இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1069



இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்

(அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1069)

பொழிப்பு (மு வரதராசன்): இரத்தலின் கொடுமையை நினைந்தால் உள்ளம் கரைந்து உருகும்; உள்ளதை ஒளிக்கும் கொடுமையை நினைந்தால், உருகுமளவும் இல்லாமல் அழியும்.

மணக்குடவர் உரை: இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்: இரக்கப்பட்டவர் கரக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும்.
இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது.

பரிமேலழகர் உரை: இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும்.
('இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு' (நாலடி.305) என்றார் பிறரும், இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்' என்று உரைத்தார்.)

சி இலக்குவனார் உரை: இரத்தலின் கொடுமையை நினைக்க மனம் உருகும்; ஒளித்தலின் கொடுமையை நினைக்க, உருகும் உள்ளமும் இல்லாமல் அழிந்துவிடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இரவு உள்ள உள்ளம் உருகும்; கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

பதவுரை: இரவு-ஏற்றல், கெஞ்சிக்கேட்டல்; உள்ள-நினைக்க; உள்ளம்-நெஞ்சம்; உருகும்-கனிந்திளகும்; கரவு-மறைத்தல்; உள்ள-நினைக்க; உள்ளதூஉம்-இருப்பதும்; இன்றி-இல்லாமல்; கெடும்-அழியும், இல்லையாகும்.


இரவுள்ள உள்ளம் உருகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்;
பரிப்பெருமாள்: இரப்பேம் என்று நினைக்க உள்ளம் கரையும்:
பரிதி: தேகி என்பார்க்கு உள்ளம் உருகிப்போம்; [தேகி- 'கொடு']
காலிங்கர்: அறிவுடையோர்க்கு இரவு என்பது தம் குடிமைக்கு ஒரு வடு என்று இங்ஙனம் கருதுப அன்றே; அதனால் அவ்வின்னா இரவினை உள்ளவே; [குடிமைக்கு-குடிப்பிறப்பிற்கு; வடு - குற்றம்]
பரிமேலழகர்: உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்;

'இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் ''எம்' உள்ளங் கரைந்து உருகாநிற்கும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிச்சையை நினைத்தால் மனம் குலையும்', 'வறியவர் இரத்தலை நினைக்க நம் உள்ளம் கசிந்து உருகுகின்றது', '(மானியான ஒருவன் வந்து) பிச்சை கேட்கும் பரிதாபத்தை நினைத்தாலே உள்ளம் உருக வேண்டிய நிலைமை இருக்க', 'இரத்தலை நினைத்தால் நெஞ்சம் உருகுகின்றது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இரத்தலை நினைத்தால் மனம் கசிந்து உருகுகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரக்கப்பட்டவர் கரக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது.
பரிப்பெருமாள்: இரக்கப்பட்டவர் கரக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரப்பார்க்கு ஊக்கமில்லையாம் என்றது.
பரிதி: இல்லை என்று கரப்பவர்க்கு நெஞ்சு எப்படி உருகுமோ அப்படி என்றவாறு.
காலிங்கர்: தமதுள்ளம் சால்பு உடைமையும், இனி நாம் ஒருவர்பால் இரந்து சென்றால் அவர் 'இல்லை போகு எனின் எனை' என்றதனையும் தாம் உள்ளவே பின்னைப் பண்டு உள்ளதூஉம் இன்றிக் கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும். [பொன்றிவிடும்- அழிந்து போகும்]
பரிமேலழகர் குறிப்புரை: 'இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு' (நாலடி.305)என்றார் பிறரும், இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்' என்று உரைத்தார்.

'இரக்கப்பட்டவர் கரக்கும் அதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறைப்பதை நினைத்தால் மனம் சாகும்', 'செல்வர் கொடுக்காமல் மறைத்து வைக்கும் கொடுமையை நினைக்க உள்ளம் உருகும் நிலையன்றி உள்ளமே கெட்டுவிடும்', 'ஒருவன் தன்னிடத்தில் உள்ளதை இல்லையென்று சொல்லுகிறானே! அதை நினைக்கிறபோது அவன் வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்லுகிற பொருள் உண்மையாகவே அவனுக்கும் இல்லாமற் போய்விடத்தான் ஆகும்', 'இரப்பவர்க்கு இல்லையென்று மறைப்பதை நினைத்தால் நெஞ்சம் மடிந்தொழிகின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இரப்பவர்க்கு இல்லையென்று மறைப்பதை நினைத்தால் உள்ளமே மாய்ந்து அழியும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரத்தலை நினைத்தால் மனம் கசிந்து உருகுகின்றது; இரப்பவர்க்கு இல்லையென்று மறைப்பதை நினைத்தால் உள்ளமே மாய்ந்து அழியும் என்பது பாடலின் பொருள்.
'உள்ளதூஉம்' குறிப்பது என்ன?

கரப்பாரை நினைக்கையிலே நெஞ்சு பொறுக்குதில்லையே!

இரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால் உள்ளம் இளகிப்போகிறது. இரப்பவர்க்கு இல்லையென்று கூறி ஒளிப்பதை நினைத்தால் கரைந்து நின்ற அந்த உள்ளமும் இல்லாமல் அழிந்து ஒழியும்.
'என்ன கொடுமை இது! ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் போய் நின்று எனக்கு வாழ வழியில்லை; நீ ஏதாவது கொடுத்தால்தான் என்னால் உயிருடனிருக்கமுடியும் எனக் கெஞ்சிக் கேட்பது! இதை நினைக்கும்போதே உள்ளம் இளகுகிறதே! இந்த நிலையில் கேட்பவரது வறுமைநிலையைச் சிறிதும் உணர மறுத்து, இரக்கப்பட்டவர் பொருளை வைத்துக்கொண்டே 'இல்லை' என்று மறைக்கும் கொடுமையை எண்ணும் போது உருகுவதற்கு உள்ளமும் இல்லாமல் பிளந்து போய்விடுகிறதே!' என்று உணர்ச்சிவயப்பட்டவராய் வள்ளுவர் உள்ளம் நெகிழ்ந்து வருந்துகின்றார் இங்கு.

இல்லாதோர் இரந்து திரியும் அவலநிலை கண்டு உருகும் ஒருவர் உள்ளம் இரப்பார் முன் வஞ்சகமாக உள்ளதை மறைப்போரைப் பார்க்கும்போது கருகிப் போகும். வள்ளுவரும் அவ்விதமே உணர்ந்தார். அவர் தம் உள்ளத்தெழுந்த உணர்ச்சிகளைத் தாம் உணர்ந்த அவ்வாறே இக்குறள்மூலம் உணர்த்தியுள்ளார்; அவற்றை அவர் வெளிப்படுத்திய முறையும் தனிச் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. 'கையேந்தி கெஞ்சி நிற்கின்றவர்களைப் பார்த்துக் கரைந்து உருகிய எம் உள்ளமும் பின்னர் கரப்பாரைக் கண்டு பொன்றிப் பொசிந்து போகின்றதே!' என்று தன் ஆற்றமாட்டாத துயரத்தை வெளிப்படுத்துகிறார். வறுமையுடையாரிடத்து அவர் எத்துணைக் கனிவு காட்டுகின்றார் என்பதையும் அவர்கள் மீது எவ்வளவு ஆழ்ந்த பரிவுணர்ச்சி கொண்டுள்ளார் என்பதையும் இக்குறள் நன்கு காட்டுகிறது.

பலர் இக்குறளை வள்ளுவர்தம் கூற்றாகவே கொண்டனர். 'இரவை எண்ணும்போது இரக்கின்றவரது மனங்கலங்கும்; அப்படியே துணிந்து ஒருவன் இரக்கச்சென்றால், கொடுப்பவர் பொருளை ஒளித்து இல்லையென்றதும் மனமுடைந்து உள்ள நிலையும் கெட்டு இறப்பார்' எனவும் சிலர் உரைத்தனர். உள்ளம் உருகுவதையும் கெடுவதையும் 'சான்றோரான கண்டார் கூற்று' எனப் பாவாணர் சொல்வார்.

'உள்ளதூஉம்' குறிப்பது என்ன?

'உள்ளதூஉம்' என்றதற்குக் கரைந்து நின்ற உள்ளமும், பண்டு உள்ளதூஉம், அவ்வுருகுமளவுதானும், உருகியது போக நின்றது, உருகுமளவும், உருகுமளவு தானுமின்றி அவ்வுள்ளமே, உள்ளம், மனம், உள்ளம் உருகும் நிலையன்றி உள்ளமே, அவன் வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்லுகிற பொருள், உருகிய அது, நெஞ்சம், உருகும் உள்ளமும், கரைந்து நின்ற அந்த உள்ளமும், அந்த நெஞ்சமே, அவ்வுருகு நிலைதானும், உள்ளம் உருகும் நிலையும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இரந்து நின்றவனுடைய நிலையைக் கண்டு கரைந்த ஒரு உள்ளம் இருந்தது. உருகியபின் உள்ள அந்த நெஞ்சமும் தம்மிடம் உள்ளதை மறைத்து 'இல்லை போ' என்று இரக்கப்பட்டவர் கூறியவுடன் அழிந்தொழியத்தான் செய்யும் என்பது இக்குறள் தரும் செய்தி.
நாமக்கல் இராமலிங்கம் 'உள்ளதும் இல்லாமலே தான் தொலைந்துவிடும். உதவிக்குத் தகுந்த பாத்திரனான ஒருவன் வந்து கெஞ்சிக் கேட்கும்போது மனமிரங்கிக் கொடுக்காமல், வைத்துக் கொண்டே இல்லையென்கிற பொருள் இல்லாமலேயே போகட்டும்' எனப் புதுமையான ஓர் விளக்கம் தந்தார்.

'உள்ளதூஉம்' என்ற சொல்லுக்கு (உருகியது போக) நின்ற உள்ளமும் என்பது பொருள்.

இரத்தலை நினைத்தால் உள்ளம் கசிந்து உருகுகின்றது; இரப்பவர்க்கு இல்லையென்று மறைப்பதை நினைத்தால் உள்ளமே மாய்ந்து அழியும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காண்போரின் உள்ளத்தைக் உருக வைக்கும் இரவச்சம் வேண்டும்.

பொழிப்பு

இரத்தலை நினைத்தால் மனம் கசிந்து உருகுகின்றது; இரக்கப்பட்டவர் மறைப்பதை நினைத்தால் நெஞ்சமே பொன்றிப்போம்.