இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1096உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1096)

பொழிப்பு: புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

மணக்குடவர் உரை: கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும்.
இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.

பரிமேலழகர் உரை: (தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும்.
(கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.)

வ சுப மாணிக்கம் உரை: உறவில்லாதவர் போலச் சொன்னாலும் வெறுப்பில்லாதவர் சொல் விரைவில் புரியும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். .


உறாஅ தவர்போல் சொலினும் :
பதவுரை: உறாஅதவர்போல்-அயலார் போல; சொலினும்-சொன்னாலும்.

பொருள்: அயலார் போல பேசினாலும்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடாதவர் போலச் சொல்லினும்;
பரிப்பெருமாள்: கூடாதவர் போலச் சொல்லினும்;
பரிதி: அயலார் போலவே பார்த்தாலும்;
காலிங்கர்: நெஞ்சே! நெஞ்சிற் பருவுறாதார் போல் சில சொல்லினும்;
பரிமேலழகர்: (தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்;
பரிமேலழகர் விரிவுரை: கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின.

இத்தொடர்க்கு பழம் ஆசிரியர்கள் 'அயலார் போலச் சொன்னாராயினும்' என்ற பொருளில் உரை தந்தனர். மற்றவர்கள் தலைமகளது வன்சொல் என்று கொள்ள பரிமேலழகர் தோழி கூறிய கடுஞ்சொல் என்று கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறவில்லாதவர் போல் சொன்னாலும்', 'வெளியே ஏதிலார் போலக் கடுஞ்சொல் சொன்னாலும்', 'ஆசையில்லாதவர் போலப் பேசினாலும்', 'தொடர்பு இல்லாதவர் போல அவரது சொல் இருந்தாலும்', 'அன்பு இல்லாதவர் போல் சொன்னாலும்' என்றபடி உரை தருவர்.

அயலார் போல பேசினாலும் என்பது இத்தொடரின் பொருள்.

செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்:
பதவுரை: செறாஅர்-வெகுளாதவர்; சொல்-மொழி; ஒல்லை-கடிதின்; உணரப்படும்-அறியப்படும்.

பொருள்: வெகுளாதவர் மொழி கடிதின் அறியப்படும்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும்.
மணக்குடவர் கருத்துரை: இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.
பரிப்பெருமாள்: செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணம் பிறிதொன்று உளதென்று விரைந்து அறிய வேண்டும்.
பரிப்பெருமாள் கருத்துரை: இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது. மனம் நெகிழ்ச்சிகண்டு சாரலுற்ற தலைமகனைத் தனதில் வலியுறுத்தற்பொருட்டுக் கடுஞ்சொல் கூறித் தலைமகள் நீங்கின வழி, இஃது உள்ளன்பு இன்மையால் கூறினாள் அல்லள்; அதற்குக் காரணம் யாது?' என்று தலைமகன் தன்னுள்ளே சொல்லியது என்றவாறு.
பரிதி: இன்பம் உள்ள ஆசைப் பார்வையாலே கூடுதற்கு இட்டம் என்று அறிக என்றவாறு.
காலிங்கர்: பரிவுடையார் சொல்லும் சொல்லினது குறிப்பினை அனாதரிக்க அடாது;
காலிங்கர் கருத்துரை: மற்று இதன் கருத்து என்னை கொல் என்று விரைந்து குறித்துணர அடுக்கும் என்பதனால் தனக்கு ஆற்றாமை வந்தவிடத்து இதுவும் ஒரு பற்றுக்கோடு ஆயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும்.
பரிமேலழகர் விரிவுரை: 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.

இத்தொடர்க்கு மணக்குடவர்/பரிப்பெருமாள்/காலிங்கர் 'கடுஞ்சொல்லை உள்ளன்பு இல்லாமல் கூறவில்லை; பின் ஏன் அவள் அப்படிப் பேசினாள்? என்று விரைந்து அறியவேண்டும்' என்று தலைமகன் பேசுவதாக உரைத்தனர். பரிதி 'அவளுக்கு கூடுதற்கு விருப்பமதான்' என்றும் பரிமேலழகர் 'தோழியின் சொல் பின் பயனைத் தரும் என்பது கடிதின் அறியப்படும்' என்றும் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெறுப்பில்லாதவர் சொல் விரைவில் புரியும்', 'உட்சினமில்லாதவர்கள் மொழி ஈதென்று விரைவில் அறியலாம்', 'பகைமைக் குணமில்லாதவர் சொல் பயன்தரத் தக்கது என்பதை விரைவில் அறியப்படும்.', 'அகத்திற் பகையில்லாதவர் சொல் பின்பயன் படுதல் குறைவேண்டியவரால் விரைந் தறியப்படும்.', 'பகை எண்ணம் இல்லாதவரது சொல்லானது விரைவில் அவர் உற்றவர் என்பதை உணர்த்திவிடும்' என்று தலைவன் எண்ணுவதாகப் பொருள் கூறினர்.

அகத்திற் பகையில்லாதவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று விரைவில் உணரப்படும் என்பது பொருள்.

நிறையுரை:
காதலர் பழகிப் புரிதல் ஏற்படும் காலகட்டத்தில் வெளிப்படும் உணர்வு பற்றிய பாடல்.

உறாதவர் போல் சொன்னாலும் பகையில்லா சொற்கள் கடிதில் அறியப்படும் என்பது பாடலின் கருத்து.
உறாதவர் யார்?

ஒருவர் மீது ஒருவர் காதல் பற்றிக் கொண்டபிறகு உறவு பலப்படத் தொடங்கும் நேரம்; ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள முயல்கின்றனர். இப்பொழுது பழகத் தொடங்கிவிட்டனர். அவர்கள் அடிக்கடி சந்தித்து உரையாடுகின்றனர். பேச்சினிடையே உரசல்கள் ஏற்படுவது இயல்பு. ஒருவர் கருத்தை ஒருவர் ஒத்துக்கொள்ளாதவர்போலப் பேசிக் கொள்வர். அந்தச் சமயத்தில் அவளோ/அவனோ அறிமுகமாகாதவர் போல் சுடுசொல் கூறிச் சென்றுவிடுவர். இருவரிடையேயும் உள்ளத்தில் பகை உணர்வு இல்லை; மனதுள் வெறுப்பில்லாமல் சினம்கொண்டு சில சொற்களைச் சொல்லிச் சென்றுவிடுவர். அப்பொழுது ஒருகணம் மனம் கலக்கம் உறும். ஆனால் எண்ணிப்பார்த்தால் அவை பொய்யான சினத்தால் வந்த சொற்கள் என்று புரிந்துவிடும். உரையில் வன்மையுள்ளது போல் தோன்றினாலும் உள்ளத்துள் அன்புகொண்டவர் ஆவர் எனத் தெரியும். அக்கடுஞ் சொற்குள்ளும் காதற் கலப்பு உண்டெனவும் அறிந்து கொள்வர்.

உறாதவர் யார்?
உறாதவர் என்ற சொல்லுக்கு அயலார் என்று பொருள். கூடாதவர், நொதுமலர், உறவில்லாதவர், தொடர்பிலார், ஏதிலார் என்றும் பொருள் கூறுவர். 'உறாதவர் சொல்' என்பது மனத்துள் ஒன்று வைத்துப் புறத்து ஒன்று பேசும் குறிப்பு மொழியைக் காட்டுவதாகும் என்றும் கொள்வர். இங்கு குறிக்கப்பட்ட உறாதவர் தோழி என்று பரிமேலழகரும் தலைவி என்று பிறரும் கொண்டனர். தோழி என்பது அகத்திணைக்கு ஏற்புடையதாக இருந்தாலும் தலைவன், தலைவி இருவருக்குமே உறாதவர் என்பது பொருந்தும்.
எனவே உறாதவர் என்பது தலைமக்களையே குறிக்கும்.

இப்பாடலுக்கான பரிமேலழகர் உரையில் இலக்கணநெறி முழுமையாக அமையவேண்டும் என்பதற்காகத் தோழியைப் புகுத்தியிருப்பது பொருத்தமற்றது என்பர்.

வன்சொல் பகர்ந்தாலும் காதலர் நட்பு நெஞ்சினை உணர்ந்தோர், வெளிப்பட்ட மொழி பொய்ச்சொல்தான் என்பதை அதைக் கேட்ட மற்றவர் தெரிந்து கொள்வர். புறத்தில் உறவு அல்லாதவர் போலப் பேசினாலும் அகத்தில் அன்புடையவர்களின் அந்தக் கடும் சொற்களின் உட்பொருளை அவர்கள் விரைவில் உணர்வர்.

அயலார் போல அவரது சொல் இருந்தாலும், பகை எண்ணம் இல்லாதவரது உரை விரைவில் அவர் உற்றவர் என்பதை உணர்த்திவிடும் என்பது குறட்பொருள்.அதிகார இயைபு

காதலர் தங்களுக்குள் சுடுசொற்களையும் ஏற்றுக்கொள்வர் என்னும் குறிப்பறிதல் பாடல்.

பொழிப்பு

உறவில்லாதவர் போலச் சொன்னாலும் வெறுப்பில்லாதவர் சொல் விரைவில் புரியும்.