இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1049



நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

(அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1049)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

மணக்குடவர் உரை: நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது.
இஃது உறங்கவொட்டா தென்றது.

பரிமேலழகர் உரை: நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை.
('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நெருப்பிற்கூட உறங்கவும் செய்யலாம்; வறுமையில் சிறிதும் கண்மூட முடியாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.

பதவுரை: நெருப்பினுள்-தீயிடையில், நெருப்பினூடிருந்து; துஞ்சலும்-உறங்குதலும்; ஆகும்-முடியும்; நிரப்பினுள்-பசித்துன்பத்துள், வறுமைநிலையுள், வறுமையுள்; யாதுஒன்றும்-சிறிதாயினும்; கண்பாடு-கண்படுதல், கண் இமையை மூடுதல், துயில்; அரிது-உண்டாகாது, அருமையானது, கடினம்.


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்;
பரிப்பெருமாள்: நெருப்பினுள்ளே கிடந்து உறங்கலும் ஆகும்;
பரிதி: நெருப்பினுள்ளும் நித்திரை செய்யலாம், அக்கினித் தம்பம் பண்ணி; [அக்கினித் தம்பம்- சுட்டு ஒன்றுவிக்கும் நெருப்பும் சுடாதவாறு செய்தலாம்]
காலிங்கர்: யாதானும் ஒருவாற்றான் நெருப்பினுள் கிடந்து கண்துஞ்சலும் இனிதாய் இருக்கும்;
பரிமேலழகர்: மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்;

'நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் மந்திரம் மருந்துகள் உதவியால் நெருப்பிற்படுத்து நன்றாக உறங்குதலும் கூடும்', 'நெருப்பின் மத்தியிலிருந்து கொண்டுகூட நித்திரை செய்துவிடலாம்', 'மந்திரம் மருந்துகளால், தீயின் நடுவே உறங்குதலுங் கூடும்', 'நெருப்பிடையே படுத்து உறங்குதலும் முடியும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் கூடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உறங்கவொட்டா தென்றது.
பரிப்பெருமாள்: நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு காலத்தினும் அரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உறங்கவொட்டா தென்றது.
பரிதி: மிடி வருத்தத்திலே நித்திரை வாராது என்றவாறு.
காலிங்கர்: எனினும் அங்ஙனம் புற நெருப்பு அன்றி அகம் சுடும் வெவ்வழலாகிய வறுமைத் தீயினுள் அது தணிக்கும் மருந்து பிறிது இன்மையான் யாதானும் ஒருவாற்றானும் கண்துஞ்சல் வறியோர்க்கு அரிது என்றவாறு.
பரிமேலழகர்: நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.

'நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால், அவனுக்கு வறுமை வந்துற்றால் ஒரு சிறிது கூட உறங்குதற்குக் கண்ணை மூட இயலாது', 'ஆனால் தரித்திரத்தில் இருந்து கொண்டு கொஞ்சம்கூடத் தூங்க முடியாது', 'வறுமையுள் எவ்வகையானுந் தூங்க முடியாது', 'ஆனால் வறுமை வந்தபோது எவ்வாறும் உறங்க முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வறுமை வந்தபோது சிறிது உறங்குவதற்கும் கண்மூடல் கடினம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் கூடும்; வறுமை வந்தபோது நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு கடினம் என்பது பாடலின் பொருள்.
'நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு' என்பதன் பொருள் என்ன?

பசித்தீயில் வயிறு எரியும்போது எப்படிக் கண்ணடைக்க முடியும்!

நெருப்பின் நடுவே இருந்து உறங்குதலும் இயலும். ஆனால் பசிப்பிணியில் இருந்து வருந்தும் ஒருவர் எந்த வகையாலும் கண்மூடித் தூங்க முடியாது.
'நெருப்பினுள்ளும் கிடந்து தூங்கலாம் போலும். ஆனால் 'ஐய்யோ! இந்த பட்டினித் தீ இடையே கண்மூடி உறங்க முடியவில்லையே' என்று வயிற்றுக்கில்லாமையால் வாடும் ஒருவன் உள்ளம் உடைந்து கூறுகின்றான். 'துஞ்சலும் ஆகும்' என்று சொல்லப்பட்டாலும் அத்தொடர் உறங்கமுடியாமையையே உணர்த்துகிறது. நெருப்பினிடையே இருந்து உறங்குதலைவிடக் கொடியதாய் இருப்பது பசியுடன் தூங்குதல். வயிற்றில் பசித்தீயைச் சுமந்துகொண்டு உறங்கமுடியாது.
வறுமைப்பட்டவன் நிம்மதியாகத் தூங்கமுடியாதிருக்கிறான். நிரப்பு என்ற பசி வந்து வாட்டும் போது, அவனால் கண்மூடித் தூங்க இயலாது. புற நெருப்பினும் அகத்தே கடும்பசி என்ற தீ மிக மிகக் கொடியது. கண்பாடு அரிது எனக் கண்ணை மூடுதல் கடினம் எனக் கூறப்பட்டாலும் அது முடியாது என்னும் பொருளையே வெளிப்படுத்துகிறது. பசித்திருக்கும் வயிறு அனலாயெரிக்கும்போது எங்ஙனம் தூக்கம் வரும்? வறுமையின் கொடியமுகமான பட்டினித் துன்பத்தைக் இக்குறள் காட்டுகிறது.

வறுமைக்கு ஆளானவன் என்றும் கவலையால் விழுங்கப்பட்டு கலங்கித் திரிவான். உயிர் வாழ்வதற்கு முதலில் உணவு அதன்பின் மானத்தைக் காக்க உடை, பின்னர் உடல்நலம் பெற உறைவிடம் ஆகியன வேண்டும், இவை மூன்றும் வறுமையிலுள்ளோர்க்குக் கிடைப்பதில்லை. நாளும் இவை பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருப்போர்க்கு மனஅமைதி இராது. உள்ளத்திலே அமைதியில்லாவிட்டால் உறக்கம் எப்படி வரும்? இவற்றிலும் உணவு கிடைக்காமல் பசியில் பிணிப்புண்டிருப்போர் ஒரு நொடி கூடக் கண்ணயர முடியாது.
உண்பதற்கில்லாமையை அதாவது பசித்துயரை உடற்றும்பசி, அழிபசி, பசியென்னும்தீப்பிணி, உறுபசி என்று குறளில் பலவேறு சொல்லாடல்களால் பல்வேறு இடங்களில் குறித்துள்ளார் வள்ளுவர். பட்டினியிலே வாழ்வியல் நடத்தும்போது எவ்விதத்திலும் கண்மூடி உறங்க முடியாது என்கிறார் இங்கு.
வருத்துவதில் சுடும் நெருப்பினைக் காட்டிலும், வறுமையினால் உண்டாகும் பசி கொடுமையானது என்றும், பட்டினி கிடப்பதால் நல்கூர்ந்தார் கண்மூடி உறங்க முடியாது என்பதும் கூறப்பட்டன.

'நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு' என்பதன் பொருள் என்ன?

'நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு' என்றதற்கு நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும், நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு காலத்தினும், மிடி வருத்தத்திலே நித்திரை, வறுமைத் தீயினுள் அது தணிக்கும் மருந்து பிறிது இன்மையான் யாதானும் ஒருவாற்றானும் கண்துஞ்சல், நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம், தரித்திரம் வந்தால் ஒன்றினாலேயும் நித்திரை, வறுமை வந்தால் யாதொன்றினாலும் கண்ணுறங்குவது, வறுமையுற்றவிடத்துச் சிறிதளவு கூடக் கண்ணை மூடி உறங்குதல், வறுமையின் கண் உறங்குவது, வறுமையில் சிறிதும் கண்மூடல், வறுமை வந்துற்றால் ஒரு சிறிது கூட உறங்குதற்குக் கண்ணை மூடல், தரித்திரத்தில் இருந்து கொண்டு கொஞ்சம்கூடத் தூங்குதல், வறுமை என்னும் நெருப்பினுள் எவரும் எவ்வகையாலும் கண்ண மூடவும், வறுமையுள் எவ்வகையானுந் தூங்குதல், வறுமை வந்தபோது எவ்வாறும் உறங்குதல், வறுமையில் இருந்து வருந்தும் ஒருவர் எந்த வகையாலும் சிறிது கண்ணை மூடுதல், வறுமையில் கண்களுக்கு உறக்கம், வறுமையிலிருந்து கொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்குதல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நிரப்பு என்ற சொல் வயிற்றுக்கில்லாமையால் குடலைக் கொளுத்தும் தீயை அதாவது பசித்தீயைக் குறிக்கும். யாதொன்றும் என்ற சொல் எந்த வகையாலும் எனப் பொருள்படும். கண்பாடு என்றது கண்படுதல் - கண் இமையை மூடுதலைச் சொல்வது. 'நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு' என்ற பகுதி பசித் தீயினுள் யாதானும் ஒருவாற்றானும் கண்துஞ்சல் என்பதைக் குறிக்கும்.

‘துஞ்சல்’ என்ற சொல் உறங்குதல் என்ற பொருள் தரும். வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா (1179) துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் (926) துஞ்சுங்கால் தோள் மேலராகி (1218) என அச்சொல் அப்பொருளில் குறளில் பிறஇடங்களில் பயிலப்பட்டுள்ளது.
‘துஞ்சுதல்’ நல்ல உறக்கத்தையும் ‘கண்பாடு’ அரைகுறை உறக்கத்தையும் குறிக்கும். ‘துஞ்சுதல்’ கண்பாடு’ என்னும் சொல்லாட்சியானும் ஆசிரியர் வறுமையின் கொடுமையைப் புலப்படுத்துதல் நோக்கத் தகும் (இரா சாரங்கபாணி).

'நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு' என்றது வறுமையுற்றவிடத்துச் சிறிதளவு கூடக் கண்ணை மூடி இருத்தல் என்னும் பொருள் தருவது.

நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் கூடும்; வறுமை வந்தபோது சிறிது தூங்குவதற்கும் கண்மூடல் கடினம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நல்குரவில் ஒருசிறிதும் கண்அயர முடியாது.

பொழிப்பு

நெருப்பிற்கூட உறங்கவும் கூடும்; பசிப்பிணி வந்துற்றால் சிறிதும் கண்மூட இயலாது.