இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1016



நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1016)

பொழிப்பு (மு வரதராசன்): நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார்.

மணக்குடவர் உரை: ...........................................................

பரிமேலழகர் உரை: மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.
(பழி பாவங்கள் புகுதாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுதும் நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள், 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: உயர்ந்தோர் நாணத்தைத் தமக்குப் பாதுகாப்பாகக் கொள்வாரே அல்லாமல், அதனை ஒழித்து அகன்ற உலகில் வாழ்வதைப் பாராட்டமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மேலாயவர் வேலிநாண் கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர்.

பதவுரை: நாண்-இழி தொழில்களில் மனஞ் செல்லாமை; வேலி-பாதுகாப்பு; கொள்ளாது-அடையாது; மன், ஓ- (அசை); வியன்-அகன்ற; ஞாலம்-உலகம்; பேணலர்-விரும்பார்; மேலாயவர்-உயர்ந்தவர்.


நாண்வேலி கொள்ளாது மன்னோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: நாண் ஆகிய வேலியை அமைத்துக் கொள்வார்கள் அல்லது;
பரிதி: நாணம் என்னும் வேலியிட்டு நீதியை நடத்தாத போது;
காலிங்கர்: தனது மேன்மைக்கு வரம்பாகிய நாணினை வேலியாகக் கொள்ளாது;
பரிமேலழகர்: தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; [ஏமம் - பாதுகாப்பு]
பரிமேலழகர் குறிப்புரை: பழி பாவங்கள் புகுதாமற் காத்தலின், 'வேலி' என்றார். மன்னும் ஓவும் அசைகள், [மன்னோ என்பதிலுள்ள மன், ஓ -இரண்டும் அசைநிலைகள்]

'தனது மேன்மைக்கு வரம்பாகிய நாணினை வேலியாகக் கொள்ளாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணமாகிய வேலியை அமைத்துக் கொண்டன்றி', 'தமக்குக் காவலாக நாணத்தைக் கொள்ளாமல்', '(சான்றாண்மைக்குப்) பாதுகாப்பாகிய நாணத்தை விட்டுவிட்டு', 'நாணாகிய வேலியைத் தமக்குக் காவலாகக் கொள்வதன்றி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாணமாகிய வேலியை அமைத்துக் கொள்ளாமல் என்பது இப்பகுதியின் பொருள்.

வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: பெரிய உலகத்தினைப் பெறுதற்கு விரும்பார்கள் மேன்மக்கள் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, நாணம் அழிய வரும் பொருள்கொள்ளார் என்றது. இது, பொருளினும் நாணம் சிறந்தது என்றது. [அழியவரும் - கெடவரும்]
பரிதி: பூமியில் பெரியோர்கள் எப்படி உளங்கொள்ளப் பெற்றார்கள் என்றவாறு.
காலிங்கர்: மற்று இப்பரந்த ஞாலம் முழுதும் பேரினும் நாணம் இழப்ப வரினும் வியன்ஞாலம் விரும்பலர் மேலாயவர் என்றவாறு. [பேரினும் - இடம் பெயர்ந்தாலும்]
பரிமேலழகர்: உயர்ந்தவர் அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.
பரிமேலழகர் குறிப்புரை: நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுதும் நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர். [நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி.- நாணம், ஞாலம் இரண்டனுள் யாதாவது ஒன்றனைக் கொள்ள நேர்ந்தவிடத்து]

'மேன்மக்கள்/பெரியோர்கள்/உயர்ந்தவர் அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயர்ந்தோர் உலகத்தை மதியார்கள்', 'உயர்ந்தவர்கள் பரந்த உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்', 'சான்றாண்மையில் மேலானவர்கள் இந்தப் பெரிய உலகம் கிடைப்பதானாலும் விரும்பமாட்டார்கள்', 'உயர்ந்தவர் அகன்ற உலகத்தையும் (நாணமின்றி) கொள்ள விரும்பார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உயர்ந்தோர் அகன்ற உலகில் வாழ்வதை விரும்பமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாண்வேலி அமைத்துக் கொள்ளாமல் அகன்ற உலகில் வாழ்வதை விரும்பமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.
'நாண்வேலி' என்றால் என்ன?

பழிவந்து சேராதவாறு நாணத்தை வேலியாக அமைத்துக் கொள்க.

மேன்மக்கள் நாண் என்னும் வேலி அமைத்துகொண்டு அகன்ற உலகில் வாழ்வதையே விரும்புவார்கள்.
நாண் என்பது தகாத செயல்களில் ஈடுபடக் கூசும் குணத்தைக் குறிக்கும் சொல். உயர்ந்தோர் நாணையே பாதுகாப்பான வேலியாகக் கொள்வார்கள். பழி தம்மீது ஏற்படாதவண்ணம் இந்த நாண்வேலி பாதுகாக்கும். கண்ணால் காணமுடியாத அவ்வேலியின் உள்ளிருந்து, இப்பெரிய உலகின்கண், வாழ்வதையே அவர்கள் விரும்புவார்கள். வேறுவகையில் சொல்வதானால், அத்தகைய நாணத்தை வேலிபோன்று அமைத்துக் கொள்ளாமல், பெரியோர், இப்பெரிய உலகத்தின் பொதுவாழ்க்கையை மேற்கொள்ளமாட்டார்கள்.
பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர் (புறநானூறு 182 பொருள்: பழியெனின் அதனால் உலகமுழுதும் பெறினும் கொள்ளார்) என்ற சங்கப்பாடலை நினைவுகொண்டு, இக்குறளுக்கு 'நாண் வேலியில்லாது உலகைக் கொடுத்தாலும் வேண்டார் பெரியார். அதாவது வெட்கமில்லாது, பிறர் பழிக்கும்படியான வழிகளால் உலகமே தமக்குக் கிடைப்பதானாலும் அவர்கள் ஏற்கமாட்டார்' என்றும் பொருள் கூறினர். இது, நாணமும் பூமியும் சமமாக்கி, இந்த இரண்டில் எது வேண்டும் என்றால், மதிப்பில் உயர்ந்த நாணையே விரும்புவார்கள் மேலோர் என்றாகிறது. ஞாலத்தையிழந்தாலும் நாணத்தை விடார் என்பது இவர்கள் சொல்லும் விளக்கம்.
இவ்விருவகை உரையுள்ளும், பின்னதான 'ஞாலமே பெறக்கூடும் எனினும் மேலோர் விரும்பார்' என்பதனினும் 'அகன்ற உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார்' என்னும் முதலில் சொல்லப்பட்ட உரையே பொருத்தமாகத் தோன்றுகிறது.

'வியன்ஞாலம்' என்ற தொடர் வியனுலகம் அதாவது விரிந்த உலகம் எனப் பொருள்படும். வியனுலகம் என்றது வான்சிறப்பு அதிகாரத்தில் ....வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி என 13-ஆம் குறளிலும் .....வியனுலகம் வானம் வழங்கா தெனின் என 19-ஆம் குறளிலும் ஆளப்பட்டது.
‘மன்’ எனும் இடைச்சொல் பெரும்பாலும் குறளில் ஒழியிசைப் பொருளைத் தருவதாய் அமைகிறது. இங்கும் அது அசையாகவே வந்தது. இது பெயர்ச்சொல்லோடும், வினைச்சொல்லோடும் இயைபு கொண்டு தான் ஏற்ற இடத்திற்கேற்றவாறு பொருளை உணர்த்தும். 'ஓ' என்பதும் அசைச்சொல்லே.

'நாண்வேலி' என்றால் என்ன?

'நாண்வேலி' என்ற தொடர்க்கு நாண் ஆகிய வேலி, நாணம் என்னும் வேலி, நாணினை வேலியாக, ஏமமாக நாணினை, நாணுடைமையைப் பாதுகாப்பாக, நாண் என்னும் நிலம், நாணமாகிய வேலி, நாணமாகிய பாதுகாப்பு, நாணத்தை வேலியாக, நாணமாகிய வேலி, பாதுகாப்பாகிய நாணம், நாணத்தைத் தமக்குப் பாதுகாப்பாக, பழிக்கு நாணும் பண்பைப் பாதுகாப்பு வேலியாக, நாற்புறமும் நாணத்தை வேலியாக என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எந்த ஒரு பெரிய பரப்பையும் வேலி இல்லாமல் வெளியிலிருந்து வரும் தீங்குகளிலிருந்து காக்கமுடியாது. உழவர்கள் இட்ட பயிரை விலங்குகள் தின்று அழித்துவிடாமலும் எலி, பூச்சி முதலியன சேதம் விளைவித்துவிடாமலும் வேலியிட்டுக் காப்பர். நாண்வேலி என்றதொடர் இத்தகையதோர் வேலி அமைப்பதையே சொல்கிறது. வயற்காட்டை உழுது, எரு இட்டு, வித்திட்டு, நீர்பாய்ச்சி வளர்ப்பது எவ்வளவு தேவையோ அதைப்போல அக்கழனிக்கு வேலியும் மிகத்தேவை. கழனி பெருக்கி, வேலி இல்லாது போயின் பாடுபட்டு வளர்த்தபயிர்கள் அழியும். அதுபோலவே, ஒருவர்க்கு பழி ஏற்படாவண்ணம் நாணுடைமை பாதுகாப்பளிக்கும். மேலானவர்கள் தம் மீது பழி வராமல் இருப்பதில் மிகுந்த அக்கறை காட்டுவர். நாணம் என்னும் பண்பு மனத்தடையாக அமைந்து தீங்கு செய்தல், குற்றம் புரிதல், அழிவு இவற்றிலிருந்து அவர்களைக் காக்கும்.

பழி, தீவினைகள் ஒருவர் வாழ்வில் புகாமற் காத்தலின், நாண் வேலி எனப்பட்டது.

நாணமாகிய வேலியை அமைத்துக் கொள்ளாமல், உயர்ந்தோர், அகன்ற உலகில் வாழ்வதை விரும்பமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெரியோர் நாணுடைமை என்னும் பண்பு இன்றி தம் மேம்பட்ட வாழ்வை நடத்த வல்லாரல்லர்.

பொழிப்பு

நாணமாகிய வேலியை அமைத்துக் கொள்ளாமல் உயர்ந்தோர் உலகத்தில் வாழ விரும்பமாட்டார்கள்.