இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0990



சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை

(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:990)

பொழிப்பு (மு வரதராசன்): சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்விடும்.

மணக்குடவர் உரை: ........................................................

பரிமேலழகர் உரை: சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலந்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும்.
('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான் அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: பல நற்குணங்களாலும் நிறைந்த சான்றோர் தமது நிறைவுடைய அத் தன்மையில் குறைவராயின் இப்பெரிய மண்ணுலகம் தான் தாங்கும் சுமையைத் தாங்கமாட்டாது அழிந்துபோகும். சான்றோர் உண்மையால் உண்டு இவ்வுலகமாதலின், அச்சான்றோரே பண்பு நலனிற் குறைவராயின் , உலகம் தலைகீழாகி அழியுமாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் பொறை தாங்காது மன்னோ.

பதவுரை: சான்றவர்-நற்குணங்கள் பலவும் நிறைந்தவர்; சான்றாண்மை-நற்குணங்களால் நிரம்பிய ஆளுந்தன்மை; குன்றின்-குறைந்தால்; இரு-பெரியதாகிய; நிலந்தான்-பூமிதான்; தாங்காது-பொறுக்காது; மன் - (இடைச்சொல்-ஒழியிசைப் பொருளில்- ஒழியிசையாவது எச்சமாய் ஒழிந்து நின்ற சொற்பொருளை உணர்த்துவதாம்.); ஓ-(இடைச்சொல் -அசைநிலைப் பொருளில்); பொறை-சுமை.


சான்றவர் சான்றாண்மை குன்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: சான்றார் தமது தன்மை குறைவர் ஆயின்;
பரிதி: சான்றவர் நீதி மார்க்கத்தில் நடவாதபோது;
காலிங்கர்: சான்றவர் தமது சான்றாண்மை சிறிது குன்றின்;
பரிமேலழகர்: பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்;

'சான்றவர் தமது தன்மை குறைவர் ஆயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிறைந்தவர் நிறைகுணம் குறைந்தால்', 'குணங்களால் நிறைந்தவர் தம் இயல்பு குறைவாராயின்', 'சான்றோர்கள் தம்முடைய சான்றாண்மைக் குணத்தில் குறைந்தால்', 'பெரியோர் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: பெரிய நிலமானது உயிர் முதலாகிய பாரத்தைத் தாங்குதல் கழியும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவர்களும் தானுமாய்ப் பொறுக்கின்றதனைத் தனிப் பொறுக்கல் ஆகாது என்று ஆயிற்று. மேல் ஊழி பெயரினும் சான்றோர் நிலை குலையார் என்றார்; இது சான்றோர் நிலை குலையின் ஊழிபெயரும் என்றது.
பரிதி: பெருமை பெற்ற பூமி கவிழ்க்கும் அல்லது பொறை பொறுக்காது என்றவாறு.
காலிங்கர்: இப்பெருநிலம் தான் தாங்குதல் உடைய அல்ல பாரம்; எனவே, இவர் சிலரின்றி அனைவரும் பாவியராயினராயின் ஆற்றவல்லாது இப்பூமி என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: மற்றை இரு நிலந்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான் அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.

'இரு நிலந்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலம் பாரம் பொறுக்குமா?', 'இப்பெரிய உலகமும் பாரம் தாங்காது', 'இப்பெரிய பூமி, தான் சுமந்து கொண்டிருக்கிற (சான்றவர்களல்லாத மற்றவர்) பெரும்பாரத்தைத் தாங்காது போலத் தோன்றுகிறது', 'பெரிய பூமியும் தன் பாரத்தைத் தாங்காது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெரிய பூமியும் சுமையைத் தாங்க இயலாது போம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் பெரிய பூமியும் தாங்காது பொறை என்பது பாடலின் பொருள்.
'தாங்காது பொறை' குறிப்பது என்ன?

சான்றாண்மையின் துணையுடன்தான் உலகம் நிலை நிற்கிறது.

பல நற்குணங்களாலும் நிறைந்த சான்றோர் தம் தன்மைகளில் குன்றுவாரானால் இந்தப் பெரிய உலகமானது தன்னுடைய பாரத்தைத் தாங்க முடியாததாகி அழிந்து போகும்.
முன்குறள் (988) ஊழி பெயரினும் சான்றோர் நிலை குலையார் என்றது; இப்பாடல் சான்றோர் நிலை குலையின் உலகநிலை குலையும் என்கிறது. சான்றவர்களுடன் இணைந்து பூமி உலகச் சுமையைப் பொறுத்துக்கொண்டு நிலைபெற்றிருக்கச் செய்கிறது. அது அங்ஙனம் சுமந்து நிற்பது சான்றோர் தங்கள் இயல்பாகிவிட்ட நற்குணங்களோடு ஒழுகுவதால்தான்.
கொடியவர்கள் நல்லவர்களாவதும், பெரியவர்கள் கொடியவராய்த் திரிதலும் உலகில் நடப்பனவே. குன்றின் அனையாரும் குன்றும் தன்மையரே. அவ்விதம் சான்றோர் தங்கள் குண நலன்களிலிருந்து பிறழ்ந்து நடப்பார்களானால், உலகம் நிலை கலங்கும்; அந்தச் சுமையைப் பூமி தனியே தாங்க இயலாது என்கிறது பாடல். சான்றோர் தங்கள் சால்புக் குணங்களான அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, பிறர்தீமை சொல்லாமை, பணிவு, தோல்வியை எல்லோரிடமும் ஏற்றுக்கொள்ளல், இன்னா செய்தார்க்கும் இனிய செய்தல் போன்றவற்றிலிருந்து குன்றுவராயின் அது இப்புவியில் வாழும் அனைத்து மக்களையும் பாதிப்படையச் செய்யும். வன்முறையாலும் உட்பகையாலும் மக்கள் சிதறுண்டு போவர். அது சமயம் பூமி தன் வலுவிழந்து மக்களைச் சுமக்க இயலாது போகும். சான்றாண்மை குன்றிய உலகை இந்நிலம் பொறுக்க இயலாது.
உலகம் வழுக்காது வாழ்ந்து வருவதற்குச் சான்றோர்களின் நல்ல குணங்களே வழிகாட்டிகளாக இருக்கின்றன. அச் சான்றோர்களின் வாழ்வு, பேச்சு, எழுத்து, அறிவுரை, ஆக்கங்களே நமக்கு வழிகாட்டிகளாக அமைந்து நிலவுலகம் மேம்படுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளன. அவர்கள் இல்லையென்றால், இன்று காணப்படும் வாழ்வுநிலை, உயர்வுகளை உலகம் கொண்டிருக்காது,
சான்றாண்மைக் குணங்களே உலகத்தை சமநிலையில் நிறுத்துகிறது. அவர்களின் உயர் பண்புகளால்தாம் உலகம் நிலைத்திருக்கிறது.

பொறுமைக்கு அடையாளமாகக் காட்டப்படுவது நிலம்; அது தன்னை அகழ்வாரையும் தாங்கும். சான்றோர் தம் இயல்பில் குறைவு பட்டால் அதன் பொறுமைத் தன்மையும் போய் விடும். பண்புகளால் மேன்மையுற்றோர், தமது இயல்பிலிருந்து பிறழ்ந்தால் இப்பெருநிலம் அதைப் பொறுத்துக் கொள்ளாது. சான்றவர் தம் தன்மையில் நிலைபடுதல் வலியுறுத்தப்படுகிறது.

'தாங்காது பொறை' குறிப்பது என்ன?

பொறை என்ற சொல் சுமை என்று பொருள்படும். தாங்காது பொறை என்றது பாரத்தைத் தாங்காது என்ற பொருள் தரும். இங்கு பூமியே தனது பாரத்தைத் தாங்கமுடியாமல் விழுந்துபடும் எனச் சொல்லப்படுகிறது. சால்புக் குணங்களே பூமியை மென்மையாய் மாற்றி வாழத்தகுவதாக்குகிறது. சுமைகூடிய உலகைச் சான்றோர் தம் நற்குணங்களால் பாரம் குறையச் செய்கிறார்கள். காலிங்கரும் பரிப்பெருமாளும் 'நிலம் தான் மட்டும் சுமப்பதில்லை. சான்றோரும் சான்றாண்மையால் பங்குகொண்டு சுமக்கின்றனர். அதனால் சுமக்கிறது' என்ற பொருளில் உரை கூறினர். பழைய உரை ஒன்று 'நல்லோரைத் தாங்குவதால் மலைகளையும், கடல்களையும், தீவுகளையும், உடன் தாங்குகிறதேயன்றி நல்லோரிலராயின் ஒன்றையுந் தாங்காது' என இக்குறட்பொருளை விளக்கும். மு கோவிந்தசாமி 'கூலியாள் கூலிக்காகச் சுமப்பதுபோல இருநிலம் சான்றாண்மைக்காகச் சுமக்கிறது; சான்றோர் தம் சால்புக்குணம் குறைந்தால் பூமிபாரம் பொறுக்காமல் இயற்கை மாறுபடும்' எனப் பொருளுரைப்பார்.
உலகத்துச் சான்றோர்கள் அனைவரது ஆற்றலாலும் உலகம்தாங்கப்பெற்று இயங்குகிறது. அவர்கள் இல்லையென்றால் அது பிளவுபட்டு அழிந்துபடும். இப்பெருநிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருவதால்தான் அதாவது சுமையைப் பூமியும் சான்றோர்களும் சேர்ந்து பொறுக்கின்றனர். சான்றாண்மை குன்றியபோது பூமி அது தானாகவே பொறுக்கல் இயலாது; அப்பாரத்தைத் தனியாகத் தாங்க முடியாமல் வலுவிழக்கும்.

சான்றோர்கள் வாழும் இவ்வுலகில்தான் பயனற்ற வீணர்களும் உறைகிறார்கள். அவர்கள் பூமிக்குப் பாரமாகவே உள்ளனர். அத்தகையோரை வள்ளுவரே அடையாளம் காட்டியுள்ளார். அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை (புறங்கூறாமை 189 பொருள்: யாரும் இல்லாதவாறு பார்த்து ஒருவரைப் பற்றி இகழ்ந்துரைப்பானது உடல் சுமையை அறம் கருதி இவ்வுலகம் சுமக்கின்றது), கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை (வெருவந்த செய்யாமை 570 பொருள்: கடுங்கோல் ஆட்சி அறிவில்லாதாரை ஈர்க்கும்; பூமிக்குச் சுமையாவது அதுவன்றி வேறொன்று இல்லை), கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை (கண்ணோட்டம் 572 பொருள்: உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது; அப்பண்பு இல்லாதார் உள்ளமை நிலத்திற்குச் சுமையாகும்) ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை (நன்றியில் செல்வம் 1003 பொருள்: சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்) எனப் புறங்கூறுபவர்கள், வெங்கோலர்கள், கண்ணோட்டமில்லாதவர்கள், பொருளாசை கொண்டவர்கள் போன்றோர் உலகுக்குப் பொறையாவர் என்றார். தமது பண்பு நலன்களிலிருந்து விலகிய சான்றோர்களும் பூமிக்குச் சுமையாவார் வரிசையில் சேர்க்கப்படுவார். அப்பொழுது இந்தப் பெரிய உலகமும் தாங்க முடியாத பாரமாகி விடும்.

'தாங்காது பொறை' என்ற தொடர் இப்பேருலகம் தன் சுமையையும் தான்தாங்க மாட்டாதது ஆகிவிடும் என்ற பொருள் தருவது.

சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் பெரிய பூமியும் சுமையைத் தாங்க இயலாது போம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சான்றாண்மை குறைந்திட நிலம்தன் வலுவிழந்து பாரந்தாங்கும் ஆற்றல் இல்லாது போய்விடும்.

பொழிப்பு

சான்றோர் நிறைகுணம் குறைந்தால் இப்பெரிய உலகமும் சுமை தாங்கமாட்டாது.