இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1019



குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை

(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1019)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

மணக்குடவர் உரை: ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும்.
இது நலமில்லையா மென்றது.

பரிமேலழகர் உரை: கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும்.
(நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: கொள்கையில் தவறினால் அவன் குடிப்பிறப்பு கெடும்; நாணில்லாமை நிலைத்தபோது அவனுடைய நன்மைகள் யாவும் கெடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொள்கை பிழைப்பின் குலஞ்சுடும்; நாணின்மை நின்றக் கடை நலஞ்சுடும்.

பதவுரை: குலம்-குடும்பம், குடிமரபு; சுடும்-கெடுக்கும்; கொள்கை-கடைப்பிடி, ஒழுக்கம்; பிழைப்பின்-குற்றப்பட்டால்; நலம்-நன்மை; சுடும்-கெடும்; நாணின்மை- நாண் இல்லாதிருத்தல்; நின்றக் கடை- நிலைபெற்று இருக்குமானால், நீங்காத இடத்து, .


குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்:
பரிப்பெருமாள்: ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்:
பரிதி: குலங்கெடும்;
காலிங்கர்: தம் குலப் பண்பினைச் சுட்டுவிடும், அக்குலத்துக்கு ஏற்ற கோட்பாட்டைத் தாம் பிழைப்பர் ஆயின்; [பிழைப்பர்- தவறுவர்]
பரிமேலழகர்: ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; [அப்பிழைப்பு - அத்தவறு]

'ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அக்குலத்துக்கு ஏற்ற கோட்பாட்டைத் தாம் பிழைப்பர் ஆயின்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொள்கை தவறினால் குடி அழியும்', 'ஒருவன் ஒழுக்கம் தப்புவானாயின், அது அவன் தோன்றிய குடிப்பிறப்பு ஒன்றினையும் கெடுக்கும்', '(ஒருவன் எந்த) ஒழுக்கத்தில் தவறிவிட்டாலும் (அது) அவன் நல்ல இனத்தைச் சேர்ந்தவன் என்ற பெயரைக் கெடுத்து விடும்', 'ஒழுக்கந் தவறினால், அது குடிப்பிறப்பின் உயர்வைக் கெடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவன் ஒழுக்கம் தவறினால் அவன் குடும்பப்பெயர் கெடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது நலமில்லையா மென்றது.
பரிப்பெருமாள்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நலமில்லையா மென்றது.
பரிதி: ஆக்கங்கெடும், பெருமை கெடும் நாணமில்லாக் கடை என்றவாறு.
காலிங்கர்: அதுபோல எல்லா நன்மையும் சுட்டுவிடும், ஒருவருள்ளத்து நாணமில்லாமை நின்ற இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். [அந்நிலை - (நாணின்மை) ஒரு பொழுதும் நீங்காது நிற்றல்]
பரிமேலழகர் குறிப்புரை: நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம். [இறப்ப-மிக]

'ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணம் கெட்டால் நன்மை கெடும்', 'அவனிடம் நாணமின்மை நின்றால், அது அவன் நலங்களெல்லாவற்றையும் கெடுக்கும்', '(ஆனால் அவன் நாணுடைமை என்ற ஒழுக்கத்தில் தவறி) நாணமின்மையில் இறங்கிவிட்டானாயின் (அது அவன் குலப் பெருமையை மட்டுமல்ல) மற்ற எல்லாச் சிறப்புகளையும் கெடுத்துவிடும்', 'நாணம் இல்லாமை நிலைத்தால், அஃது எல்லா நலத்தையும் கெடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாணம் இல்லாமை நிலைத்தால், நன்மைகளெல்லாம் அழியும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவன் ஒழுக்கம் தவறினால் அவன் குடும்பப்பெயர் கெடும்; அவனிடம் நாணம் இல்லாமை நிலைத்தால், நன்மைகளெல்லாம் அழியும் என்பது பாடலின் பொருள்.
'கொள்கை பிழைப்பின்' என்றால் என்ன?

நாணமின்றிச் செயல்பட்டால் குடும்ப வளங்கள் குன்றும்.

ஒருவன் ஒழுக்கமின்றி நடப்பானானால் அது அவன் குடும்பப் பெயரை அழிக்கும். அவனிடத்தில் பழிக்கு வெட்கப்படும் பண்பு இல்லாதிருத்தல் நிலைத்து விடுமானால் அது அவன் நலன்களையெல்லாம் கெடுத்துவிடும்.
குலம் என்ற சொல் குடி அல்லது குடும்பம் என்ற பொருளில் ஆளப்படுகிறது. குலம்சுடும் என்பது குடிப்பெயர் அல்லது குடும்பப்பெருமை அழியும் எனப் பொருள்படுவது. கொள்கை என்னும் சொல் மனித ஒழுக்கம் குறித்தது. எனவே பாடலின் முதற்பகுதியான 'குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின்' என்றது ஒழுக்கத்திலிருந்து வழுவினால் குடும்பப் பெயர் கெடும் என்ற பொருள்தரும். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் (ஒழுக்கமுடைமை 131 பொருள்: ஒழுக்கம் மேன்மையைத் தருதலால், ஒழுக்கமுடைமை உயிரைக் காட்டிலும் சிறந்ததாகக் காக்கப்படும்) என முன்பு கூறப்பட்டது. உயிரினும் மேலாக ஓம்பப்பட வேண்டிய ஒழுக்கம் தவறினால் அவன் குடிப்பெயர் சிதையும் என்பது வெளிப்படை.
பாடலின் பிற்பகுதி நாணம் இல்லாது உலகு பழிக்கும் செயலைத் தொடர்ந்து செய்தால் அவன் பெற்ற நன்மைகள் அனைத்தும் அழிந்துபோகும் என்கிறது. நாண் என்பது தகாத செயல்களுக்குக் கூசுவதைக் குறிக்கும். ஒழுக்கம் குன்றியவர் பின்னர் ஒழுக்கத்தில் உறுதிபெற்றுப் புகழ் பெற வாய்ப்பு உண்டு. ஆனால் தீயனவற்றைக் கண்டு நாணும் இயல்பை இழந்துவிட்டால் பழியும் தீச்செயலும் நெஞ்சில் புகுந்து சமுதாயத்தில் கடும் தீய விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதிலிருந்து மீண்டு வருதல் மிகவும் கடினம். நாணின்மை நிலைத்து நின்றுவிட்டால் தான் தேடிச்சேர்த்து வைத்த கல்வி, செயற்பாடுகள், செல்வம், குணம் போன்ற நன்மைகள் எல்லாம் அழிந்துபடும், மறுபடியும் கிடைக்கப்பெறாது என்கிறார் வள்ளுவர்.

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு (குடிமை 960 பொருள்: தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும்; குடும்பப்பெருமை விளங்க வேண்டுமானால் எல்லாரிடத்தும் வணக்கமாக நடந்து கொள்க) என்ற முந்தைய குறள் ஒன்றில் தனக்கு நலம் வேண்டுபவர், எச்சமயத்திலும் தீச்செயல் செய்யவே மாட்டேன் என்று நாணி ஒதுங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அங்கு குடிப்பிறப்பாளர் தீவினை செய்ய நாணுவர் என்று நாணம் பற்றி உடன்பாட்டில் சொல்லப்பட்டது. அதே கருத்தை மறுபடியும் நாண் குணத்தின் நலன் பற்றிப் பேசும்போது இங்கு அது எதிர்மறையில் கூறப்படுகிறது. இக்குறள்வழி, குடிப்பெருமையைக் காக்க நினைப்பவர்க்கு, நாணுடைமை எத்துணை இன்றியமையாத பண்பாக உள்ளது என்பதை அறியலாம்.

'கொள்கை பிழைப்பின்' என்றால் என்ன?

'கொள்கை பிழைப்பின்' என்ற தொடர்க்கு ஒழுக்கம் தப்புமாயின், குலத்துக்கு ஏற்ற கோட்பாட்டைத் தாம் பிழைப்பர் ஆயின், ஒழுக்கம் பிழைக்குமாயின், ஆசாரம் தப்பினால், ஒழுக்க நெறி பிழைக்குமாயின், கொள்கை தவறினால், சான்றாண்மை எனத் தான் கொண்ட கொள்கையில் தவறினால், கொள்கையில் பிழை செய்தால், கொள்கை தவறினால், ஒழுக்கம் தப்புவானாயின், ஒழுக்கத்தில் தவறிவிட்டாலும், கொள்கை தவறி ஒருவன் நடந்தால், ஒழுக்கந் தவறினால், கொள்கையில் தவறினால், தன் ஒழுக்கத்திலிருந்து தவறி நடப்பானானால், கொண்ட நற்கொள்கையில் தவறு ஏற்பட்டால், தன் கொள்கை தவறி யொழுகின், வாழ்க்கையில் ஒழுக்கத்தினின்றும் தவறிவிட்டால் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கொள்கை என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்றே தொல்லாசிரியர்கள் பொருள் கொண்டனர். காலிங்கர் குலத்துக்கேற்ற கோட்பாடு எனக் குலவொழுக்கம் பற்றிப் பேசுகிறார். அதனினும் மணக்குடவர் கொள்ளும் பொதுவான ஒழுக்கம் என்பதே பொருத்தம். பிழைப்பின் என்ற சொல் தவறினால் என்ற பொருள் தருவது. கொள்கை பிழைப்பின் என்ற தொடர் ஒழுக்கம் தவறினால் எனப்பொருள்படும். ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் (ஒழுக்கமுடைமை 133 பொருள்: ஒழுக்கமுடைமை நற்குடித் தன்மையாம்; ஒழுக்கத்தில் தவறுதல் இழிந்தபிறப்பு ஆக்கிவிடும்) என முன்பு கூறப்பட்டது. அது ஒழுக்கத்தின் இழுக்கம் அதாவது கொள்கை பிழைப்பு தன் குடும்பப்பெயரைக் கேடுறச் செய்யும் என்றது. இங்கு ஒழுக்கம் தவறினால் வருங்கேட்டை முதலில் கூறி, நாண் இல்லாவிட்டால் அதனினும் கேடாக நலங்களெல்லாம் குன்றிப்போம் என முடிக்கிறார் வள்ளுவர். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு மிகவும் தீமை பயப்பது என்பது சொல்லப்பட்டது.

'கொள்கை பிழைப்பின்' என்ற தொடர் ஒழுக்கம் தவறினால் என்ற பொருள் தருவது,

ஒருவன் ஒழுக்கம் தவறினால் அவன் குடும்பப்பெயர் கெடும்; அவனிடம் நாணம் இல்லாமை நிலைத்தால், நன்மைகளெல்லாம் அழியும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெற்ற நன்மைகள் நீங்காதிருக்க நாணுடைமை நிலைக்க ஒழுகுக.

பொழிப்பு

ஒழுக்கம் தவறினால் குடி கெடும்; நாணம் இல்லாமை நிலைத்தால், நன்மை கெடும்.