இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1017



நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்

(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1017)

பொழிப்பு (மு வரதராசன்): நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவார்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார்.

மணக்குடவர் உரை: நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர்.
இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.

பரிமேலழகர் உரை: நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார்.
(உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: நாணமுடைமையை மேற்கொண்டவர் நாணத்திற்காக உயிரை விடுவாரே அன்றி, உயிர் பிழைத்தற் பொருட்டு நாணத்தை இழக்கமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர்.

பதவுரை: நாணால்-வெட்கம் காரணமாக; உயிரை-உயிரை; துறப்பர்-நீக்குவர்; உயிர்-உயிர்; பொருட்டால்-காரணமாக; நாண்-பழிக்கு வெட்கப்படுந்தன்மை; துறவார்-நீக்கார்; நாண்-தகாத செயல்கள் செய்ய வெட்கப்படுதல்; ஆள்பவர்-மேற்கொள்பவர்கள்.


நாணால் உயிரைத் துறப்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்:
பரிப்பெருமாள்: நாண் பொருட்டாக உயிரைத் துறப்பார்:
பரிதி: நல்லோர்க்கு ஒரு பிழை வந்த காலத்தில் உயிர் துறப்பர் அல்லது;
காலிங்கர்: தமக்கு ஒருவாற்றான் ஒரு நாணக் கேடும் உளதாயின் அது காரணமாகத் தம் உயிரினையும் துறப்பதல்லது;
பரிமேலழகர்: அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; [மாறாய வழி- மாறுபட்ட வழி, நாண் உயிரென்னும் இரண்டனுள் யாதாவது ஒன்றனை நீக்க நேர்ந்த விடத்து]

'நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணம் மிக்கவர் அதற்காக உயிர்விடுவர்', 'நாணத்தைக் காப்பதற்காக உயிரையும் விடுவர்', 'நாணத்துக்காக உயிரை விடுவார்களேயல்லாமல்', 'நாணின் பொருட்டு உயிரை விடுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாணத்துக்காக உயிரையும் விடுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.
பரிப்பெருமாள்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாணம் உயிரினும் சிறந்ததென்றது.
பரிதி: நாண் துறவார் என்றவாறு.
காலிங்கர்: உயிர் பேணுதல் பொருட்டாக நாணத்தை விடுத்து ஒன்றினை இயற்றார்; யார் எனின் நாணுதல் அறிந்து எப்பொழுதும் ஆண்டு வருகின்ற அறிவினர் என்றவாறு.
பரிமேலழகர்: நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார் உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார்.
பரிமேலழகர் குறிப்புரை: உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது. [அவர் செயல்- நாணமுடையார் செயல்]

'உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிருக்காக நாணத்தை விடார்', 'நாணத்தைச் சிறப்பாகக் கருதி நடப்பவர் உயிரைக் காப்பதற்காக நாணத்தை விடமாட்டார்', 'நாணுடைமையை மேற்கொண்ட சான்றோர்கள் உயிரைப் பெரிதாக எண்ணி நாணத்தை விட்டுவிட மாட்டார்கள்', 'நாணினை விடாது ஒழுகுபவர், உயிரைக் காக்கும் பொருட்டு நாணை விடார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாணமுடைமையை மேற்கொண்டவர் உயிரைக் காப்பதற்காக நாணத்தை விடமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாண் ஆள்பவர் நாணத்துக்காக உயிரையும் விடுவர்; உயிரைக் காப்பதற்காக நாணத்தை விடமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'நாண் ஆள்பவர்' யார்?

உயிரா நாணா என்ற போராட்டம் வரும்பொழுது நாணைத் துறவார் நாணுடைமையைப் பெரிதாக மதிப்பவர்.

நாணத்தைத் தனக்குரிய பண்பாகக் கொண்டு வாழ்பவர் நாணத்துக்காக உயிரை விடுவாரே அன்றி உயிருக்காக நாணினை நீங்கியிருக்க மாட்டார்.
நாணம் என்பது ’தமக்குப் பழிவருஞ் செயல்களைச் செய்யக் கூசுதலைக்' குறிக்கும் சொல். பழிச்செயலை மேற்கொள்ளவோ செய்யவோ பெரியோர் நாணுவர். தீய செயல்களைச் செய்ய அஞ்சுவதே நாணாகும். நாணத்தையும் உயிர்வாழ்க்கையையும் ஒருங்கே காப்பாற்ற முடியாத போது, நாணுதல் அறிந்து எப்பொழுதும் ஆண்டு வருகின்ற அறிவினர் உயிரை விட்டு விடுவார்கள்; உயிரைக் காப்பதற்கு நாணத்தைத் துறக்கமாட்டார்கள். நாணம் உயிரினும் சிறந்தது என்பது கருத்து.

உயிர் அரியது; ஆனாலும் சில உயர் குணங்கள் உயிரினும் மேலானவை என்ற கருத்துடையவர் வள்ளுவர்.
உயிரையும் மேலான பண்புகளையும் இணைத்துக் குறளில் வரும் மற்ற இடங்களாவன: புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்....... (புறங்கூறாமை 183 பொருள்: காணாவிடத்துப் புறம்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்த்து ஒருவன் உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்துபடுதல்), சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை (ஈகை 230 பொருள்: சாதல்போல் விரும்பத்தகாதது வேறு இல்லை; அதுவும் இனிதாகிறது இரந்துவந்தவர்க்கு உதவ முடியாத போது), தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை (கொல்லாமை 327 பொருள்: தன்னுயிர் போவதாயினும், தான் பிறிதோர் இனிய உயிரை நீக்கும் தொழிலைச் செய்தல் கூடாது), இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் (படைச்செருக்கு 779 பொருள்: தாம் கூறிய வஞ்சினம் (சபதம்) தவறாமல் உயிர் துறந்தவரை தவறினார் என்று இகழ்வோர் யார் இருக்கிறார்?), புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து (படைச்செருக்கு 780 பொருள்: காத்தவர் கண்ணீர் பெருக்கும்படி சாகப் பெற்றால் அச் சாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது), ...........உயிர்நீப்பர் மானம் வரின் (மானம் 969 பொருள்: .......மானத்துக்கு கேடு நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்) இளிவரின் வாழாத மரணமுடையார்..... (மானம் 970 பொருள்: தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவர்) என்பன. இவ்விடங்களிலெல்லாம் உயிர் துறக்கத்தகுவது எனக் குறள் கூறுகிறது.

'நாண் ஆள்பவர்' யார்?

'நாண் ஆள்பவர்' என்ற தொடர்க்கு நாணம் வேண்டுபவர், நாணம் வேண்டுவார், நல்லோர், நாணுதல் அறிந்து எப்பொழுதும் ஆண்டு வருகின்ற அறிவினர், நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார், நாணினுடைய நன்மையை அறிந்து அதனை விடாமல் நடக்கிறவர்கள், நாணினை ஆள்பவர், நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணம் என்பதன் சிறப்பறிந்து அதனைக் கைக்கொண்டு ஒழுகுபவர், நாணினை ஆளும் சான்றோர்கள், நாணம் மிக்கவர், நாணத்தைச் சிறப்பாகக் கருதி நடப்பவர், நாணுடைமையை மேற்கொண்ட சான்றோர்கள், நாணம் என்னும் உயர்ந்த பண்பைக் கொண்டவர், நாணமுடைமையை மேற்கொண்டவர், நாணினை விடாது ஒழுகுபவர், நாணம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு வாழ்பவர், நாணுடைமை பேணும் சான்றோர், நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மனிதர்க்குள்ள நற்பண்புகளுள் சிறந்த ஒன்றாக நாணம் காட்டப்பெறுகின்றது. தகாத செயல்களைச் செய்ய மனம் கூச்சப்படுவது நாண் எனப்படும். குற்றம், தீமை, இழிவான செயல்கள் இவற்றைக் கண்டு வெட்கப்படுவதலைச் சொல்வது இது. இப்பண்பு சிலருக்கு இயல்பாகவே அமைந்திருக்கும்; மற்றும் சிலர் அதை வளர்த்துக்கொள்வர். இப்பண்பை எத்தகைய நிலையிலும் தனதாக வைத்திருப்பவரை - அதாவது தம் கொள்கையாகக் கொண்டு ஒழுகுபவரை - நாண் ஆள்பவர் எனக் குறிக்கிறார் வள்ளுவர். இத்தகைய நாணம் உடையோர் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக செய்யத்தகாத செயல்களைச் செய்யமாட்டார்கள். இவ்வாறு நாணத்தை ஆளும் பண்புகொண்டோர், நாணத்தையும் உயிரையும் ஒருங்கே காப்பாற்ற முடியாத நிலை உண்டாகும்போது, நாணம் எனும் உயர் பண்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தமது உயிரையே விட்டுவிடுவார்கள்.

'நாண் ஆள்பவர்' என்ற தொடர் நாணமுடைமையை மேற்கொண்டவர் குறித்தது.

நாணமுடைமையை மேற்கொண்டவர் நாணத்துக்காக உயிரையும் விடுவர்; உயிரைக் காப்பதற்காக நாணத்தை விடமாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நாணுடைமையை உயிரினும் உயர்வாகக் கருதுவர் அதன் மேன்மையை அறிந்தவர்.

பொழிப்பு

நாணம் மிக்கவர் நாணத்துக்காக உயிரையும் விடுவர்; உயிருக்காக நாணத்தை விடார்.