இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1030



இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி

(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1030)

பொழிப்பு (மு வரதராசன்): துன்பம் வந்தபோது உடனிருந்து தாங்கவல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

மணக்குடவர் உரை: இடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுதலானே வீழும்: பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம்.
இது குடியோம்புவாரில்லாமல் அக்குடி கெடும் என்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: இடுக்கண்கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம்.
(முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார், 'தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன ஓங்குகுலம் நைய அதனுட் பிறந்த வீரர் தாங்கல் கடன்' (சீவக.காந்தருவ-6) என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: முட்டுக் கொடுக்கும் ஆளில்லாத குடும்பம் துன்பம் தாக்கினால் அடியோடு விழும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இடுக்கண்கால் கொன்றிட வீழும், அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி.

பதவுரை: இடுக்கண்-துன்பம்; கால்கொன்றிட-அடியோடு தாக்க, அடிமரத்தை வெட்டிச் சாய்க்க; வீழும்-விழும்; அடுத்து-அருகே இருந்து, பற்றாகக் கொடுத்து; ஊன்றும்-தாங்கும், நிலைநிறுத்தும்; நல்லாள்-நல்ல ஆள், நல்ல ஆண்மை (செயல் வண்மை) யுடையவர்; இலாத-இல்லாத; குடி-குடும்பம்.


இடுக்கண்கால் கொன்றிட வீழும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுதலானே வீழும்: [நவியம்-கோடாலி]
பரிப்பெருமாள்: இடும்பையாகிய நவியம் அடித்தூரை வெட்டுதலானே விழும்:
பரிதி: துன்பம் சற்றே தோன்றின மாத்திரத்திலே கெடும்;
காலிங்கர்: வந்து உற்ற இடுக்கணானது முன் நின்ற நிலையை அழித்திட வீழ்ந்து அறும் யாது எனின்;
பரிமேலழகர்: துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; [பற்றின்றி- ஆதாரமின்றி]

'இடும்பையாகிய நவியம் அடித்தூரை வெட்டுதலானே விழும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பமாகிய கோடரி அடியிலே வெட்ட விழுந்து விடும்', 'துன்பத்தினால் காலொடிந்ததாகி விழுந்துவிடும்', 'துன்பமாகிய கோடரியால் வெட்டுண்டு அடியற்று வீழ்ந்து அழியும்', 'துன்பம் அதனைப்பற்றி அழிக்க, முழுதும் கெடும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பம் அடியோடு தாக்க வீழ்ந்துவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம்.
மணக்குடவர் குறிப்புரை: இது குடியோம்புவாரில்லாமல் அக்குடி கெடும் என்று கூறிற்று.
பரிப்பெருமாள்: பக்கத்திலே மடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குடியோம்புவார் இல்லாக்கால் அக்குடி கெடும் என்றது.
பரிதி: குடியைத் தாங்குகின்ற பலவான் பிறவாத குடி என்றவாறு.
காலிங்கர்: அவ்விடுக்கண் வந்த இடத்துத் தளராமல் முகம் வைத்து உறுதி செய்யும் நல் ஆண்மகன் இல்லாத குடியானது.
பரிமேலழகர்: அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம். [அக்காலத்து- தான் விழும் பொழுது; பற்றாவன - விழாது தாங்கவல்ல முட்டுக்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார், 'தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன ஓங்குகுலம் நைய அதனுட் பிறந்த வீரர் தாங்கல் கடன்' (சீவக.காந்தருவ-6) என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது. [அதன் வழிக்குரியார் - அக்குடியில் தோன்றியவர்; அல்லாவழி- வளர்ப்பாரைப் பெறாத இடத்து; அவர்- தாங்குவார்]

'பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'குடியைத் தாங்குகின்ற பலவான் பிறவாத குடி' என்றும் காலிங்கர் 'அவ்விடுக்கண் வந்த இடத்துத் தளராமல் முகம் வைத்து உறுதி செய்யும் நல் ஆண்மகன் இல்லாத குடியானது' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் வந்தபோது உடனிருந்து தாங்கி உதவும் நல்ல ஆள் இல்லாத குடி', '(துன்பம்) நேர்ந்துவிட்டால் உடனே அத்துன்பத்தைத் தாங்கிச் சமாளிக்கவல்ல திறமைசாலி இல்லாத ஒரு குடும்பம்', 'நெருங்கித் தாங்கும் நல்ல வீரரில்லாத குடி', 'துன்பம் வருங்கால் முன்னின்று காப்பாற்றும் நல்ல ஆண்மகன் பிறவாத குடி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முட்டுக்கொடுக்க நல்ல ஆளில்லாத குடும்பம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முட்டுக்கொடுக்க நல்ல ஆளில்லாத குடும்பம், துன்பம் தாக்க அடியோடு வீழ்ந்துவிடும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

குடிசெய்வான் இல்லாத குடும்பம் நிலைகுலையும்.

துன்பம் வந்து அடியோடு தாக்கும்போது குடும்பத்தை முட்டுக்கொடுத்துத் தாங்கிகொள்ள நல்ல ஆள் இல்லாதபோது அது வீழ்ந்துவிடும்.
'இடுக்கண்' என்ற சொல் துன்பம் அல்லது இடையூறு என்ற பொருள் தருவது.
'கால் கொன்றிட' என்ற தொடர்க்கு நேர்பொருள் அடியை அழிக்க என்பது. கால் என்ற சொல் அடி என்ற பொருளில் பயிலப்பட்ட சங்கப்பாடல்கள் உள. கருங்கால் வேங்கை..... (குறுந்தொகை 47 பொருள்: கரிய அடியையுடைய வேங்கை மரம்...) என்ற வரியைக் கொண்ட பாடல் ஒரு சான்று. மரம் என்ற சொல் குறளில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் உரையாசிரியர்கள் பலரும் மரத்தின் அடி வெட்டப்படுவது குறிப்பு உருவகமாகச் சொல்லப்படுவதாகக் கொண்டு மரத்தின் வேரை அழித்திட என்ற பொருளில் உரை வரைந்தனர்.
'கால் கொன்றிட' என்ற தொடர்க்கு துன்பமாகிய நவியம் (கோடரி) புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க, துன்பம் என்ற பூச்சியானது ஆலமரத்தின் வேரைக் கொன்று விட, துன்பமாகிய பொறை (பொற்றை, பொந்து) அடிமரத்தில் மிகுந்து தோன்றிச் சாய்க்க, துன்பம் என்னும் காற்று அசைத்து அழித்திட, துன்பமாகிய சிதல் (கறையான்) தன் அடியை அரித்துத் தின்றுவிட எனப் பலவாறாக பொருள் கூறினர்.
'அடுத்தூன்றும் நல்லாள்' என்பது பக்கத்தில் தாங்கும் நல்லவர் எனப் பொருள்படும்.
பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்லவர் இல்லாத குடி, துன்பம் வந்து அடியே தகர்ந்துபோகுமளவு கடுமையாகத் தாக்கும்போது ஒரு தாங்கலுமின்றி கெடும் என்கிறது பாடல்.

இக்குறளுக்கான தனது விரிவுரையில் தேவநேயப் பாவாணர் கூறுவதாவது: 'பரிமேலழகர் குடியைப் பொதுமரம் போன்றதாகக் கொண்டு ’துன்பமாகிய நவியம் தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழாநிற்கும்; அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்கவல்ல நல்ல வாண்மகன் பிறவாத குடியாகிற மரம்." என்று உரைத்தார். நவியம் முதலை வெட்டிச் சாய்க்கும்போது மரத்தைப் பற்றுக்கொடுத்துத் தாங்கினும் பயனின்மையின், அது உரையன்மை அறிக மேலும், 'இடுக்கண் கால் கொன்றிட' என்னுந் தொடருக்குக் கோடரி வெட்டிச் சாய்க்க என்னும் பொருளினும் கறையான் அரிக்க என்னும் பொருளும் ; 'அடுத்துன்றும்'என்னும் தொடருக்குப் பற்றுக்கொடுத்துத் தாங்கும் என்னும் பொருளினும் பக்கத்தில் ஊன்றும் விழுதுபோல் தாங்கும் என்னும் பொருளும்; சிறப்பாகப் பொருந்துதலையும் நோக்குக. "தூங்குசிறை வாவலுறை தொன்மரங்களன்ன" என்னும் மேற்கோளைப் பரிமேலழகரும் எடுத்துக்காட்டியும்,அதை ஆலமரமென்று அவர் அறியாமற்போனது சற்று மருளற் குரியதே.வீழும் அடுத்தூன்றும் 'நல்லா ளிலாத குடி' எனவே,வீழாது அடுத்துன்றும் நல்லாள் உள்ள குடி என்பது பெறப்படும் இதற்குக் கோடரி வெட்டும் மரத்தை முட்டுக் கொடுத்துத் தாங்குதல் என்பது உவமமாகாமை அறிக. மரத்தை வீழ்தாங்குவதிலும் குடியை ஆள் தாங்குவதிலும் தாங்குதல் தன் வினையென்பதையும், மரத்தை ஒருவன் முட்டுக்கொடுத்துத் தாங்குவதில் தாங்குதல் பிறிதின்வினை யென்பதையும் அறிதல் வேண்டும். முட்டுக் கொடுப்பினுங் கொடாவிடினும், கோடரி வெட்டும் மரம் விழுந்தே தீரும். முட்டுச் செய்யக் கூடியதெல்லாம் திடுமென விழுவதை மெள்ள விழச்செய்வதே. இதனால், வெட்டுண்டு விழுந்த மரம் மீள அடியொடு பொருந்தித் தளிர்க்காது. நல்லாள் அடுத்தூன்றிய குடியோ இடுக்கண் நீங்கி மீளத் தழைத்தோங்கும். தொன்மரம் என்பது ஆலமரத்திற்கொரு பெயர். ஆலமரம் பழுத்தால் வாவல்கள் வந்து தங்கும். இக்குறள் குறிப்புருவகம். இதனால் குடிசெய்வார் இல்லாத குடியின் கேடு கூறப்பட்டது'. இவர் முட்டுக் கொடுப்பினுங் கொடாவிடினும், கோடரி வெட்டும் மரம் விழுந்தே தீரும் எனக்கூறி 'கால் கொன்றிட' என்றதற்குத் துன்பமாகிய கறையான் ஆலமரத்தின் அடியை அரித்துத் தின்றுவிட என உரைப்பொருள் தருகிறார். இவ்வுரை ஏற்புடையதாக உள்ளது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

தன்குடியைத் தாங்குவோரது சிறப்பைக் கூறும் பாடல் இது. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே குடிதாங்க முன்வரமாட்டார்கள். அக்குடும்பத்தில் ஒரிருவரே பொறுப்புணர்ச்சி உடையவராய் இருப்பர். இவர்களே குடும்பத்தைத் தாக்கும் துன்பங்களிலிருந்து அதைக் காப்பாற்றத் துடிப்பர். அவ்வாறு துன்பத்தை எதிர்கொண்டு தம் குடியைத் தாங்க முன்வருவோர் யாருமே இல்லாத நிலையும் குடும்பங்களில் ஏற்படுவது உண்டு. தாங்குவோரின்றித் துன்பம் உண்டாகும்போது அக்குடி அழியும். இது இக்குறள் கூறும் செய்தி.

இக்குறளுக்கான விளக்க உரைகளிலிருந்து சில:

  • குடியோம்புவதற்கு நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம் வீழும்.
  • வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும். அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.
  • துன்பம் சற்றே தோன்றின மாத்திரத்திலே கெடும், குடியைத் தாங்குகின்ற பலவான் பிறவாத குடி.
  • இடுக்கண் வந்த இடத்துத் தளராமல் முகம் வைத்து உறுதி செய்யும் நல் ஆண்மகன் இல்லாத குடியானது வீழ்ந்து அறும்.
  • குடியைத் தாங்கவல்ல நல்ல பிள்ளை பிறவாவிட்டால், அந்தக் குடி குற்றமாகித் தோன்றிக் கெட்டுப் போம்.
  • துன்பம் வரும்போது, அதனைத் தாங்கிக் காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது வீழும்.
  • வாழ்வாதாரங்களானது முறிபடும்போது, துன்பத்தை எதிர்த்துப் போராட, ஊன்றுகோலாக நின்று தாங்கிப்பிடிக்க ஒருவர் இல்லையெனில் அக்குடி வீழ்ந்துபடும்.
  • குடும்பத் தலைவன் தக்க உழைப்பும், விழிப்பும், பொறுப்பும் உடையவனாயிருக்க வேண்டும்.
  • துன்பம் நேர்ந்தால் தாங்கி நின்று காக்கவல்ல சாமர்த்தியமுள்ளவன் இல்லாத ஒரு குடும்பம் அந்தத் துன்பத்தால் நிலைகெட்டுப் போகும்.
  • சந்ததி விருத்தியும் குடிவளர்ச்சியும் மகனின் கடமையும், உவமையால் விளக்கப்பட்டன.
  • ஒரு குடும்பம் தொடர்ந்து மேம்பாட்டுடன் விளங்க, அடுத்துவரும் தலைமுறை ஆற்றல் மிக்கதாக விளங்க வேண்டும் என்றுணத்தியவாறு.

முட்டுக்கொடுத்து தாங்கக்கூடிய நற்பண்பும் ஆற்றலுமுடையவர் இல்லாத குடி துன்பத்தால் தாக்குறும்போது முற்றிலும் விழுந்துவிடும் என்பது இக்குறள் தரும் செய்தி.

முட்டுக்கொடுக்க நல்ல ஆளில்லாத குடும்பம், துன்பம் தாக்க அடியோடு வீழ்ந்துவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெருந்துன்பம் நேர்ந்து குடி தளர்ச்சியுறும்போது குடிசெயல்வகையின் தேவை உணரப்படும்.

பொழிப்பு

உடனிருந்து தாங்க நல்ல ஆள் இல்லாத குடும்பம் துன்பம் வந்து அடியோடு தாக்க வீழ்ந்து விடும்