இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1060



இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி

(அதிகாரம்:இரவு குறள் எண்:1060)

பொழிப்பு (மு வரதராசன்): இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

மணக்குடவர் உரை: ஒருவனை யிரந்தால் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும். பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று.
இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று.

பரிமேலழகர் உரை: இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி இவன் எனக்கு ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும்.
(யாவர்க்கும் தேடவேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: இரப்பவனுக்குக் கோபம் வருதல் கூடாது; தான் வறுமைப்படுவதே அதற்குச் சான்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் கரி சாலும்.

பதவுரை: இரப்பான்-ஏற்பவன்; வெகுளாமை-சினவாதிருத்தல்; வேண்டும்-தகும்; நிரப்பு-வறுமை; இடும்பை-துன்பம்; தானேயும்-தானேயும்; சாலும்-அமையும்; கரி-சான்று.


இரப்பான் வெகுளாமை வேண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனை யிரந்தால் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும்;
பரிப்பெருமாள்: ஒருவனை யிரந்தால் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும்.
பரிதி: கொடுப்பவருடன் ஏற்பவன் கோபிப்பானல்லன்;
காலிங்கர்: இரப்பு என்னும் இளிவுநோய் கொண்டவன் யாவன் அவன் பின்னும் ஒருவரோடு வெகுளாமை வேண்டும்;
பரிமேலழகர்: ஈவானுக்குப் பொருள் உதவாவழி இவன் எனக்கு ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; [ஈகின்றிலன் - கொடுக்கின்றிலன்; அவனை - ஈவானை]

'கொடுப்பவருடன் ஏற்பவன் வெகுளா தொழிதல் வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரத்தல் தொழில் புரியும் வறியவன் தனக்குக் கொடுக்கவில்லையே என்று பிறரைச் சினத்தல் கூடாது', 'யாரும் தம்மிடம் வந்து இரப்பவனைக் கோபித்து (வெருட்டி) விடக் கூடாது', 'இரப்பவன் கொடாதவரிடத்துச் சினங் கொள்ளாமையை விரும்பவேண்டும்', 'பிறரிடம் இரப்பவன், பொருள் பெறாவிட்டால் சீற்றம் கொள்ளாது இருத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இரப்பவன் சினம் கொள்ளாது இருத்தல்வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று.
பரிப்பெருமாள்: பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: வெகுளாமைக்குக் காரணம் பிறிது கூறவேண்டா என்றது. இஃது இரப்பாற்கு வேண்டுவதோர் இயல்பு கூறிற்று.
பரிதி: திரவியத்தின் அருமை மிடியவற்குத் தெரியும்; அதற்கு..........சாட்சி என்றவாறு.
காலிங்கர்: என்னை காரணம் என்னில், முன்னும் பிறர்மாட்டு இரந்து வெகுளி கொலை முதலிய கொடுவினை செய்து தனக்கு இக்குற்றம் புகுந்ததனால்தான் இக்காலத்து அனுபவிக்கின்ற இரப்பு என்னும் பேரிடும்பை தானேயும் அமையும், இதற்குச் சான்று என்றவாறு.
பரிமேலழகர்: அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும்.
பரிமேலழகர் குறிப்புரை: யாவர்க்கும் தேடவேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது. [தனக்கேயன்றி - இரப்பவனாகிய தனக்கேயல்லாமல்; பொருள் கடைக்கூட்டற்கு - பொருள் ஈட்டற்கு; இயல்பு - ஈவானைச் சினவாதிருத்தல்]

'நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன் செய்த தீவினைக் குற்றத்தால் வந்த இவ்வறுமைத் துன்பமே அதற்குச் சான்றாக அமையும்', '(அப்படிச் செய்தால் அந்த இரப்பவனுக்குள்ளது போன்ற வறுமைப் பாவம் தமக்கு வந்துவிடலாம் என்பதை உணர்த்த) இரப்பவன் வறுமையினால் படுகிற துன்பங்களே போதுமான உதாரணம்', 'அவனுடைய வறுமைத் துன்பந்தானே அவனுக்கு வேண்டிய பொருள் கிடையாதென்பதற்குத் தக்க சான்றாகும்', 'பொருள் வேண்டிய பொழுது உதவாது என்பதற்குத் தன் வறுமைத் துன்பமே சான்றாகப் பொருந்தும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தனது வறுமைத் துன்பமே அதற்குச் சான்றாக அமையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரப்பவன் சினம் கொள்ளாது இருத்தல்வேண்டும்; தனது வறுமைத் துன்பமே அதற்குச் சான்றாக அமையும் என்பது பாடலின் பொருள்.
வறுமைத் துன்பம் சான்றாவது எங்ஙனம்?

கொடுப்பவர்க்கும் ஈய இயலாத நிலை நேரலாம் என்பதை உணர்ந்துகொள்.

இரக்கச் செல்பவன், இரக்கப்பட்டாரிடம் சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும்; அவன் அடைந்துள்ள பசித் துன்பமே அதை அவனுக்கு அறிவுறுத்தும் சான்றாக அமையும்.
உதவி கேட்டுச் செல்பவன், கேட்கப்பட்டவனிடம் வெகுளக்கூடாது. இரந்தபொருள் உறுதியாகப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் செல்லும்போது அது கிட்டவில்லையானால் ஏமாற்றத்தால் கொடையாளி மீது சினம் வரலாம். அதுபோன்ற சமயங்களில் எவருக்கும் எந்த நேரத்திலும் ஈய இயலாத நிலை ஏற்படும் என்பதையும் தானும் அந்த நிலைமைக்குள் தள்ளப்பட்டவன்தானே என்பதையும், வறுமையால் அவன் படும்துன்பமே சான்றாக உள்ளது என்பதையும் இரவலன் உணர்தல் வேண்டும். வள்ளல்களுக்கும் கொடுக்கமுடியாத காலம் வருவதுண்டு. இதை உணர்ந்து உதவி வேண்டுபவர் தான் இரந்தபொருள் கிடைக்கவில்லையானாலும் கொடுப்பவரிடம் தகாத முறையில் நடந்து வசவு மொழிகளை வழங்கக்கூடாது. தான் வறுமையில் பட்ட துன்பத்தை நினைந்து, இரப்பவன் தன் மனப்பாங்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பசி தீர்க்கும் வழியான இரப்பு எளிய முறையன்று. பொருள் கொடுப்பதற்குமுன் உண்மை அல்லது பொய்க்காரணங்களுக்காகப் பலமுறை காலம்தாழ்த்தி, கடைசியில் 'இல்லை'யென்று கைவிரித்தால் இரக்கச் சென்றவர்க்கு சினம் எழலாம்; இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே என அவர் சீறலாம்; 'வைத்துக்கொண்டே மறைக்கிறார்' என எண்ணி வெகுளலாம் ஆனால் அதுபோன்ற சமயங்களில் இரப்பான் வெகுளாமை வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஒருவரிடம் சென்று ஏதாவது ஓர் உதவி அல்லது பயன் நாடும் சமயம் 'சினம் காக்க' என அறிவுரை கூறுகிறார் வள்ளுவர். 'நாம் கைப்பொருளில்லாது வருந்துகிறது போல இவரும் வருந்துகிறார் போலும்' எனத் தன் நிலைமை அவர்க்கும் இருக்கலாம்; தனது வறுமையே சான்றுதானே என்னும் புரிதல் இருந்தால் சினம் வராது.

வாழ்க்கையில் இழிவான நிலைவரும்போது இரப்பது ஒன்றுதான் வழி என்ற நிலை ஒருவர்க்கு உண்டாகலாம். வள்ளுவர் மானம் தீரா இரவை மட்டுமே உடன்படுபவர். இரக்க வேண்டின் தக்கவரை'க் கண்டறிந்து கேட்கவேண்டும் என்பார். இரப்பவரை இகழ்ந்து ஏளனம் செய்யாமல், தன்னிடம் உள்ளதை மறைக்காமல், கொடுக்கும் கடமை உள்ளம் கொண்டவர்களிடம் மட்டுமே இரக்க வேண்டுமென்பார். இங்கு அவர், ஏற்பவன், தனது தன்மான உணர்வை ஒரு கட்டுக்குள் வைத்திருந்து, இரக்கப்பட்டோன் கொடாத வழி 'சினங்கொள்ளவேண்டாம்' என அவனுக்குண்டான நடத்தை முறையாக எடுத்துரைக்கிறார். அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் என்ற நோக்கில். இரப்பவர்க்கான வள்ளுவரின் அறிவுரையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
இரப்பவர் உரிமை பாராட்டி ஈவாரிடம் தனக்குப் பொருள் கொடுத்தே ஆகவேண்டுமா என வற்புறுத்த முடியாது. அவர் தன் வறுமையைத்தான் பழிக்க வேண்டும். கொடையாளியையல்ல. இவ்வாறு ஈகை அறத்தைச் செல்வர்க்குப் பல இடங்களில் அறிவுறுத்திய வள்ளுவர் 'அவர் கொடுக்காவிட்டாலும் நீ வெகுளாதே' என இங்கு இரப்பவர் தன் உள்ளத்தைப் பண்படுத்திக் கொள்ள அறிவுரையும் கூறுகிறார்

வறுமைத் துன்பம் சான்றாவது எங்ஙனம்?

கேட்கச் செல்லுமிடத்துப் பொருள் கிடைக்காதபோது தான் துய்க்கும் வறுமைத்துன்பத்தை எண்ணி சினம் தவிர் என்கிறது பாடல்.
இக்கூற்றுக்கு மணக்குடவரும் பரிமேலழகரும் 'தனக்குப் பொருள் அரிதாயிருத்தல் போல ஈபவனுக்கும் இப்போது இருத்தல் கூடும்; ஆதலால் வெகுளுதல் கூடாது' என்று விளக்கம் தந்தனர். பரிதி 'பொருளருமை வறியனாகிய தனக்குத் தெரியுமாகையால் ஏற்பவன் ஈபவனைக் கோபித்தல் கூடாது' என்றார். காலிங்கர் 'இரப்பவன் வெகுளியும் கொலையும் முதலான தீவினை முன்னரும் செய்து, இத்தகைய வறுமை உற்றிருக்கிறான் இவன் மேலும் இத்தகைய பாவம் செய்யவேண்டாம் இப்போதுள்ள இந்நிலையே சான்றாக அமையும்' என்றார். காலிங்கரது விளக்கம் அத்துணைச் சிறப்பில்லை.
'நாம் கேட்டும் இன்று இல்லையாதல் போல, கொடுப்பவனுக்கும் கொடுக்க இயலாத சூழலிருக்கலாம் என்ற மன்னிப்பு மனப்பான்மை கொண்டது' ஒன்று. மற்றொன்று 'நமக்கு ஏன் இந்நிலை வந்தது! மேலும் இது வரவேண்டாம் என்று இகழாதிருத்தல். இது பட்டறிவுப்பண்பாலாவது!' எனச் சான்றாவதற்குக் காரணம் கூறப்பட்ட வகைகளைக் காட்டுவார் தண்டபாணி தேசிகர்.

'தனக்குப் பொருள் அரிதாயிருத்தல் போல ஈபவனுக்கும் இப்போது இருத்தல் கூடும்' என்னும் உரை வறுமைத் துன்பம் சான்று என்பதை விளக்கும்.

இரப்பவன் சினம் கொள்ளாது இருத்தல்வேண்டும்; தனது வறுமைத் துன்பமே அதற்குச் சான்றாக அமையும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இரவு என்பது இரக்கப்பட்டு கொடுக்கும் பொருளை ஏற்பது; அதை உரிமையோடு கேட்க முடியாது.

பொழிப்பு

இரப்பவன் சினம்கொள்ளல் ஆகாது. தான் வறுமைத் துன்பம் எய்துவதே அதற்குச் சான்று.