இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0992



அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

(அதிகாரம்:பண்புடைமை குறள் எண்:992)

பொழிப்பு (மு வரதராசன்): அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

மணக்குடவர் உரை: .........................................................

பரிமேலழகர் உரை: அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்பு உடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி.
(அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பிறர் மேல் அன்புடையனாதலும் நல்லியல்புகள் அமைந்த குடிப்பிறப்பிற்கேற்ற குணஞ்செயல்களுடையனாதலும் ஆகிய இவை இரண்டும் பண்புடைமை என்று உலகோர் சொல்லும் நன்னெறியாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

பதவுரை: அன்புடைமை- அன்பு உடையனாதல்; ஆன்ற-(உலகத்தோடு, நல்லியல்புகள்) அமைந்த; குடிப்பிறத்தல்-நற்குடியில் தோன்றுதல்; இவ்விரண்டும்-இவை இரண்டும்; பண்புடைமை-பண்புடைமை; என்னும்-என்கின்ற; வழக்கு-நன்னெறி.


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: யாவர்மாட்டும் அன்புடைமையும் அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; [அமைந்த குடி - அறிவறிந்து அடங்கிய குடி]
பரிப்பெருமாள் குறிப்புரை: அன்புடையவனாகப் பிறர் வருத்தத்திற்குப் பரிதலும், கலந்து ஒழுகுதலும், கொடுத்தலும் முதலாயின உளவாம்; குடிப்பிறப்பினானே பழிப்படுவ செய்யாமையும் புறன்கூறாமையும் முதலாயின உளவாம்; ஆதலான் இவ்விரண்டினையும் உடைமை பண்புடைமை என்று கூறப்பட்டது.
பரிதி: அன்புடைமை குடிப்பிறத்தல் இவ்விரண்டும்;
காலிங்கர்: யாவர் மாட்டும் பரிவுடைமை, நெறி அமைந்த தம் குடிப்பிறப்பு என்னும் இவை இரண்டும் ஒருவர்க்கு உளது ஆயின்; [பரிவுடைமை - அன்புடைமை]
பரிமேலழகர்: பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்;
பரிமேலழகர் குறிப்புரை: அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். [ஒத்து வருதல் - உலகத்தோடு ஒத்து ஒழுகுதல்]

'யாவர் மாட்டும் பரிவுடைமை, நெறி அமைந்த தம் குடிப்பிறப்பு என்னும் இவை இரண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பு கொள்ளுதலும் குடிக்கேற்ப ஒழுகுதலும் இரண்டும்', 'ஒருவன் அன்புடையவன் என்று சொல்லப்படுவதும் நல்ல குடியிற் பிறந்தவன் என்று போற்றப்படுவதும் ஆகிய இந்த இரண்டும்', 'யாரிடத்தும் அன்புடைமையும் உயர்ந்த குடிப்பிறப்புமாகிய இரண்டும்', 'அன்புடையன் ஆதலும், நற்குணங்கள் அமைந்த குடியின் கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

யாரிடத்தும் அன்புடைமையும் நற்குணங்கள் அமைந்த குடும்பத்திற்கேற்ற குணங்களுடையனாதல் ஆகிய இவ்விரண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

பண்புடைமை என்னும் வழக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: பண்புடைமை என்று உலகத்தார் வழங்கப்படுகின்றது என்றவாறு.
பரிதி: பண்புடைமை என்றவாறு.
காலிங்கர்: பண்புடைமை என்னும் முறைமை ஆம் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி.
பரிமேலழகர் குறிப்புரை: காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.

'பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பண்பான நெறிகளாம்', 'அவனிடத்தில் பண்புடைமை என்ற ஒழுக்கம் இருப்பதனால்தான்', 'பண்புடையன் எனப்படுவதற்கு வழியாகும்', 'பண்புடைமை என்று சொல்லப்படும் நன்னெறியாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பண்புடைமை என்று சொல்லப்படும் நெறியாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
யாரிடத்தும் அன்புடைமையும் ஆன்ற குடிப்பிறத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்புடைமை என்று சொல்லப்படும் நெறியாகும் என்பது பாடலின் பொருள்.
'ஆன்ற குடிப்பிறத்தல்' குறிப்பது என்ன?

அன்புள்ளம், நல்ல குடும்பச்சூழல் இவை இரண்டும் பண்புடைமைக்கு வழியமைக்கும்.

அன்புடையராக இருத்தலும் நல்ல குடும்பப்பின்னணி உடையவராக இருத்தலும் ஆகிய இவ்விரண்டும் பண்புடைமை என்று உலகோர் சொல்லும் நல்ல வழியாகும்.
அன்புடைமைக்கும் குடும்பச்சூழலுக்கும் தக்கவாறு ஒருவருடைய பண்பு ஓங்கும். அன்பு என்பது தொடர்புடையாரிடத்து உண்டாகும் நெகிழ்ச்சி என்ற பொருளில் அன்புடைமை அதிகாரத்துக் குறள்கள் அமைந்தன. மற்ற அதிகாரத்துப் பாடல்களில் சொல்லப்பட்ட அன்பு என்பது பிறர்மீது உண்டாகும் அன்பு பற்றிச் சொல்வன. இங்கு சொல்லப்படும் அன்பு தாம் கலந்து பழகும் மாந்தரிடம் காட்டும் அன்பைச் சொல்வதாம். இக்குறளுக்குப் பரிப்பெருமாள் என்னும் உரையாசிரியர், 'அன்புடையனாகப் பிறர் வருத்தத்திற்குப் பரிதலும் கலந்து ஒழுகுதலும் கொடுத்தலும் முதலாயின உளவாம். குடிப்பிறப்பினானே பழிப்படுவ செய்யாமையும் புறங்கூறாமையும் முதலாயின உளவாம். ஆகலான் இவ்விரண்டினையும் உடைமை பண்புடைமை என்று கூறப்பட்டது' எனத் தெளிவான விளக்கம் தருவார். இவ்வுரையின்படி அன்புடைமை என்பது பிற உயிர்களின் துன்பங்களுக்கும் வருந்துதலும், அனைவருடனும் அளவளாவி ஒழுகுதலும், எல்லோர்க்கும் முடிந்த அளவுக்கு உதவுதலும் அன்புடைமையாகும் என்ற பொருள் தருவது. காலிங்கர் என்ற மற்றொரு உரையாளர் 'அன்புடைமை என்பதற்குப் பரிவுடைமை' எனப் பொருள் கூறினார். இவ்வுரையில் பரிவுடைமை என்பது அன்பின் வெளிப்பாடாகிய இரங்கற் பொருளில் வந்தது.
அன்பும் குடிப்பிறப்பும் தாமாக வலிந்து மேற்கொள்ளத் தகாதனவாய் இயற்கையே அமையவேண்டுவதாதலால் பண்புடைமையாயின. 'அன்புடைமை, குடிப்பிறப்பு இரண்டுமே தாமே எய்தினன்றி தேடிக் கொள்வதன்று; ஆயினும் 'அன்புடையனாதலும்' என்ற உரை ஆக்கம்போற் குறித்தல் கொண்டு உயிர்க்குணமாகிய அன்பை வெளிப்படச் செய்தலாகிய செயற்கையையும் பிறப்பாகிய இயற்கையையும் இணைத்துப் பண்பென்றார் என்க' என்பார் தண்டபாணி தேசிகர்.

'அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல் என்னும் இரண்டனுள் ஒன்று தனித்துள்ளவிடத்துப் பண்புடைமை உண்டாகாது. இவ்விரண்டும் கூடிய விடத்தே அப்பண்புடைமை உண்டாவது என்பது தோன்ற, இவ்விரண்டும் என முற்றும்மை கொடுத்தார்' என்பது பரிமேலழகர் உரை.
முன்குறள் (991) 'எவரும் எளிதாக அணுகக்கூடிய தன்மை உண்டானால் பண்புடைமை எய்தல் எளிது' என்கிறது. இக்குறளில் 'அன்புடைமை, நற்குடிப்பிறப்பு ஆகிய இரண்டுமே பண்புடைமையாம் என உலகம் வழங்கும்' எனச் சொல்லப்படுகிறது. ஆதலால் இம்மூன்றியல்புகளுமே பண்புடைமைக்கு இலக்கணம் ஆகும் என வள்ளுவர் கருதுகிறார் எனக் கொள்ளலாம்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு (தூது 681 பொருள்: நாட்டுப் பற்றுடைமை நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் ஆள்வோர் விரும்பும் மரபு உடையனுமாய் இருத்தல் தூதுவனுக்கு உரிய இயல்புகள்) என்ற தூது அதிகாரத்துப் பாடலிலேயும் இங்கு சொல்லப்பட்டது போலவே அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல் ஆகிய இரண்டுபண்புகளும் இணைத்து உரைக்கப்பட்டன. இவை தவிர்த்து ஒரு வேந்தன் தூதுவனிடத்தில் விரும்பும் பண்புடைமையும் சேர்த்துத் தூதுவன் பண்பு ஆகும் எனச் சொல்லப்பட்டது.

குறளில் சில சொற்களும் சொற்றொடர்களுள் பலமுறை பயின்று வந்துள்ளன. 'பண்புடைமை என்னும் வழக்கு' என்ற தொடர் அடுத்தடுத்து (991, 992) இருகுறளில் ஈற்றடியாக வந்துள்ளது. இதே தொடர் முந்தைய 991ஆம் பாடலிலும் பயிலப்பட்டது.

'ஆன்ற குடிப்பிறத்தல்' குறிப்பது என்ன?

'ஆன்ற குடிப்பிறத்தல்' என்ற தொடர்க்குக் குடிப்பிறத்தல், அமைந்த குடியின்கண் பிறத்தல், நெறி அமைந்த குடிப்பிறப்பு, உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தல், நல்ல குடியிலே பிறந்து உலகத்துக் கேற்க நடக்கிறது, உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல், சிறந்த குடியிற்பிறந்தார்க்கேற்ற நற்செயல்களையுடையராதல், கல்வி கேள்விகளில் சிறந்த குடிப்பிறத்தல், குடிக்கேற்ப ஒழுகுதல், நல்லியல்புகள் அமைந்த குடிப்பிறப்பிற்கேற்ற குணஞ்செயல்களுடையனாதல், நல்ல குடியிற் பிறந்தவன் என்று போற்றப்படுவது, சிறந்த குடியில் பிறத்தல், உயர்ந்த குடிப்பிறப்பு, நற்குணங்கள் அமைந்த குடியின் கண் பிறத்தல், உயர்ந்த குடிப்பிறப்பு உடையவராக இருத்தல், அருமை பெருமை மிக்க நற்குடிப் பண்போடு நடந்துகொள்ளுதல், எல்லா நல்லிணக்கமும் அமைந்த குடியிற் பிறத்தல், உயர்குடிப் பிறப்பு, நல்ல குடும்பம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஆன்ற என்ற சொல் அமைந்த என்ற பொருள் தரும். ஆன்ற குடிப்பிறத்தல் என்பது அமைந்த குடும்பத்தில் பிறத்தல் என்ற பொருளது. அமைந்தது எது? நெறியில் அமைந்ததா? உலகத்தோடு அமைந்ததா? நல்லியல்புகள் அமைந்த என்பது பொருத்தம். எனவே ஆன்ற குடிப்பிறத்தல் என்பது நல்லியல்புகள் அமைந்த குடும்பத்தில் தோன்றியது எனப் பொருள்படும். நல்லகுடும்பத்தில் தோன்றியவர் இயல்பாக நற்பண்புகளைப் பெற்றிருப்பர் என்பது பொதுவான கருத்து. அமைதல் என்பதற்கு ஒத்து வருதல் எனப் பொருள் கூறினார் பரிமேலழகர்; ஒத்து வருதல் என்பது உலகத்தோடு ஒத்து ஒழுகுதல் எனப் பிறர் விளக்கினர்.
பரிப்பெருமாள் குடிப்பிறத்தலுக்கு 'குடிப்பிறப்பினானே பழிப்படுவ செய்யாமையும் புறன்கூறாமையும் முதலாயின உளவாம்' எனச் சிறந்த விளக்கம் தந்தார்.

'ஆன்ற குடிப்பிறத்தல்' என்பது நல்லியல்புகள் அமைந்த குடும்பத்திற்கேற்ற குணங்களுடையனாதல் என்ற பொருள் தரும்.

யாரிடத்தும் அன்புடைமையும் நற்குணங்கள் அமைந்த குடும்பத்திற்கேற்ற குணங்களுடையனாதல் ஆகிய இவ்விரண்டும் பண்புடைமை என்று சொல்லப்படும் நெறியாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அன்போடியைந்த இயல்பான நற்குணங்கள் பண்புடைமையாம்.

பொழிப்பு

பிறரிடத்து அன்புடைமை, நல்லியல்புகள் அமைந்த குடும்பத்திற்கேற்ப ஒழுகுதலையுடைதல் ஆகிய இவை இரண்டும் பண்புடைமை என்று உலகோர் சொல்லும் நன்னெறியாகும்.