இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0986



சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்

(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:986)

பொழிப்பு (மு வரதராசன்): சால்புக்கு உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

மணக்குடவர் உரை: .......................................................................

பரிமேலழகர் உரை: சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல்.
(துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.)

இரா இளங்குமரனார் உரை: சால்பு என்னும் பொன்னுக்கு மாற்றுக் காணும் உரைகல் யாது என்றால், தமக்கு இணையாகாத மெலியவர் இடத்திலும் தம் தோல்வியை ஏற்றுக் கொள்ளுதலாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.

பதவுரை: சால்பிற்கு-பல குணங்களாலும் நிறைந்தமைக்கு; கட்டளை-உரைகல்; யாது-எது; எனின்-என்றால்; தோல்வி-தோற்றல்; துலை-ஒப்பு; அல்லார்கண்ணும்-அல்லாதவரிடத்திலும்; கொளல்-கொள்தல், பெறுதல்.


சால்பிற்குக் கட்டளை யாதெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: சால்பிற்கு அளவு யாது எனின்;
பரிதி: நல்லோர் என்கிற குணத்தை நிறுக்கிற கட்டளை யாது எனின்;
காலிங்கர்: சான்றோர் சால்பிற்கு உறுதிப்பாடாவாது யாதோ எனின்;
பரிமேலழகர்: சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்;

'சால்பிற்கு அளவு யாது எனின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிறைகுணத்தை மதிப்பிடும் உரைகல் யாது?', 'நிறைகுணத்தை மதிப்பிடும் உரைகல் எது என்றால்', 'சான்றாண்மை என்ற பொன் போன்ற குணத்தின் மாற்றறியும் உரைகல் எதுவென்றால்', 'சால்பாகிய பொன்னின் அளவு அறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சான்றாண்மையை மதிப்பிடும் உரைகல் எதுவென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: தோல்வியைத் தனக்கு நிகர் அல்லாதார் மாட்டும் கொள்ளுதல் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது, எல்லார்க்கும் இனிமை செய்ய வேண்டும் என்றது.
பரிதி: தமக்கு நிகர் இல்லாதாராயினும் அவர்க்குத் தாழ்ச்சி சொல்லி நடப்பது என்றவாறு.
காலிங்கர்: தம்மோடு ஒப்பச் சீர்தூக்கும் துலைமை இல்லார் மாட்டும் தம் தோல்வி கொண்டு ஒழுகுதல் என்றவாறு. [துலைமை - ஒப்பு]
பரிமேலழகர்: அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல். [இழிந்தார் மாட்டும் கோடல் - தாழ்ந்தவரிடத்தும் கொள்ளுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம். [ஏற்றுக் கொள்ளுதல் - ஒத்துக் கொள்ளுதல்; ஒப்பித்துக் கொள்ளாது - சமமாக ஆக்கிக் கொள்ளாமல்; அவரின் -தாழ்ந்தாரைக் காட்டிலும்; அதனால்- தோல்வியால் உயர்தலால்]

'தோல்வியைத் தனக்கு நிகர் அல்லாதார் மாட்டும் கொள்ளுதல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தோல்வியைத் தாழ்ந்தவரிடத்தும் ஏற்பது', 'தமக்குச் சமமாகாதவரிடமும் தோல்வியை ஏற்றுக் கொள்ளுதலாகும்', 'தம் தோல்வியைத் தமக்குச் சமானமல்லாத தாழ்ந்தவரிடத்திலும் ஒப்புக் கொள்வது', 'தோல்வியைத் தம்மினும் தாழ்ந்தாரிடமும் கொள்ளுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தோல்வியைத் தமக்குச் சமமாகாதவரிடமும் ஒப்புக் கொள்வது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சான்றாண்மையை மதிப்பிடும் உரைகல் எதுவென்றால் தோல்வியைத் தமக்குச் சமமாகாதவரிடமும் ஒப்புக் கொள்வது என்பது பாடலின் பொருள்.
'துலையல்லார்கண்ணும் கொளல்' குறிப்பது என்ன?

தன்னின் தாழ்ந்தோரிடமும் தயங்காமல் தோல்வியை ஒப்புக்கொள்வர் சான்றோர்.

சால்பின் பண்பை அறிதற்கு உரைகல் யாது எனில், அது தமக்கு கீழ்நிலையில் உள்ளவரிடமும் தோல்வியை ஏற்றுக்கொள்வதே ஆகும்.
பண்பு நிறைந்த சான்றாண்மைக்குச் சால்பு என்று பெயர். நற்குணங்கள் பலவற்றாலும் அமைந்தார் சான்றோராவர். மாந்தரில் பலர் தமது தோல்வியை எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டாதவர்களாகவே இருக்கின்றனர். ஒன்றில் தாம் தோற்றுவிட்டாலும் ஏதோதோ அமைதி கூறித் தாம் தோற்கவில்லையென்றே உரைப்பர். ஆனால் சான்றோர்கள். தம்மைவிடத் தகுதியில் குறைந்தவர்களாயிருந்தாலும் அவர்களிடமும் தமது தோல்வியை முகஞ்சுளிக்காமல் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவராயிருப்பர்.
பொதுவாகத் தம்மில் வலியாரிடமோ அல்லது திறமை மிக்கவரிடமுமோ தோற்றால் அத்தோல்வி இயல்பானதாம். தம்மினும் கீழோரிடம் தோற்பது என்றால் அதைத் தாங்கிக்கொள்வது கடினமாகவே இருக்கும். மேன்மையான குணம் உள்ளவர்களுக்கே தன்னிலையை ஒப்புக் கொண்டு அத்தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்கும், அதுவே ஒருவரைச் சான்றோர் என அடையாளப்படுத்துவது. தனக்கு ஒப்பில்லாத தாழ்ந்தாரிடத்தும் தோல்வியைச் சால்புக் குணமுடையார் ஏற்றுக் கொள்கிறாரா என்று உரைத்துப் பார்க்கச் சொல்கிறார் வள்ளுவர். அதாவது சால்புக்கு அளவு, தகுதியில்லாதவனிடத்தும் தோல்வியைக் கொள்ளுதலாம்.

சால்புடையவர் தம்மைவிடத் தாழ்ந்தவர் என்று ஒருவரையும் எண்ணுவதில்லை. பிறரை அடக்கித்தான் அவர்களுடன் வாழ முடியும் என்று காணப்படும் உலக இயல்பில் தகுதியில்லாதவரிடத்திலும் தோற்றுவிடுவது சால்பு என்னும் அரும்பண்பாகச் சொல்லப்படுகிறது. இது தம் பெருமையை மறந்து மேன்மை மேற்கொண்டு நடப்பதால் உண்டாவது. சான்றோர் பொதுக் கடமையை மதிப்பார்களே அல்லாமல், தம் நற்பெயரையும் பெருமையையும் பெரிதாக நினைப்பதில்லை. பொதுவாழ்வில் சிறக்கவேண்டும் என்ற பரந்த எண்ணத்தால் தாழ்ந்தவரிடமும் தயங்காமல் தோல்வியை ஒப்புக்கொள்வர். தம்மை எதிர்த்து நிற்கமாட்டாதாரிடத்தும் தோல்வியை ஒப்புக் கொள்வது என்பது சான்றோரின் மேன்மையை விளக்கும்.

கட்டளைக்கல்: கட்டளைக்கல் என்பது உரைகல்லைக் குறிக்கும். தங்கம் வெள்ளி போன்ற மதிப்புள்ள உலோகங்களை உரசி (தேய்த்து) மாற்றுப் பார்த்து அவற்றின் தரத்தை அறிய உதவும் கல் உரைகல் எனப்படும். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (தெரிந்து தெளிதல் 505 பொருள்: ஒருவரது சிறப்புக்கும் குறைபாட்டிற்கும் அவரவர் செயற்பாடுகளே உரைகல்) என்ற குறளிலும் கட்டளைக்கல் என்ற தொடர் ஆளப்பட்டது. சால்பின் தரத்தைத் தோற்றலாகிய தொழிலால் அறியலாம் என்பதால் இங்கு அது உரைகல் எனப்படுகிறது.

'துலையல்லார்கண்ணும் கொளல்' குறிப்பது என்ன?

துலை என்ற சொல் சமம் அல்லது ஒப்பு என்ற பொருளது. துலையல்லார் சமமல்லாதவர் என்பதைச் சொல்வது. 'துலையல்லார்கண்ணும் கொளல்' என்ற தொடர் தனக்கு நிகர் அல்லாதார் மாட்டும் கொள்ளுதல் எனப் பொருள்படும். இங்கு அது தம்மினும் தாழ்ந்தவரைச் சுட்டுவதாக உள்ளது.
ஒப்பாவார் மாட்டும் உயர்ந்தாரிடத்தும் தோல்வி காண்பது இயற்கை யெனவே கொள்ளப்படும். பெரியவர்களிடத்தில் தோற்பதைப் பெருமையாகக்கூடப் பலர் கருதுவர். ஆனால் தாம் வெல்லும் ஆற்றலுடையவராயிருக்கும்போது, தம்மில் வலிமையாலும் திறனாலும் தாழ்ந்தாரிடத்துத் தோல்வியை ஏற்றுக்கொள்வது மிகக்கடினம். அவ்விதம் ஏற்றுக்கொள்வது ஒருவருடைய சால்புடைமையைக் காட்டும் என்கிறது பாடல், 'துலையல்லார்கண்ணும் கொளல்' என்றது உயர்ந்தார்கண் கொள்ளும் தோல்வியைத் சமமல்லார் கண்ணும் கொள்தல் என்னும் பொருள் தரும்.

இத்தொடரை இன்னொரு கோணத்திலும் நோக்கி விளக்கலாம்:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை என்ற முன்குறளான 985-இல் சான்றோர் பணிவுவழி பகைமையை ஒழிப்பர் எனச் சொல்லப்பட்டது. பணிவாக நடந்து செயலாற்றுதல் போலத் தோல்விக்குத் தயங்காமையும் சான்றோர் பண்பு என இங்கு கூறப்படுகிறது. 'துலை அல்லார்கண்ணும் தோல்வி கொளல்' என்ற தொடர் 'தம்மினும் வலியாரிடத்துத் தாம் அடையுந் தோல்வியைத் தம்மினும் தாழ்ந்தவரிடத்தும் ஏற்றுக் கொள்ளுதல்' என்ற பொருள் தருவது. தொடரின் சொல்லமைப்பை நோக்கும்போது அது தாமே விட்டுக் கொடுத்து வேண்டுமென்றே விரும்பி தோல்வியடைந்து கொள்ளுதல் என்பதுபோல் உள்ளது. ஒருவர் ஏன் விரும்பித் தோல்வியைத் தழுவிக் கொள்கிறார்?
'Lose the battle win the war' என்பது ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஓர் வழக்கு. இதன் பொருள் ஒரு சிறு முரண்படுதலில் உண்டான பூசலில் தோற்றுப்போனாலும் அதன் தொடர்பாக நேரவிருந்த பெரிய போரில் வெற்றிபெற்றதாகும் என்பது. இக்குறட்கருத்தை அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சான்றோர் சிறு சண்டையில் தோற்று நட்புண்டாக்கிப் பெரிய போர் தவிர்ப்பர்; அது அப்போரை வென்றது போல்தான் என்ற உட்கருத்து புலப்படுகிறது. இதனால்தான் சான்றோர் தம்மினும் தாழ்ந்தாரை வெல்லக்கருதி அவரைத் தமக்கு பகைவராக எண்ணாது தோல்வியைக் கொள்கிறார். இவ்வதிகாரத்தில் சான்றோர் அமைதி நாடுபவராகவே காட்டப்படுகிறார் என்பது அறியத்தக்கது.

சான்றாண்மையை மதிப்பிடும் உரைகல் எதுவென்றால் தோல்வியைத் தமக்குச் சமமல்லாதவரிடமும் ஒப்புக் கொள்வது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மேல்நிலையார்மாட்டுப் படிந்தும் கீழ்நிலையில் உள்ளோரைக் கடிந்தும் வாழ்தல் சான்றாண்மையாகாது.

பொழிப்பு

சான்றாண்மையை மதிப்பிடும் உரைகல் எது என்றால் தோல்வியைத் தாழ்ந்தவரிடத்தும் ஏற்பது.