இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1097செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1097)

பொழிப்பு: பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

மணக்குடவர் உரை: செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்.
இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன.
(குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: உட்சினம் இல்லாது சொல்லும் இழிந்த சொல்லும், வெறுத்தவர்போலப் பார்க்கின்ற பார்வையும் தொடர்பிலார் போல வெளியே தோன்றி உள்ளே விருப்பம் உடையவர்களது அடையாளம் ஆகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.


செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்:
பதவுரை: செறாஅ-வெகுளாத; சிறுசொல்லும்-இன்னாத மொழியும்; செற்றார்போல்-பகைவர்போல; நோக்கும்-பார்க்கும்.

பொருள்: சினமற்ற இன்னாத மொழியும் பகைவர்போல பார்வையும்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும்;
பரிப்பெருமாள்: செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும்;
பரிதி: ஊடுதலில்லாத சொல்லும் அயலார் போலப் பார்க்கும் பார்வையும்;
காலிங்கர்: நெஞ்சமே நமக்கு ஒன்று சொல்லினும் இவள் எங்ஙனம் சொல்லுமோ என்று இடர் உறவேண்டா; உள்ளத்தில் செறாது புறம்பு உரைக்கும் புன்சொல்லும் அங்ஙனம் சிரியாரே செற்றாரைப் போல்வதோர் நோக்கும் இவை இரண்டும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும், அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்;

பழம் ஆசிரியர்கள் சினம் இல்லாத கடுஞ்சொல்லும் பகைவர் போன்று பார்வையும் என்று இத்தொடரை விளக்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகையாத கடுஞ்சொல் பகைபோல் பார்வை', 'வெறுப்பில்லாத மறுப்புச் சொல்லும் மனத்தில் பகையின்றிப் பகைவர் போலப் பார்க்கும் சினந்த பார்வையும்', 'சினமின்றியே சினங்கொண்டவர்போல் பேசிக் கொள்ளும் சிறுசொற்களும் பகையின்றியே பகைவர்கள் போல் பார்த்துக்கொள்ளும் பார்வைகளும்', 'சீற்றமுற்று வருத்தாத கடுஞ்சொல்லும், பகைவர் போன்ற பார்வையும்' என்றபடி உரை தந்தனர்.

சினங்கொண்டவர்போல் கூறும் சுடுசொல்லும் பகைவர்கள் போன்ற பார்வையும் என்பது இத்தொடரின் பொருள்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு:
பதவுரை: உறாஅர்-நொதுமலர்; போன்று-போல; உற்றார்-நண்பர்; குறிப்பு-அடையாளம்.

பொருள்: பகைவர் போல நட்பாராயினர் அடையாளம்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்.
மணக்குடவர் கருத்துரை: இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது
பரிப்பெருமாள்: அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்.
பரிப்பெருமாள் கருத்துரை: மேலே தலைமகள் கூறிய கடுஞ்சொல்லும் அதன்பின் கடுத்து நோக்கின நோக்கமும் குறித்து இவ்வாறு செய்யினும் அன்பின்மை தோற்றம் இல்லாமையின் உடம்பாடு என்று தேறியது.
பரிதி: காமம்மிக்க நாயகியின் குணம் என்றவாறு.
காலிங்கர்: புறத்துப் பரிவிலாதார் போன்று வைத்து அகத்து அன்புடையார் செய்யும் மனக்குறிப்பு என்று ஆற்றியுளேம் ஆதலே கருமம் என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன.
பரிமேலழகர் விரிவுரை: குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.

புறத்துப் அன்பில்லாதவர் போன்று வைத்து அகத்து நட்புடையார் செய்யும் மனக்குறிப்பு என்பது பழம் ஆசிரியர்களின் உரையாகும். பரிதி காமம் மிக்க நாயகியின் குணம் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவை அயலவர் போன்ற அன்பர் குறிப்பு', 'பொருந்தாத பகைவர் போன்ற நண்பராயினார்க்குக் குறிப்புணர்த்தும் செயல்களாம்', 'வெளியே உறவில்லாதவர்கள் போன்று காட்டிக்கொண்டு உள்ளே மனமொன்றிவிட்ட காதலர்களின் உட்குறிப்புள்ள செயல்களாகும்', 'தொடர்பு இல்லாதவர் போல் பிறர்க்குக் காணப்பட்டாலும் அவை நெருங்கிய பற்றுள்ளம் கொண்டவர்களது சொற்குறிப்பும் கண்குறிப்பும் ஆம்' என்றவாறு உரை பகன்றனர்.

தொடர்பு இல்லாதவர் போல் வெளிக்குக் காணப்பட்டாலும் பொருந்திய காதலர்களிடையேயான குறிப்புணர்த்தும் செயல்களாகும் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
களவுக் காதலில் அவர்கள் இன்புற்று உற்றார் ஆகின்றனர் என்பதைச் சொல்லும் பாடல்.

நாடகமாடும் காதலர்கள் இங்கு காட்டப்படுகிறார்கள்.
அவர்கள் ஒருவரையொருவர் அறியாதவர்போல நடந்துகொள்கிறார்கள். சுடுஞ்சொல் பரிமாற்றம் நடைபெறுகிறது. பகை உணர்வு இல்லை; ஆனால் பகைவனைப் பார்ப்பது போல பார்த்துக் கொள்கிரார்கள். அவளுக்கு அவனைத் தெரியாதது போல இருப்பாள்; அவனுக்கு அவளைத் தெரியாதது போல் இருப்பான். இதெல்லாம் ஒருவருக்கொருவர் அன்பு கொண்ட காதலர்கள் அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.
அவர்கள் ஒருவரையொருவர் நன்கு உணர்ந்து ஒத்த அன்பு பூண்ட காதலர்கள். ஆனால் பேசும்போது சொற்களைச் சற்று வேறுபட்ட முறையில் ஆள்வர். மிகுந்த அன்புடைய நெஞ்சம் கொண்ட இருவரும், சில நேரங்களில், வேண்டாதவர்களிடம் அல்லது அயலவர்களிடம் பேசுவது போல பேசுவர். சினமற்ற வன்சொற்களும் பகைத்துக் கொண்டவர் போன்ற பார்வையும் விரும்பாதவர் போன்று நடித்துக் கொண்டே உள்ளூர விரும்பிக் கொண்டிருப்பவர்களின் காதலுக்கான அறிகுறிகள்.
தொடர்பு இல்லாதவர் போல் காட்டிக்கொள்வது வெளி உலகுக்குத் காதலர்கள் தங்கள் களவுக் காதலை மறைப்பதற்காக இருக்கலாம். எனினும் இந்தப் பொய் நாடகம் ஆடுவதில் அவர்கள் ஒருவித மகிழ்ச்சியும் அடைவர்; அவர்களது உறவு இன்னும் நெருக்கமாக அமைவதை உணர்வர்.

தலைவியினது சிறுசொல்லையும் பகைவர் போல் பார்வையையும் குறித்த தலைவன் கூற்று இப்பாடல் என்று பரிப்பெருமாள் கொண்டார். பரிமேலழகர் தோழிக்கு உரித்தானவற்றைக் குறித்த தலைவன் கூற்று என்றார்.
காதலர்களது இயல்பைப் பொதுநிலையில் சுட்டுவதாக இக்குறளைக் கொள்வதே பொருத்தம்.

சினமில்லாமல் மொழிந்த கடிந்த சொற்களும் பகைத்தவர் போல் காட்டுகின்ற பார்வையும் காதல் கொண்டதை வெளியே சொல்ல விரும்பாமல் காதலர்கள் தங்களை அறியாமல் காட்டும் குறிப்புகளாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலர்கள் அரங்கேற்றும் பொய்மை நாடகம் அவர்கள் உற்றார் ஆயினர் என்ற குறிப்பறிதல் பா.

பொழிப்பு

வெறுப்பற்ற கடுஞ்சொல் பகைவர்போல் பார்வை; இவை அயலார் போன்று நட்புடையார்க்கு குறிப்புணர்த்தும் செய்கைகள்.