இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0989



ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:989)

பொழிப்பு (மு வரதராசன்): சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப் படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.



மணக்குடவர் உரை: சான்றாண்மைக்கு ஒரு கடல் என்று சொல்லப்படுவார்கள், காலம் தனது தன்மை குலையினும் தாம் நின்ற நிலை குலையார் என்றவாறு.
இது சான்றார் நின்ற நிலைகுலையார் என்றது.

பரிமேலழகர் உரை: சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார்.
(சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ' (புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: சான்றாண்மையின் ஆழ்கடலாக விளங்கும் பெரியோர் இயற்கை சீறிச் சினந்து உலகத்தைச் சீர்குலைக்கும் வேளையிலும் தம் உறுதி குலையார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் ஊழி பெயரினும் தாம் பெயரார்.

பதவுரை: ஊழி-காலம். ஊழிக்காலம், பெருவெள்ளத்தால் உலகம் முடியும் காலம், அழிவுக்காலத்தால்; பெயரினும்-மாறுபட்டாலும்; தாம்-தாங்கள்; பெயரார்-மாறுபடமாட்டார்கள்; சான்றாண்மைக்கு-நற்குணங்கள் ஆளுமைக்கு; ஆழி-கடல்,கடற்கரை; எனப்படுவார்-என்று சொல்லப்படுவார்.


ஊழி பெயரினும் தாம்பெயரார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காலம் தனது தன்மை குலையினும் தாம் நின்ற நிலை குலையார்;
மணக்குடவர் குறிப்புரை: இது சான்றார் நின்ற நிலைகுலையார் என்றது.
பரிப்பெருமாள்: காலம் தனது தன்மை குலையினும் நின்ற நிலை குலையார்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சான்றார் நின்ற நிலைகுலையார் என்றது.
பரிதி: ஊழிக்காலம் வந்தாலும் நிலைபெயரார்;
காலிங்கர்: அயன் ஊழியாகிய கற்ப காலம் பெயரும் காலத்து அவன் படைப்பு ஆகிய உலகு போந்து அழியுமன்றே; அவ்வாறு அயன் ஊழி பெயரினும் தாம் தமது சான்றாண்மையின் பெயரார்; [அயன் ஊழியாகிய கற்பகாலம் - பிரமன் அழியும் காலம்; பெயரும் - அழியும்; போந்து - தோன்றி]
பரிமேலழகர்: ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார்.

'காலம் தனது தன்மை குலையினும் தாம் நின்ற நிலை குலையார்' என்ற பொருளில் மணக்குடவர் பரிப்பெருமாள் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'ஊழிக்காலம் வந்தாலும் நிலை பெயரார்' என்கிறார். காலிங்கர் 'அயன் ஊழியாகிய கற்பகாலம் பெயரினும் தமது சான்றாண்மையின் பெயரார்' எனப் பொருள் தருவார். பரிமேலழகர் 'கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காலம் பிறழ்ந்தாலும் தாம் ஒழுக்கம் பிறழார்', 'ஊழிக்காலத்தில் கடல்கள் பெயர்ந்தாலும் தாம் தம் நிலையினின்றும் மாற மாட்டார்கள்', 'யுக முடிவு ஏற்பட்டு உலகங்களெல்லாம் நிலை கலங்கினாலும் தாம் தம்முடைய சான்றாண்மையில் நிலை கலங்க மாட்டார்கள்', 'ஊழிக்காலம் வேறுபட்டாலும் தாம் நற்குணங்களிலிருந்து வேறுபடார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பேரிடர் காலத்தில் உலகம் நிலைமாறினாலும் தாம் நற்குணங்களிலிருந்து பிறழார் என்பது இப்பகுதியின் பொருள்.

சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றாண்மைக்கு ஒரு கடல் என்று சொல்லப்படுவார்கள்.
பரிப்பெருமாள்: சான்றாண்மைக்கு ஒரு கடல் என்று பிறரால் சொல்லப்படுபவர்கள்.
பரிதி: சான்றாண்மை என்னும் சமுத்திரம் பெற்றவர் என்றவாறு.
காலிங்கர்: யாவர் எனின் இவர் சான்றாண்மைக்கு ஒரு தனிச்சாகரம் என்று பல நூலினும் எடுத்துரைக்கப்படும் பண்பினர் என்றவாறு. [தனிச் சாகரம்- ஒப்பற்ற கடல்]
பரிமேலழகர்: சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்.
பரிமேலழகர் குறிப்புரை: சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ' (புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம். [அதனைத் தாங்கிக் கொண்டு - சான்றாண்மையாகிய கடலைத் தாங்கிக் கொண்டு; அஃதுடையாரை - சான்றாண்மையுடையவரை]

'சான்றாண்மைக்கு ஒரு கடல் என்று சொல்லப்படுவார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'கடல்' என்னாது 'கடற்குக் கரை' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிறைகுணம் என்னும் கடலுக்குக் கரையானவர்', 'சான்றாண்மைக்குக் கடல் என்று சிறப்பித்துக் கூறப்படுபவர்கள்', 'சான்றாண்மை என்னும் பெருங்குணம் நிரம்பிய சமுத்திரம் போன்றவர்கள் என்னத்தகுந்த பெரியோர்கள்', 'சால்புடைமைக்குக் கடல் போன்று இருப்பவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சான்றாண்மைக்குக் கடல் என்று கூறப்படுபவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சான்றாண்மைக்குக் கடல் என்று கூறப்படுபவர்கள் ஊழி பெயரினும் தாம் நற்குணங்களிலிருந்து பிறழார் என்பது பாடலின் பொருள்.
'ஊழி பெயரினும்' என்றால் என்ன?

எந்த மாறுபட்ட புறச்சூழலும் சான்றோரது நற்குணங்களைத் திரிவுபடச் செய்யாது.

ஊழிக்காலத்தில் உலகம் நிலை மாறினாலும் குணக் கடல் என்று சொல்லப்படுபவரான சான்றோர் தாம் நிலைதிரிய மாட்டார்.
சான்றாண்மையாவது பல நற்குணங்களால் நிறைந்து அவற்றை ஆளுந்தன்மையைக் குறிக்கும். அக்குணங்களை உடையவர் சான்றோர் எனப்படுவர். இவர்கள் கடல் போன்ற சால்புக் குணம் கொண்டவர்கள், கடல் என்றும் கரைகடவாது நிற்கும். ஆனால் ஊழிக்காலத்து நிலை மீறும். அப்பொழுது உலகநிலையில் பெரும் மாறுதல்கள் தோன்றும். அந்தநிலையிலும் சால்பென்னும் திண்மை உண்டாகப் பெற்றவர்கள் தம் சான்றாண்மையிலிருந்து பிறழார் என்கிறது பாடல்.

மற்ற தொல்லாசிரியர்கள் ஆழி என்பதற்குக் கடல் எனப் பொருள் கொள்ள பரிமேலழகர் ஆழி என்பதற்குக் கரை என்று பொருள் கொண்டு அதற்கான விளக்கமும் அளித்துள்ளார். அவர் ஆழி என்பதற்குக் கடற்கரை என்ற பொருளில் அமைந்த புறநானூற்றுப் பாடலையும் மேற்கோள் காட்டினார். அச்செய்யுள்:
வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்த னொருவ னாகித்
தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்
காழி யனையன் மாதோ வென்றும்
(புறநானூறு.330 பொருள்: தன் வேந்தனுடைய படைப் பகுதியின் முன்னணியானது கெட்டழியுமாறு பகைப்படை நெருக்கி யடர்த்தலால், உயர்ந்த வாளை வலக்கையில் தாங்கிப் பொருவோன் தான் ஒருவனேயாய் நின்று, நேர்வரும் அப் பகைவரது பெரும்படை தன்னைக் கடந்து மேலே செல்லாதபடி இடைநின்று தாக்கித் தடுப்பதால்; பெரிய கடலுக்கு (அதன் நீரை அளவு கடந்து வராதபடி விலக்குகின்ற கரையை) ஒத்தவன்.)
சால்பின் பெருமை பற்றி அதனைக் கடலாக்கியும், அதன் எல்லையில் நிற்றலின் அதை யுடையாரை அதன் கரையாக்கியும் பரிமேலழகர் உரைத்தார். சால்பு என்னும் கடல் போன்ற பண்பிற்குச் சான்றோர்கள் கரைபோல் அமைந்து தாங்கியிருப்பர் என விளக்கினார். சான்றாண்மைக் கடலுக்குக் கரையெனத் தகும் நிலையுயர்ந்தார் ஊழி பெயரினும் தம் நிலை பெயரார் என்பது அவர் உரைக்கருத்து. இங்கு ஊழிக்காலத்திலும் தன்னிலை மாறாது நிற்கும் கடலின் கரையை உருவகமாக்கி சான்றோரை நம் கண்முன்னே காட்டப்படுவதாக உள்ளது. தண்டபாணி தேசிகர் இக்குறளுக்கான கருத்துரையில் ''நீருழியிற் கடல் பெயரும், கரையென்னும் எல்லை பெயராது' என்க' என்று பரிமேலழகரை வழிமொழிவார் போன்று கருத்துரைத்தார்.

ஊழிக்காலத்தில் உலகமே நிலை பெயர்ந்து நிற்கும்போது சான்றோர்கள் மட்டும் பெயரமாட்டார்கள் என்று வள்ளுவர் கூறுவதால், சான்றாண்மையை அவர் எவ்வளவு சிறப்பானதாகக் கருதுகிறார் என்பது புலப்படும். எத்தகு சூழலிலும் தம் நிலையிலிருந்து வழுவாது வாழும் பெற்றிமைத் தன்மையே ஒருவர்க்குத் தம்மையே ஆளக்கூடிய நிலையைத் தரும். அப்பெருமித நிலையில் எந்த இடர் விளைவிக்கும் நிகழ்வுகளும் அவரைத் தாக்காது. உலகத்திலே உண்டாகும் குழப்பங்களும் மாறுபாடுகளும் சான்றோரை மாற்றிவிடமுடியாது. எந்தவித இன்னலும் எந்தவகைத் துன்பமும் அவரை அவரது குணங்களினின்றும் மாற்ற முடியாது. பதவி, செல்வம், நற்பெயர் ஆகியன கிடைக்குமென்று இருந்தால், எதைச் செய்யவும் எதையும் விட்டுவிடவும் ஆயத்தமாகப் பலர் இருக்கும்போது சால்பு நிறைந்தவர் அவ்விதம் நிலை மாறுவதில்லை. இவர்கள் நிலை மாறாதிருப்பதால் உலகத்தை நிலைநிறுத்தும் வல்லமை உடையவராகவும் திகழ்கின்றனர். இங்ஙனம் ஊழிக்காலத்திலும் சான்றோர்களின் மேன்மை நிலை தாழாமையை இப்பாடல் விளக்கிற்று.

'ஊழி பெயரினும்' என்றால் என்ன?

'ஊழி பெயரினும்' என்ற தொடர்க்குக் காலம் தனது தன்மை குலையினும், ஊழிக்காலம் வந்தாலும், அயன் ஊழியாகிய கற்ப காலம் பெயரும் காலத்து அவன் படைப்பு ஆகிய உலகு போந்து அழியுமன்றே, கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும், உலகமாகிய பூமி பெயர்ந்தாலும், உகந்த காலம் வருங்காலத்து அன்றி வாராக்காலத்து வந்தாலும், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும், ஊழிக் காலத்தே கடலும் கரையுள் நில்லாது உலகமே திரிந்தாலும், ஊழி மாறினாலும், காலம் பிறழ்ந்தாலும், ஊழிக்காலத்தில் கடல்கள் பெயர்ந்தாலும், யுக முடிவு ஏற்பட்டு உலகங்களெல்லாம் நிலை கலங்கினாலும், இயற்கை தம் நிலையில் இருந்து மாறினாலும், ஊழிக்காலம் பிறழ்ந்தாலும், ஊழிக்காலம் வேறுபட்டாலும், ஊழிக்காலத்தில் உலகமே நிலை மாறினாலும், இயற்கை சீறிச் சினந்து உலகத்தைச் சீர்குலைக்கும் வேளையிலும், கடல்கள் கரை புரளும்படி காலம் மாறுபட்டாலும், ஊழிமுடிந்து உவர்க்கடல் கரைகடப்பினும், உலகமே மாறினாலும், பிரளயம் வந்தாலும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஊழி என்பது எதைக் குறிக்கின்றது? ஊழி என்பது நீண்டதொரு காலப்பகுதி (Era) என்பது அகராதி தரும் பொருள்.
பொதுவாக முற்றிலும் அழிந்து உலகம் முடிவுக்கு வரும் காலத்தைக் குறிப்பதாக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. கம்பராமாயணத்தில் 'ஊழியாய்' - எல்லாம் அழிகின்ற ஊழிக்காலத்தும் - நிலைத்து நிற்பவனே என்ற பொருளில் இராமன் விளிக்கப் பெற்றான். பழைய உரையாசிரியர்கள் அனைவரும் எல்லாமே அழிந்து போகக்கூடிய ஊழிக்காலம் இக்குறளில் சொல்லப்பட்டுள்ளது என்கின்றனர்.

ஆங்காங்கே அவ்வப்பொழுது இயற்கைப் பேரிடர்கள், குறிப்பாக வெள்ளம், எரிமலை, நில அதிர்வு, நிலச்சரிவு, பெருந்தொற்று சார்ந்த அழிவுகள் உலகில் ஏற்படுகின்றன. உலகமே இறுதி எய்தும் அளவு பேரழிவு ஏற்பட்டுள்ளதையும் தொன்மங்கள் வாயிலாக அறிகிறோம். சுமேரிய-விவிலிய–எகிப்திய தொன்மங்களில் கூறப்பட்டுள்ள நோவா எல்லோரும் அறிந்த ஊழி; இந்திய தொன்மங்களிலும் ஊழி பலவாறாகக் குறிக்கப்பட்டுள்ளன; மனிதனின் தீய செயல்களுக்காகவோ அவனது நம்பிக்கையின்மைக்காகவோ இறைச் சீற்றமாகவோ ஓர் இயற்கை அழிவுச்சுழலாகவோ அவை படம்பிடித்துக் காட்டப்பட்டன. கடற்கோள் என்பது தமிழர்தம் தொன்மை வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய சொற்றொடர். முதுதமிழ் நிலமான அகண்ட குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததாகவும் அதைக் கடற்கோள் வந்து அழித்துவிட்டதாகவும் நம் இலக்கியங்களும் கூறுகின்றன.
பரிமேலழகர் உரையில் இத்தொடர்க்கான பதவுரையில் 'ஏனைக்கடலும் கரையுள் நில்லாமல்' அதாவது கடல் பொங்கி பரவி கரைகளைத் தாண்டிப் போனாலும் என்று சொல்லப்படுகிறது. அவர் குறிப்பிடுவது கடற்கோள் அல்லது ஊழி என்றே தெரிகிறது. அது இன்று நன்கு அறியப்பட்ட சுனாமி (tsunami)யைக் குறிப்பதாகக் கொள்ளலாம். சுனாமியை ஊழிப்பேரலை என்றே பெயரிட்டு இன்று அழைக்கிறோம். சுனாமி கடலின் கரைகடந்து நாட்டின் உட்பகுதிகளுக்குள் சென்று ஊரையும் நாட்டையும் பெரும் அழிவுக்குள்ளாக்க வல்லது.
பரிபாடல் ஒலிவடிவான வெளி என்னும் ஒன்றாம் ஊழியும், அவ்வெளியில் இருந்த வளி என்னும் ஊழியும், அதன்பின் நீர், தீ, நிலம் எனத் தோன்றிய ஊழிகளும் என ஐவகை ஊழிகளைக் கூறுகின்றது.

இவை அனைத்தையும் இணைத்து எண்ணும்போது ஊழி என்பது பேரழிவை உண்டாக்கக்கூடியது எனவும் கடல் பொங்கி எழுவது அவற்றில் ஒன்று எனவும் அறியலாம். ஊழியின் விளைவாக ஏற்படும் உலகின் நிலைமாற்றத்தால் புதிய இயல்பு (New Normal) உண்டாகும். உலகு நிலைமாற்றம் கண்டாலும் என்பதை 'ஊழி பெயரினும்' எனக் குறள் குறிக்கிறது எனலாம். உலகமே மாறிவிட்டதே நானும் மாறிக்கொள்கிறேன் எனச் சான்றோர் தங்கள் குண மேன்மையிலிருந்து விலகமாட்டார்கள். அவர்கள் உலகின் எந்த மாற்றங்களுக்கும் அசைந்து கொடுக்கமாட்டாது தங்கள் பண்புகளிலிருந்து மாறாது தூயராய் நிலைத்து வாழ்வர்.
பேரிடர் வந்து உலகைப் புரட்டிப் போட்டாலும் தாம் நிலை குலையாது நற்குணங்களிலிருந்து மாறமாட்டார்கள் சான்றோர்.

'ஊழி பெயரினும்' என்ற தொடர் உலகு நிலைமாறினாலும் என்ற பொருள் தரும்.

சான்றாண்மைக்குக் கடல் என்று கூறப்படுபவர்கள் பேரிடர் காலத்தில் உலகம் நிலைமாறினாலும் தாம் நற்குணங்களிலிருந்து பிறழார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புதியஇயல்புகள் தோன்றினாலும் சான்றாண்மைக் குணம் கொண்டோர் பண்பு மாறுவதில்லை.

பொழிப்பு

கடல் அளவு நிறைகுணம் கொண்ட சான்றோர்கள், பேரழிவுக் காலத்தில், உலகநிலை மாறினாலும் தம் நற்குணங்களிலிருந்து பிறழமாட்டார்கள்.