இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1074



அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

(அதிகாரம்:கயமை குறள் எண்:1074)

பொழிப்பு (மு வரதராசன்): கீழ்மக்கள் தமக்குக் கீழ்ப்பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரைவிடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

மணக்குடவர் உரை: மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிரைக் காணின், அவரினும் மிகப் பொற்புடையாராய் அதனைப் பெற்றேமென்று இறுமாப்பர் கயவர்.
இது நிறையிலரென்றது.

பரிமேலழகர் உரை: கீழ் - கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும்.
(அகப்பட்டி: அகமாகிய பட்டி, பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார், 'நோதக்க செய்யும் சிறுபட்டி' (கலித்.குறிஞ்சி.15) என்றார் பிறரும். இதனால் அவர் மேம்படுமாறு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: கீழ்மகன் தன்னிலும் தாழ்ந்த, நெறிகடந்தொழுகுபவரைக் கண்டால் தான் அத்தீய ஒழுக்கத்தில் தலைசிறந்து நிற்றலை நினைந்து இறுமாப்படைவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

பதவுரை: அகம்-சுருங்கிய; (அகப்) பட்டி-வேண்டியவாறு ஒழுகுபவன்; ஆவாரை-ஆகுபவரை; காணின்-கண்டால்; அவரின்-அவரைக் காட்டிலும்; மிகப்பட்டு-மேம்பட்டு; செம்மாக்கும்-இறுமாந்திருக்கும்; கீழ்-கீழாயினான்.


அகப்பட்டி ஆவாரைக் காணின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிரைக் காணின்;
பரிப்பெருமாள்: மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிரைக் காணின்;
பரிதி: துர்ச்சனமான பேரைக் கண்டால்;
காலிங்கர்: மனையினின்றும் புறப்பட்டால் பட்டிபுக்குப் பயிர் அழிக்கும் மாட்டினை ஒத்தார் சிலரைத் தான்காணின்; [பட்டி- வேலி கட்டப்பட்ட வயல்]
காலிங்கர் குறிப்புரை: அகப்பட்டி என்பது மனையுள் வாழும் பட்டிமாடு என்றது.
பரிமேலழகர்: தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; [பட்டியாய் - காவல் இல்லாதவராய்]
பரிமேலழகர் குறிப்புரை: அகப்பட்டி: அகமாகிய பட்டி, பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார், 'நோதக்க செய்யும் சிறுபட்டி' (கலித்.குறிஞ்சி.15) என்றார் பிறரும். [அகப்பட்டி - பட்டி (அடங்காப் பிடாரி) போன்று விரும்பியவாறு ஒழுகுபவர்]

'மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிரைக் காணின்' என்று பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'துர்ச்சனமான பேரைக் கண்டால்' என்றார். காலிங்கர் 'மனையினின்றும் புறப்பட்டால் பட்டிபுக்குப் பயிர் அழிக்கும் மாட்டினை ஒத்தார் சிலரைத் தான்காணின்' எனப் பொருளுரைத்தார். பரிமேலழகர் 'தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கயவர் தம்மினும் இழிந்தவரைக் கண்டால்', 'அகந்தை மிகுந்த போக்கிரிகளைக் கண்டால்', 'கீழ்மக்கள் தம்மினும் மன அடக்க மில்லாதவரைக் கண்டால்', 'கீழ்மகன் (கயவன்) தன்னைவிடச் சிறியவரைக் கண்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அடங்காதவரருள் தம்மினும் சிறியவரைக் கண்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரினும் மிகப் பொற்புடையாராய் அதனைப் பெற்றேமென்று இறுமாப்பர் கயவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது நிறையிலரென்றது.
பரிப்பெருமாள்: அவரினும் மிகப் பொற்புடையாராய் (பறட்டையாயின்) அதனைப் பெற்றேமென்று இறுமாப்பர் கயவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நிறையிலரென்றது.
பரிதி: அவர்களுடனே கூடிக்கொண்டு நல்லோரைக் கெடுப்பார்கள் என்றவாறு.
காலிங்கர்: இதற்கு 'இவரினும் பெரியேன் ஆகவேண்டும் யான்' என்று மற்று அவரது பட்டிமையினும் மிகப்பட்டு இறுமாக்கும் கீழ் ஆனது; எனவே தானும் நெறிகெட ஒழுகும்; பிறரை நெறிகேடரைக் காணினும் நமக்குத் துணையும் உண்டு என்று பெரிதும் இறுமாக்கும் கீழ் என்பது பொருள்.
பரிமேலழகர்: அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும் கீழாயினான். [அவரின் - அகப்பட்டியாய் ஒழுகுவாரினும்; அதனால் - அம்மேம்பாட்டினால்]
பரிமேலழகர் குறிப்புரை: இதனால் அவர் மேம்படுமாறு கூறப்பட்டது.[அவர் - கயவர்]

'அவரினும் மிகப் பொற்புடையாராய் அதனைப் பெற்றேமென்று இறுமாப்பர்'/'அவர்களுடனே கூடிக்கொண்டு நல்லோரைக் கெடுப்பார்கள்'/'தானும் நெறிகெட ஒழுகும்; பிறரை நெறிகேடரைக் காணினும் நமக்குத் துணையும் உண்டு என்று பெரிதும் இறுமாக்கும்'/'அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும்' கயவர் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரால் போற்றப்பட்டு இறுமாப்பர்', 'கீழ்மக்களாகிய கயவர்கள் (அவர்களுடன் சேர்ந்து போக்கிரித் தனத்தில்) அவர்களுக்கும் மிஞ்சினவர்களாகக் கும்மாளம் போடுவார்கள்', 'அவரினுந் தாம் மேம்பட்டதாகக் கூறி இறுமாந்திருப்பர்', 'அவரினும் மேம்பட்டுத் தன் மிகுதி காட்டி இறுமாப்பான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவரினும் தாம் மேம்பட்டதாகக் காட்டி செருக்கடைவர் கயவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அகப்பட்டி ஆவாரைக் கண்டால் அவரினும் தாம் மேம்பட்டதாகக் காட்டி செருக்கடைவர் கயவர் என்பது பாடலின் பொருள்.
'அகப்பட்டி ஆவார்' என்பதன் பொருள் என்ன?

கீழ்களுள் யார் மேல் என்று பூசலிடுதல்!

கயவன் தன்னினும் கீழாக அடக்கமின்றி நடப்பவரைக் கண்டானாயின் அவரினும் தான் மேம்பாடுடையவனாக எண்ணி இறுமாப்பு அடைவான்.
அகப்பட்டி என்பது ஒரு மரபுத்தொடர் என்றும் அதன் பொருள் எதற்கும் அடங்காமல் நெறிகடந்து ஒழுகுபவர் என்றும் கூறுவர். கயவன் ஒருவன் தன்னைவிடப் பட்டித்தனமாக- காவல் இல்லாதவராய் நடப்பவரைக் கண்டால் அவரினும் தான் உயர்ந்தவனென்று செம்மாக்கும் அதாவது இறுமாக்கும்-இறுமாப்பு கொள்வான் என்கிறது பாடல். அவ்விதம் செருக்கு அடைவது என்பது அவன் தனது கயமைத்தனத்தில் மகிழ்வு அடைவதாகிறது. எனவே தலைக்கனம் மிகக்கொண்டு தாம் செல்லும் வழியிலேயே பயணித்து மேலும் கயமைச் செயல்களில் ஈடுபடுவான். தம் இழிநிலையிலிருந்து மேன்மையுறவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கில்லை.

பொதுவெளியில் பிறரது உரிமை உணர்ந்து நடக்க வேண்டும். உரிமை என்பது என்னவென்று அறியாத கயவன் தன்னைவிடக் கீழானவர்களைக் கண்டால், அவர்களைவிடத் தான் உயர்ந்தவன் என அகந்தை கொண்டு நடப்பான். மாறாகத் தன்னினும் வலியவர்களிடம் மிகவும் அடங்கி நடப்பான். இவ்வாறு, கீழ்மக்கள் உரிமையோடு வாழத்தெரியாமல் மெலிந்தவர்களை அடக்கியும் வலியவர்களுக்கு அடங்கியும் ஒழுகுவர்.

'அகப்பட்டி ஆவார்' என்பதன் பொருள் என்ன?

'அகப்பட்டி ஆவார்' என்றதற்கு மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிர், மனையகத்திருந்து பொற்புடையராகிய (பறட்டையாம்) பெண்டிர், துர்ச்சனமான பேர், மனையினின்றும் புறப்பட்டால் பட்டிபுக்குப் பயிர் அழிக்கும் மாட்டினை ஒத்தார், தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவார், தன்னிலும் கொஞ்சமானவன் துன்மார்க்கனாய் நடந்து கொள்பவன், தன்னிற் சுருங்கி அகப்பட்டியாய் ஒழுகுவார், தமக்குக் கீழ்ப்பட்டவராய் நடப்பவர், தம்மைவிடக் கீழான அறிவிலாப் பட்டிமாடு போல்வார், தமக்கு அடங்கி நடப்பார், தம்மினும் இழிந்தவர், தன்னிலும் தாழ்ந்த நெறிகடந்தொழுகுபவர், அகந்தை மிகுந்த போக்கிரிகள், தனக்கு உட்பட்ட கீழானவர், தம்மினும் மன அடக்க மில்லாதவர், தன்னைவிடச் சிறியவர், தன்னினும் அடக்கம் இல்லாதவர், தம்மினும் இழிவானவர், தன்னைக் காட்டிலும் குறைந்த பட்டியாய் நடப்பார், பட்டித்தன்மையில் தன்னினும் குறைந்தவர், தன்னைப் போன்றவர்கள் என்று வெவ்வேறு வகையில் உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அகப்பட்டி என்ற சொல்லுக்கு 'அகமாகியபட்டி-அகப்பட்டி; பட்டியாவது; கள்ளத்தின் வேண்டியவாறு ஒழுகல்; பட்டிமாடு என்றது போலக் காண்க 'எனப் பழைய உரை ஒன்று விளக்கம் தருகிறது. காலிங்கர் 'அகப்பட்டி ஆவார்' என்றதற்கு 'மனையினின்றும் புறப்பட்டால் பட்டிபுக்குப் பயிர் அழிக்கும் மாட்டினை ஒத்தார்' எனக்கூறி 'அகப்பட்டி என்பது மனையுள் வாழும் பட்டிமாடு என்றது' எனப் பதவுரையும் தருகிறார். நாமக்கல் இராமலிங்கம் 'அகப்பட்டி யாவார்' என்றதை 'அகம்-அகந்தை, பட்டியாவாரை -பட்டித்தனம் உள்ளவர்களை. பட்டித்தனம் என்பது யாரையும் சட்டை பண்ணாமல் எந்தக் குற்றத்தையும் துணிந்து செய்வது. அதில் பிடிவாதம், பொய், திருட்டு, கொடுமை முதலிய எதற்கும் கூசாமை என்ற பல தீய குணங்களும் சேர்ந்த காலித்தனம்' என்று சொற்பொருள் விளக்கம் செய்வார்.
தண்டபாணி தேசிகர் ''அகப்பட்டி' என்ற சொல் வள்ளுவராட்சி ஒன்றில் மட்டும் உள்ளது. சங்கஇலக்கியங்களில் இல்லை. பட்டி என்பது மட்டும் பல்வேறு பொருளில் ஆட்சியில் உள்ளது. 'காவலில்லாதவன்' என்ற பொருளில் 'நோதக்க செய்யும் சிறுபட்டி' எனக் கலித்தொகை 51ம் பாடலில் ஆட்சியுள்ளது. பட்டிமாடு (தாயுமானவர்) பட்டிமகன் (விறலி) எனப் பிற்கால இலக்கியங்களில் உவம ஆகுபெயராயும், வேறுவகையானும் ஆட்சியுள்ளது. ஆதலால் இஃதோர் அருவழக்கு எனலாம்' எனக் குறிக்கிறார்.
'‘அகப்பட்டி’ என்பது அக்காலத்து வழங்கிய ஒரு மரபுத் தொடர் போலும். அதற்கு நெறிகடந்தொழுகுபவர் என்னும் பொருள் ஏற்கும்' என்பது இரா சாரங்கபாணியின் கருத்துரை.
அகப்பட்டி என்ற சொல் தன்னிற்சுருங்கிய அடங்காதலையுடையவர் எனப்பொருள்படும்.

'அகப்பட்டி ஆவார்' என்ற தொடர் சுருங்கிய அடங்காப் பிடாரி என்ற பொருள் தரும்.

தன்னினும் சுருங்கிய அடங்காதவராக ஒழுகுகின்றவரைக் கண்டால் அவரினும் தாம் மேம்பட்டதாகக் காட்டி செருக்கடைவர் கயவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

யாருக்கும் அடங்காத தன்மை ஒருவகைக் கயமை.

பொழிப்பு

கீழ்மக்கள் தம்மினும் தாழ்ந்த, நெறிகடந்தொழுகுபவரைக் கண்டால் தான் கயமையில் சிறந்து நிற்றலை நினைந்து செருக்குக்கொள்வர்.