இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1063



இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்

(அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1063)

பொழிப்பு (மு வரதராசன்): வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

மணக்குடவர் உரை: வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பேமென்று கருதுகின்ற வன்மைபோல, வன்பாயிருப்பது பிறிது இல்லை.
இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது.

பரிமேலழகர் உரை: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் - வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல் - வலிமைப்பாடுடையது பிறிது இல்லை.
(நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று, வன்பாடு - முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான் 'வறுமை தீர்த்தற்கு நெறி இரவன்று' என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: வறுமைத் துன்பத்தை வாங்கித் தீர்ப்பேன் என்பது பெரிய முரட்டுத்தனமாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும் வன்மையின் வன்பாட்டது இல்.

பதவுரை: இன்மை-இல்லாமை, வறுமை; இடும்பை-துன்பம்; இரந்து-ஏற்று, கெஞ்சிநின்று; தீர்வாம்-நீக்கக் கடவோம்; என்னும்-என்கின்ற; வன்மையின்-முருட்டுத் தன்மை போல, கொடுமையை விட, நெறியற்றமுறை போன்ற; வன்பாட்டது-வலியை உடையது, முரட்டுத் தன்மையை உடையது; இல்-இல்லை.


இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும் வன்மையின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பேமென்று கருதுகின்ற வன்மைபோல;
பரிப்பெருமாள்: வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பேமென்று கருதுகின்ற வன்மைபோல;
பரிதி: தன்மிடியை இரந்து தீர்ப்பேன் என்பது அருமை என்றவாறு.
காலிங்கர்: வறுமை என்கிற வல்லிடும்பையைப் பிறர்பால் சென்று இரந்துகொண்டு தீர்க்கக் கடவோம்யாம் என்று கருதும் இவ்வன்கண்மையைக் காட்டில்; [வல்லிடும்பை -வலிய துன்பம்]
பரிமேலழகர்: வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல;
பரிமேலழகர் குறிப்புரை: நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று,

'வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பேமென்று கருதுகின்ற வன்மைபோல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமையால் வரும் துன்பத்தை உழைத்துப் போக்குவோம் என்னாமல் ஒருவன் பிச்சை எடுத்துப் போக்கக் கருதும் கொடுமை போல', 'தரித்திரத்தின் கொடுமையைப் பிச்சையெடுத்தே தீர்த்துவிடலாம் என்று நம்புவதைவிட', 'வறுமைத் துன்பத்தை முயற்சியால் நீக்க முயலாது பிச்சையெடுத்துத் தீர்ப்போ மென்று எண்ணுகின்ற வலிமைபோல', 'வறுமையால் வரும் துன்பத்தைப் பிறரை இரந்து நீக்கக் கடவோம் என்று நினைக்கும் வலிய எண்ணத்தைப் போல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வறுமைத் துன்பத்தை இரந்துஇரந்து நீக்குவோம் என்னும் கரடுமுரடான எண்ணத்தைப் போல என்பது இப்பகுதியின் பொருள்.

வன்பாட்டது இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வன்பாயிருப்பது பிறிது இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது.
பரிப்பெருமாள்: வன்பாயி1ருப்பது பிறிது இல்லை. [வன்பாய்-வலிமையாய்]
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது.
பரிதி: மலையை எடுத்து மயிரிற்கட்டலும் கடுகில் எழுகடலை அடக்கலும் ஆகிய அவை அருமையல்ல;
காலிங்கர்: வன்மைப்பாடு உடையது பிறிது யாதொன்றும் இல்லை குடிப்பிறந்தோர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: வலிமைப்பாடுடையது பிறிது இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: வன்பாடு - முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான் 'வறுமை தீர்த்தற்கு நெறி இரவன்று' என்பது கூறப்பட்டது. [அஃதாவது- முருட்டுத் தன்மையாவது; ஓராது-ஆராய்ந்து பார்க்காமல்]

'வலிமைப்பாடுடையது பிறிது இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடுமையுடையது வேறு இல்லை', 'முரட்டுப் பிடிவாதமுள்ளது வேறொன்றுமில்லை', 'வேறு முரணானது யாதும் இல்லை', 'கொடுமை உடையது வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வன்கொடுமையானது வேறு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வறுமைத் துன்பத்தை இரந்துஇரந்து நீக்குவோம் என்னும் கரடுமுரடான எண்ணத்தைப் போல வன்கொடுமையானது வேறு இல்லை என்பது பாடலின் பொருள்.
'வன்பாட்டது' என்பதன் பொருள் என்ன?

வறுமையை இரந்து போக்கலாமென எண்ணுதல் கொடுமையிலும் கொடுமை!

வறுமைத் துன்பத்தைப் இரந்தே தீர்ப்போம் என்று எண்ணிச் செயல்படுவது போன்ற மூர்க்கமான பிடிவாதமுள்ளது வேறொன்று இல்லை.
'இன்மை இடும்பை' என்ற தொடர் இன்மையான் வரும் துன்பம் அல்லது வறுமைத் துன்பம் என்ற பொருள் தரும்.
பிறரிடம் கேட்டு வாங்கியே இல்லாமையை வென்றுவிடுவேன் என்ற இரப்புக் கொள்கை நெறியற்றது; மூடத்தனமானது. இன்மை என்பது துன்பம் தருவதுதான். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கு எத்துணையோ வழிகள் உண்டு. அவற்றையெல்லாம் ஆராயாமல், இல்லாமையைத் துன்பமில்லாத தொழிலான இரத்தல்வழி தீர்த்துக் கொள்வேன், வேறு வகையில் அல்ல என்ற முரட்டுப் பிடிவாத எண்ணம் வேண்டாம் என அறிவுறுத்துகிறது பாடல். வறுமைத் துன்பத்தைப் இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று எண்ணி வேறு முயற்சி மேற்கொள்ளாதிருப்போரின் பொறுப்பற்ற தன்மையுடன் கூடிய கடின உள்ளத்தை வள்ளுவர் இங்கு பழிக்கின்றார். துன்பந்தரும் வறுமையை, துன்பப்படாமல் கையேந்தி போக்கலாம் என்று நினைப்பதைப் போன்ற கொடுமை, வேறேதும் இல்லை என்கிறார்.

'வன்பாட்டது' என்பதன் பொருள் என்ன?

'வன்பாட்டது' என்றதற்கு வன்பாயிருப்பது, அருமை, வன்மைப்பாடு உடையது, வலிமைப்பாடுடையது, வன்மைப்பாடு, வன்மையானது, வலிய முருட்டுத்தனம், வன்மை, முரட்டுத்தனம், கொடுமையுடையது, முரட்டுப் பிடிவாதமுள்ளது, வன்கொடுமையானது, முரணானது, வன்மையுடையது, வன்மைபாடுள்ளது, கொடுமையான எண்ணம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தேவநேயப் பாவாணர் ’வன்மையின் வன்பாட்டதில்’ என்ற தொடர்க்கு 'முதலாவது; பிறரிடம் ஒன்று ஏற்பதே இகழ்ச்சி; அதையும் இரந்து பெறுதலோ மிக இழிந்தது. மதிப்பாக வுழைத்து மானத்தோடு வாழ இறைவன் கைகால் முதலிய உறுப்புகளைத் தந்திருக்கவும். அவற்றைப் பயன்படுத்தாது இரத்தலை மேற்கொண்டு ஒரே இல்லத்திற் பெறாது தெருத்தெருவாகவும் வீடுவீடாகவும் சென்று, சிறிது சிறிதாகவும் ஒன்றோடொன்றொவ்வாது பல்வேறு வகைப்பட்டனவாகவும், புதியனவும் பழையனவும் சுவையுள்ளனவும் இல்லனவுமாகவும், சில மனைகளில் மறுக்கப்பட்டும் சில மனைகளில் வெறுக்கப்பட்டும், தொல்லைப்பட்டு மானங்கெட்டுத் தொகுத்த மிச்சிலும் எச்சிலுமான வுணவையுண்டு உடம்பு தாங்கி, நாய்போல் திரிய மனங் கொள்வது ஆறறிவு படைத்த மாந்தப் பிறப்பிற்கு எவ்வகையிலும் ஏற்காத மாபெரு வன் செயலாதலின், ’வன்மையின் வன்பாட்ட தில்’ என்றார். இதனால் வறுமை நீக்கும் வழி இரவன்றென்பது கூறப்பட்டது' என விளக்கம் தந்தார். இவ்வுரை இரத்தல் என்பது தெருவில் பிச்சை எடுத்தல் என்பதாகக் கொண்டு எழுதப்பட்டதாக உள்ளது.

இரத்தல் மானம்அழிபட ஏதுவாயிருப்பதையும் இத்துணை இகழ்வைத் தருவதையும் அறிந்திருந்தும் அதனை மேற்கொள்ள முன்வரும் சிந்தனை முரட்டுத்தனமானது அல்லது வலிமைப்பாடுடையது எனச் சொல்லப்பட்டது.

'வன்பாட்டது' என்ற சொல் வலிமையாய் இருப்பது எனப்பொருள்படும்.

வறுமைத் துன்பத்தை இரந்துஇரந்து நீக்குவோம் என்னும் கரடுமுரடான எண்ணத்தைப் போல வன்கொடுமையானது வேறு இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வறுமையை நீக்கும் எளியவழியென்று எண்ணும் இரவச்சம் வேண்டும்.

பொழிப்பு

வறுமைத் துன்பத்தை இரந்து தீர்ப்பேன் என்னும் முரட்டு எண்ணத்தினும் கொடுமையானது வேறு ஒன்றுமில்லை.