இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1031



சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை

(அதிகாரம்:உழவு குறள் எண்:1031)

பொழிப்பு: (மு வரதராசன்) உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.



மணக்குடவர் உரை: உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது.
இஃது உழவு வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.
(ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: உலகில் வெவ்வேறு தொழில்களில் மாறி மாறி ஈடுபட்டு முயன்றாலும் இறுதியில் ஏரால் உழுது பயன் விளைவிக்கும் உழவின் வழிப்பட்டே வாழ்கிறது உலகம். அதனால் உழவில் மெய்வருத்தம் முதலாய பலவகைத் துன்பங்களும் உளவாயினும் உழவே தலையாயதாகும். உலகம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதரத்தையே பின்பற்றுவதால், இன்றும் உழவின் தலைமை உணரப்படுகிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை.

பதவுரை: சுழன்றும்-செய்து திரிந்தும்; ஏர்-ஏருடையார், ஏரை உடைய உழவர்; பின்னது-வழியது, வழிப்பட்டே உள்ளது; உலகம்-உலகமக்கள்; அதனால்-அதன் காரணமாக; உழன்றும்-துன்பம் துய்த்தும்; உழவே-பயிர்த்தொழிலே; தலை-முதன்மை.


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்;
பரிப்பெருமாள்: உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏரின் வழியே வருவர் உலகத்தார்;
பரிதி: பூமியைப் பிரதட்சணம் பண்ணின தர்மமும்; [பிரதட்சணம் - வலம் வருதல்]
காலிங்கர்: கடலோடியும் மலை ஏறியும் காடு மண்டியும் நாடு பரந்தும் ஓடித்திரிதலே அன்றியும் உண்பான் பொருட்டு இதனைப் பிற பிற முயன்று அலம்வந்தும் அதனால் ஒரு பயனும் இல்லை; ஆதலால் ஏர் கொண்டு வாழ்வார் தமது வழிச்சேறலே பயனுள்ள வாழ்வாம்; [காடு மண்டியும்- காட்டில் நெருங்கிச் சென்றும்; அலம்வந்தும் - வருந்தியும்; அலம்-துன்பம்]
பரிமேலழகர்: உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்;
பரிமேலழகர் குறிப்புரை: ஏர் - ஆகுபெயர்.

'உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகம் முன்னேறினாலும் உழவுக்குப் பின்னே', 'உழவால்வரும் மெய்வருத்தம் நோக்கிப் பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏர்த்தொழில் புரியும் உழவருக்குப் பின்னதே உலகம் நிற்க வேண்டியதாயிற்று', 'எப்படியெல்லாம் சுற்றிச் சுற்றி எண்ணிப் பார்த்தாலும் உலகத்திலுள்ளவர்கள் உழவுத் தொழிலைப் பின்பற்றித் தான் உயிர் வாழ முடியுமே', 'பிற முயற்சிகளைச் செய்து திரிந்தாலும் ஏருடையார் பின்னே உலகம் நின்று பிழைக்க வேண்டியது இருப்பதால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எத்தொழிலைச் செய்து சுழன்றுவந்தாலும் உலகோர் உழவுத்தொழிலின் பின்னேதான் என்பது இப்பகுதியின் பொருள்.

அதனால் உழன்றும் உழவே தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உழவு வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உழவு வேண்டுமென்றது.
பரிதி: பூமியைப் பிரதட்சணம்1 பண்ணின தர்மமும், உழவு செய்து கொடுத்த தர்மத்திற்கு நிகரில்லை என்றவாறு. [பிரதட்சணம் - வலம் வருதல்]
காலிங்கர்: ஆதலால் ஏர் கொண்டு வாழ்வார் தமது வழிச்சேறலே பயனுள்ள வாழ்வாம்; மற்று அது எங்ஙனம் எனில், உழுகைப் பொருட்டாக உழுகருவிக்குக் காடுபுக்கு மரம் தடிதலும், கனவிய கொழுவும் அதற்கேற்ற பல கருவியும், வன்புலம் மென்புல வடிவத்தியற்றலும், படைக்கால் அமைத்தலும் முதலிய பலவகைப் பயிர்வளம் முற்றியவை, அவை அனைத்தும் உழந்தும் உழவு இயற்றலே தலைமைப்பாடு ஆவது என்றவாறு. [மரம் தடிதல் - மரம் வெட்டுதல்; களவியகொழு-கனத்த கருவியும்; வன்புலம் மென்புல வடிவத்தியற்றலும்- புஞ்சை நஞ்சை நிலத்திற்கேற்றவாறு வடிவமைத்தல்; படைக்கால் - கொழுவைப் பொறுத்தும் ஏர் நுனி]
பரிமேலழகர்: ஆதலான் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.
பரிமேலழகர் குறிப்புரை: பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது. [கடை என்பது போதர - இழிவு என்பது தோன்ற]

'ஆதலான் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துயரப் பட்டாலும் உழவே தலைத்தொழில்', 'அதனால் மிகுந்த வருத்தமெய்தினாலும் உழவே சிறந்த தொழிலாகும்', 'அதனால் உழைப்பு மிகுந்ததானாலும் உழவுத் தொழிலே (எல்லாத் தொழில்களிலும்) மேலானது', 'வருந்தி முயலக்கூடியதாய் இருந்தாலும் உழவுத் தொழிலே எவற்றினும் தலை சிறந்தது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆதலால் துயறுற்றாலும் உழவே தலைசிறந்ததாம் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
எத்தொழிலைச் செய்து சுழன்றுவந்தாலும் உலகோர் உழவுத்தொழிலின் பின்னேதான் ஆதலால் உழன்றும் உழவே தலைசிறந்ததாம் என்பது பாடலின் பொருள்.
'உழன்றும்' குறிப்பது என்ன?

எங்கே சுற்றி என்ன செய்தாலும் சோற்றுக்காக உழவிடம்தானே வரவேண்டும்!

சுழன்றுசுழன்று எத்தொழிலைச் செய்துவருபவராக இருந்தாலும், உலகத்தார் உணவுக்கு உழவரின் பின்னால்தான் செல்லவேண்டும் என்பதால் அதுவே சிறந்த தொழில்.
மாந்தர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அலைந்து திரிந்து பொருள் தேடுகின்றனர். இதை இக்குறள் சுழன்றும் (அதாவது சுற்றிச் சுற்றி வந்தும்) என்ற சொல்லால் குறிக்கின்றது.
'உழன்றும்' என்ற சொல், உழவுத்தொழில் மிகுந்த துயர் தரும் என்பதைச் சொல்ல ஆளப்பட்டது. துயர் என்பது கடுமையான உடலுழைப்பு வேண்டி நிற்பதால் உண்டாவது என உரையாளர்கள் விளக்குவர்.
ஏர் என்ற சொல் உழுவதற்குப் பயன்படும் கலப்பையைக் குறித்து ஏருழவரைச் சொல்வது. ஏர்ப்பின்னது என்ற தொடர் உழவர் பின்னால் எனப்பொருள்படும்.
என்ன தொழில் செய்து எத்துணைப் பொருளீட்டினாலும் உணவின்பொருட்டு உழவர் மாட்டே செல்ல வேண்டும் ஆதலால் அதுவே முதன்மையான தொழில் என்கிறது பாடல்.

சுழன்றும் என்ற சொல்லுக்குக் 'கடலோடியும் மலை ஏறியும் காடு மண்டியும் நாடு பரந்தும் ஓடித்திரிதலே அன்றியும் உண்பான் பொருட்டு இதனைப் பிற பிற முயன்று அலம்வந்தும் (அதனால் ஒரு பயனும் இல்லை)' என விளக்கம் தந்தார் காலிங்கர். பரிமேலழகர் ஈற்றடியில் வரும் உழன்றும் என்ற சொல்லை நினைந்து 'உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும்' எனச் சுழன்றும் என்பதற்குப் பொருள் கூறினார். நாமக்கல் இராமலிங்கம் சுழன்றும் என்ற சொல்லுக்குச் 'சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும்; அதாவது திருப்பித் திருப்பி ஆலோசித்தாலும்' எனவும் ஜி வரதராஜன் 'உலகத்திலே பல தொழில்கள் சுழன்றுகொண்டிருந்தபோதிலும்' எனவும் பொருள் கூறினார். இங்கு இச்சொல் அலைந்து திரிந்து எத்தொழில் செய்து பொருள் தேடினாலும் என்ற பொருள் தருவது.

உலகில் பல்வேறு தொழில்கள் உண்டு. இன்றும் ஏனைய தொழில்களைவிட உழவுத் தொழில் தனிச் சிறப்புக் கொண்டதாக உள்ளது. வேளாண் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது அது. உலகம் நிலத்தையும் நிலம் சார்ந்த உழவுத் தொழிலாலும் முன்னேற்றம் கண்டதைத் தாண்டி விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது. வேளாண் பொருளாதாரத்தைத் தொடர்ந்து சில நாடுகள் பெரும் கனிமத் தொழில்களால் பொருள் மேம்பாடு அடைந்தன. அதன்பின் மின்னணு சார்ந்த தொழில்களால் சில நாடுகள் சிறப்படைந்தன. இப்பொழுது தகவல் தொடர்பு சார்ந்த தொழில்களால் வளரும் நாடுகள் சிலவும் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டு வருகின்றன. ஆனாலும் எந்தவகையான பொருளாதாரத்தைத் தழுவியிருந்தாலும் ஒரு நாடு தனது உணவுத் தேவைக்குத் தானே விளைக்க வேண்டும் அல்லது விளைபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளை நம்பியே இருக்கும் என்பதை யார் மறுக்க இயலும்? வணிகத்தையும், வேறு பிற தொழில்கள் சார்ந்த பொருளாதாரத்தையும் நம்பிய நாடுகள் உணவு விளைவிக்கும் நாடுகளிடமிருந்து விளை பொருட்கள் பெற முடியா நிலை ஏற்பட்டால் என்னவாகும்? அவை விரைவில் அழிந்துபடும்நிலை உண்டாகும்.

மற்றைய தொழில்களைவிட உழவுத்தொழில் முதன்மையானது என்பதைச் சொல்வது இக்குறள். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு. 'உண்டி முதற்றே உலகு' என்பது முதுமொழி. அந்த உண்டியை அதாவது உணவைப் பெற உழவுத் தொழில் நடைபெறவேண்டும். உழவுத் தொழில் இயங்காவிடின், விளை பொருள்கள் கிடைக்கா. அதன்விளைவாக வேறு எந்தத் தொழில்களும் நடைபெறமாட்டா. எவ்வகைத் தொழில்களைச் செய்வோராயினும் அவர்கள் அனைவரும் உணவிற்காக உழவரின் பின்னால் செல்ல வேண்டிய நிலையில்தான் இருப்பர். அதாவது உலகோர் ஏரினால் விளையும் பொருளையே எதிர்பார்த்து நிற்கின்றனர்; உலக மக்களை ஊட்டுவிப்பது உழவுதான்; உலகத்தாரை நிலைநிறுத்தும் உழவுத் தொழிலின் இன்றியமையாமையைக் கருதியே வள்ளுவர் அதை முதன்மைத் தொழிலாக உயர்ந்தேத்திப் பேசுகிறார்.
'பயிர்த் தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்ட கடைத்தொழிலாகும்’ என்று சமயநூல்கள் கூறிய நேரத்தில் உழவே தலையான தொழில் என்று தெள்ளிதின் கூறினார் அவர். 'வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்று கூறினார்' என்பது பரிமேலழகரது விளக்கவுரை.

மக்கள் எந்தத் தொழிலையும் மேற்கொள்ளலாம். ஆனால் அவர்கள் உழவுத்தொழிலைச் செய்வாரைச் சார்ந்தே நிற்பர் என அதன் சிறப்பு கூறப்படுகிறது. உலகத்தவர் பிற எந்தத்தொழிலைச் செய்து திரிந்தாலும் முடிவில் உணவின் பொருட்டு உழவரையே எதிர்பார்ப்பர். ஆகையால் மெய்வருத்தம் ஏற்பட்டாலும் உழவே தலையாய தொழில் என உறுதிபடச் சொல்லப்பட்டுள்ளது.

'உழன்றும்' குறிப்பது என்ன?

'உழன்றும்' என்ற சொல்லுக்கு வருந்தியும், உழுகைப் பொருட்டாக உழுகருவிக்குக் காடுபுக்கு மரம் தடிதலும் கனவிய கொழுவும் அதற்கேற்ற பல கருவியும் வன்புலம் மென்புல வடிவத்தியற்றலும் படைக்கால் அமைத்தலும் முதலிய பலவகைப் பயிர்வளம் முற்றியவை அவை அனைத்தும் உழந்தும், எல்லா வருத்தம் உற்றும், எவ்வளவு துன்புற்றாலும், மெய்வருத்தம் முதலாய பலவகைத் துன்பங்களும் உளவாயினும், துயரப் பட்டாலும், மிகுந்த வருத்தமெய்தினாலும், உழைப்பு மிகுந்ததானாலும், எவ்வளவு துன்பப் பட்டாலும், வருந்தி முயலக்கூடியதாய் இருந்தாலும், எல்லா வருத்தம் அடைந்தும், மிக உழைத்து வருந்த நேர்ந்தாலும், துயரம் தந்தாலும், எல்லா வருத்தமுமுற்றும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உழவுத் தொழிலில் துன்பம் மிகுதி. மிகுந்த மெய்வருத்தம் வேண்டும் தொழில் இது. உழவர்கள் உடல் உழைப்பைத் தருபவர்கள்; வெயில், மழை, பனி ஆகியவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுத்து உணவை விளைவித்துத் தருகிறார்கள். ஆனாலும் புதுப்புது வேளாண்மைக் கருவிகள் பயன்படுத்தப்படும் இன்றைய நாளிலும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கப் பெறாதவர்களாகவே உள்ளனர். இது காலம் காலமாய் உழவர்கள் அனுபவித்துவரும் துன்ப நிலையாகும். ஆயினும் எத்துணை வருத்தங்கள் நேர்ந்தாலும் உழவே தலையான தொழில் என்று செவ்விதாய்ச் சொல்கிறார் வள்ளுவர்.
இதைக் காலிங்கர் 'ஏர் கொண்டு வாழ்வார் தமது வழிச்சேறலே பயனுள்ள வாழ்வாம்; மற்று அது எங்ஙனம் எனில், உழுகைப் பொருட்டாக உழுகருவிக்குக் காடுபுக்கு மரம் தடிதலும், கனவிய கொழுவும் அதற்கேற்ற பல கருவியும், வன்புலம் மென்புல வடிவத்தியற்றலும், படைக்கால் அமைத்தலும் முதலிய பலவகைப் பயிர்வளம் முற்றியவை, அவை அனைத்தும் உழந்தும் உழவு இயற்றலே தலைமைப்பாடு ஆவது' என விளக்கம் செய்வார்.
உடல் உழைப்பு குறைவான தொழில்களில் ஊதியம் மிகுதி என்பது உண்மைதான். இருப்பினும் அவற்றிற்குச் சிறப்புத் தர வள்ளுவர் மனம் ஒப்பவில்லை.
உழன்றும் அதாவது உடல் உழைப்பால் துயர்மிகுதி என்றாலும் அது உலகோர்க்கு உணவு வழங்க உதவுவதால் அதைத் தலையாய தொழில் என்கிறார் வள்ளுவர்.

'உழன்றும்' என்ற சொல் மெய்வருத்தம் முதலாய பலவகை இன்னல்களை அடைதலைக் குறிக்கும்.

எத்தொழிலைச் செய்து சுழன்றுவந்தாலும் உலகோர் உழவுத்தொழிலின் பின்னேதான் ஆதலால் துயறுற்றாலும் உழவே தலைசிறந்ததாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உலகத்தார் அனைவரும் ஏருடையவர் வழியே வருவதால் உழவு தலையாயது.

பொழிப்பு

உலகம் மற்று எவ்வழிகளில் முயன்றாலும் உழவுக்குப் பின்னேதான்; கடின உழைப்பைக் கொண்டாலும் உழவுத் தொழிலே தலையானது.