இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1095குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1095)

பொழிப்பு: என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள்போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.

மணக்குடவர் உரை: குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள்.
அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும். (சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.)

இரா சாரங்கபாணி உரை: நேரே பார்க்கவேண்டும் எனக் குறிக்கொண்டு பார்க்கவில்லையே யன்றி ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாள் போல நோக்கிச் சிரிப்பாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்.


குறிக்கொண்டு நோக்காமை அல்லால்:
பதவுரை: குறிக்கொண்டு-நேர் இலக்காகக் கொண்டு; நோக்காமை-பாராதிருத்தல்; அல்லால்-அன்றி.

பொருள்: நேராகப் பாராமல் அன்றி.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது;
பரிப்பெருமாள்: குறித்து நோக்காமை யல்லது;
பரிதி: குறித்துப் பார்த்துப் பாராமுகம் பண்ணுமாப்போல;
காலிங்கர்: நெஞ்சமே! நம்மோடு பயின்றிலாமையின் குறிக்கொண்டு எதிர்முகம் நோக்காமையல்லது;
பரிமேலழகர்: (இதுவும் அது.)நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல;

'நேராகப் பாராமல் அன்றி' என்று பொருள்படும்படி இத்தொடர்க்குப் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்னை நேராகப் பார்க்கவில்லையே யன்றி', 'என்னை நேரே பார்ப்பதில்லை', 'குறிப்பாக என்னைப் பார்க்கவில்லையே தவிர','என்னை முகநோக்கி உற்றுப்பார்க்காத தன்மையே யன்றி', 'பார்க்கவேண்டும் என்ற குறிப்புக்கொண்டு பாராமை அல்லது' என்றபடி இத்தொடர்க்கு விளக்கம் தந்தனர்.

'என் முகம் குறித்து நேராகப் பார்க்கவில்லையே தவிர' என்பது இத்தொடரின் பொருள்.

ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்:
பதவுரை: ஒருகண்-ஒருகண்; சிறக்கணித்தாள்-சுருக்கினவள்' போல-ஒக்க; நகும்-மகிழும்.

பொருள்: ஒருகண் சுருக்கினவள் போலச் சிரிப்பாள்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள்.
மணக்குடவர் விரிவுரை: அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.
பரிப்பெருமாள்: ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள்.
பரிப்பெருமாள் விரிவுரை: அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். அஃதாவது நகை தோற்றியவழிப் பிறிதொன்று கண்டாள் போல நகுதல். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.
பரிதி: ஒருகண் கீழ்க்கணித்து நோக்கிச் சிரிக்கும் என்றவாறு.
காலிங்கர்: நம்கண் தனது உட்குறிப்பினான் ஒருகண் கடைக்கணித்தாள் போல நின்று அகமுறுவல் செய்யும்.
காலிங்கர் விரிவுரை: எனவே, மற்றொன்று நோக்குவாள் போல முகம்புரிந்து இப்பக்கத்து விழிக்கடை நோக்கு என் கண்ணதே போல்வதோர் இன்பப் புன்முறுவல் செய்யும் என முன்னிலையிலும் பின்னிலைக்குறி வேற்றுமைகண்டு மற்று இது பற்றுக்கோடாக ஆறினான் என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும். பரிமேலழகர் விரிவுரை: சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.

பழைய ஆசிரியர்கள் அனைவரது உரைகளயும் தொகுத்துப் பார்க்கும்பொழுது 'மற்றொன்று நோக்குவாள் போல கடைக்கண்ணால் என்னைப் பார்த்து அகமுறுவல் செய்தாள்' என்பது பெறப்படும்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு கண்ணால் சுருக்கிப் பார்த்துத் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவாள்', 'ஒருகண்னை இடுக்கினாற்போலச் சிரிப்பாள்', 'ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாள் போல நோக்கிச் சிரிப்பாள்', 'எங்கோ பார்க்கிறவள் போலக் கடைக் கண்ணால் என்னையே பார்த்துச் சிரிப்பாள்', 'தலையைச் சாய்த்தாள் போலப் பார்த்து நகுவாள்' என்றபடி உரை தந்தனர்.

'ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாள் போலச் சிரிப்பாள்' என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
கடைக்கண் பார்வை வீசி அவளது காதலை உறுதி செய்தாள் என்னும் பாடல்.

என்னை நேராகப் பார்க்கவில்லையே தவிர, ஒருகண் சிறக்கணித்தாள் போல என்னைப் பார்த்து நகும் என்பது பாடல் கருத்து.
ஒருகண் சிறக்கணித்தாள் என்றால் என்ன?

இடைவெளி முற்றிலும் குறைந்து உள்ளங்கள் ஒன்றுபடும் நிலை காட்டப்படுகிறது இங்கு.
சென்ற சந்திப்பில் இவன் அவளைப் பார்த்தான். அவள் நிலம் நோக்கினாள். இவன் பாராதபோது அவள் இவனை நோக்கி மெல்லிய புன்முறுவல் பூத்தாள். இப்பொழுது நேருக்கு நேர் அவனை முழுமையாகப் பார்க்காமல், அவன்மீது கடைக்கண் வீசி, வேறு எங்கோ பார்ப்பது போல் முகம் காட்டிக்கொண்டு ஒரு விழிப் பார்வையால் அவனை நோக்கித் தனக்குள்ளே சிரித்து மகிழ்கிறாள். பொருள் பொதிந்த காதல் கலந்த ஓரக்கண் பார்வையை அவனை நோக்கிச் செலுத்தியதும், அவள் சிறக்கணித்துச் சிரித்ததும், அவளது எண்ணத்தில் அவனே நிறைந்திருக்கிறான் என்பதைக் குறிப்பாகக் காட்டித் தன் காதலை ஐயத்திற்கு இடமின்றி முழுமையாகத் தெரிவிக்கிறாள் என அவன் உணர்கிறான். உளப் பொருத்தம் வளர்ந்து இருவரிடையேயான காதல் கனிந்துவிட்டது என்பதை இக்காட்சி விளக்கியது.

ஒருகண் சிறக்கணித்தாள் என்றால் என்ன?
சிறங்கணித்தாள் என்பது சிறக்கணித்தாள் என எதுகைக்காக வலிந்து வந்தது என்பர். ஒருகண் சிறக்கணித்தாள் என்றால் ஒரு கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள் என்று பொருள். சிறக்கணித்தல் என்பதற்கு இடுக்கிக்கொள்ளல், கீழ்க் கணித்து நோக்குதல், கண்ணைச் சுருக்கி ஓரமாய்ப் பார்த்தல், கடைக்கண்னால் எங்கோ பார்ப்பது போலப் பார்த்தல், சிமிட்டினாற் போலப் பார்த்தல், கண்ணடித்தல், தலைசாய்த்தாள் எனப் பலவாறு பொருள் கூறப்பட்டுள்ளன.

நேருக்கு நேராகப் பார்க்காமல் ஒரு கண்ணைச் சாய்த்து அவனைப் பார்த்துச் சிரித்தது அவர்கள் உள்ளத்தளவில் மிகவும் நெருங்கிவிட்டார்கள் என்பதைச் சொல்லியது. அவளது முழு இசைவு அவனுக்குக் கிடைத்து விட்டதாக அவன் அறிந்து கொள்கிறான்.
'என் முகம் நோக்கி நேராகப் பார்க்கவில்லையே தவிர ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாள் போல என்னைப் பார்த்துச் சிரிப்பாள்' என்பது இக்குறட்பொருள்.

அதிகார இயைபு

ஓரவிழிப்பார்வை கண்டு அவளது காதலின் உறுதியைக் குறிப்பறிதல் கொண்டான் என்னும் செய்யுள்.

பொழிப்பு

என் முகம் குறிக்கொண்டு அவள் நேராக என்னைப் பார்க்கவில்லையே தவிர ஒருகண்னை இடுக்கினாற்போலச் சிரிப்பாள்.