இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1044



இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொல்பிறக்கும் சோர்வு தரும்

(அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1044)

பொழிப்பு (மு வரதராசன்): வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கிவிடும்.

மணக்குடவர் உரை: நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.

பரிமேலழகர் உரை: இற்பிறந்தார்கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும்.
(சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.)

இரா இளங்குமரன்: உரை: வறுமைக் கொடுமையானது, நற்குடிப்பிறந்தா ரிடத்தும், அவர்குடிப் பிறப்பொடு பொருந்தாத இழிசொல் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும்.

பதவுரை: இற்பிறந்தார்-நற்குடியில் தோன்றியவர்; கண்ணேயும்-இடத்தும், மாட்டும்; இன்மை-வறுமை; இளிவந்த-இழிவு வருவதற்கேதுவாகிய; சொல்-மொழி; பிறக்கும்-உண்டாகும்; சோர்வு-தளர்வு; தரும்-உண்டாக்கும்.


இற்பிறந்தார் கண்ணேயும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடிப்பிறந்தார்மாட்டேயும்;
பரிப்பெருமாள்: குடிப்பிறந்தார்மாட்டேயும்;
காலிங்கர்: குடிப்பிறந்தார் மாட்டேயும்;
பரிமேலழகர்: இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. [அவர்- இற்பிறந்தார்; அது - இளிவந்த சொல்]

'குடிப்பிறந்தார் மாட்டேயும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயர்குடிப் பிறந்தாருக்கும்', 'ஒழுக்கம் தவறாத நற்குடிப் பிறந்தாரிடத்தும்', 'தரித்திரம் (வந்துவிட்டால் ஒழுக்கத்தால் சிறந்த) நல்ல குடியிற் பிறந்தவர்களிடத்திலும்கூட', 'நற்குடியில் பிறந்தாரிடத்தும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நற்குடியில் பிறந்தாரிடத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

இன்மை இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்குரவு இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.
பரிப்பெருமாள்: நல்குரவு இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, குடிப்பழி உண்டாக்கும் என்றது.
காலிங்கர்: வறுமை வந்த இடத்து மற்று அஃது யாது செய்யுமோ எனில் அவரது நன்கு தெரிந்துரைக்கும் நாவுக்கும் பெரிதும் இளிவந்த சொல் பிறப்பதாகிய உரைச் சோர்வுபாட்டினைக் கொடுக்கும்; அதுவன்றி மற்றும் இரப்புரை வந்து விழும் என்றவாறு.
பரிமேலழகர்: அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல். [இளிவருதற்கு ஏதுவாகிய சொல்- இழிவு வருவதற்குக் காரணமாகிய சொல்; ஒரோவழி- ஒவ்வோரிடத்து; தம்பிறப்பு-தம் குடிப்பிறப்பு; அது - இளிவந்த சொல்]

'இளிவந்த சொல் பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமை தாழ்வான சொல்லைச் சொல்லச் செய்யும்', 'வறுமை இழிவு தரும் சொற்கள் தோன்றுவதற்குக் காரணமான சோர்வினை உண்டாக்கும்', 'அவர்களைப் பற்றி இழிவான வதந்திகள் பிறக்கக்கூடிய பலவீனத்தை உண்டாக்கிவிடும்', 'இழிவான சொல் தோன்றுதற்கு ஏதுவான தளர்ச்சியை வறுமை கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வறுமையானது இழிவு தரும் சொற்கள் தோன்றுதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நற்குடியில் பிறந்தாரிடத்தும் வறுமையானது இளிவந்த சொல் தோன்றுதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
'இளிவந்த சொல்' குறிப்பது என்ன?

வறுமைவந்தபோது நல்லகுடியில் பிறந்தோரும் கெட்டகெட்ட சொற்கள் உரைக்குமளவு கீழ்நிலைக்கு வந்துவிடுவர்.

இல்லாமையானது நற்குடிப்பிறந்தார் வாயிலிருந்து இழிவான சொல் பிறப்பதற்குக் காரணமான தளர்ச்சியை உண்டாக்கிவிடும்.
இற்பிறந்தார் என்ற சொல்லுக்கு நேர்பொருள் இல்லில் பிறந்தவர். அது நல்ல குடும்பத்தில்- நற்குடியில் தோன்றியவர்களைக் குறிப்பது.
இன்மை என்ற சொல் இல்லாமை என்ற பொருள் தரும். இன்மைநிலையில் நல்ல குடியில் பிறந்தோரும் இழிசொல் கூறித் தாழ்ந்துபோவர். நுகர்பொருள் ஏதும் இல்லாதபோது ஒருவனுக்கு ஒன்றும் செய்ய இயலாத நிலை உண்டாகி மனம் தளர்ச்சியுறும். அதுபொழுது அவன் பார்க்கும், உரையாடும் மாந்தரிடம் வெறுப்பு தோன்றும்; அதுவரை காத்துவந்த நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் அவனிடமிருந்து மறைந்து போகும். குடிப்பண்புக்குத் தகாதவாறு பேசுவான்; இழிசொற்கள் வந்து விழும். இதை நல்ல குடியில் பிறந்தவர்களிடத்திலும் இல்லாமை எனும் கொடுமையானது இகழத்தக்க சொற்கள் பிறப்பதற்குக் காரணமான சோர்வினை உண்டாக்கிவிடும் என்கிறார் வள்ளுவர்.

'இளிவந்த சொல்' குறிப்பது என்ன?

'இளிவந்த சொல்' என்ற தொடர்க்கு இளிவரவான சொற்கள், இளிவருதற்கு ஏதுவாகிய சொல், பொல்லாத வசனங்கள், இகழ்ச்சியாகிய சொல், இழிவு தரும் சொல், தமக்கு இழிவுதரும் சொற்கள், தாழ்வான சொல், அவர்களைப் பற்றி இழிவான வதந்திகள், இழிசொல், இழிவான சொல், இழிந்த சொற்கள், இழிந்த சொற்கள், தரக் குறைவான சொற்கள், மிகவும் இழிவான தளர்ச்சியுடைய சொல் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

'நற்குடிப்பிறந்தோர் பண்புகளைப் குறள் பல இடங்களில் புகழ்ந்துரைத்துள்ளார் வள்ளுவர். அவர்கள் இயல்பாக நல்லொழுக்கமுடையவராயும் நல்லறங்களைக் கடைப்பிடிப்பவராயும் இருப்பர்; ஒழுக்கம், வாய்மை, பழிபாவங்களுக்கு நாணுதல் ஆகியவற்றில் தவறமாட்டர்கள்; நகை, ஈகை, இகழாமை, இன்சொல் ஆகியவை நற்குடிக்கு இயல்பாம் எனப் போற்றுவார் அவர். மேலும் ஒருவரின் வாய்ச்சொற்களே அவர்தம் குடியின் மேன்மையை விளக்கும் எனவும் கூறியுள்ளார். இன்மையின் கொடுமை கூறும் இப்பாடலிலும் இற்பிறந்தார் இயல்பாக இளிவந்த சொல் சொல்லார் என்ற பொருள்படும்படி அவர் 'இற்பிறந்தார் கண்ணேயும்' என்று உயர்வுசிறப்பும்மை கொடுத்து குடிப்பிறந்தார் இயல்பாக நற்பண்புடன் நடந்து கொள்வர் என்ற கருத்தைப் புலப்படுத்துமாறுதான் குறளைத் தொடங்குகிறார். பின்னர், எப்பொழுதும் சோர்வின்றி இருக்கும் அவர்கள் வறுமை வந்துற்றபோது தளர்ச்சியுற்றுக் கனி இருக்கக் காய் கவர்வர்; தகாத சொற்களைப் பேசுவர் என முடிக்கிறார். இன்மை என்ற துன்பம் வந்துவிட்டால், அது குடிப்பிறந்தாரிடத்தும் இழிவான சொல் தோன்றவைக்கும். வழிவழி வந்த வந்த பண்பாடு கெடும்.
இனி, பரிமேலழகர் 'இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும்' என்ற பகுதிக்கு இளிவருதற்கு ஏதுவாகிய சொல் பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும் எனப் பொருள் கூறினார். இவர் குடிப்பிறந்தார் இழிசொல் கூறினார் எனச் சொல்லாமல், அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும் என்று பொருள் தந்து விரிவுரையில் சோர்வு என்பது தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி, ஒரோவழித், தம் பிறப்பினை மறந்து, அது சொல்வதாக நினைத்தல் என நயம் உரைக்கிறார். இதன் பொருள் வறுமைத் துன்பம் தரும் சோர்வு காரணமாக இற்பிறந்தாரது வாய்வரை இழிவு தரும் சொல் வந்தது; ஆனால் சொல்லவில்லை என்பது.

'இளிவந்த சொல்' என்பதற்கு இழிவு தரும் சொல் என்பது பொருள்.

நற்குடியில் பிறந்தாரிடத்தும் வறுமையானது இழிவு தரும் சொற்கள் தோன்றுதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நல்குரவு வந்தால், நல்ல குணங்களை மறந்துவிடுவர்.

பொழிப்பு

நற்குடிப் பிறந்தாரிடத்தும் வறுமை தாழ்வான சொற்கள் கூறுவதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும்.