இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1098அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1098)

பொழிப்பு: யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

மணக்குடவர் உரை: அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள்.
அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.

பரிமேலழகர் உரை: (தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு.
(ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: யான் நோக்க அவள் மனம் நெகிழ்ந்து மெல்லச் சிரிப்பாள். அப்பொழுது அசைந்தாடும் இயல்புடையவளுக்கு ஒரு பொலிவுண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர் யான் நோக்கப் பசையினள் பைய நகும்.


அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்:
பதவுரை: அசை-துவளும்; இயற்கு-இயல்பினை உடையாளுக்கு; உண்டு-உளது; ஆண்டு-அதில்; ஓர்-ஒரு; ஏஎர்-நன்மைக் குறிப்பு;.

பொருள்: துவளும் இயல்பினை உடையாளுக்கு உளது அதில் ஒரு நன்மைக் குறிப்பு.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு;
மணக்குடவர் கருத்துரை: அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்.
பரிப்பெருமாள்: அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு;
பரிப்பெருமாள் கருத்துரை: அவ்விடமென்றது அவள் நெகிழ்ந்து நக்கவிடம்: அழகு உண்டு என்றது தன்வடிவினும் மிக்கது குணமெனக் குறிப்பு அறிந்தான்.ஆதலான் என்றவாறு.
பரிதி: அசைந்தாடும் மயில்போன்ற சாயலையுடையாட்கு ஒரு அழகு உண்டு;
காலிங்கர்: அசைந்த இயல்பினை உடையாள்மாட்டுப் பின்னும் ஒரு நன்மை உண்டு; காலிங்கர் கருத்துரை: ஆண்டோரோ என்பது அவ்விடத்து ஓர் அழகு என்றவாறு.
பரிமேலழகர்: (தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு.
பரிமேலழகர் கருத்துரை: ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.

அசைந்த இயல்பினை உடையாள்மாட்டு அவ்விடத்தோர் அழகுண்டு/நன்மைக் குறிப்பு உண்டு என்று தொல்லாசிரியர்கள் இத்தொடர்க்கு உரை பகன்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அசையும் கொடிபோலும் சாயலுடையவளுக்கு ஒரு அழகு உண்டு', 'மெல்லியலுக்கு அப்போது ஓர் அழகு உண்டு', 'அந்த நேரத்தில் அசைந்துவரும் தன்மையுடைய அழகுடையாளின் தோற்றத்தில் ஒரு தனித்த அழகு தோன்றுகிறது', 'அசைந்து நடக்கும் அழகினை உடையாளாகிய அவளுக்கு ஓர் அழகு உண்டு.' என்று உரை நல்கினர்.

அசைந்து நடக்கும் அழகினை உடையாளாகிய அவளுக்கு ஓர் அழகு உண்டு என்பது இத்தொடரின் பொருள்..

யான் நோக்கப் பசையினள் பைய நகும்:
பதவுரை: யான்-நான்; நோக்க-பார்க்கும்பொழுது; பசையினள்-நெகிழ்ச்சியுடையவளாய்; பைய-மெல்ல; நகும்-புன்முறுவல் கொள்கிறாள்.

பொருள்: நான் பார்க்கும்பொழுது நெகிழ்ச்சியுடையவளாய் மெல்ல புன்முறுவல் கொள்கிறாள்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள்.
மணக்குடவர் கருத்துரை: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.
பரிப்பெருமாள்: யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள்.
பரிப்பெருமாள் கருத்துரை: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.இது காமக்குறிப்புத் தோற்ற நின்று நகுதல் உடம்படுதலாம் என்றது.
பரிதி: அதுதான் யான் பார்த்தபோது தான் பாராமல் கடைக்கணித்து நோக்கிச் சிரிக்கும் சிரிப்பு என்றவாறு.
காலிங்கர்: யாதோ எனில், யான் தன்னை நோக்கிய நோக்கு எதிர்தானும் நம்மாட்டு உள்ளத்தால் ஒரு தோய்தல் உடையாள் போல மெல்ல நிகழ்வதொரு முறுவல் உண்டெனவே. இது பற்றுக்கோடாக அப்பொழுதைக்கு ஆறுதல் உள்ள தலைமகன் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்;

யான் நோக்க நெகிழ்ந்து புன்முறுவல் கொள்கிறாள் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யான் பார்க்க நெகிழ்ந்து மெல்லச் சிரிப்பாள்', 'யான் நோக்கிய போது மனநெகிழ்ந்து தனக்குள்ளே மெல்லச் சிரிக்கும்', 'நான் பார்க்கும்போது அன்பு கலந்த உள்ளத்தை உடையவளாய் மெதுவாகப் புன்முறுவல் புரிகிறாள்' என்றபடி உரை கூறினர்.

யான் பார்க்கும்பொழுது மனம் நெகிழ்ந்து மெதுவாகப் புன்முறுவல் புரிகிறாள் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
என் உள்ளம் நிறைவான பெண்மைக் குணம் கொண்டவள் அவள் என்று காதலன் கூறுவதாக அமைந்த பாடல்.

யான் பார்க்கும்பொழுது நெகிழ்ந்து புன்முறுவல் புரியும்போது அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் ஏர் உண்டு என்பது பாடலின் கருத்து.
ஏர் குறித்தது என்ன?

அசையியல் என்பதற்கு அசைந்த இயல்பினையுடையாள் என்பது பொருள். மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் இவ்விதமே கொள்கின்றனர். அசைந்தாடும் மயில்போன்ற சாயலையுடையாள் என்று பொருள் கொள்கிறார் பரிதி. அசைந்து நடப்பவள், அசையும் கொடிபோலும் சாயலுடையவள், கொடி போலசையுந் தன்மையாள், அசைந்து நடக்கும் அழகினை உடையாள், மெல்லியலாள் என்றபடி பிற்கால ஆசிரியர் பொருள் கொள்வர். இவற்றுள் அசைந்தாடும் மயில்போன்ற சாயல் உடையவள், கொடி போல் அசையுந் தன்மையாள் என்பன பொருள் உணர்த்தி நிற்பனவாகும்.
பசையினள் என்றதற்கு நெகிழ்ச்சி உடையவள் என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் உரை கண்டனர். காலிங்கர் 'உள்ளத்தால் ஒரு தோய்தல் உடையாள்' என்று இன்னொரு அழகான சொற்றொடர் மூலம் பொருள் கூறுவார். பசை (பாசம்; அன்பு) என்ற வேர்ச் சொல்லிலிருந்து பசையினள் வந்தது என்பர். தற்காலத்தவர்கள் அன்பு கொண்டவள், பரிவு கொண்டவள், இரங்கியவள், இரக்கம் உடையவள் என்று பொருள் கூறுவர். நெகிழ்ச்சி உடையவள் என்பது பொருத்தமான பொருள்.
பைய என்பது மெல்ல என்ற பொருள் தரும். பையச் சென்றால் வையந் தாங்கும் (கொன்றைவேந்தன் 67) என்னும் பழைய செய்யுளுள் இச்சொல் பயின்றுவந்துள்ளது. பைய என்னும் சொல் இன்றும் தென்மாவட்டங்களில் வெகுவாக வழக்கத்தில் உள்ளது.

காதலர் அவ்வப்பெழுது சந்திக்கின்றனர். அப்போதெல்லாம் என் மேல் அன்பு கொண்டவள் நான் பார்க்கும் போது மெல்லச் சிரிக்கிறாள். அந்த நேரங்களில் அந்த அழகிய மெல்லியலாள் இன்னும் மிகையான அழகுடன் தோன்றுகிறாள். மணக்குடவர்/பரிப்பெருமாள் 'ஏர் உண்டு என்றது தன்வடிவினும் மிக்கது குணமெனக் குறிப்பு அறிந்தான்' என்கின்றனர். அவள் மயில்போல் அசைந்து வருகிறாள். அவனை நெகிழ்ச்சியுடன் பார்க்கிறாள்; புன்னகை பூக்கிறாள். அப்படிச் சிரிக்கும்போது ஒரு புதுப் பொலிவுடன் தோன்றுகிறாள். அது, தான் விரும்பியவாறு தனக்குப் பொருத்தமான காதலி கிடைத்திருக்கிறாள் என்று அவன் உள்ளுக்குள் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

ஏஎர் என்றால் என்ன?
அவளிடம் ஓர் ஏஎர் உண்டு என்றால் தனித்த ஓர் அழகு உண்டு என்று பொருள். அவள் அசைந்து அசைந்து நடப்பதுவும், அந்தக் குணமான பார்வையும் மெல்லிய சிரிப்பும் அவள் இயற்கை அழகுக்குக் கூடுதல் அழகு சேர்க்கின்றன. அந்தத் தனித்த அழகுக்குள் காதற்குறிப்பு இருப்பதை எண்ணித் தலைவன் மகிழ்கிறான். தனது பெண்மையால் அவள் குறிப்புணர்த்தினாள். இதுவே ஏர் குறித்த கருத்து.

நான் பார்க்கும்போது நெகிழ்ச்சியுடன் மெல்லச் சிரித்தாள்; கொடி போல் அசையுந் தன்மையாளுக்கு அப்போது ஒரு தனி அழகு உண்டு என்பது குறட்கருத்து.அதிகார இயைபு

மயில் போன்ற காதலியின் முறுவலில் பெண்மைக் குணம் கொண்டவள் என்ற குறிப்பறிதல் பெற்றான் என்னும் பாடல்.

பொழிப்பு

நான் பார்க்கும்பொழுது நெகிழ்ந்து மெல்லச் சிரிப்பாள். அசைந்து நடக்கும் அழகினை உடையவளுக்கு அப்போது ஓர் அழகு உண்டு.