இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1037



தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்

(அதிகாரம்:உழவு குறள் எண்:1037)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒருபிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும்.

மணக்குடவர் உரை: ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும்.
மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார்.

பரிமேலழகர் உரை: தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும்.
(பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்', 'சான்று' என்பன திரிந்து நின்றன.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: உழுத நிலத்திலுள்ள உடைப்பட்ட மண் ஒரு பங்கு காற்பங்காகச் சுண்டும்படி ஆறவிட்டு (விதைத்தால்) கைப்பிடி எருவும்கூட இல்லாமலும் மிகுந்த விளைச்சலுண்டாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.

பதவுரை: தொடி-ஒரு பலம் (ஓர் நிறுத்தல் அளவை)); புழுதி-மண், துகள்; கஃசா-1/4 பலம்; உணக்கின்-காயவிட்டால், உடைபடச்செய்தால், சிதறச்செய்தால்; பிடித்(த)து-ஒரு கைப்பிடியளவு, பிடியின்கண்ணது; எருவும்-உரமும்; வேண்டாது-வேண்டாமல்; சாலப்படும்-பணைத்து விளையும்.


தொடிப்புழுதி கஃசா உணக்கின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின்; [உணக்க- உலர்த்த]
பரிப்பெருமாள்: ஒரு பலப்புழுதியைக் கைசா உணக்குவனாயின்;
பரிதி: கையில் அரைக்கழஞ்சு பொடி உதிர உழுவானாகில்;
காலிங்கர்: முன்னம் தான் நீர் பதம் கொண்டு உழுத ஈரப்புழுதி எண் கழஞ்சும் இருகஞ்சாகக் கீழ்ப்புழுதி கிளர்ந்து மேற்பட்டு உணங்குமாறு பின்னும் பின்னும் பெயர்த்து இனிது உணக்கப்பெறின்; [கழஞ்சு- நிறுத்தலளவைப் பெயர்; கிளர்ந்து- கிளறிவிட்டு]
காலிங்கர் குறிப்புரை: தொடி என்றது ஒரு பலம் என்றது; கைசா என்றது கால் பலமாக என்றது.
பரிமேலழகர்: ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; [கஃசு - காற்பலம்; அதனை - புழுதியை].

'ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலப்புழுதியைக் காற்புழுதியாகக் காயவிடின்', 'உழவன் ஒருபலம் புழுதியைக் காற்பலமாகுமாறு நன்றாக நிலத்தை உழுது காயவிடுவானாயின்', 'ஒரு பலப் புழுதி காற்பல மாகும்வண்ணம் நிலத்தினை உழவன் காயவிடுவான் ஆயின்', 'பலப்புழுதி கஃசு ஆகும் வண்ணம் காயவிட்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒரு பங்குப் புழுதியைக் காற்பங்காகக் காயவிடின் என்பது இப்பகுதியின் பொருள்.

பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும்.
மணக்குடவர் குறிப்புரை: மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார்.
பரிப்பெருமாள்: ஒரு கையாற் பிடித்த எருவும் இடாமல் அமைவுபடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார்.
பரிதி: பிடி எருவும் வேண்டாம் தானே விளையும் என்றவாறு.
காலிங்கர்: பிடித்து ஒரு பிடி எருவும்கூட வேண்டாவாறு அங்ஙனம் உழுது காய்ந்த புழுதிச் சுவடுதானே தன் வேர் ஊறு சுவையாக மிகவும் விளையும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: சாலப்படும் என்றது மிகவும் விளையும் என்றது.
பரிமேலழகர்: அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும். [அதன்கண் - அந்நிலத்தில்; பணைத்து - செழித்து, பருத்து]
பரிமேலழகர் குறிப்புரை: பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்', 'சான்று' என்பன திரிந்து நின்றன.

'அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிடியளவு உரமின்றியும் நிலம் நன்கு விளையும்', 'ஒரு பிடியில் அடங்கும் எருவும் போடாமலே அந்நிலத்தில் பயிர் பணைத்து விளையும்', 'ஒரு பிடி எருவும்கூட இல்லாது நிலம் நன்றாக விளையும்', 'பிடியளவு எருவும் வேண்டாமல் மிகுதியாக விளையும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிடியளவு எரு இல்லாமலும் மிகுதியாக விளையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு பங்குப் புழுதியைக் காற்பங்காகக் காயவிடின் பிடித்தெருவும் வேண்டாது மிகுதியாக விளையும் என்பது பாடலின் பொருள்.
'பிடித்தெருவும் வேண்டாது' குறிப்பது என்ன?

விளைமண்ணை நன்கு உடைபடச் செய்யவேண்டும்.

ஒரு பங்கு புழுதியைக் கால்பங்காக ஆகும்படி உழுத மண்ணை உலர விட்டால், பின் அந்த நிலத்திற்கு ஒருபிடி எருகூட போடவேண்டாமல் மிகுந்த விளைச்சல் தரும்.
தொடி என்பதற்கு ஒரு பலம், அரைக்கழஞ்சு, எண்கழஞ்சு, மூன்றுபலம் எனப் பலவாறாக உரையாளர்கள் பொருள் கூறினர். அதுபோல் கஃசு என்ற சொல்லுக்கு ஒரு கழஞ்சு, காற்பலம், ஒருபலம் என வேறுவேறாக உரைத்தனர். 'இதனால் தொடி, கஃசு என்பன காலந்தோறும் பல்வேறு நிறையளவைக் காட்டினவாகும். வள்ளுவர் காலத்தது எது என்பது உணருமாறு இல்லை' என்பார் தண்டபாணி தேசிகர். தொடி என்பது ஒரு பலம் கொண்ட நிறுத்தல் அளவு ஆகும். கஃசு என்ற சொல் கால்பல அளவைக் குறிக்கும். பலம் என்ற நிறுத்தலளவை இப்பொழுது இல்லை; இன்று நிறுத்தல் அளவு கிராம் எனப்படுகிறது. காலிங்கரும் பரிப்பெருமாளும் கஃசு என்பதை கைசா எனக் குறிப்பிடுகின்றனர். கஃசு என்ற சொல் கைசு (கய்சு) என்ற உருவத்தில் 11 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்தது என்பர் ஆய்வாளர். உணக்குதல் என்பதற்கு உரைகாரர்கள் உலர்த்துதல் அல்லது காயவிடுதல் எனப் பொருள் கூறினர். வழக்கில் இது உடைபடுதல் அல்லது சிதறச்செய்தலைக் குறிக்கும். காயவைத்துச் சுருக்குதல் தவிர்த்து உணக்குதல் என்ற சொல்லுக்கு உழக்குதல் அதாவது கலக்குதல், சிதிலமாக்கல், மிதித்து நசுக்குதல் எனவும் பொருள் கூறுவர்.
ஒரு பங்கு நிறையுள்ள மண் காய்ந்து புழுதியாய்க் காற்பங்கு நிறையளவினதாக வேண்டுமானால் அதை மிக நொய்மையாக ஆக்க வேண்டும். அந்த அளவுக்கு நிலத்தை நன்கு உழவேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

இக்குறள் உழவுத்தொழில் நடைமுறை ஒன்று குறித்துப் பேசுகிறது; நிலத்தை வளப்படுத்தும்வழி பற்றியது இது. மிகையான விளைச்சல்தரும் நிலத்தை உருவாக்குவது எப்படி என்ற அக்கால உழவுக் குறிப்பாக உள்ளது. நல்ல இளகிய ஈரப் பதத்தில் நிலத்தை ஆழமாகக் (அகல உழுவதைவிட ஆழ உழு! என்பது பழமொழி) குறைந்தது நான்கு தடவையாவது உழவேண்டும். ஆழமாக ஏரின் கொழு இறங்கும்போது, வயலில் பாய்ச்சும் நீர் நன்கு இறங்கி ஈரப்பதம் காக்கப்படும். இறுதியாகச் சால் உழவு எனும் முறையில் உழுவர். இந்தச் சால், உழவு நிலத்தின் மண்ணை வரிவரியாகப் பிரித்துக் கொடுக்கும். இவ்வாறு பிரித்து வைப்பதன் மூலம் நீர், நிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாகப் பாயும். ஓர் உழவுக்கும் அடுத்த உழவுக்குமிடையில் நனைதலும், உழுதலும், காய்தலும் நிலத்திற்கு நல்லது. உழுத புழுதி காயவேண்டும். உழுதல் காய விடுதல் மீண்டும் உழுதல் எனப் பலமுறை உழுது காயவிட்டால் மண் நன்றாக புழுதியாகிவிடும். ஞாயிற்றின் வெப்பத்தில் காய்தலின் மூலம் எடை குறையும். அவ்வாறு ஒரு பலம் புழுதி, கால்பலம் புழுதியாகக் குறைகிற அளவு காய வேண்டும் என்று கூறுகிறது பாடல்.
சித்திரை மாதப்புழுதி பத்தரை மாற்றுத் தங்கம் என்பது பழமொழி. அம்மாதத்தின் முதல் நாளன்று உழவர் தங்கள் நிலத்தில் உழவுப் பணியை ஒரு மரபாகத் தொடங்கி வைப்பர். சித்திரை, வைகாசி, ஆனி முத்திங்களும் நன்கு உழுவர். இதன் பயனாக நீர்ப்பதம் அற்று கட்டி முட்டி அகன்று புழுதியாகும்; களையும் அறவே நீங்கிவிடும். 'எள்ளுக்கு ஏழுழவு' என்பது மற்றொரு பழமொழி (எள் மழையை மட்டுமே நம்பி இருக்கும் பயிர். இத்தகைய பயிர்களுக்கு கூடுதல் அளவு உழவு தேவை). அவ்விதம் உழும்போது புழுதியாகி மேலும் காயக்காய ஈரப்பதம் அறவே இல்லையாய் நொய்ப்புழுதி ஆகிவிடும். உழுகின்றபோது மண்ணின் அடர்த்தி கூடி நிலத்தின் சத்துக்கள் பரவலாக்கப்படுகின்றன. சுண்டக் காய்ச்சிய பால்போலச் சுண்ட உழுத உழவுப் புழுதி, பயிருக்கு நல்ல ஊட்டமும் உரமும் ஆகும். ஏருழுதல் நிலத்தின் மண் பயிர் வளர்வதற்கு ஏற்றவண்ணம் நன்கு பக்குவப்படுத்துவதற்கேயாகும். உழும்பொழுது கீழ்மண் மேலே மறிந்து வந்து, வெயிலும் காற்றும்பட்டு, வளப்பம் பெறுகிறது. நிலத்தை உழுதபின் உலரவிடுதல் அக்கால வழக்கமெனவும் அவ்வாறு நன்றாக காயவிடப்பட்ட நிலம் எருவிடாவிடினும் பயன் கொடுக்குமெனக் கருதினர் எனவும் தெரிகிறது. எரு இடாமலும் இருக்கவில்லை, எருவிடுதலின் தேவை பற்றி அடுத்த குறள் சொல்கிறது.
இங்ஙனம் உழுது புழுதியெடுத்து அந்தப் புழுதியைக் காயப்போட்டு வேளாண்மை செய்தால், பிடி எருவும் போடாமல் நன்றாக விளைவிக்கலாம். பயிர் பணைத்து வளர்ந்து நிறையப் பயன் தரும்.

'பிடித்தெருவும் வேண்டாது' குறிப்பது என்ன?

'பிடித்தெருவும் வேண்டாது' என்ற தொடர்க்கு ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல், ஒரு கையாற் பிடித்த எருவும் இடாமல், பிடி எருவும் வேண்டாம், பிடித்து ஒரு பிடி எருவும்கூட வேண்டாவாறு, ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல், ஒரு பிடி எருவும் போடாமல், ஒருபிடி எருவும் இட வேண்டாமல், கைப்பிடியளவு உரமும் இடவேண்டாமல், ஒரு கைப்பிடி எருப்போட வேண்டிய அவசியமல்லாமல், பிடியளவு உரமின்றியும், ஒரு பிடியில் அடங்கும் எருவும் போடாமலே, கைப்பிடி எருவும்கூட இல்லாமலும், கைப்பிடியளவாம் எருவும் வேண்டாமல், ஒரு பிடி எருவும்கூட இல்லாது, பிடியளவு எருவும் வேண்டாமல், ஒரு பிடி எருவும் இல்லாமல், கைப்பிடி எருவும் உரமிடாது, ஒருபிடிக்குள் அடங்கிய எருவும் வேண்டாது, ஒரு பிடி எருவும் நிலத்தில் போடாமல் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பிடித்தெருவும் என்பதை பிடித்த எருவும் என்றும் பிடித்து எரு என்றும் கொள்வர். வேண்டாது என்ற சொல் வேண்டாமல் எனப்பொருள்படும். பிடித்தெருவும் வேண்டாது என்ற தொடர் ஒரு கைப்பிடி அளவுள்ளதாகிய எரு கூட இட வேண்டாமல் என்ற பொருள் தரும். உழுது மண்ணைக்கிளறி, ஒருபங்கு எடையுள்ள புழுதியைக் காற்பங்கு எடையினதாக உணக்கினால் புழுதியே எருவாகும். ஆதலால், வேறு எருவிட வேண்டாம் என்று சொல்லப்பட்டது.

இக்குறள் நிலம் பண்படுத்துதல் என்னும் உழவியல் நடைமுறை ஒன்றான உழுதலையும் அதனால் உண்டாகும் பயன்களையும் சொல்கிறது.
நிலம் ஆழ உழப்படவேண்டும்; உழும்பொழுது மேல் மண் கீழாகவும் கீழ்மண் மேலாகவும் இருக்கும் வகையில் புழுதிபடச் செய்யவேண்டும். உழுத மண் வெயிலில் உலரவைக்கப்படவேண்டும்; மண்ணினூடே காற்றுப் புகுமாறு செய்யவேண்டும்; மண் மீது ஞாயிற்றின் ஒளியும் வெப்பமும் படரப்படர, அவை விண்ணிலுள்ள நைட்ரஜனையும், பிற சத்துப்பொருள்களையும் தன்பால் காத்துச் சேமித்து வைத்துக்கொள்ளும்; நிலத்திலுள்ள களைகளும் வேரற ஒழியும். ஒருமுறைக்கு மேல் பலமுறை உழுவதனாலும், ஆழ உழுவதனாலுமே இதனைச் செய்ய இயலும். இத்தகைய மண்ணில் விதைத்துப் பயிரிடும்போது இயற்கையாக உருவாக்கப்பட்டு, மண்ணில் சேமிக்கப்பட்டுள்ள சத்துப்பொருளால் பயிர் செழித்து வளர்ந்து மிகுந்த விளைபயன் அளிக்கிறது. அதனால் அம்மண்ணுக்குப் பிடி எருவும் போடவேண்டிய தேவையில்லாமற் போகிறது. கதிரவனின் ஒளியாலும் வெப்பத்தாலும், காற்றாலும் மண்ணில் இயல்பாக உருவாகும் இயற்கைச் சத்தே போதுமானதாக இருக்கும்.

'பிடித்தெருவும் வேண்டாது' என்ற தொடர் பிடியளவுஉரம் இன்றியும் எனப்பொருள்படும்.

ஒரு பங்குப் புழுதியைக் காற்பங்காகக் காயவிடின் பிடியளவு எரு இல்லாமலும் மிகுதியாக விளையும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உழவுத்தொழில் நுட்பமாக நிலத்தைப் பண்படுத்தும் முறை.

பொழிப்பு

ஒரு பங்குப் புழுதியைக் காற்பங்காகுமாறு காயவிட்டால், அம்மண்ணில் பிடியளவு உரமின்றியும் நன்கு விளைச்சல் உண்டாகும்.