கள் ஒரு பயனுடையவல்ல.
பரிப்பெருமாள் கருத்துரை: இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: வாய்ச்சொல்லினால் என்ன பயனும் இல என்றவாறு.
காலிங்கர்: மற்று வாய்ச் சொற்கொண்டு என்ன பயனும் இல.
காலிங்கர் கருத்துரை: எனவே யாம் இவள் வாய்ச்சொல் கேட்கப்பெறின் எனைத்துப் பயனும் அதன்கண்னே நிகழும் என்று அவள் சொற்கேட்டலும் காதலித்தான் தலைமகன் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல.
பரிமேலழகர் விரிவுரை: வாய்ச் சொற்கள்- மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின், இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் வாய்ச்சொல்லினால் என்ன பயனும் இல்லை என்று பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாய்விட்டுத் தம் காதலைப் புலப்படுத்தச் சொற்கள் தேவையே இல்லை', 'அதன் பிறகு பேச்சுக்கு அவசியமில்லை', 'வெளிப்படையாக அவர்கள் சொல்லும் வாய்ச்சொல்லினால் யாது பயனும் இல்லை', 'வாயிலிருந்து தோன்றும் சொற்கள் எத்தகைய பயனும் உடையன வல்ல' என்று உரை கொண்டனர்.

வாய்ப்பேச்சுக்கு எத்தகைய பயனும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
கண்ணோடு கண் பொருந்தி தம்முள் நோக்கு ஒத்துவிடின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல என்பது பாடலின் பொருள்.
'வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' என்ற பகுதி குறிப்பது என்ன?

கண்களாலேயே பேசிக் காதலை வெளிப்படுத்திக் கருத்தொற்றுமை கண்டனர் தலைமக்கள் என்னும் இப்பாடல் சொல், பொருள், கவி நயம் கொண்டு மனதைக் கொள்ளை கொள்ள வைக்கிறது.

காதலர் கண்கள் பார்வையால் ஒன்றுபடுமாயின், வாயினால் பேசிக்கொள்ளும் பேச்சுக்களால் எவ்விதப் பயனும் இல்லை.
காதலில் வீழ்ந்த தலைவனும் தலைவியும் கண்களாலேயே பேசிக்கொள்கின்றனர். ஒருவர் உள்ளக் குறிப்பை மற்றவர் அறிய - ஒத்த அன்பினரா என்று அறிந்துகொள்ள, முயற்சிக்கின்றனர். அவளது மருந்துப்பார்வை, களவுச்சிறுநோக்கு, சிறக்கணித்தல், புன்முறுவல், முகமலர்ச்சி, பொதுநோக்கு, இறைஞ்சுதல், கண்வழிபேசுதல் ஆகியவற்றின் வழி தலைவன் குறிப்பு அறிகிறான் என்று இவ்வதிகாரத்து முந்தைய பாடல்கள் கூறின. இப்பாடலில், ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டபின், அவர்கள் கண்கள் சந்திப்பது காட்டப்படுகிறது. காதல் கொண்ட இருவரின் கண்களும் பேசின. இருவர் கண்களும் ஒன்றுபட்டு ஒரே நோக்காகிவிடுகிறது. நெஞ்சில் உள்ள காதல் உணர்வு அவர்கள் கண்களில் புலப்பட்டது. ஒத்த தன்மையான அந்தப் பார்வையிலே ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் முழுமையாகக் குடி புகுந்துவிட்டனர் என்பது தெளிவானது. அவ்வளவுதான், வாய்விட்டு அவர்கள் தம் காதலைப் புலப்படுத்தச் சொற்கள் தேவையே இல்லை.

இக்குறளில் கண்ட கருத்தையே கம்பர் தன் காவியத்தில் மிகப் பொருத்தமான இடத்தில் கையாண்டார். புகழ்பெற்ற அந்தப் பாடல்:
எண்ணகு நலத்தினாள் இணையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

கம்பர் காட்டும் காட்சியின் விளக்கம்: ஒரு நாள் நல்ல மாலைப் பொழுதில் மாளிகையின் மேடையிலே நின்று கொண்டிருந்த சீதையை அப்பொழுது அந்த மாளிகை வீதியின் வழியாக விசுவாமித்திரரோடும், இலக்குவனோடும் நடந்து சென்ற இராமன் தற்செயலாக நோக்கினான். அம்மங்கையும் எதிர் நோக்கினாள்; இருவர் கண் நோக்கும் ஒத்தன; இருவர் கண்ணும் கலந்தன; காதல் பிறந்தது; காதலினால் கட்டுண்ட இராமனை சீதையின் இதயத்தில் சேர்த்தது; சீதையை இராமன் உள்ளத்தில் வைத்தது. இவ்வாறு ஒருவர் உள்ளத்தில் ஒருவர் கண்வழி புகுந்ததை இக்குறளைத் தழுவிப் பாடினார் கம்பர்.

இப்பாடலைத் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பதாகவும் தோழி கூற்றாகவும் உரையாசிரியர்கள் கொள்கின்றனர் இதைக் கண்டோர் கூற்றாகவோ ஆசிரியர் கூற்றாகவோ கொள்வது பொருத்தமாகலாம்.

'வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' என்ற பகுதி குறிப்பது என்ன?

முன்பின் அறியாத ஆண், பெண் இருவரிடை பிறர் அறியாதவாறு நிகழும் களவுக்காதலைச் சொல்வது காமத்துப்பாலின் முதல் பகுதி. அப்பகுதியில் உள்ள குறிப்பறிதல் அதிகாரம், தலைவியின் மீது காதல் கொண்ட தலைவன் அவளது உடல்மொழிகள் வாயிலாக அவளும் தன்னை விரும்புகின்றாள் என்று அறிந்துகொள்வதைக் கூறுகிறது.
அதிகாரத்தின் இந்த இறுதிப்பாடல் 'கண்ணும் கண்ணும் குறிப்பால் ஒத்துப் பேசிக்கொண்ட பின் வாய்ச்சொற்களால் என்ன பயன் இருக்கப் போகிறது?' எனச் சொல்லி முடிகிறது. காதலர் இருவரின் கண்களின் நோக்கம் ஒன்றும்பொழுது அந்நோக்கமே அவர்கள் மனத்திலுள்ள காதலை உணர்த்திவிடுவதால் அங்கே வாய்ச் சொற்கள் தேவையற்றவை என்பது இதன் நேரியபொருள். இதில் சொல்லப்படும் வாய்ச்சொற்கள் என்னவாக இருக்கக்கூடும்?
உரையாசிரியர்களில் சிலர் இக்குறளுக்கு விளக்கம் தரும்போது 'உள்ளத்து நிகழ் காம வேட்கையினைக் கண்ணினால் அறியக் கிடந்தமை கூறியவாறு என்றனர். அவர்கள் கூற்றுப்படி காதலர்கள் மெய்யுறுபுணர்ச்சி வேட்கையைக் கண்களால் கூறினர் என்றும், கண்கள் வழி பேசி முடித்தபின் 'புணர்ச்சிக்கு உடன்படுகின்றேன்' என்று அவர்கள் வாய்ச்சொற்களால் கூறவேண்டிய தேவை இல்லை எனக் குறள் கூறுகிறது என்று விளக்குவர். இவர்கள் அவ்விதம் கூறுவதற்குக் காரணம் இப்பாடல் இவ்வதிகாரத்துக் கடைசிக் குறளாக உள்ளதும் (எல்லாத் தொல்லாசிரியர்களும் இதை இறுதிக் குறளாகவே கொள்கின்றனர்) அடுத்து வரும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம் புணர்ச்சியால் உண்டான இன்பம் பற்றிக் கூறுவதாக இருப்பதுவுமே. இவர்களது முடிவு பார்வைகளால் ஒத்துக்கொண்டபின் புணர்ச்சியில் ஈடுபட்டனர் என்பது. இவ்விளக்கம் ஏற்புடையதன்று.

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்துப் பாடல் ஒன்று 'ஊடல், உணர்தல், புணர்தல் ஆகியன 'காமம்கூடியார் பெற்ற பயன்' என்கிறது. எனவே கூடலுக்கு முன் ஊடல் நடந்து உணர்தலும் உண்டாயிற்று என்பன அறியப்படுகின்றன. அதாவது குறிப்பறிதல் அதிகார முடிவிற்கும் புணர்ச்சி நிகழ்தலுக்கும் இடையில் உள்ள நிகழ்வுகள் குறளில் சொல்லப்படவில்லை. எப்படி, 'அலர் அறிவுறுத்தலை' அடுத்து (களவியல்) 'பிரிவாற்றாமை' (கற்பியல்) அமைந்து இடையில்-காதலர் மணம் செய்து கொள்ளல் போன்றவை குறிப்பால் அறியப்படுகின்றனவோ, அதுபோல் குறிப்பறிதல் அதிகாரத்தின் முடிவில் சொல்லப்பட்ட இப்பாடலின் பொருளையும் குறிப்பால் உணரப்பட வேண்டி இருக்கிறது. அதை அறியும்போது இவ்வதிகாரத்து இறுதிப்பாடலில் புணர்ச்சி நடைபெறவில்லை என்பது தெரியவரும்.
தொல்லாசிரியர் உரைகளில் பரிதி உரை 'மனமும் கண்ணும் பொருந்திய பார்வை உண்டாகில் வாய்ச்சொல்லினால் என்ன பயனும் இல' என்றும் பழைய உரை ஒன்று 'மனமும் மனமும் கண்ணும் கண்ணும் பொருந்திய காதல் உண்டாகில் வாய்ச் சொற்கொண்டு என்ன காரியம்?' என்றும் மனத்தைத் தொடர்பு படுத்தி வாய்ச்சொற்களினால் ஒரு பயனும் இல்லை எனக் கூறின. காலிங்கர் தலைமகன் தன் நெஞ்சுக்குக் கூறியதாக 'ஒருவனோடு ஒருத்தியிடை மற்று அவர் தம் கண்ணொடு கண் எதிர்ந்து நோக்குங்கால் நெஞ்சில் காதல் குறிப்புக் கண்ணில் புலப்படுமாறு இரண்டு நோக்கும் தம்மில் ஒக்கக் குளிர்ந்திருக்கப்பெறின், மற்று வாய்ச் சொற்கொண்டு என்ன பயனும் இல. எனவே யாம் இவள் வாய்ச்சொல் கேட்கப்பெறின் எனைத்துப் பயனும் அதன்கண்னே நிகழும் என்று அவள் சொற்கேட்டலும் காதலித்தான் தலைமகன்' என விரிவாக உரை தருகிறார். இது 'கண்கள் ஒத்தன அல்லாமல் அவள் வாய்ச்சொல்லும் பெறின் எத்துணைப் பயன்களும் உளவாகாவோ என்று அவளது வாய்ச் சொற்களையும் விரும்பினான் என்ற நயம் தருகிறது. இவை போன்ற கருத்துக்களே இப்பாடலுக்கு ஏற்கத்தக்கன.
எனவே காதலர்கள் ஒருவரையொருவர் பார்த்தார்கள்; அவர்கள் கண்கள் பேசின; புணர்ச்சிக்கு உடன்பட்டனர் என்று விரைவாக நிகழ்வுகள் அரங்கேறின எனக் கொள்ள வேண்டியதில்லை. அதாவது இப்பாடலில் தலைமகனும் தலைமகளும், வாய்ச்சொற்களின்றி கண்கள்வழிப் பேசிப் புணர்ச்சிக்கு ஒப்புக்கொள்கின்றனர் என்பது சொல்லப்படவில்லை. கடைசிப் பாடலான இதில் கண்களால் காதல் குறிப்பறியப்பட்டது; இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டனர் என்பதுதான் கூறப்படுகிறது.

உரைகாரர்கள் வேறுவேறு வகையில் இப்பகுதிக்கு விளக்கம் தருகின்றனர். அவற்றிலிருந்து ஒருசில:

  • அவர்கள் பார்க்கும் பார்வைகளே அவர்கள் காதலை வெளிப்படுத்துகின்றபோது சொற்கள் எதற்கு? அவர்கள் இனி வாய் திறந்து சொல்லவா வேண்டும்? அவர்கள் வாயால் கூறுவதும் இயல்பன்றே. ஆகவே, அவர்களைக் கூட்டி வைத்தல் தான் இனி வேண்டற்பாலது எனத் தோழி எண்ணினாள். இருவரையும் ஒருவராகக் கூட்டினாள். கூடி மகிழ்ந்தனர்.
  • கண்ணும் கண்ணும் பேசிக்கொண்ட பின் வாய்ச்சொற்களால் என்ன பயன் இருக்கப் போகிறது? ஏதும் இல்லை. தலைவன் பார்வையும் தலைவியின் பார்வையும் காதலால் ஒத்துப் போனால் வாய்ச்சொற்கள் பொருளற்றவைதாம். தலைவன் வேட்டைக்கு வந்தேன் என்பான். தலைவி புனங்காவலுக்கு வந்தேன் என்பாள். அவர்கள் வந்தது சந்திப்பதற்காக. கண்கள் தாம் உண்மை பேசுகின்றன. வாய்ச் சொற்கள் கொள்ளத்தக்கன அல்ல.
  • குறிப்பறிதல் அதிகாரத்தில் காதலர் செய்கைகள் அனைத்தையும் கண்டாள் தோழி. இனித்தான் ஒதுங்கிக் கொண்டு காதலர்களை தனி விடுத்தலே தகுதியென உணர்கின்றாள் தோழி. ஒருவர் கண்ணொடு இன்னொருவர் கண்கள் பார்வையில் ஒத்துவிட்டால் பிறகு வாய்ச்சொற்கள் ஒரு பயனையும் தாரா என நினைக்கின்றாள் தோழி. கருத்தென்ன? வாயினால் தன்னிடம் மறுத்துப் பேசுகின்றாள். ஆனால் செய்கை முற்றும் மாறாக இருக்கின்றது. கண்ணொத்து விட்டது. நோக்கம் பொதுவில் வீழ்கின்றது. வீண்வாய்ச் சொற்களில் என்ன பயன் எனக்கருதி இனி நமக்கு வேலை இல்லை இங்கு இல்லை எனத் தோழி விலகிவிடுகிறாள். பிறகு சொல்லவும் வேண்டுமா? காவிலே கருத்தொத்த காதலர் சேர்க்கை! காதலுக்கு இருவரும் வயப்பட்டார்; கூடினர்; கருதிய இன்பம் கைகூடிற்று. இன்பம் துய்த்து மகிழ்ந்த உணர்ச்சி அடுத்த அதிகாரம் 'புணர்ச்சி மகிழ்தலி'ல் வெளிப்படும்.
  • இடக்கரடக்கல் உத்தியில் (பொதுவெளியில் சொல்லத்தகாத சொல்லை/பொருளை மறைத்துக் குறிப்பால் சொல்லுவது) புணர்ச்சியைக் காட்டியுள்ளார், இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்து அவள் புனங்காவல் மேலும் அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில்சொற்களாதலின் இவை கொள்ளப்படா என்பதாகும். இவை புணர்தல் நிமித்தம்.
  • மனத்தில் காதலைக் கொண்டு வாயினால் ஒருவரை ஒருவர் அறியேன் என்று சொல்கின்றனர்.

(தலைவன் தலைவி என்ற இருவர் கண்களும் தம்முள் ஒத்துவிடின்) வாய்விட்டுத் தம் காதலை ஒருவர்க்கொருவர் சொல்ல வேண்டுமென்பதில்லை' என்பது இப்பகுதியின் பொருள்.

கண்ணோடு கண் பொருந்தி தம்முள் நோக்கு ஒத்துவிடின் வாய்ப்பேச்சுக்கு எத்தகைய பயனும் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கண்கள் வழி குறிப்பறிதலைச் சொல்லும் கவிதை.

பொழிப்பு

காதலர் இருவர் கண்களும் பார்வையால் பேசிவிட்டால், வாய்விட்டுத் தம் காதலை ஒருவருக்கொருவர் சொல்ல வேண்டும் என்பதில்லை.