இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1080



எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து

(அதிகாரம்:கயமை குறள் எண்:1080)

பொழிப்பு (மு வரதராசன்): கயவர் எதற்கு உரியவர்? ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

மணக்குடவர் உரை: கயவர் யாதினுக்கு வல்லரெனின், தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர்.
இது நிலையிலர் என்றது.

பரிமேலழகர் உரை: கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேறு எத்தொழிற்கு உரியர்?
(உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும் . கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒரு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம்பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: எதற்குத் தகுதி கயவர்? ஏதும் கிடைப்பின் விரைந்து தன் மானத்தை விற்கத் தகுதி.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கயவர்ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர்?

பதவுரை: எற்றிற்கு-எதற்கு, எத்தொழிற்கு; உரியர்-தகுதியுடையவர், உரிமையுடையார்; கயவர்-கீழோர்; ஒன்று-ஒரு துன்பம், இடுக்கண் ஏதும்; உற்றக்கால்-வந்தால், நேர்ந்தபொழுது; விற்றற்கு-விலைப்படுத்தற்கு; உரியர்-உரிமையுடையார், தகுதியானவர்; விரைந்து-விரைவாக, காலம் தாழ்க்காமல்.


எற்றிற்கு உரியர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கயவர் யாதினுக்கு வல்லரெனின்;
பரிப்பெருமாள்: கயவர் யாதினுக்கு வல்லவர் எனில்;
பரிதி: எதற்கு உரியார் கயவர் என்றால்;
காலிங்கர்: எற்றுதற்கு உரியார்;
எற்றிற்கு என்பது எற்றுதற்கு என்றது;
பரிமேலழகர்: அதுவன்றி வேறு எத்தொழிற்கு உரியர்?

'யாதினுக்கு வல்லரெனின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுவன்றி வேறு எத்தொழிலுக்கு உரியவர்?', 'கயவர்கள் எதற்கு உதவுவார்கள்?', 'வேறு எதற்குப் பயன்படுவர்?', 'அஃதன்றி வேறு எத்தொழிற்கு உரியர்?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எத்தொழிற்குத் தகுதியானவர்? என்பது இப்பகுதியின் பொருள்.

கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது நிலையிலர் என்றது.
பரிப்பெருமாள்: தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நிலைமையிலர் என்றது.
பரிதி: தனக்கு ஒரு தண்டனை வந்தால் விற்றுக்கொள்ள உரியர் என்றவாறு.
காலிங்கர்: கயவராய் உள்ளார் வந்து மருவினால் ஒருவர்க்கு இடுக்கண் வந்து உற்ற இடத்து மற்று அதுவே பட்டடையாக உயிர்க்கு ஈறு, பொருட்கு இறுதி வருமாறு விரைந்து, அஃது இயையாது எனின் உற்ற இடத்து உதவாது விரைந்து நீங்குதற்கு உரியார்;
காலிங்கர் குறிப்புரை: விற்றற்கு என்பது வேறுபட்டு நீங்குதற்கு என்றது; வீற்றற்கு எனற்பாலது விற்றற்கு எனக் குறுகி நின்றது. ஆதலால் எவ்வாற்றானும் கயவரோடு குடிப்பண்பு உடையோர் மருவாது ஒழிக என்பது பொருளாயிற்று என்றவாறு. [மருவாது - கூடாது; வீற்றற்கு- தனித்து நீக்குதலுக்கு வீறு-தனிமை, பிரித்தல், வீற்றற்குரியர்]
பரிமேலழகர்: கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; [பற்றுக்கோடாக - துணையாக]
பரிமேலழகர் குறிப்புரை: உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும். கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒரு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம்பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது. [பிறிதாக- வேறுகாரணங்களால்]

'தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கயவர் தமக்கு ஏதேனும் ஒரு துன்பம் வந்தால் அதனை நீக்கிக் கொள்ளத் தம்மையே பிறர்க்கு விரைந்து விலைக்கு விற்றற்கு உரியராவர்', 'ஏதேனும் சமயம் நேர்ந்தால் தீய காரியங்களைச் செய்யக் கூலிக்காரர்களாகத் தம்மை விலைக்கு விற்றுவிடத்தான் உதவுவார்கள்', 'ஒரு துன்பம் வந்தால் கீழ்மக்கள் விரைவாக விற்கப்படுதற்குரிய அல்லாமல்', 'ஒரு துன்பம் வந்தபோது விரைவாகத் தம்மை விற்பதற்குரியவர் கயவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கயவர் தமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அதற்காகத் தம்மையே பிறர்க்கு விரைந்து விலைப்படுத்த வல்லவர்! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கயவர் தமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அதற்காகத் தம்மையே பிறர்க்கு விரைந்து விலைப்படுத்த வல்லவர்; எற்றிற்கு உரியர்? என்பது பாடலின் பொருள்.
'எற்றிற்கு உரியர்' என்ற தொடரின் பொருள் என்ன?

நிலையிலாத் தன்மையால் தம்மை எளிதில் பிறர்க்கு அடிமையாக்கிக் கொள்வர் கயவர்.

கயவர் எத்தொழிலை நன்கு செய்வர்? தமக்கு ஒன்று நேர்ந்த காலத்தில் அதற்காகத் தம்மை விரைந்து பிறர்க்கு விலைக்கு விற்று விடுவதைத்தான் அவர்கள் 'பொறுப்புடன்' செய்வர்.
உரியர் என்ற சொல்லுக்கு உடைமையாளர் என்பது பொருள். எச்செயலைத் தன் உடைமையாக (ownership) அதாவது தனக்கு உரிமையுள்ளதாக எடுத்துக்கொண்டு கயவர் பொறுப்புடன் செய்வர்? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு எள்ளலுடன் தனக்கு ஏதாவது கிடைக்குமாயின் தன்னையே விற்றுக்கொள்ளும் தொழிலை முதலாளுமையுடன் செய்வர்! எனப் பதிலும் கூறுகிறார் வள்ளுவர்.
கயவர் பண்பை வணிகம்போல் பண்டமாற்றும் திறம் கொண்டவர்; அவர் தனது நாணையும் விற்பனை செய்வர் என்கிறார் வள்ளுவர். இது அவர்க்கு கொள்கை என்று ஒன்று இல்லை; உரிமையுணர்வு என்றும் ஒன்று இல்லை என்பதைச் சொல்கிறது. ஏதாவது இடுக்கண் ஏற்படின் அதிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்து நல்ல வழிகளைத் தேடாமல் தம்மைத் தாமே விரைந்து பிறர்க்கு விற்றுவிடுவார்கள். சிறு இடர் வந்தாலும் அதனைத் தாங்கும் ஆற்றலில்லாது தன்னையே உடனே விற்று அதைத் தீர்ப்பதே எளிதானவழி எனக் காண்பவர்கள் இக்கீழ்கள். தன்னை விற்றல் என்பது தன்னையே பிறர்க்கு அடிமையாக்கிக்கொள்ளுதல் குறித்தது. யாரிடம் தம்மை அடிமையாய் நிற்க ஆயத்தமாய்ச் செல்கிறாரோ அவர் தமது இழிகுணம் அறிந்து தம்மை மறுத்துவிடுவாரோ என அஞ்சி 'விரைந்து' சென்றுவிடுவாராம். எந்த ஒரு தொழிலுக்கும் அவர் உரியரல்லர் என்பது குறிப்பு. இக்குறளால் கயவரின் அடிமை மனப்பான்மை கூறப்பட்டது.

முற்காலத்து மனிதர்களை விலைப்படுத்தும் ஒருவகை அடிமை வணிகம் இருந்ததாகத் தெரிகிறது. நளனும் தருமனும் தமக்கு உற்றவர்களை விற்றது பழம் இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. கயவர் ஒருவர் தவறுஏதேனும் செய்துவிட்டால் அதிலிருந்து மீள அவர்கள் தம்மையே பிறரிடம் விற்றுவிடுவார்கள் என்கிறது இப்பாடல். இது தன்னைத் தானே விற்றுக் கொள்ளும் முறை.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து (ஒப்புரவறிதல் 220) என்ற குறளில் பொது நன்மைக்கு உதவுதலினால் ஒப்புரவாளன் வறுமையடைந்தால் அதை ஒருவன் தன்னை விலைப்படுத்தியும் ஈடு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அப்பாடலின் கருத்து தன்னை விற்றுக்கொள்வதுகூட சில வேளைகளில் தகுதியான செயல்தான் என்பது. ஆனால் இக்குறள் ஒருவன் தன்னை விற்பதற்குரியவனாக ஆயத்தநிலையில் வைத்திருப்பது ஒரு இழிவான செயல் என்ற பொருளில் உள்ளது. தன்னைத்தான் விற்றுக்கொள்ளும் வழக்கினை இங்கு கயவனுக் கேற்றிக் கூறப்படுகிறது. 'விற்றற்கு' என்ற சொல்லின் பொருள் 'விலைப்படுத்தல்' என்பது.
கயமைக் குணங்கொண்டோர் தமக்கொரு துன்பம் வந்தால், தன்மானத்தையும் உரிமையையும் இழந்து, பிறரிடம் தன்னை விற்று விடுவர். இது ஒன்றுதான் கயவர்களோட தகுதியாவும். இதுதவிர வேறு எதுசெய்யவும் இவர்களால் இயலாது.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் (குடிமை 954 பொருள்: கோடி கோடியாகப் பொருள் பெறுவதாயிருந்தாலும் நல்ல குடியில் பிறந்தார் தம் குடிக்குத் தாழ்வாயின செய்தல் இல்லாதவர்கள்) எனக் குடிப்பிறந்தார் பெருமை முன்பு கூறப்பட்டது. இந்தப் பண்பாட்டு ஒழுக்கத்திற்கு எதிரான நிலையை உடைய கயவர்கள் பணத்திற்காக எதனையும் செய்வார்கள். தங்கள் நலனுக்காக மானங்கெட்டுத் தம்மையே பிறருக்கு விற்கக் கூசமாட்டார்கள். இதைத்தான் விலையடிமைப் படவே கயவர் உரியவர் என்கிறார் வள்ளுவர்.

காலிங்கர் வீற்றற்கு எனப் பாடங்கண்டு வீற்றற்கு என்பதன் திரிபே விற்றற்கு எனக் கொண்டு 'வேறுபட்டு நிற்க' எனப்பொருள் காண்கிறார்.
ஒன்று உற்றக்கால் என்றதில் உள்ள 'கால்' (துன்பம்) வந்தவிடத்து என்பதைக் குறிக்க இடப்பொருளில் வந்தது.

உதடு ஒட்டாத குறள் இதழகல் குறட்பா எனப்படும். இதழ்கள் ஒன்றுடன் ஒன்று குவியாமல் அதாவது இதழ் குவிதல் இல்லாத தன்மையில் இப்பாடல் இருக்கும். இதழகல் பாடல்களில் இதழ் குவிதலுக்குக் காரணமான எழுத்துக்கள் இல்லாமல் பாடல் புனையப்பட்டிருக்கும். இக்குறளும் இதழகல் குறட்பாவிற்குள் அடங்கும்.

'எற்றிற்கு உரியர்' என்ற தொடரின் பொருள் என்ன?

'எற்றிற்கு உரியர்' என்றதற்கு யாதினுக்கு வல்லர், யாதினுக்கு வல்லவர், எதற்கு உரியார், எற்றுதற்கு உரியார், வேறு எத்தொழிற்கு உரியர்?, பின்னை ஒன்றுக்கும் உரியரல்லர், அன்றி வேறெத் தொழிற்கு உரியர்?, எதற்கு உரியவர்?, அதுவன்றி அவர்கள் வேறு எதற்குரியர்?, ஒன்றுக்கும் உரியரல்லர், எதற்குத் தகுதி?, அதுவன்றி வேறு எத்தொழிலுக்கு உரியவர்?, எதற்கு உதவுவார்கள்?, வேறு எதற்கு உரியர்?, வேறு எதற்குப் பயன்படுவர்?, அஃதன்றி வேறு எத்தொழிற்கு உரியர்?, எதற்கு உரியார், எதற்குத் தகுதி ஆவர்?, எத்தொழிற்குத்தான் உரியர், வேறு எந்த நன்மைக்கும் உரியராகார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எற்றிற்கு என்ற சொல்லுக்கு நேர்பொருள் எதற்கு என்பது. உரியர் என்ற சொல் உரிமையுடையவர் என்ற பொருள் தருவது. எற்றிற்கு உரியர் என்ற தொடர்க்கு 'எதற்கு அதாவது எத்தொழிலை (செயலை) உரிமையுணர்வுடன் செய்வர்?' எனப் பொருள் கொணர்வர்.
எதற்குத் தகுதி உடையவர்? என்றும் பொருள் கொள்வர். கயவர் எதற்கு உரியவர்கள் அல்லது என்ன செய்யும் தகுதி அவர்களுக்கு உண்டு எனக் கேட்டுத் தொடங்குகிறது இக்குறள்.
'எற்றிற்கு உரியர்' என்றதற்கு இன்றைய பேச்சு வழக்கில் ‘(கயவன்) எதற்குத்தான் லாயக்கு?’ என்பதைச் சொல்வது எனவும் விளக்கலாம். லாயக்கு என்ற (அராபியச்?) சொல் 'ஒன்றைச் செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு ஏற்ற தன்மை' என்ற பொருள் தருவது (எடுத்துக்காட்டு: இந்த வேலைக்கு அவன்தான் லாயக்கான ஆள்).

கீழ்மைக் குணம் கொண்டவர்களுக்குத் தன்னம்பிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கும். மற்றவரை அண்டியே வாழ்வர். இத்தகையோர் தனக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அதை நல்ல வழியில் நீக்க வழி தெரியாமல் தம்மையே விற்பதற்கும் தயங்க மாட்டார்கள். இச்செயலே நிலையிலா கயவர்களுக்கு உரியது. எனவே அவர் வேறு எத்தொழிலுக்கும் ஏற்றவர் இல்லை என்பதை எற்றிற்கு உரியர்? என வினாவாகக் கேட்கப்பட்டது. அதைத்தவிர வேறு எதற்கும் அவர் லாயக்கில்லை என்பது பொருள்.

'எற்றிற்கு உரியர்' என்றது என்ன தொழிலுக்குத் தகுதியானவர்? என்ற பொருள் தருவது.

கயவர் தமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அதற்காகத் தம்மையே பிறர்க்கு விரைந்து விலைப்படுத்த வல்லவர்; வேறு எத்தொழிற்குத் தகுதியானவர் அவர்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கயமை தம்மையே விற்பது பற்றிக் கொஞ்சமும் மானக்கேடாகக் கொள்ளாது.

பொழிப்பு

கயவர் தமக்கு ஏதேனும் ஒரு துன்பம் வந்தால் அதைப் போக்கிக் கொள்ளத் தம்மையே பிறர்க்கு விரைந்து விற்றற்கு உரியராவர். அதுவன்றி அவர் வேறு எத்தொழிலுக்கு உரியவர்?