இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1091இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1091)

பொழிப்பு: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப் பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

மணக்குடவர் உரை: இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம்.
நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.
(உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: இவளுடைய மைதீட்டிய கண்களில் இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒருவிதப் பார்வை காம நோய் உண்டாக்குவதாக இருக்கிறது. இன்னொருவிதப் பார்வை அந்த காம நோயைத் தணிக்கும் மருந்தாக இருக்கிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இவள் உண்கண் இருநோக்கு உள்ளது; ஒருநோக்கு நோய்நோக்கு; ஒன்று அந்நோய் மருந்து.


இருநோக்கு இவள்உண்கண் உள்ளது:
பதவுரை: இரு-இரண்டு; நோக்கு-பார்வை; இவள்-இம்மகள்; உண்-உண்ட; கண்-இடத்தில்; உள்ளது-அகத்தது.

பொருள்: மையுண்ட இவளது கண்ணில் இரண்டு பார்வைகள் உள்ளன .

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து;
பரிப்பெருமாள்: இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து;
பரிதி: இரண்டு பார்வை உண்டு நாயகிக்கு;
காலிங்கர்: நெஞ்சமே! இவளது மையுண்ட கண்ணின்கண் உளதாகிய நோக்குத்தான் நம்பால் இரண்டு நோக்கமாயிருந்தது.
பரிமேலழகர்: (தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று;
பரிமேலழகர் பதவுரை:உண்கண்: மையுண்ட கண்.

பழைய ஆசிரியர்கள் அனைவரும் இவளது மையுண்ட கண்ணில் இரண்டு பார்வை உண்டு என்று ஒருமித்த கருத்துத் தெரிவித்தனர்.

இன்றைய ஆசிரியர்களும் இத்தொடர்க்கு 'இவள் மைக்கண்ணில் இருபார்வை உண்டு', 'இரண்டு வகையான பார்வை இவளது மையுண்ட கண்களுக்கு இருக்கின்றன', 'இவளது மை தீட்டிய கண்களில் பொதுவாகப் பார்க்கும் பார்வையும், சிறப்பாகப் பார்க்கும் பார்வையும் ஆகிய இருவித எண்ணப் பார்வைகள் இருக்கின்றன' என்றபடி விளக்கங்கள் தந்தனர்.

இவளுடைய மையுண்ட கண்ணில் இரண்டுவித பார்வைகள் இருக்கின்றன என்பது இத்தொடரின் பொருள்.

ஒருநோக்கு நோய்நோக்குஓன்று அந்நோய் மருந்து:
பதவுரை: ஒரு-ஒரு; நோக்கு-பார்வை; நோய்-காமப்பிணி; நோக்கு-பார்வை; ஒன்று-ஒன்று; அந்நோய்-அந்தநோய்; மருந்து-மருந்து.

பொருள்: ஒரு பார்வை காமப்பிணி உண்டாக்குவது; மற்றொன்று அப்பிணியைத் தீர்க்கும் மருந்து.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம்.
மணக்குடவர் விரிவுரை: நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.
பரிப்பெருமாள்: அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம்.
பரிப்பெருமாள் விரிவுரை: நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கு: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். அதனானே உடம்பாடு காண்டலின் மருந்தாயிற்று. இது நாணிநோக்குதல் உடம்படுதலாம் என்றது.
பரிதி: ஒரு பார்வை விரகம் தரும். ஒரு பார்வை விரகத்துக்கு மருந்தாகிய அமுதபார்வை கொடுக்கும் என்றது.
காலிங்கர்: இஃது எங்ஙனம் எனில், ஒரு நோக்கு நம் இடர்செய்யும் நோக்கம். ஒரு நோக்கம் மற்று அவ்விடம் தணித்தற்கு ஒரு தணிமருந்து போலும் என்றவாறு.
காலிங்கர் விரிவுரை: எனவே எங்கும் ஓடும்போது நோக்கின், தனக்கு ஒரு பயன் இன்மையின் நோயது என்றும், இனித் தன்வயிற்சென்ற நோக்குத் தனது உயிர் ஆற்றங்கோர் தண்ணளி ஆகையால் இடர்தணி நோக்கு என்றும் இங்ஙனம் நோக்கினைப் பிரித்துக் கொண்டு அவள் உட்குறிப்பு அறிந்தான் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.
பரிமேலழகர் விரிவுரை: நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக. அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.

இத்தொடருக்குப் பழம் ஆசிரியர்கள் அனைவரும் ஒரு பார்வை நோய் செய்வது; இன்னொரு பார்வை அந்நோய்க்கு மருந்தாக அமைவது என்றனர்.
விரிவுரையில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் முதல் நோக்கு நோய் செய்தது என்று சொல்லி அதனால் துன்பமுற்ற அவனை அவளது உள்ளங்கலங்கிய நாணோடு கூடிய இன்னொரு பார்வை பார்த்தாள்; இதனால் நாணமுடைய அவளது உள்ளக்கருத்து வெளிப்பட்டது என்று அதிகார இயைபும் கூறினர். காலிங்கர் உரை அவன் அவளது பார்வையை இடர்செய்யும் பார்வை, இடர் தணிக்கும் பார்வை என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டு- அவளது குறிப்பறிந்தான் என்கிறது. பரிமேலழகர் ஒரு நோக்கு தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு என்றும் இன்னொரு நோக்கு அந்த அன்பு நோக்கு செய்த நோயை ஆற்றும் மருந்து என்றும் விளக்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு நோக்கு நோய் செய்யும்; ஏனையது நோய் போக்கும் மருந்தாகும்' என்ற பொருளிலேயே உரை கூறினர்.

ஒரு பார்வை நோய் உண்டாக்குவது; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தாவது என்பது பொருள்.

நிறையுரை:
தன் பார்வை தந்த நோயைத் தன் பார்வையாலேயே தணித்தாள் என்னும் நயம்மிகு கவிதை.

இவளது கண்ணில் இரண்டு பார்வை தெரிகிறது. ஒன்று நோய் செய்தது; இன்னொன்று அந்நோய் தீர்க்கும் மருந்தானது என்பது இக்குறட் கருத்து.
நோய் செய்த பார்வை பொதுப்பார்வையா? அல்லது அன்பு நோக்கா?

ஒரு குறளே உலக அறிஞர்களைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று ஆகும்.
இக்குறளின் புதுமையான கற்பனையையும் பொருள் நுட்பத்தையும் அனுபவித்த கிரால் என்ற ஜெர்மன் நாட்டு அறிஞர் குறள் முழுவதையும் கற்றுக் களித்ததுடன் கி பி 1854 இல் ஜெர்மன் மொழியிலும் கி பி 1856 இல் இலத்தீன் மொழியிலும் மொழிபெயர்ப்பும் செய்தார்.

காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தாலே பேருவகை அடைவர் என்னும் பாடலுடன் முந்தைய தகையணங்குறுத்தல் அதிகாரம் முடிந்தது. அவளை வியந்துநின்றவன், காதல் அரும்பியபின், இப்பொழுது, அவளைப் பார்க்க ஏங்குகிறான். அவளுடன் நெருங்கி உரையாட, அளவளாவ, உறவாட, முற்படுகிறான். அவள் அவனைச் சந்திப்பாளா என்ற குறிப்பறிய ஆவல் கொள்கிறான்; அதாவது அவள் உள்ளக் கருத்தினை அறிய விழைகிறான். இவ்வேளை அவளை எதிர்கோள்ள நேரிடுகிறது.

இங்குள்ள காட்சியில் அவன் தோன்றுகிறான். பின் அவன் எதிரில் அவள் தோன்றுகிறாள். அவள் கண்ணில் மை அணிந்துள்ளாள் (அழகிற்காகவும் குளிர்ச்சிக்காகவும் பெண்கள் மையிடுவர்). அவள் அவனைப் பார்க்கிறாள். அப்பார்வையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான இரண்டு நோக்கு உள்ளன. முதல் பார்வை அவனுடைய உள்ளத்தே கிளர்ச்சியை உண்டாக்கிக் காமநோயைத் தருகின்றது; அவள் செய்த அந்நோயை ஆற்றவல்ல மருந்து வேறெங்கும் பெறமுடியாதது; அது அவளிடமே இருந்தது. அது இரண்டாவது பார்வையான அவளது கனிந்த காதல் பார்வை. இந்த இதமான பார்வை முதல் பார்வை செய்த நோய் தணிக்கும் மருந்தாக அமைகின்றது. இரண்டு பார்வையும் மாறி மாறி வருகிறது. இதனால் அவல உணர்வும், இன்ப உணர்வும் அவன் உள்ளத்தீல் மாறி மாறித் தோன்றுகிறது. இரண்டாவதான பார்வையில் குறிப்புக் கிடைக்கிறது. அன்புடன் அவள் நோக்கியதால் காதலைத் தோற்றுவித்த அவள், அவனைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறாள் என்பதே அக்குறிப்பு.

அவளது முதல் பார்வை பொதுப்பார்வையா? அல்லது தனது அன்பரை நோக்கிய சிறப்புப் பார்வையா?
பொதுப்பார்வை என்பது இவர் யாரோ என்று அறியாது பார்ப்பது அல்லது எல்லோரையும் பார்ப்பதுபோல் பொதுவாகப் பார்ப்பதாகும். அவள் அவனை பொதுப்பார்வை பார்த்ததால் நோயுற்று வருத்தமடைந்தான் என்று சிலர் உரை கூறியதாக பரிமேலழகர் தன் உரையில் சுட்டியுள்ளார். அவர் யாரைச் சுட்டியுள்ளார் என்பது தெரியவில்லை. நோயால் வருந்தினான் என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூறுவதாலும் காலிங்கர் அந்நோக்கு இடர்செய்தது என்றதாலும் இம்மூவரையும் குறித்ததாக அறிஞர் கருதினர். மேலும் 'குறிப்பறிதல் கைக்கிளை வகையுள் ஒன்றே யாதலானும் கண்ட முதல் நோக்கிலேயே தலைவி தன் மனத்துக் காமக் குறிப்பினை வெளிப்படுத்தி நோக்காள் ஆதலானும் அங்ஙனம் நோக்குதல் பெண் தன்மைக்கு இயலாத செயல் ஆதலானும் எல்லாரையும் பார்ப்பது போலப் பொதுவாக நோக்கினாள். அந்நோக்குத் தலைவற்குக் கவலை நோயைப் பிறப்பித்தது' என்ற விளக்கமும் அளித்தனர். முதல் பார்வை பொதுப்பார்வை என்றும் மற்றொரு பார்வை சிறப்புப் பார்வை என்றும் இவர்கள் சொல்வர்.
ஆனால் தகையணங்குறுத்தல் அதிகாரத்தின் இறுதிப்பாடல் அவனுக்கும் அவளுக்கும் இடையே காதல் முகிழ்த்துவிட்டது என்ற பொருள்படும்படியே அமைந்தது; இப்பாடலுக்கான மணக்குடவர்/பரிப்பெருமாள்/காலிங்கர் ஆகியோரது உரையில் பொதுப்பார்வை பற்றி நேரடிக் குறிப்பு இல்லை; ஆதலால் முதல் பார்வையால் உண்டான காமநோயால் துன்பம்/இடர் நேர்ந்தது; இரண்டாவதான அன்புப் பார்வை அந்நோயைத் தீர்த்த மருந்தானது என்பதுவே பாடல் கூறுவது. எனவே இக்குறளில் சொல்லப்பட்ட அவளது முதல் பார்வை பொதுநோக்கல்ல; அவனை நோக்கி வீசப்பட்ட சிறப்புப் பார்வையே ஆகும்.

இவளுடைய மைதீட்டிய கண்ணில் இரண்டு நோக்கு உண்டு. ஒரு நோக்கு காதல்நோய் தரும் நோக்கு. மற்றொன்று அந்நோய் தணிக்கும் மருந்துநோக்கு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவளது பார்வையை நோய்நோக்கு,மருந்துநோக்கு என்று இரண்டாகக் கொண்டு அவன் குறிப்பறிதல் கொண்டான்.

பொழிப்பு

இவளுடைய மையுண்ட கண்ணில் இருபார்வை உண்டு. ஒரு பார்வை நோய் செய்யும்; மற்றது நோய் ஆற்றும் மருந்தாகும்.