இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1039



செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்

(அதிகாரம்:உழவு குறள் எண்:1039)

பொழிப்பு (மு வரதராசன்): நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கி விடும்.

மணக்குடவர் உரை: நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின், அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும்.
இது நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும்.
(செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உடையவன் வயலுக்கு நாளும் போகாதிருப்பின் வயல் மனைவிபோலப் பிணங்கி வாடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கிழவன் செல்லான் இருப்பின் நிலம் இல்லாளின் புலந்து ஊடி விடும்.

பதவுரை: செல்லான்-செல்லாதவனாக; கிழவன்-உரியவன்; இருப்பின்-இருந்தால்; நிலம்-நிலம்; புலந்து-வெறுத்து; இல்லாளின்-மனைவி போல; ஊடிவிடும்-திண்ணமாகப் பிணங்கும்.


செல்லான் கிழவன் இருப்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின்;
பரிப்பெருமாள்: நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின்;
பரிதி: வயல்தலைக்குச் செல்லாமல் இருப்பின்;
காலிங்கர்: தன் நிலக் கிழத்தியைப் பயிர் முகத்துத் தான் சென்று பல நாளும் விழி ஓட்டிப்பாரானாகில்;
பரிமேலழகர்: அந்நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார்.

'நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மடிந்திருப்பானாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலத்துக்குரிய உழவன் நாள்தோறும் சென்று பார்த்து உரியதைச் செய்யாமல் சோம்பி இருந்தால்', 'நிலத்துக்கு உடையவன் (நிலவளத்தை கவனித்துப் பயிரைப் பாதுகாக்க அடிக்கடி) நிலத்துக்குப் போகாமல் இருந்து விட்டால்', 'நிலத்திற்குரியவன் நிலத்தை உரிய காலங்களில் சென்று நோக்காது இருப்பின்', 'நிலத்திற்குரியவன், நிலத்திற்குச் சென்று பாராமல் இருப்பானானால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நிலத்திற்குரியவன் உரிய காலங்களில் சென்று நிலத்தை பாராது இருப்பானானால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும். [புலந்த-ஊடிய]
மணக்குடவர் குறிப்புரை: இது நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாள்தோறும் சென்று பார்க்க வேண்டும் என்பதூஉம் பாராக்கால் பயன் குன்றும் என்பதூஉம் கூறிற்று. இவை மூன்றினானும் உழும் திறன் கூறிற்று.
பரிதி: வயல் என்னும் பெண் வாடும், குலமகள் தன் கணவனைக் காணாமல் வாடுமாப் போல என்றவாறு.
காலிங்கர் ('நிலமடந்தை புல்லாள் புரளவிடும்' பாடம்): அந்நிலமடந்தை அவனை என்றும் மேவாளாகித் தனக்கு அலங்காரமாகிய பயிர்க்கோலம் அழிந்து தன்னோடு பொருந்தி வாழாளாகிப் புலந்து இவன் வாழ்க்கையைப் புரள விடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: 'நிலம் புலந்து இல்லாளை ஊடி விடும் என்பாரும் உளர்; கற்புடை மகளிரை ஊடி விடும் என்பது பொருள் அல்ல. கிழவன் என்றது அந்நிலத்துக்கு உரியன் என்றது.
பரிமேலழகர்: அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும்.
பரிமேலழகர் குறிப்புரை: தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது. [அவன் போகம் இழத்தல் நோக்கி- அந்நிலத்திற்குரியவன் அந்நிலத்தின் போகத்தை (விளைவாகிய பயனை) இழத்தலைக் கருதியாம்; அது-உழவு.

'அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலமகள் அவன் மனைவியைப் போல வெறுத்துப் பின் பிணங்குவாள்', 'அந்த நிலம் மனத்தாபமடைந்து மனைவியைப்போல (உணவளிக்க) பிணங்கிவிடும்', 'அது மனைவிபோல் அவனோடு பிணங்கிப் பயன்தராதுபோம்', 'அஃது அவன் மனைவி போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் அவனோடு ஊடிவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது மனைவிபோலப் பிணங்கி வாடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிலத்திற்குரியவன் உரிய காலங்களில் சென்று நிலத்தை பாராது இருப்பானானால் அது மனைவிபோலப் பிணங்கி வாடும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

தன்னுடைய நிலத்தை இல்லாள்போல் கருதி அதனிடம் அக்கறை காட்டவேண்டும்.

நிலத்துக்கு உரியவன் உரிய காலங்களில் எல்லாம் சென்று நிலத்தைப் பார்வையிடாமல் சோம்பியிருப்பானானால், அன்புகாட்டப்படாத மனைவியைப் போல் அந்த நிலமும் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.
கிழமை என்ற சொல் உரிமை எனப்பொருள்படும். கிழவன் என்றது உரிமை கொண்டவன் என்ற பொருள் தரும். நிலக்கிழவன் அதாவது நிலத்துக்கு உரியவன் அந்தந்தக் காலங்களில் நிலத்துக்கு நேரில் சென்று பார்த்துப் பயிருக்கு வேண்டுவனவற்றைச் செய்து வருதல் வேண்டும். உழுதல் தொடங்கி எருவிடல், களையெடுத்தல், வித்திடல், நீர்பாய்ச்சுதல், பயிர்காத்தல், அறுவடை, போரடித்துக் குவித்துக் குதிரில் போடுதல்வரை அனைத்து நிலைகளிலும் நேரடியாகக் கண்காணித்து, கழிவோ அழிவோ நேராமல், பாதுகாத்து வரவில்லை என்றால் உழவிலிருந்து தக்க பலனை அடையமுடியாது. இவ்விதம் வேண்டுங்காலங்களில் நிலத்தைப் பார்வையிட வேண்டும் என்பதை வள்ளுவர் ஒரு உவமை மூலம் சொல்கிறார். ஒருவன் தன் இல்லத்தில் மனைவியுடன் இருந்து இல்லறத்துக்குத் தேவையானவற்றைச் செய்யாது வேறிடங்களில் திரிந்து கொண்டிருந்தால் இல்லாள் எப்படி மனம் வேறுபட்டுச் சடைத்துக் கொள்வாளோ அதுபோல நிலமும் பயன் தராது மாறுபட்டுவிடும் என்கிறார் அவர்.
நில முடையான் பிறரை ஏவிவிடாது தானே சென்று வயலைப் பார்த்தல் வேண்டும் என்பதைச் சொல்லக் 'கிழவன்' என்ற சொல் ஆளப்பட்டது.

குடும்பத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் சில கடமைகள்- உரிமைகள் உள்ளன. கணவன் -மனைவி உறவுநிலையில் பூசல் தோன்றுவது இயற்கை. கணவனது கடமைகளுள் ஒன்று மனைவி இன்புற்றிருக்குமாறு பார்த்துக் கொள்வது. அன்றாட வாழ்வில் ஒரு மனைவி தன் கணவனிடம் எதை எதிர்பார்ப்பாள்? பணி நேரம் தவிர்த்துக் கணவன் வீட்டிற்கு வந்து குடும்பத்திலுள்ளாரிடம் நேரத்தை செலவிடவேண்டும் என்றுதான் மிக விரும்புவாள். எனவே வீட்டில் பொழுதைச் செலவிடாமல், வெளியில் கேளிக்கைச் செயல்களில் ஈடுபட்டு மனைவியைக் கண்டுகொள்ளாமல், சோம்பித்திரிந்து, தூங்குவதற்கு மட்டும் இல்லம் வந்தால், மனைவி அவன்மீது பூசல் கொள்வது இயல்பே. பூசலின் தொடக்கநிலை புலவி எனப்படும். வெளியில் சென்றவனது வரவு நீட்டித்தால் அதாவது கடமையின் காரணமாக வெளியிற் சென்ற கணவன் உரியபொழுது வீட்டிற்கு வராது போனால்- இல்லறக் கடமைகளைச் செய்யாமல், நேரம் கெட்ட நேரத்தில் வீடு திரும்பினால்- மனைவி புலப்பாள். இப்புலவி நீண்டுவிட்டால் அதாவது கணவன் திருந்தாமல் செய்த தவற்றைத் திரும்பத் திரும்ப செய்தால் இல்லறத்தில் அக்கறை காட்டாதவனை மனைவி விரும்பமாட்டாள். அத்தகையவனிடம் மனைவி ஊடிவிடுவாள். புலவியின் அடுத்த நிலை ஊடல். ஊடல் வெறுப்பு முற்றிச் சினங் கொள்ளுதலைக் குறிக்கும். இந்நிலையில் மனைவி அவனிடம் பிணக்கம் கொண்டு விலகியே இருப்பாள். அவனுக்கு இல்லக்கிழத்தியின் பயன் கிட்டாது. போகம் இழப்பான்.
நிலம் என்பது இவனது இல்லாள் என்கிறார் வள்ளுவர். புலவியை உழவில் ஒருவகையாகக் கொள்கிறார் அவர். கிழவனாம் அவன் நிலம் என்னும் மங்கையைக் கருதி உழவு நடைமுறைக் கடமைகளை முறையாகச் செய்யாதிருப்பானாயின் இல்லாள் போலவே நிலக்கிழத்தியும் ஊடிவிடுவாள் என்கிறார். அவ்விதம் அவன் அக்கடமைகளை ஆற்றவில்லையென்றால் நிலத்தின் பயனை இழப்பான்; போகம் இல்லை; உரிய விளைச்சல் உண்டாகாது. எனவே இவனது உழைப்பு இன்றியமையாதது. 'உடையவன் பாரா பயிர் ஒரு முழங் கட்டை' என்பது பழமொழி.
புலத்தல்-வாடுதல், பொலிவு அழிதல் இரண்டற்கும் பெயராதலின் இல்லாள் பொலிவழிந்து போகந்தராமை போல நிலமும் பயிர்வாடி விளைச்சலாகிய போகத்தைத் தராதொழியும் என்ற உவம நலம் தோன்ற நிற்பது (தண்டபாணி தேசிகர்).

காலிங்கர் ‘செல்லான் கிழவனிருப்பின் நிலமடந்தை புல்லாள் புரள விடும்’ எனப் பாடம் கொண்டு 'அந்நிலமடந்தை அவனை என்றும் மேவாளாகித் தனக்கு அலங்காரமாகிய பயிர்க்கோலம் அழிந்து தன்னோடு பொருந்தி வாழாளாகிப் புலந்து இவன் வாழ்க்கையைப் புரள விடும் என்றவாறு' என விளக்கம் தருகிறார்.
'இல்லாளை ஊடிவிடும்' என்றும் பாடம் உள்ளது எனக் காலிங்கர் குறிக்கிறார். அவ்விதம் பாடம் கொள்வார் யார் என்று தெரியவில்லை.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

உழவன் எங்கே சென்றாலும் தனக்கு உரிமையான நிலத்தை எண்ணி செல்லுதலும் உழவுத் தொழில் கடமைகளைச் செய்தலும் இன்றியமையாத் தேவையாகும். ஒரு பொழுதும் நிலம்பற்றிய சிந்தனை, உழவுச் செயற்பாடுகள் தவிர்த்தல் ஆகாது. அப்படி இருந்தால், நிலம் ஊடிவிடும் என்கிறது பாடல். அதாவது பாடுபடாத நிலம் மும்மாரி பொழிந்தாலும், முப்போகம் விளையக்கூடியதாயிருந்தாலும், அந்நிலம் மெல்ல மெல்ல வாடி விளைச்சல் தராது பாழாகிப்போகும். நிலத்துக்குரியவன் அவ்வப்பொழுது நிலத்துக்குச் சென்று வேண்டியவற்றைச் செய்யவேண்டும்.
இல்லாள் ஊடின் தலைவன் போகமிழப்பான். அதுபோல நிலத்தைப் போய்ப் பார்க்காமல் நிலத்துக்குரியவன் சுணங்கி இருந்தால் நிலம் அவன்மேலே இருக்கிற வெறுப்பால், விலகிப் போன மனைவி வாடி விளைச்சலில்லாமற் போவதுபோல, விளைவு குன்றும். அதாவது நல்ல பலன் தராது போய்விடும். இது இக்குறள் கூறவரும் செய்தி.

இக்குறளுக்கு விளக்கம் அளிக்க வந்த உரைகாரர்களில் சிலர் இது உழுபவனையும் உழுவிப்பவனையும் வேறுபடுத்திக் காட்டுகிறது என்ற கோணத்தில் நோக்கிப் பொருள் கூறினர். அவ்வாறான உரைகளிலிருந்து சில:

  • நிலத்திற்கு நாள்தோறும் வருகின்றவனே-வந்து உழைப்பவனே நிலத்திற்கு உரிமையுடையவனாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் என்பது தெளிவாகப் பெறப்படுகிறது.
  • உழுபவனிடம் மட்டும்தான் உழுநிலமும் உற்பத்திச் சாதனங்களும் இருத்தல் வேண்டும். சுருங்கக் கூறினால் உழுபவனுக்கே நிலம்; அப்போதுதான் உழுவார் உலகத்தார்க்காணி ஏர்ப்பின்னது உலகம், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், உழவினார் கைமடங்கா நிலை என்பவை நடைமுறைக்கு வரும். உழைப்பை நல்காது, உற்பத்திச் சாதனங்களை மட்டும் ஒருவர் தமக்கே பெற்றிருப்பது தகாது என்று கூறினர்.
  • நிலத்தை, கணவன் -மனைவி உரிமை உணர்வுடன் இணைத்துக் கூறிய பாங்கினால் நிலம் உழுவாரிடத்திலேயே இருக்க வேண்டும் என்ற கருத்துப் புலனாகிறது
  • இக்குறளும் பயிர் செய்பவனுக்கே நிலம் உரிமையுள்ளது என்ற கருத்தைக் கொண்டது. நேரிடையாக நிலத்திலே உழுகின்றவன் ஓரளவு நிலத்தைத்தான் உழ முடியும். அவன்தான் நாள்தோறும் அந்நிலத்தைப் போய்ப் பார்த்துப் பயிருக்குச் சேதம் உண்டாகாமல் பாதுகாக்கவும் முடியும். நூற்றுக்கணக்கான கல்லுகளுக்கு அப்பால் இருப்பவன் நிலம் தனக்கென்று உரிமை கொண்டாடுவனாயின் அவன் நாள்தோறும் நிலத்தைப் பார்ப்பது எப்படி? பார்க்கவே முடியாது. தம் ஆற்றலுக்கு மீறிய நிலத்தை வளைத்துக் கொண்டிருக்கும் உழுவித்துண்போரும் ஒவ்வொரு நாளும் பயிரிட்ட நிலத்தைத் தாமே சென்று பார்க்க முடியாது. ஆதலால் நிலத்தை நேரடியாக உழுது பயிர் செய்கின்ற உழவனுக்குக் கூறிய குறள்தான் இது.
  • இந்நாளில் உழுபவர்க்கே நிலம் என்ற உரிமை முழங்கி வருகின்றது. வள்ளுவரும் அத்தகைய உரிமையையே விரும்பினார். உழுபவனுக்கே நில உரிமையும் இருந்தால்தான், உழவன் தன்னுரிமை பெற்று வாழமுடியும். பிறரைச் சாராது, தான் பிறருக்கு ஈந்து மகிழ முடியும். நிலவுரிமை இல்லையாயின் அவன் பிறரைத் தொழுது பின் செல்பவனாக இருப்பான். நிலத்தைப் பயிரிடாத நிலக்கிழாரை வள்ளுவர் வெறுத்தார்.
  • பண்டைத் தமிழ் நாட்டிலும் தம் நிலத்தில் பிறர் பிறர் வேலை செய்யத் தாம் பிற இடங்களில் உறைந்த நிலக்கிழார்கள் இருந்தனர் எனத் தெரிகிறது. இத்தகைய நிலக்கிழமை முறையை (absentee landlordism) விரும்பாததனால் தானோ என்னவோ வள்ளுவர் இக்குறள் யாத்தார்.
மாறாக, வேறு சிலர் 'உழுவித் துண்போர் குத்தகைக்கோ, வாரத்துக்கோ, கூலிக்கோ நிலத்தை விட்டுவிட்டு அடிக்கடி சென்று மேற்பார்வை இடாது போனால் நிலமானது விளைவு குன்றும் என்று கூறியிருப்பதும் உழுவித் துண்போரை மனத்தில் கொண்டுதான் குறளை இயற்றியுள்ளார் என்று தெரிகிறது என்றபடியும் உரை உள்ளது. மேற்கண்டவை உழுவார் சார்பாகக் கூறப்பட்டவை என்றால் இது உழுவித்துண்போர் சார்பாக எழுதப்பட்டது.

நிலமுடையாளர் அல்லாதார் என வேற்றுமைப்படுத்தற்காக வள்ளுவர் இக்குறள் படைத்தார் என எண்ணமுடியவில்லை. உழவுநடைமுறைகளைத் தவறாமல் முறையாகச் செய்யவேண்டும் என்பதே இதன் கருத்து.

எந்தத் தொழிலாக இருந்தாலும் அதன் உடைமையாளன் நேரில் சென்று கண்காணித்தால்தான் நல்ல பலன் கிடைக்கும். பின் ஏன் வள்ளுவர் உழவுத்தொழிலை விதந்து கூறுகிறார்? நிலத்துக்கும் உழுவானுக்கும் உள்ள உறவு கணவன் -மனைவி என்ற நெருக்கமான உறவு போன்றது எனக் கருதியவர் அவர். கிழவன் - இல்லாள் என்ற சொல்லாட்சிகள் பிறரை ஏவிவிடாது தானே சென்று வயலைப் பார்த்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் இது போகம் தரும் தொழில் என்பதற்காகவும் போலும்.

பிறரை ஏவியிராது நிலத்துக்குரியவன் தானே நிலத்துக்குச் சென்று செயல் மேற்கொள்ள வேண்டும் என்பது செய்தி.

நிலத்திற்குரியவன் உரிய காலங்களில் சென்று நிலத்தை பாராது இருப்பானானால் அது மனைவிபோலப் பிணங்கி வாடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வயல் சென்று உழவுப்பணிகளை மேற்கொள்ளாவிடின் நினைத்த பயன் கிடைக்காது.

பொழிப்பு

நிலத்துக்குரியவன் உரிய காலங்களில் நிலத்திற்குப் போய் பாராது இருப்பானானால், அது இல்லாள்போலப் பிணங்கி வாடும்.