இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1075



அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது

(அதிகாரம்:கயமை குறள் எண்:1075)

பொழிப்பு (மு வரதராசன்): கீழ்மக்களின் ஆசாரத்திற்குக் காரணமாக இருப்பது அச்சமே; எஞ்சியவற்றில், அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

மணக்குடவர் உரை: கயவர் ஆசாரமுடையராதற்குக் காரணம் அச்சமே: அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம்.
இஃது இயல்பான ஒழுக்கம் இலரென்றது.

பரிமேலழகர் உரை: கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம்.
(ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு, ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: கீழ்மக்களிடம் ஆசாரம் (ஒழுக்கம்) ஏதாவது காணப்படுகிறதென்றால் அதற்குக் காரணம், அவர்கள் உள்ளத்தினுள் உள்ள அச்சமே. அஃதல்லாமல் வேறு காரணமெதுவும் உள்ளதெனில், அது அவர்கள் ஏதேனும் அடையவேண்டுமென எண்ணும் ஆசை காரணமாகச் சிறிது உண்டாம்.
மேன்மக்கள் ஒழுக்கமாக நடக்கவேண்டுமெனத் தற்காட்டுப்பாட்டுடன் நடப்பார்கள். கீழ்மக்களோ பெரிதும் அச்சத்தால் அல்லது ஏதாவது ஆசையால் ஒழுக்கமுடையவர் போல் சிலசமயம் நடக்கமுயல்வர். ஆசாரம்-புறநடிப்பு என்பதைச் சுட்டுகிறது. ஒழுக்கமுள்ளவர் போல நடிக்கும் கயவர்கள் இவர்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் சிறிது உண்டாம்.

பதவுரை: அச்சமே-பயமே, நடுக்கமே; கீழ்களது-கீழ்மைக் குணமுடையவர்களது, கயவர்களது; ஆசாரம்-ஒழுக்கம், நூல்களில் சொல்லியபடி ஒழுகுதல், நன்னடக்கை; எச்சம்-அஃதொழிந்தது, ஒழிப்பு, எஞ்சி இருப்பது; அவா-ஆசை, விருப்பம்; உண்டேல்-இருப்பின்; உண்டாம்-உளதாம்; சிறிது-கொஞ்சம்.


அச்சமே கீழ்களது ஆசாரம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கயவர் ஆசாரமுடையராதற்குக் காரணம் அச்சமே:
பரிப்பெருமாள்: கயவர் ஆசாரமுடையராதற்குக் காரணம் அச்சமே:
பரிதி: கயவர்க்குப் பயம் உண்டாகில் வணங்குவர்;
காலிங்கர்: கீழ்கள் ஆகியவரது ஆசாரம் அவர்க்கு இயல்பின் உளதாவது அன்று; மற்று என்னை எனின், பிறர் தம்மைச் செறுத்தும் சிறை செய்தும் நெருக்கின் என்னை என்று இங்ஙனம் அஞ்சும் அச்சமே அதற்குக் காரணம்;
பரிமேலழகர்: கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; [கயவராதாய- கயவர்களுடையதாகிய; அதற்கு - அவ்வாசாரத்திற்கு; ஏதம் -துன்பம்]

'கயவர் ஆசாரமுடையராதற்குக் காரணம் அச்சமே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரும் பரிமேலழகரும் 'அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே' என்றனர்

இன்றைய ஆசிரியர்கள் 'அச்சமே கயவர்களின் இயல்பு', 'கீழ்மக்களது ஆசாரத்திற்கு (நல்லியல்புக்கு) காரணம் துன்பத்திற்கு அஞ்சும் அச்சமே', '(தம்மினும் வலிமையுள்ளவர்கள் தம்மைத் தண்டித்துவிடுவார்கள் என்று) அஞ்சுகின்ற சமயங்களில்தான் கீழ்மக்கள் ஒழுங்காக நடந்து கொள்வார்கள்', 'கீழ் மக்களது ஒழுங்கு முறைக்குக் காரணம் பயமே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கீழ்மக்கள் ஒழுக்கமுடையராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அச்சமே என்பது இப்பகுதியின் பொருள்.

எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இயல்பான ஒழுக்கம் இலரென்றது.
பரிப்பெருமாள்: அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இயல்பான் ஒழுக்கம் இலரென்றது.
பரிதி: பிரயோசனம் உண்டாகிலும் வணங்குவர் என்றவாறு.
காலிங்கர்: அஃது ஒழிந்த இடத்து உண்டு எனின் அவர் சில செய்வர் எமக்கு என்னும் அவா உளதாயின் அது பெறும் வழி உளவாயின் சிறிதும் அவ்வாசாரம் உண்டாகவும் கூடும்; எனவே கயவர்க்கு ஆசாரம் இயல்பு அல்ல என்றும், உண்டு எனின் அது கள்ளம் என்றும் பொருள் ஆயிற்று.
பரிமேலழகர்: அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம். [அஃதொழிந்தால் - அவ்வச்சம் நீங்கினால்; அதனால் -அவ்வாசாரத்தால்; சிறிதுண்டாம் - கீழ்மக்களிடத்து சிறிதுளதாயிருக்கும்]
பரிமேலழகர் குறிப்புரை: ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு, ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.

'அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புகழாசை இருந்தால் சிறிது இருக்கலாம்', 'அது தவிரத் தம்மால் விரும்பப்படும் பொருள் அதனால் கிடைக்குமாயின் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்', 'அது போக யாரிடத்திலாவது ஒரு பொருளைப்பெற வேண்டுமென்று ஆசைப்படுகிற சமயத்திலும் (அப்பொருளைப் பெறுமளவும்) சிறிது ஒழுங்காக நடந்து கொள்வதும் உண்டு', 'அஃது இல்லையானால் விரும்பும் பொருள் அதனால் கிட்டுமாயின் சிறிது உண்டாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதுதவிர்த்து, தாம் ஆசைப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கீழ்மக்கள் ஒழுக்கமுடையராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அச்சமே; அதுதவிர்த்து, தாம் ஆசைப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது ஒழுக்கம் உண்டாம் என்பது பாடலின் பொருள்.
'அச்சமே' குறிப்பது என்ன?

ஒழுக்கமாக இருப்பதுபோல் நடிக்கவும் கயவர்க்குத் தெரியும்.

கீழ்மக்களின் ஆசாரத்துக்குக் காரணமாக இருப்பது அச்சமே ஆகும். அஃது ஒழிந்தால் தம்மால் விரும்பப்படும் பொருள் அதனால் கிடைக்குமாயின் அதனாலும் சிறிதளவு ஒழுக்கம் உண்டாகும்.
ஆசாரம் என்ற சொல்லுக்கு நூல்களில் கூறிய முறைப்படி ஒழுகுதல் என்ற பொருள் தரும். இது நல்லொழுக்கம் குறித்தது.
கீழ்மைக் குணம் கொண்டவர்கள் ஆசாரத்துடன் ஒழுகுகிறார்கள் என்றால் அது அச்சத்தின் காரணமாகவும் பொருள் பெறும் ஆசையினாலும்தாம். அரசால் சிறை செய்யப்பட்டு ஒறுக்கப்படுவோம் எனப் பயந்தும், வலியார் தம்மைச் செறுப்பார் என அவர் முன்னாலும், ஒடுங்கி ஒழுகுவர் கயவர். அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் காட்டுவர். ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பதற்காக அல்லாமல், இடம் பார்த்து, அச்சத்தால் ஒழுக்கத்துடன் நடப்பது இவர் பண்பு; இவர்களுக்கு ஒழுக்கம் என்பது வணிகப் பொருள் போன்றது; எடுத்தும் கொடுத்தும் கொள்வர். அச்சத்தாலும் தன்னலத்தாலுமே ஒழுக்கமுடையாராக இருப்பர். கள்ள ஒழுக்கம் அவர் அறிந்தது.

அச்சத்தின் வழியும் அவாவின் வழியும் கயவர் ஒழுக்கம் மேற்கொள்வர். ஒழுக்க வாழ்க்கைக்குக் கயவர் கட்டுப்பட்டு நடக்கின்றார்கள் என்றால் அது அச்சத்தின் காரணமாகத்தான். அல்லது தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும் போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர் போல காட்டிக் கொள்வார்கள். முந்தைய குறளில் (1074) சொல்லப்பட்டதுபோல் கயவர் பட்டித்தனமாக நடக்க வல்லவர்களானாலும் அடங்கி நடப்பதிலும் திறமையானவர்களாக இருப்பர். அவர்களுக்கு இயல்பான ஒழுக்க உணர்வு கிடையாது; அவர்கள் அடி உதையால் ஏற்படும் உடல் துன்பத்துக்கு அஞ்சுபவர்கள்; அல்லது அவர்களுக்கு ஒரு பொருளின்மேல் உண்டாகும் ஆசையினால், அந்தப் பொருளைப் பெறும் அச்சமயங்களில் மட்டும் ஒழுக்கமானவர்களாகிவிடுவர். இவர்கள் வாழ்வது உரிமை வாழ்வு அன்று. பிறருடைய அச்சத்திற்கு அடங்கியோ அல்லது வாய்ப்பு நேரும்போது பிறர் காட்டும் பொருளாசைக்கு அடிமையாகவோ ஆவார்கள். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று சொன்ன வள்ளுவர் இங்கு அச்சத்தையே தம் ஒழுக்கமாக கைக்கொண்டிருக்கும் கயவர்களை இழித்துப் பேசுகிறார்.

இக்குறளிலுள்ள எச்சம் என்ற சொல் அச்சமில்லாத வழி எனப்பொருள்படும். வ சுப மாணிக்கம் எச்சம் என்பதற்குப் புகழ் என்னும் இயல்பான பொருள் கண்டு. 'அச்சமே கயவர்களின் இயல்பு. புகழாசையிருந்தால் சிறிது ஒழுக்கம் இருக்கலாம்' என விளக்குவர்.
கயவரைக் கீழ்கள் என அஃறிணையாக வள்ளுவர் கூறும் குறளிது. உயர்திணையில் கள் விகுதி பெற்று கயவர்கள் கீழ்கள் என கீழோர் என்ற பொருள் தருவதாக உள்ளது.
'அஃறிணை இயற்பெயரில் பன்மையைக் குறிக்கக் 'கள்' விகுதி வரும் என்பது தொல்காப்பிய மரபு. திருக்குறளில் இவ்விகுதி உயர்திணைப் பெயர்ப்பன்மையாக வருவது குறளின் மொழிநடைப் பண்பில் ஏற்பட்ட மாற்றம் எனலாம்' என்பார் இ சுந்தரமூர்த்தி.

'அச்சமே' குறிப்பது என்ன?

கயவர் ஒழுக்கமாக நடப்பார் என்றால் அது பெரும்பான்மை அச்சம் காரணமாகவும், சிறுபான்மை பொருளாசை ஆசை காரணமாகவும் என்கிறது இப்பாடல்.
இந்த ஒழுக்கம் இயல்பான ஒன்றல்ல. கயவர்களுடைய வாழ்க்கைமுறை நேர்மையற்றதாக இருப்பதால் அது அச்சம் நிறைந்ததாகவே இருக்கும். அரசின் சட்டத்தின் ஆட்சியில் தனக்கு ஒறுத்தல் உண்டு என்பதை நினைத்து அஞ்சுவர். மேலும் முறைதவறி நடப்பதில் இன்பம் காண்பவர் ஆதலால் இவர்களுக்குப் பலவகையான பகைவர்கள் இருப்பர். இவர் போன்று கயமைத் தனம் கொண்டவர்களும் பகைவராயிருப்பர். அவர்களில் வலிமை கொண்டவரிடமும் அச்சம் கொள்வர், தாம் தகாதன செய்தால் அந்த இடத்திலேயே பெறப்படும் அடி உதையால் உடல் ஊறு ஏற்படுமே என அஞ்சுவதால்.
கீழ்களது ஆசாரத்தைக் கண்டால் பிறர்க்குப் பயம் வரும் எனக் கூறிக் கீழ்களது ஆசாரத்தை மெய்யென நம்பலாகாது என்றும் உரை உள்ளது.

'அச்சமே' என்ற சொல் நடுக்கமே என்ற பொருள் தருவது.

கீழ்மக்கள் ஒழுக்கமுடையராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அச்சமே; அதுதவிர்த்து, தாம் ஆசைப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அச்சத்தால் ஒழுக்கம் மேற்கொள்வதும் கயமையாம்.

பொழிப்பு

கீழ்மக்களது ஒழுகுமுறைக்குக் காரணம் ஒறுத்தலுக்கு உள்ளாவதற்கு அஞ்சும் அச்சமே. அதுதவிர்த்து தாம் விரும்பும் பொருள் கிடைப்பதானால் அதனாலும் சிறிது உண்டாகும்.