இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1024



சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு

(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1024)

பொழிப்பு (மு வரதராசன்): தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வார்க்கு அவர் ஆராயாமலே அச்செயல் தானே நிறைவேறும்.

மணக்குடவர் உரை: தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.
கருதினவளவிலே அவரது நல்வினைதானே முடிக்கும்: இவர் தம்கண் அதனை மேற்கோடலே வேண்டுவ தென்றவாறு.

பரிமேலழகர் உரை: தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும்.
(குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: தன் குடும்பம் கீழாகாமல் உழைக்கின்றவனுக்கு இயல்பாக எல்லாம் தானே நிறைவேறும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தங்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு, சூழாமல் தானே முடிவெய்தும்.

பதவுரை: சூழாமல்-ஆராயாமல், எண்ணிப்பார்ப்பதற்குள்; தானே-தானாகவே; முடிவு-முற்றுப் பெறுதல்; எய்தும்-அடையும்; தம்-தமது; குடியைத்-குடும்பத்தைத்; தாழாது-தாழ்வடைய விடாமல், காலத் தாழ்ச்சி இல்லாமல், விரைந்து; உஞற்றுபவர்க்கு-முயல்பவருக்கு.


சூழாமல் தானே முடிவெய்தும்;

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.
மணக்குடவர் குறிப்புரை: கருதினவளவிலே அவரது நல்வினைதானே முடிக்கும்: இவர் தம்கண் அதனை மேற்கோடலே வேண்டுவ தென்றவாறு.
பரிப்பெருமாள்: அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: யாதானும் ஒரு வினையை முடியுமாறு எண்ணி அதன் பின் முயன்று முடிக்க வேண்டுமன்றே; இஃது அவ்வாறன்றி இவன் கருதின அளவிலே அவரது நல்வினைதானே முடிக்கும்: இவன் அதனை மேற்கோடலே வேண்டுவது என்றவாறாயிற்று.
பரிதி: தெய்வம் தானே நினைத்த காரியம் தந்து முடிக்கும் என்றவாறு.
காலிங்கர் ('சூழாது' பாடம்): வருந்தித் தாம் ஒன்று சிந்திக்க வேண்டாமல் தானே வந்து முடிவு பெறும்;
பரிமேலழகர்: அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். [சூழ வேண்டாமல்- ஆராயாமல்]

'எண்ணாமல் தானே முடிவுபெறும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அச்செயல் முடிக்கும் வகைபற்றி ஆராய வேண்டாமலே தானே முடிவடையும்', '(குடும்பம் உயர்தல் என்ற நோக்கம்) தடையின்றி தானாகவே பூர்த்தியாகும்', 'அது நினைப்பின்றியே அல்லது எதிர்பாராத வண்ணம் தானே முடிவது உண்டு', 'பயன் அவர் ஆராய வேண்டியதின்றித் தானே நிறை வெய்திவிடும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வருந்திச் சிந்திக்க வேண்டாமல் தானாகவே நிறைவேறிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

தங்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு;
பரிப்பெருமாள்: தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு;
பரிதி: தன்குடி தழைக்கவேண்டும் என்று உத்தியோகம் பண்ணுவார்க்கு;
காலிங்கர் ('சூழாது' பாடம்): யாதோ எனின், தம் குடிசெயல் வகையை இதற்கொரு குறை வரலாகாது என்று நாளும் விரைந்தியற்றும் அவர்க்கு அக்குடி செயல்வகை என்றவாறு. [விரைந்து இயற்றும்-விரைந்து முடிக்கும்]
பரிமேலழகர்: தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது. [குடி என்பது அது வளர்தற்கு ஏற்ற கருவியாகிய தொழிலை (முயற்சியை) உணர்த்துதலால் காரியவாகுபெயர்; அதற்கு- குடியை உயரச் செய்தற்கு]

'தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு' என்ற பொருளில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். 'தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு' எனக் காலிங்கரும் பரிமேலழகரும் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் குடும்பத்தைத் தாழ்த்தாமல் வளர்ச்சிக்கேற்ற செயலை விரைந்து முயல்வார்க்கு', 'தம்முடைய குடித்தனத்தின் உயர்வுக்கான முயற்சிகளைத் தளராமல் செய்து கொண்டேயிருப்பவர்களுக்கு', 'தமது குடி சிறப்படைதற்குரிய முயற்சியை விடாது முயல்கின்றவர்கட்கு', 'காலத் தாழ்ச்சி இல்லாமல் தம் குடியை உயர்த்த முயல்வார்க்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம் குடும்பம் தாழ்வுறாதவாறு கடுமையாக முயல்வோர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம் குடும்பம் தாழாதவாறு கடுமையாக முயல்வோர்க்கு அவர்கள் வருந்திச் சிந்திக்க வேண்டாமல் தானாகவே நிறைவேறிவிடும் என்பது பாடலின் பொருள்.
'தாழாது' என்ற சொல் குறிப்பதென்ன?

முயற்சி திருவினை ஆக்கும்.

தம் குடும்பம் தாழ்வுறாதவாறு அதை மேம்படுத்தும் செயலைக் கடின உழைப்புடன் மேற்கொள்பவர்க்கு அச்செயல் தானாகவே நிறைவேறிவிடும்.
தன்னுடைய குடி தாழ்ந்து கெடாமல் உயர்ந்து விளங்கப் பாடுபடும் ஒருவர்க்கு அவர் கருதியது தானே முடியும். தானே முடியும் என்றது முயற்சியே செய்யவேண்டாம் என்பதல்ல- குறளிலேயே உஞற்றுபவர் அதாவது கடுமுயற்சி செய்பவர் என்று சொல்லப்பட்டுள்ளது- வேறு பல வழிகளை நாடாமலேயே, பலவாறு ஆலோசிக்காமலே செயல் தானாக முடிவடையும் என்பது கருத்து.
சென்ற குறளின் (1023) தொடர்ச்சி போன்று அமைந்த குறள் இது. அங்கு தெய்வம் வந்து உதவிசெய்யும் என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. இங்கு மனித முயற்சிகளையும் மீறிய ஆற்றல் வந்து கைகொடுக்கும் என்று குறிப்பாகக் கூறப்படுகிறது. தம் குடி உயரவேண்டும் என்ற எண்ணத்திலே ஒவ்வொருநாளும் விரைந்து செயலாற்றுபவனுக்கு, வெற்றி தானாகவே வந்து சேரும். கடின முயற்சி செய்தால் திட்டமிடும் காலத்துக்குள் செயல் நிறைவேறிவிடும்.
இக்குறளுக்கு குடிஉயர உழைப்பவர்கள், ஊழைப் பற்றி எண்ணத் தேவையில்லை; அதாவது ஊழ், 'தம் குடியைத் தாழாது உஞற்றுகின்றவனுடைய' செயல்களில் ஊடுருவுவதில்லை; அவர்கள் தம் கடும் உழைப்பினாலேயே தம் குறிக்கோள்களை அடையலாம் என்றபடியும் உரை தருவர்.

'தாழாது' என்ற சொல் குறிப்பதென்ன?

'தாழாது' என்ற சொல்லுக்குத் தங்குடியைத் தாழச் செய்யாது, தன்குடி தழைக்கவேண்டும், குறை வரலாகாது என்று நாளும் விரைந்தியற்றும், விரைந்து, உயரச் செய்யவேணு மென்று, வினையைத் தாழ்வுபடாமல், தாழ்வடையும் நிலையொன்று ஏற்படுமானால் அவ்வாறு தாழ்வடையாமல், முயற்சியைத் தாழாமல், கீழாகாமல், தாழ்த்தாமல் வளர்ச்சிக்கேற்ற செயலை விரைந்து, சோம்பாமல், காலத் தாழ்வு இல்லாமல், சிறப்படைதற்கு, உயர்த்த, உயர்வதற்கான செயலை விரைந்து செய்ய, தாழ்ந்துவிடலாகாது என்று தளராது, பெருமை குறையும் காலத்தில் அதைத் தாழாது தடுத்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தாழாது என்றதற்குக் குடியைத் தாழச் செய்யாது என்றும் காலத் தாழ்ச்சி செய்யாது அதாவது விரைந்து என்றும் இரு திறமாகப் பொருள் கூறினர். குறள்நடை குடி தாழ்ந்து போகாமல் முயல்பவர்க்கு என்ற பொருள் தருவதாகவே அமைந்துள்ளது. இதுவே அதிகார இயைபும் உடையது.

'தாழாது' என்ற சொல் (குடியைத்) தாழல் செய்யாது என்ற பொருள் தருவது.

தம் குடும்பம் தாழாதவாறு கடுமையாக முயல்வோர்க்கு அவர்கள் வருந்திச் சிந்திக்க வேண்டாமல் அது தானாகவே நிறைவேறிவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

குடிசெயல்வகையில் சில தாமாகவும் நிறைவேறும்.

பொழிப்பு

தன் குடும்பம் தாழ்வுறாத நோக்கில் கடுமையாக உழைக்கின்றவனுக்கு அது தானாகவே நிறைவேறும்.