இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1093நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1093)

பொழிப்பு: என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித் தலைகுனிந்தாள்; அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

மணக்குடவர் உரை: முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள். அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர்.
தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.

பரிமேலழகர் உரை: (நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று.
(அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.)

இரா சாரங்கபாணி உரை: யான் காணாதபோது என்னை அன்போடு நோக்கினாள். நோக்கியபின் எதனையோ ஒன்றனை மனத்துட்கொண்டு தலை குனிந்தாள். அச்செயல் அவள் காமப்பயிர் வளர்தற்கு பாத்தியுள் பாய்ச்சிய நீராயிற்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர்.


நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்:
பதவுரை: நோக்கினாள்-பார்த்தாள்; நோக்கி-பார்த்து; இறைஞ்சினாள்-தலை கவிழ்ந்தாள்.

பொருள்: பார்த்தாள்; பார்த்துத் தலை கவிழ்ந்தாள்;

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள்.
பரிப்பெருமாள்: முற்பட நோக்கிப் பின்பு நாணினாள்.
பரிதி: நோக்கினாள் முகத்தை யான் நோக்கத் தலைகீழிட்டது.
காலிங்கர்: நெஞ்சமே! இங்ஙனம் சிறந்த நோக்கினை உடையாள் முன்னம் தான் நோக்கிப் பின்னர் யான் தன்னை நோக்குமிடத்து எதிர்நோக்கு இன்றி முகம் இறைஞ்சி நின்றாள்.
பரிமேலழகர்: (நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்;

'என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணித் தலை குனிந்தாள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் உரை அமைந்தது.

இன்றைய ஆசிரியர்கள் 'பார்த்தாள்; பார்த்துக் குனிந்தாள்;', 'என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கித் தலைகுனிந்து பணிந்தாள்;', 'என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணித் தலை குனிந்தாள்.', 'என்னைச் சிறு பார்வையாகப் பார்த்தாள். உடனே தலை குனிந்து கொண்டாள்', 'நோக்கியபின் எதனையோ ஒன்றனை மனத்துட்கொண்டு தலை குனிந்தாள்' என்றபடி பொருள் கூறினர்.

என்னைப் பார்த்தாள்; நான் அவளை எதிர்பார்வை பார்த்ததும் தலை கவிழ்ந்தாள் என்பது இத்தொடரின் பொருள்.

அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்:
பதவுரை: அஃது-அது; அவள்-அவள்; யாப்பினுள்-தளையுள்; அட்டிய-வார்த்த; நீர்-நீர்.

பொருள்: அது அவள் தளையுள் வார்த்த நீர் .

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர்.
மணக்குடவர் கருத்துரை: தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.
பரிப்பெருமாள்: அஃது அவள் நட்பு வளர வார்த்த நீர் என்றவாறு.
பரிப்பெருமாள் கருத்துரை: நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாயிற்று. பந்தம் என்பதனை யாப்பு என்று கூறினார். பார்த்தவள் பெயராது நாணி நிற்றலும் உடன்படுதலாம் என்றது.
பரிதி: அஃது என்போல என்னில் கட்டிய கட்டில் தண்ணீர் விட்டதற்கு ஒக்கும்.
காலிங்கர்: மற்று அஃது யாதினை ஒக்குமோ எனில் ஓர்ப்புறைந்த இடத்துப் பின்னும் அதற்கு உறுதி பெறுவதாக நீர் பெய்து கூறு கொண்டாற்போலத் தானும் நம்மிடத்து ஓர்த்தற் குறிப்புடைமை வைப்புறுத்தினாள் போலும் என்று மகிழ்ந்து தேறினான் தலைமகன் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று.
பரிமேலழகர் கருத்துரை: அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.

அது அவர்களிடையான நட்புப்பயிர் வளர்தற்கு வார்த்த நீர் ஆனது என்பது பழம் ஆசிரியர்களின் கருத்து.

'அது அவள் காதற்பாத்தியில் இறைத்த நீர்', அஃது எங்கள் இருவருக்குமுள்ள தொடர்பு வளரும்படியாக அவள் விட்ட நீர்', 'இவள் அப்படிச் செய்தது சம்மதம் என்ற பயிருக்கு நீர் பாய்ச்சியது போல் இருந்தது', 'அக்குறிப்பு காதல் வளர அவள் வார்த்த நீராகும்' என்று இன்றைய ஆசிரியர்கள் உரை செய்தனர்.

அது அவள் எங்கள் உறவு வளர காதல் பாத்தியில் ஊற்றிய நீர் போல் ஆகும் என்பது இத்தொடரின் கருத்து.

நிறையுரை:
அவனை நோக்கி அவள் தலைகவிழ்ந்து பெண்மையால் குறிப்புணர்த்தும் சுவையான காட்சி அமைந்த பாடல்.

அவள் பார்க்க என் எதிர்பார்வைக்கு அவள் இறைஞ்சியது யாப்பினுள் அட்டிய நீர் போல் ஆயிற்று என்பது இக்குறட்கருத்து.
யாப்பினுள் அட்டிய நீர் என்றால் என்ன?

அவனுக்கும் அவளுக்கும் காதல் அரும்பியபின் அவளது கண்களவு கொண்ட சிறுநோக்கால் அவளது இசைவும் வெளிப்படையானது. இப்பொழுது அவன் இன்னும் நெருக்கமான இடைவெளியில் அவளைக் காண்கிறான். அன்று களவுப்பார்வை பார்த்தவள் இப்பொழுது நேராகவே பார்க்கிறாள். அவன் அவளை எதிர்நோக்கு கொள்கிறான். இப்பொழுது அவள் ஏதோ கருத்தை உட்கொண்டு நாணித் தலைகவிழ்ந்து கொள்கிறாள். அவ்வாறு அவள் செய்தது அவர்களது காதல் பயிருக்கு அவள் நீர்பாய்ச்சியது போல் இருந்தது என்கிறான் அவன். அவளது இச்செயல் அவள் எத்தகைய உணர்வுடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்திவிட்டது. அவர்களது புதிய உறவு தொடர்வது உறுதிப்பட்டுவிட்டதற்கான குறிப்பு கிடைத்தது. .

யாப்பினுள் அட்டிய நீர் குறித்தது என்ன?
நீர் நிறுத்துதற்கு வரம்பு கட்டி அமைக்கப் பெற்ற பாத்தி ‘யாப்பு’ என்று சொல்லப்படும். யாப்பு என்பதற்குக் கட்டு என்ற பொருளும் உண்டு. இங்கு பாத்தி என்ற பொருளில் இச்சொல் ஆளப்பட்டது. யாப்பினால் ஆகிய காதல் பயிரைப் பற்றி இப்பாடல் பேசுகிறது. அவள் தலை குனிந்தது பாத்தியுள் வார்த்த நீர் ஆயிற்று. யாப்பினாலாகிய அன்பைப் பயிராக உருவகம் செய்யாததால் இதை ஏகதேச உருவகம் என்பர் இலக்கண ஆசிரியர்.
வயலுள் விட்ட நீர் பயிர்கள் வளர ஏதுவாயினாற்போல, என்னைக் காதற் பார்வை பார்த்து நாணி அவள் தலை கவிழ்ந்த குறிப்புச் செயலானது, எங்கள் இருவரிடத்தும் தோன்றிய அன்பு என்ற பயிரை வளர்க்க அவள் இறைத்த நீராயிற்று என்பது பொருள்.

அவள் அவனை நேர்நோக்கிப் பின் ஏதோ உள்ளத்தில் கருத்துக் கொண்டு தலை தாழ்ந்தாள். இச்செயல் பெண்களுக்குள்ள இயல்பான நாணத்தாலே இவ்வாறு அமைந்தது. அவள் அவன்பால் கொண்டுள்ள காதலையும் தெற்றெனப் புலப்படுத்தியது. இருவரிடையேயும் தோன்றியுள்ள காதல் பயிர் வளர இக்குறிப்பு நீர் ஊற்றியது போல் ஆயிற்று என்று அவன் உணர்கிறான்.

அவள் என்னைப் பார்த்தாள்; நான் அவளை நோக்கினேன்;அவள் ஏதோ மனதில் கருதி தலைகவிழ்ந்தாள். அச்செயல் எங்கள் அன்புப்பயிரை வளர்க்கும் நீர் ஆயிற்று என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

என் எதிர்பார்வைக்கு அவள் நாணித் தலைகவிழ்ந்தது உறவு தொடர்வதற்கு உறுதியான குறிப்பறிதல் ஆனது.

பொழிப்பு

என்னைப் பார்த்தாள்; பார்த்துத் தலை தாழ்ந்தாள்; அது எங்கள் உறவு தொடர அவள் காதற்பாத்தியில் பாய்ச்சிய நீர் போலானது.