இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0994



நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

(அதிகாரம்:பண்புடைமை குறள் எண்:994)

பொழிப்பு (மு வரதராசன்): நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன் பட வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

மணக்குடவர் உரை: .........................................

பரிமேலழகர் உரை: நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர்.
('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு. நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், அதனைப் 'பாராட்டும்' என்றார்.)

தமிழண்ணல் உரை: தாம் பலராலும் விரும்பத்தக்க நல்லவராயும் பிறர்க்கு நன்மையை விரும்பிச்செய்பவராயும் அமைந்த, தமக்கும் பிறர்க்கும் பயன்படுதலையுடையவரது பண்பினை உலகத்தார் பாராட்டுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு உலகு பாராட்டும்.

பதவுரை: நயனொடு-விருப்பத்தோடு, நீதியோடு; நன்றி-நன்மை, அறம்; புரிந்த-செய்த, விரும்பிய; பயனுடையார்-பயன்படும்படி வாழ்பவர், பயனளிக்கக் கூடியவர்கள்; பண்பு-குணம்; பாராட்டும்-கொண்டாடும்; உலகு-உலகு, உலகத்தார்.


நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: பிறரால் விரும்பப்படுதலோடே கூட நன்னெறியின்கண்ணே பொருந்தின பொருளுடையாரது குணத்தினை;
பரிதி: நயனொடு நன்றி புரிந்த பயன் உள்ளபேர் கொண்ட ஒழுக்கத்தை;
காலிங்கர்: ஒழுக்கத்துடனே நல்லறமும் தாங்கியவழி இருமைப் பயனும் உளது அன்றே, அதனால் இப்பயன் உடையார் பண்பினையே;
பரிமேலழகர்: நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை;
பரிமேலழகர் குறிப்புரை: 'புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு. ['புரிந்த' என்பதைப் 'புரிதலால்' எனக் காரணப் பொருளாகக் கொள்ளுக என்பதாம்;

'பிறரால் விரும்பப்படுதலோடே கூட நன்னெறியின்கண்ணே பொருந்தின பொருளுடையாரது குணத்தினை' எனப் பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினார். பரிதி 'நயனொடு நன்றி புரிந்த பயன் உள்ளபேர் கொண்ட ஒழுக்கத்தை' எனப் பொருளுரைத்தார். காலிங்கர் 'ஒழுக்கத்துடனே நல்லறமும் தாங்கியவழி இருமைப் பயன் உடையார் பண்பினையே' என உரை செய்தார். பரிமேலழகர் 'நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை' எனக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'விருப்பத்தோடு நன்மை செய்து வாழ்பவரின் எளிய குணத்தையே', 'ஈடுபாட்டுடன் நன்மை செய்த பிறர்க்குப் பயன்பட்ட வாழ்க்கையுடையாரது பண்பினை', 'இரக்கம் காட்டுவதோடு நின்றுவிடாமல், நன்மையும் செய்கிற பயனுள்ளவர்களுடைய பண்புடைமைக் குணத்தை', 'முறைமையையும் நன்மையையும் விரும்பி உலகத்திற்குந் தமக்கும் பயனைக் கருதுவாருடைய பண்பினை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விருப்பத்தோடு நன்மை செய்த பயனுள்ளவரது பண்பினை என்பது இப்பகுதியின் பொருள்.

பாராட்டும் உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: உலகம் கொண்டாடும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை எல்லாரும் புகழ்வர் என்றது.
பரிதி: பாராட்டும் உலகம் என்றவாறு.
காலிங்கர்: கொண்டாடும் இவ்வுலகு; எனவே உலகின் உள்ளோர் யாவரும் கொண்டாடுவர் என்றவாறு.
பரிமேலழகர்: உலகத்தார் கொண்டாடா நிற்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், அதனைப் 'பாராட்டும்' என்றார். [அதனை-பண்பினை]

'உலகம் கொண்டாடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகம் போற்றும்', 'உலகம் கொண்டாடும்', 'உலகத்தார் எப்போதும் கொண்டாடுவார்கள்', 'உலகத்தார் கொண்டாடுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உலகோர் போற்றுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விரும்பப்படுதலோடு நன்றி புரிந்த பயனுள்ளவரது பண்பினை உலகோர் போற்றுவர் என்பது பாடலின் பொருள்.
'நன்றி புரிந்த' என்ற தொடர் குறிப்பதென்ன?

உலகோர்க்குப் பயன்தரும் வாழ்வுடைய பண்புள்ளவர் போற்றப்படுவர்.

விருப்புடன் நன்மை செய்து மற்றவர்க்குப் பயன்படும்படி வாழ்பவர்தம் பண்பை உலகத்தார் கொண்டாடுவர்.
இக்குறளிலுள்ள நயன் என்ற சொல்லுக்குப் பிறரால் விரும்பப்படுதல், ஒழுக்கம், நீதி, நேர்பாடு, இரக்கம் எனப் பலவாறு பொருள் கூறினர். நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் (இனியவைகூறல் 97 பொருள்: இனிமைப் பயன் தரும் பண்பு நீங்காத சொல்லானது விரும்பப்படுதலை விளைத்து, நன்மைகள் பல உண்டாக்கும்) என முன்வந்த குறளில் நயன் என்ற சொல்லுக்கு விரும்பப்படுதல் என்ற பொருளே பொருந்திற்று. அப்பொருளிலேயே இங்கும் அச்சொல் ஆளப்பட்டது. நயன் என்ற சொல்லுக்கு நீதி அல்லது நடுவுநிலைமை (உலகத்தோடு பொருந்துதல்) எனவும் பொருள் கூறுவர். நயனொடு என்பதற்குச் சமுதாயம் விரும்பும் உணர்வோடு என்பது பொருத்தம்.
நன்றி என்ற சொல் நன்மை எனப்பொருள்படும். நன்மை என்பது இங்கு பொருள் கொண்டு அறம் செய்தலைக் குறிக்கும். நீதியும் அறமும் பொருந்தியவர்கள் மற்றவர்கள் பயன் கொள்ளத்தக்க வகையில் வாழ்வர். அத்தகையோரைப் 'பயனுடையார்' என்ற சொல்லால் குறள் குறிக்கிறது. பயனுடையார் என்பது பிறருக்குப் பயன்பட வாழ்பவர் ஆவார்.
அவ்வாறு நடுநிலைமை கொண்டு அறநெஞ்சினராய் வாழும் பண்பை உலகம் போற்றிக் கொண்டாடும்.
விரும்பப்படுபவராக அதாவது மக்களின் நன்மதிப்பு பெற்றவராக இருக்கிறார்; நன்மைகளை விரும்பிச் செய்கிறார். அவரை உலகம் கொண்டாடாமல் விடுமா?

'நன்றி புரிந்த' என்ற தொடர் குறிப்பதென்ன?

'நன்றி புரிந்த' என்றதற்கு நன்னெறியின்கண்ணே பொருந்தின, நன்றி புரிந்த, நல்லறமும் தாங்கிய, அறத்தையும் விரும்புதலால், தருமத்தையும் விரும்பியிருக்கிற, நன்மையையும் விரும்பி, நன்மையை விரும்பிச்செய்பவராயும், நன்மையையும் விரும்பிச் செய்யுமாற்றால், நன்மை செய்து, நன்மை செய்த, நன்மையும் செய்கிற, நன்மை செய்தலையும் விரும்பிய, நன்மையையும் விரும்பி, நன்மையையும் விரும்பிச் செய்து, வேண்டுமளவு நன்மை செய்கின்ற, நல்வினையையும் விரும்புதலால், நன்மை செய்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நன்றி புரிந்த என்ற தொடர்க்கு நன்மை செய்த என்றும் நன்மையை விரும்பிச் செய்த என்றும் பொருள் கூறப்பட்டது. இவற்றுள் நன்மையை விரும்பிய என்பது சிறக்கும்.

விரும்பப்படுதலோடு நன்மை செய்த பயனுள்ளவரது பண்பினை உலகோர் போற்றுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறருக்குப் பயன்படுமாறு வாழ்தல் கொண்டாடப்படும் பண்புடைமையாம்.

பொழிப்பு

விரும்பப்படுதலோடு நன்மை செய்த வாழ்க்கையுடையாரது பண்பினை உலகோர் போற்றுவர்.