இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1056



கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்

(அதிகாரம்:இரவு குறள் எண்:1056)

பொழிப்பு (மு வரதராசன்): உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத்துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும்.

மணக்குடவர் உரை: கரப்பிடும்பை இல்லாதாரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும்.
கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.

பரிமேலழகர் உரை: கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும்.
('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: உள்ளதை ஒளித்தலாகிய நோய் இல்லாதாரைக் கண்டால், வறுமைத் துன்பம் எல்லாம் ஒருங்கே ஒழிந்துபோம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்.

பதவுரை: கரப்பு-மறைத்தல், ஒளித்து வைக்கும் குணம்; இடும்பை- நோய்; இல்லாரை-இல்லாதவரை; காணின்-கண்டால்; நிரப்பு-வறுமை, பட்டினி; இடும்பை-துன்பம்; எல்லாம்-அனைத்தும், முழுவதும்; ஒருங்கு-ஒருசேர; கெடும்-இல்லையாகும், ஒழியும்.


கரப்பிடும்பை இல்லாரைக் காணின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கரப்பிடும்பை இல்லாதாரைக் காண்பாராயின்;
மணக்குடவர் குறிப்புரை: கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.
பரிப்பெருமாள்: கரப்பும் இடும்பையும் இல்லாதாரைக் காண்பாராயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இவையிரண்டும் இல்லாதார் என்றமையால் இச்செல்வராயினார் மாட்டு இரக்கலாம் என்றது.
பரிதி: நாஸ்தி என்னாமல் கொடுக்கும் பெரியாரைக் கண்ட அளவில்;
காலிங்கர்: தம்பால் வந்து இரப்பார்க்குத் தாம் இல்லை என்னும் இவ்விடும்பை இல்லாதார் யாவரும் அவரைக் கண்ட இடத்து;
பரிமேலழகர்: உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்;

'கரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒளிக்கும் துயரம் இல்லாரைக் கண்டால்', 'உள்ளதை மறைத்தலாகிய துன்பம் இல்லாதவரைக் கண்டால்', 'வைத்துக்கொண்டு இல்லையென்று மறைக்கிற குற்றம் இல்லாதவர்களை உலகம் உடையதனால்', 'உள்ளது ஒளித்தலாகிய துன்பம் இல்லாதாரைக் கண்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உள்ளதை மறைத்தலாகிய நோய் இல்லாதவரைக் கண்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும். [நிரப்பினான் - வறுமையினால்]
பரிப்பெருமாள்: நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும்.
பரிதி: தன் மிடி கெடும் என்றவாறு.
காலிங்கர் ('முழுதும் கெடும்' பாடம்): பிறர் இரப்பு என்கின்ற இடும்பையானது எல்லாம் ஒன்று ஒழியாமையே கெட்டு விடும்; எனவே இரக்கமுள்ள செல்வச் சிறப்பினர் ஈயுங் காலத்தும் பிறர்மாட்டுச் சென்று இனி ஒரு குறை கூறி இரக்க வேண்டாதவாறு ஈவாரும் உலகத்து உளர் என்றவாறு.
பரிமேலழகர்: மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர். [அதனை - கரத்தலை; அஃது இல்லாத- உள்ளது கரத்தலாகிய நோய் இல்லாத; அவர் கழியுவகையர்- இரப்பவர் பெருமகிழ்ச்சி யுடையர்]

'நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமைத் துயரம் எல்லாம் போய்விடும்', 'இரப்பவர்க்கு வறுமையால் வரும் துன்பங்களெல்லாம் ஒரு சேரக்கெடும். (நிரப்பிடும்பை-வறுமை; சிலர் இரப்பிடும்பை எனப் பிரிப்பர்.)', 'வறுமையினால் வரும் எல்லாத் துன்பங்களும் உடனே ஒழிந்து போகும்', 'வறுமையால் வரும் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே கெடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பசித் துன்பங்கள் எல்லாம் ஒரு சேரக்கெடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளதை மறைத்தலாகிய நோய் இல்லாதவரைக் கண்டால் பசித் துன்பங்கள் எல்லாம் ஒரு சேரக்கெடும் என்பது பாடலின் பொருள்.
'கரப்பிடும்பை இல்லார்' யார்?

மறைக்காமல் கொடுப்பவரைக் கண்டபொழுதே பசியெல்லாம் பறந்து போய்விடும்.

உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால் இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒருங்கே அவரை விட்டுப் போய்விடும்.
உதவி கேட்டு வருவோர்க்கு கொடுக்க மனமில்லாமல் பொருளை மறைத்துப் பதுக்கிவைத்தல் ஒரு நோய். அவ்வகைக் 'கரப்பு இடும்பை' அதாவது மறைக்கும் நோய் இல்லாதவர்களைக் கண்டவுடன் இரவலரது 'நிரப்பிடும்பை' அதாவது வறுமைத் துன்பம் எல்லாமே அவரைவிட்டு அடியோடு அகன்றுவிட்டது போன்ற உணர்வு வந்துவிடும் என்பது பாடலின் செய்தி.
இக்குறளும் இரக்கத்தக்கவர் யார் என்று அறிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவது. மறைக்காமல் கொடுப்பவரா என்று அறிந்து செல்க என்பது அறிவுரை.

'நிரப்பு' என்ற சொல்லுக்கு வறுமை, பசி என்பது பொருள். நிரப்பு என்பது ஒன்றும் இல்லாததை மங்கல வழக்காகக் (நிரம்ப இருப்பதாக-நிறைவாக) கூறுவது என்பர். நிரப்பிடும்பை என்பதிலுள்ள இடும்பை என்ற சொல் துன்பத்தைக் குறிப்பது. நிரப்பிடும்பை வறுமைத் துன்பம் எனப்பொருள்படும்; பசித்துன்பம் எனலுமாம்.
காணின் நிரப்பிடும்பை என்று பிறர் எல்லாம் பிரிக்க, காணின் இரப்பிடும்பை எனக் காலிங்கர் பிரிப்பர். .....நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி (1060) எனப் பின்வரும் பாடலில் கூறப்படுவதால் இருவகைப் பிரிப்பும் பொருந்துவனவே. கரப்பிலாரை ஒருமுறை கண்டபின், பின் எவரிடமும் சென்று வாழ்நாளில் இரக்க வேண்டியிராது என்னும் பொருளில் இடும்பையானது எல்லாம் ஒன்று ஒழியாமையே கெட்டு விடும் என்றார் காலிங்கர். இவரது பாடம் 'முழுதும் கெடும்' என்பது.

நாமக்கல் இராமலிங்கமும் வேறு சிலரும் 'இந்தக் குறள் மிகவும் ஆழ்ந்த கருத்துள்ளது. 'ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் இருக்கிற பொருளை அது இல்லாத ஒருவன் கேட்டவுடனே இல்லையென்று மறைக்காமல் கொடுக்க முடியுமானால், உலக சமுதாயம் ஒரு சர்வோதய சமுதாயமாகிவிடுகிறது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் பிச்சை கேட்கிற துன்பம் இருக்காது' என வேறொரு பார்வையில் இப்பாடலுக்குக் கருத்துரைப்பர்.

'கரப்பிடும்பை இல்லார்' யார்?

'கரப்பிடும்பை இல்லார்' என்றதற்குக் கரப்பிடும்பை இல்லாதார், கரப்பும் இடும்பையும் இல்லாதார், நாஸ்தி என்னாமல் கொடுக்கும் பெரியார், தம்பால் வந்து இரப்பார்க்குத் தாம் இல்லை என்னும் இவ்விடும்பை இல்லாதார், உள்ளது கரத்தலாகிய நோயில்லார், தமக்கு உள்ள பொருளையொளிக்கிறதாகிய வியாதியில்லாதவர், உள்ளத்தில் ஒளித்தலாகிய துன்பம் இல்லார், உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவர், தம்மிடம் உள்ளதை மறைத்தல் என்பது உளைச்சல்தரும் மன நிலை இல்லாதவர், ஒளித்து வாழும் துன்பமில்லார், ஒளிக்கும் துயரம் இல்லார், உள்ளதை மறைத்தலாகிய துன்பம் இல்லாதவர், வைத்துக்கொண்டு இல்லையென்று மறைக்கிற குற்றம் இல்லாதவர், உள்ளதை மறைத்தலாகிய துன்பம் இல்லாதவர், உள்ளதை ஒளித்தலாகிய நோய் இல்லாதார், உள்ளது ஒளித்தலாகிய துன்பம் இல்லாதார், தம்மிடம் உள்ளதை ஒளித்துக் கூறும் குற்றம் இல்லாதவர், ஒளிக்கும் கொடுமை இல்லாத நல்லோர், தம்மிடத்துள்ளதைக் கரத்தலாகிய நோயில்லாதவர், பொருளை மறைத்து வைக்கும் துன்பம் இல்லாதவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கரப்பு என்ற சொல் தம்மிடம் உள்ளதை மறைப்பதைச் சொல்வது. (கரப்பிடும்பை என்பதிலுள்ள) இடும்பை என்ற சொல்லுக்குக் கூறப்பட்ட நோய், துன்பம், குற்றம், கொடுமை என்னும் பொருள்களுள் இங்கு நோய் என்பது சிறக்கும்.
'கரப்பு இடும்பை' எனப்பிரித்து கரப்பும் இடும்பையும் என்று உம்மைத்தொகையாகக் கொள்வார் பரிப்பெருமாள்.

இரப்பது ஓர் இழிநிலை ஆகும். தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காது உதவிடும் பண்புள்ளம் கொண்டோரால் அந்நிலை மாறிவிடும். அத்தகைய நல்லவரைக் கண்டவுடனே, வறுமையாலே இரக்க வந்தவரின் பசித்துன்பம் உள்ளிட்ட எல்லா இல்லாமைத் துன்பங்களும் மறைந்தொழியும். கரக்கின்ற நோய் இல்லாத இடத்தில் இரப்பதில் துன்பம் இல்லை.

'கரப்பிடும்பை இல்லார்' என்ற தொடர் ஒளிவுமறைவு என்னும் நோய் இல்லாதவர் குறித்தது.

உள்ளதை மறைத்தலாகிய நோய் இல்லாதவரைக் கண்டால் பசித் துன்பங்கள் எல்லாம் ஒரு சேரக்கெடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இல்லையென்னாது கொடுப்பவரது இன்முகம் காணும்போதே இரவு என்னும் துன்பம் நீங்கும்.

பொழிப்பு

உள்ளதை மறைத்தலாகிய நோய் இல்லாதவரைக் கண்டால் பசித் துன்பங்கள் எல்லாம் ஒருங்கு கெடும்.