இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1006



ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல் இயல்பிலா தான்

(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1006)

பொழிப்பு (மு வரதராசன்): தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

மணக்குடவர் உரை: தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து.

பரிமேலழகர் உரை: தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய்.
(தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.)

தமிழண்ணல் உரை: தானும் நுகரமாட்டான்; தக்கவர்க்கு அவர் வேண்டுவதொன்றைக் கொடுத்துதவும் இயல்புமில்லாதவன். அத்தகையவன் தான் பெற்ற பெருஞ் செல்வத்திற்குத் தானே கேடாவான். அச்செல்வம் பயனின்றியே கழிதலின் நுகராதகனி கெட்டழிவதுபோல் கெடும் என்பதாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தான்துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் பெருஞ்செல்வம் ஏதம்.

பதவுரை: ஏதம்-துன்பம், நோய், குற்றம்; பெரும்-பெரியதாகிய; செல்வம்-பொருள் மிகுதி; தான்-தான்; துவ்வான்-நுகரமாட்டான்; தக்கார்க்கு-தகுதியுடையவர்க்கு; ஒன்று-ஒரு பொருள்; ஈதல்-கொடுத்தல்; இயல்பு-இயற்கை, குணம்; இலாதான்-இல்லாதவன்.


ஏதம் பெருஞ்செல்வம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருஞ் செல்வம் குற்றமுடைத்து;
பரிப்பெருமாள்: பெருஞ் செல்வம் குற்றமாம்;
பரிதி: செல்வமன்றோ பெருந்துயரம் உறுவது;
காலிங்கர்: பெருஞ் செல்வமானது பெரும் பாவத்திரள் என்பது பொருள்;.
பரிமேலழகர்: இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய்; [இரண்டும் - தான் நுகர்தலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டியதொன்றை ஈதலும்]

'பெருஞ் செல்வம் குற்றமாம்/பெருந்துயரம் உறுவது/பெரும் பாவத்திரள்/ஒரு நோய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய்', 'பெற்ற செல்வம் அவனுக்குத் துன்பமாம்', 'பெருஞ்செல்வம் வெறும் துன்பம்தான் உண்டாக்கும்', 'பெருஞ் செல்வம் ஒரு நோயாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெருஞ் செல்வம் நோயாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான்.
பரிப்பெருமாள்: தானுந் துவ்வாது தக்கார்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இறுதி பயக்கும் என்றது.
பரிதி: தானும் புசியான் தக்கார்க்கு ஒன்றும் ஈயான் செல்வமன்றோ என்றவாறு.
காலிங்கர்: தானும் உண்ணானாகித் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பும் இல்லாதவனிடத்து உள்ள என்றவாறு.
பரிமேலழகர்: தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன. [கோடற்கு ஏற்புடைமை- கொள்ளுவதற்குத் தகுதியுடைமை; அன்று ஆக்கினமையின் - அத் தொழிற்கு உரியதல்லாதாகச் செய்தமையால்; அவ்விருமையும்- செல்வம் ஈட்டியவனுக்குப் பயன்படாமையும் பிறர்க்குப் பயன்படாமையும் என்னும் இரண்டும்]

தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தானும் நுகரான் ஏழைக்கும் ஈயான் இவன்', 'தானும் உண்ணாதவனாய் உயர்ந்தவர்கட்கு வேண்டிய ஒன்றினைக் கொடுக்கும் பண்பில்லாதவன்', 'தானும் அனுபவிக்காமல் தகுதியுடைய பிறருக்கும் எதையும் கொடுத்துவிட மனமில்லாமல் சேர்த்துவைக்கிறவனுடைய', 'தானும் நுகராது தக்கவர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுத்தலும் இல்லாத இயல்பினை உடையவனது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தானும் துய்க்காது தக்கவர்க்கு ஒன்று ஈயும் இயல்பும் இல்லாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தானும் துய்க்காது தக்கவர்க்கு ஒன்று ஈயும் இயல்பும் இல்லாதவன் பெருஞ் செல்வம் ஏதம் என்பது பாடலின் பொருள்.
'ஏதம்' என்றால் என்ன?

உதவி தேவைப்படுவர்க்குக் கொடுக்கப்படாத பெருஞ்செல்வம் இரக்கத்திற்குரியதுதான்.

தானும் துய்க்காமல், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவும் குணமும் இல்லாமல் இருப்பவனிடமுள்ள பெருஞ்செல்வம் நோய் ஆகும்.
தக்கார் என்றது உதவி தேவைப்படுபவர் குறித்தது. ஈதல் இயல்பிலாதான் என்றதால் இயல்பிலேயே கொடுக்கும் குணம் கொஞ்சம்கூட இல்லாத பெரும்பொருள் படைத்தவன் பற்றி இங்கு பேசப்படுகிறது என அறியலாம். காட்டாக, ஊருக்குள் வெள்ளம் வந்துவிட்டது; மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறி வாழ்க்கை நடத்தும்படி ஆகிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் உறும் துன்பத்தை நேரில்கண்டும் எந்தவித உதவியும் செய்ய முன்வராத இறுகிய மனம் கொண்ட உள்ளூர்ப் பெருஞ்செல்வன் ஈதல் இயல்பில்லாதவனாகத்தான் இருக்க வேண்டும்; அந்நிலையிலும் உதவி செய்ய மறுப்பவன் நோய் உள்ளம் கொண்டவனே.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு (பொருள்செயல்வகை 760 பொருள்: முறையாகப் பொருளினை முற்ற ஈட்டியவர்க்கு மற்றைய அறம், இன்பம் என்னும் இரண்டும் ஒருங்கே எளிய பொருள்களாம்) என ஒண்பொருள் அதாவது நல்ல செல்வம் என வள்ளுவரால் செல்வம் சிறப்பித்தே கூறப்படுகிறது. ஈட்டிய செல்வத்தை முறையறிந்துபயன்படுத்தும்போது அது இன்பமும் அறமும் பயந்து தன்னையுடையானை விளக்கமுறச் செய்தலின், அது ஒண்பொருள்' எனப்பட்டது. அது மாசுடையதன்று; அது அறமில்லாத மாந்தர் கையில் சென்றடைவதால் பயனில்லாமல் போய் தன் மதிப்பு இழக்கிறது. செல்வம் ஈட்டியவனுக்கு அதைச் செலவழிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய முழுஉரிமை உண்டு என்றாலும் தனக்கு ஒரு சமுதாயக் கடமை ஒன்று உள்ளது என்பதையும் அவன் உணரவேண்டும். அது இல்லாததால் அச்செல்வம் ஏதம்.
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கும் ஒன்று ஈயாமல் வாழ்கின்றவனது பெருஞ்செல்வமே நோயாகிறது. பயன்படக்கூடிய பொருள் ஒன்றைப் பயன்படுத்தாது வைத்திருந்தாலே நோயாதல் போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படுத்தக்கூடிய செல்வத்தைப் பயன்படுத்தாமை நோயாயிற்று. பலரிடமும் சென்று பலர்க்கும் பயன்படக்கூடிய நல்ல செல்வத்தை எங்கும் செல்லாமல் முடக்கிவைத்திருப்பதால் அச் செல்வம் தீங்கு-ஏதம்-ஆகிறது. இவ்வாறு முடக்கி வைக்கப்படும் செல்வத்தால் அறமும், இன்பமும் ஏற்படும் வாய்ப்புக்களுக்கு தடைஉண்டாகின்றன; பொருட்பயன் -நுகர்பயன் இல்லாமல் போகின்றன.

'ஏதம்' என்றால் என்ன?

'ஏதம்' என்ற சொல்லுக்குக் குற்றம், பெருந்துயரம், பாவத்திரள், நோய், துன்பம், கேடு, பெருந்துன்பம், உலகுக்கு ஒரு நோய், நோய் போன்றவன், நோய் ஆவன், தானே வந்த நோய், துன்பம் தருபவனாவான், இடர்ப்பாடு எனப் பலவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஏதம் என்பதன் நேர்பொருள் துன்பம் என்பதுதான். இங்கு நோயால் விளையும் துன்பத்தை உணர்த்துகிறது. அத்துன்பத்தைத் தரும் கருவியாகிய நோயை யுணர்த்துதலால் காரியவாகுபெயர் என்று பரிமேலழகர் விளக்குவார்.
செல்வம் கொடுக்காதவனுக்கு ஒரு நோய் என்று சிலரும், ஈயாதவன் செல்வத்திற்கு நோய் போன்றவன் என்று வேறு சிலரும் ஏதத்திற்கு விளக்கம் செய்தனர். செல்வம் ஏதம் என்பதே சிறந்தது. ஏதம் என்பதற்குத் துன்பம் எனப் பொருள் கொண்டு ஈயாதவன் சேர்த்த செல்வம் அவனுக்கே துன்பந்தரும் என்றும் உரைத்தனர். செல்வத்தை ஈட்டுதல், பேணிக்காத்தல் ஆகியவை துன்பந்தரும் பணிகளேயாம் என்பர் இவர்கள். மேலும் அச்செல்வம் உடையான் களவு, காவல்களால் அலைக்கழிக்கப்படுவதாலும் துன்பமுறுவான் எனவும் கூறுவர்.
செல்வம் எவ்வகையில் துன்பம் தரும் என்பதைச் சொல்லும் நாலடியார் பாட்டு ஒன்றுளது:
ஈட்டலும் துன்பம்; மற்று ஈட்டிய ஒண் பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந் துன்பம்; காத்த
குறைபடின், துன்பம்; கெடின், துன்பம்; துன்பக்கு
உறைபதி, மற்றைப் பொருள்.
(நாலடியார் 280 பொருள்: பொருள் திரட்டுதலும் துன்பம்; திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும்அவ்வாறே மிக்க துன்பமாகும்; அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள்தன் அளவிற் குறைந்துபோகுமாயின் துன்பமே, இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும்அழிந்துபோகுமானால் பின்னும் துன்பம்; ஆதலால், பொருள் துன்பங்களெல்லாவற்றிற்கும் தங்குமிடம் என்க)
ஏதம் என்பதற்குக் குற்றம் என்பர் மணக்குடவரும் பரிப்பெருமாளும். 'தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து' என்பது இவர்கள் உரை. நேர்மையான முறையில் பெற்ற செல்வமானாலும் அல்லது மற்ற எவ்வழியில் பெற்ற செல்வமானாலும், அறமல்லாதவர் கையில் பட்டுப் பயனில்லாமல் போகும், நன்றியில்செல்வம் குற்றமானதே; சுழற்சியில்லாமல் முடக்கப்படும் செல்வத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்படையும் என உலகத்துப் பொருளியல் அறிஞர்களும் கூறுவர்.
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. (குற்றங்கடிதல் 438 பொருள்: பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத கஞ்சத்தனம் எந்த ஒரு நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல) எனக் குற்றங்கடிதல் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் ஏற்கனவே இதைக் குற்றம் எனச் சொல்லியுள்ளார். 'பொருளைச் செலவழிக்க வேண்டியவிடத்துச் செலவழிக்காமல் இருப்பதற்குரிய உள்ளம் என்று சொல்லப்படும் சிக்கனத் தன்மை எதனுள்ளும் வைத்துக் கருதப்படுவதற்குரிய குணம் அன்று; குற்றமேயாகும்' என்பது இதன் கருத்து.

'ஏதம்' என்ற சொல் துன்பம் எனப்பொருள்படும்.

தானும் துய்க்காது தக்கவர்க்கு ஒன்று ஈயும் இயல்பும் இல்லாதவன் பெருஞ் செல்வம் நோயாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நன்றியில்செல்வம் யாருக்கும் உதவாததால் மதிப்பிழந்து போகிறது.

பொழிப்பு

தானும் துய்க்காதவனாய் தக்கவர்க்கு ஒன்று ஈயும் குணமும் இல்லாதவனது பெருஞ் செல்வம் துன்பமுடைத்து.