இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0983



அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்

(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:983)

பொழிப்பு (மு வரதராசன்): அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

மணக்குடவர் உரை: அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண்.
இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.

பரிமேலழகர் உரை: அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு-யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து.
(எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.)

தமிழண்ணல் உரை: எல்லோரிடத்தும் அன்பும் பழிபாவங்களுக்கு வெட்கப்படும் நாணமும் மக்கள் அனைவருக்கும் உதவும் ஒப்புரவும் எளியவரிடம் இரக்கம் காட்டும் கண்ணோட்டமும் எப்பொழுதும் தவறாத வாய்மையும் ஆகிய இவை ஐந்தும் சால்பு என்ற மண்டபத்தைத் தாங்கும் தூண்களாகும்.
சால்பு நிறைந்திருக்கும் தன்மை. நற்குணங்கள் நற்செய்கைகள் அனைத்தாலும் நிறைந்திருப்பதே சால்பு. இன்றியமையா இவை ஐந்துமிருந்தால், பிற நல்லனயாவும் தாமே அமையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு சால்பு ஊன்றிய தூண் ஐந்து.

பதவுரை: அன்பு-அன்புடைமை; நாண்-இழி தொழில்களில் மனஞ்செல்லாமை; ஒப்புரவு-ஒப்புரவு; கண்ணோட்டம்-கண்ணோடுதல்; வாய்மையொடு-மெய்ம்மையுடன்; ஐந்து-ஐந்து; சால்பு-நிறைகுணம்; ஊன்றிய-தாங்கிய, தாங்க நிறுத்திய, ஊன்றப்பட்ட; தூண்-தூண்.


அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று;
பரிப்பெருமாள்: அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று;
பரிதி: அன்புடைமை, நாணுடைமை, ஒப்புரவு, கண்ணோட்டம், சத்தியவாய்மை;
காலிங்கர்: அன்பு முதலாக வாய்மையோடு;
பரிமேலழகர்: சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும் பழி பாவங்களின் நாணலும் யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும் பழையார்மேல் கண்ணோடலும் எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என;
பரிமேலழகர் குறிப்புரை: எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று.

'அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பு நாணம் பொதுநலம் இரக்கம் வாய்மை', 'எல்லாரிடமும் அன்புகாட்டுதலும் இழிசெயலுக்கு நாணுதலும் பொதுநலத் தொண்டு புரிதலும் பிறரிடம் இரக்கங்காட்டலும் உண்மை கூறலும் ஆகிய', 'யாரிடத்தும் அன்புடைமை, பழிபாவங்களைச் செய்யாமை, எல்லாருக்கும் உபகாரியாக இருத்தல், தாட்சணியம் காட்டுதல், சத்தியம் தவறாமை ஆகிய', 'அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அன்புடைமை, இழிசெயலுக்கு நாணுதல், பொதுநல ஈடுபாடு, இரக்கம், வாய்மை ஆகிய என்பது இப்பகுதியின் பொருள்.

ஐந்துசால்பு ஊன்றிய தூண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.
பரிப்பெருமாள்: சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.
பரிதி: இந்த ஐந்து காரியமும் திண்மையான குற்றமற்றதைத் தாங்கிய தூண் என்றவாறு.
காலிங்கர்: எடுத்து எண்ணித் தொகுத்த ஐந்தும் சான்றோரது சால்பு தளராமல் ஊன்றி நிற்கின்ற தூண்.
காலிங்கர் குறிப்புரை: எனவே ஒருவர் சால்பின் நன்மையாவது இவையனைத்தும் இனிது ஒழுகுக என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து.
பரிமேலழகர் குறிப்புரை: இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.

'ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐந்தும் சால்புக் கட்டடத்தின் தூண்கள்', 'ஐந்தும் சால்பு என்னும் பெரிய மாளிகையைத் தாங்கும் தூண்களாம்', 'ஐந்து கொள்கைகளும் சேர்ந்து, தாங்கி நிற்கிற பெருமை பொறுப்புதான் 'சான்றாண்மை' என்னும் பெருங்குணம்', 'ஐந்தும் சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்களாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஐந்தும் சால்பினைத் தாங்கிநிற்கும் தூண்களாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்புடைமை, இழிசெயலுக்கு நாணுதல், பொதுநல ஈடுபாடு, இரக்கம், வாய்மை ஆகிய ஐந்தும் சால்பினைத் தாங்கிநிற்கும் தூண்களாம் என்பது பாடலின் பொருள்.
'சால்பு ஊன்றிய தூண்' என்ற தொடரின் பொருள் என்ன?

சான்றோரை உருவாக்கும் சமூகப் பண்புநலன்கள்.

அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும் சால்பினைத் தாங்கிநிற்கும் தூண்களாகும்.
அன்பு:
அன்பு என்பது பொதுவாகச் சார்ந்தவரிடத்தில் கொள்ளும் நெகிழ்ச்சியைக் குறிப்பதாகும். இங்கு அச்சொல் சுற்றத்தார் மட்டுமன்றி உயிர்கள் அனைத்திடமும் காட்டும் அன்பைச் சொல்வதாக அமைந்துள்ளது.
நாண்:
நாண் என்பது ஒருவர் தம் பெருமைக்குப் பொருந்தாத செயல்களில் ஈடுபட நாணுவதைக் குறிக்கும். பழி, தீச்செயல்களுக்கு அஞ்சுதல் நாண் எனப்படும். 'நாணுடைமை மாந்தர் சிறப்பு' என்பவர் வள்ளுவர். நாணுமை கொள்ளாமை இழிமை எனவும் சொல்வார் அவர். குறளில் பலவிடங்களில் தீச்செயல்கள் புரிய அஞ்சவேண்டும் என்பது கூறப்படுகிறது.
ஒப்புரவு:
பிறர்க்கு உதவுதல் ஒப்புரவு எனச் சொல்லப்படும். இது பொதுக்கொடையைக் குறிக்கும் சொல். ஊருணி நீர் ஊரார் அனைவருக்கும் பயன்படுதல்போல ஒப்புரவாளனது செல்வமும் பலர்க்கும் பயன்படும்.
கண்ணோட்டம்:
கண்ணோட்டம் என்பது பிறரது துயரம்கண்டு இரங்கும் பண்பையும் பிறர் குற்றத்தை மன்னிக்கும் பெருந்தன்மையையும் குறிப்பதாகும். இச்சொல் இரக்கம் காட்டுதல் என்ற பொருளிலே குறளில் ஆளப்பட்டுள்ளது.
வாய்மை:
வாய்மை என்பது சொல்லின் தூயதன்மையை உணர்த்துவது. உள்ளொன்று புறமொன்று இல்லாத உண்மை பேசுதலே வாய்மை.

இவ்வைந்து சமுதாய நலப்பண்புகள் சால்பைத் தாங்கிப் பிடிக்கின்றனவாக உள்ளன. இக்குணங்களால் நிறைவு பெற்றவர் சான்றோர் எனப்படுவர். சான்றோர் பொது வாழ்க்கை மேற்கொண்டு தொண்டு ஆற்றுபவராவர். இப்பண்புகளின் மேன்மைத் தன்மைக்காகவே மக்கள் சான்றாண்மை மேற்கொள்பவர்களால் ஈர்க்கப் பெறுகின்றனர். சொல்லப்பட்ட ஐந்து பண்புகளும் சான்றாண்மை என்னும் சால்பினைத் தாங்கும் தூண்களாம் எனக் குறள் கூறுகிறது. . தாங்கிப் பிடிக்கும் தூண்கள் எனச் சொல்லப்பட்டதால், சால்புக்கு ஆதாரமானவை இவ்வைந்து குணங்கள் என்றாகிறது. இவ்வைங்குணமும் இல்லாவிடத்துச் சால்பு நிலைபெறா, அதாவது இவற்றில் ஒன்று குன்றினாலும், மேன்மையான நிலை என்னும் கோட்டை ஆட்டங்கண்டு முடிவில் வீழ்ந்துவிடும்.

'சான்றோர்கள் வன்முறைக்கு எதிரான ஒன்று என்று கருதுவது அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் இப்படிப்பட்ட குணங்களைத்தான். இந்தக் குணங்கள்தான் வன்முறைக்கு எதிரான மருந்தாக விளங்கமுடியும் என்பதையெல்லாம் திருவள்ளுவர் உணர்ந்து சால்புக்கு இலக்கணம் சொல்லுவதுபோல் இக்குறளில் குறிப்பிடுகிறார். இந்த ஐந்தும்தான் சால்பு என்ற கோட்டையை உருவாக்க முடியும். இந்தக் கோட்டையில்தான் மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க முடியும் என்று வள்ளுவர் உணர்த்துகிறார்' என்று இக்குறள் பற்றி பொற்கோ கருத்துரைக்கின்றார்.

'சால்பு ஊன்றிய தூண்' என்ற தொடரின் பொருள் என்ன?

'சால்பு ஊன்றிய தூண்' என்றதற்குச் சால்பிற்கு அங்கம், திண்மையான குற்றத்தைத் தாங்கிய தூண், சால்பு தளராமல் ஊன்றி நிற்கின்ற தூண், சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும், சால்பு என்ற மண்டபத்தைத் தாங்கும் தூண்களாகும், ஊன்றிய தூண்களாக சான்றாண்மை தாங்கி நிற்கின்றன, சால்புக் கட்டடத்தின் தூண்கள், சால்பு என்னும் பெரிய மாளிகையைத் தாங்கும் தூண்களாம், தாங்கி நிற்கிற பெருமை பொறுப்புதான் 'சான்றாண்மை' என்னும் பெருங்குணம், சால்பு என்ற (நிறைகுணமாகிய) மாடத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள், சால்பு அல்லது குண நிறைவு என்பதைத் தாங்க நிறுத்திய தூண்களாவன, சான்றாண்மை என்ற மாளிகைக்கு ஐந்து தூண்களாக அமைவன, சான்றாண்மையென்னும் மண்டபத்தைத் தாங்குந் தூண்கள், சான்றோரின் நிறைவு என்ற வீட்டினைத் தாங்கி நிற்கும் தூண்களாகும், மணி மண்டபத்தினை உண்டாக்கும் வச்சிரத் தூண்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் திண்மையான குற்றத்தைத் தாங்கிய தூண் எனப் பரிதி எழுதியிருப்பது ஏடு பெயர்த் தெழுதியோரால் உண்டான பிழையாயிருக்கலாம்.

ஒரு மாபெரும் கட்டடத்தை எழுப்பும்போது அதைத் தாங்கி நிற்பதற்குச் செம்மையான வலுவான பெரும் தூண்களை ஊன்றுவர். இப்பாடலில் சொல்லப்பட்ட ஐந்து பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கும் தூண்களாகும். ஐந்து குணங்களையும் தூண் என்று உருவகித்த ஏகதேச உருவகத்தால் சால்பினைப் பாரம், மாளிகை, மாடம், வீடு, மணிமண்டபம், கூரை, ஐந்துகால் மண்டபம் எனப் பலவகையாக விளக்கினர். 'அதனைப் பொறை என்றோ பாரம் என்றோ கூறுதலைக் காட்டிலும் ஒரு கஷ்டமாகக் கருதுதல் சாலச் சிறந்தது; ஆசிரியர் கருத்தும் அதுவாக இருத்தல் கூடும்' என்பது தண்டபாணி தேசிகர் கருத்து.

'சால்பு ஊன்றிய தூண்' என்றது சான்றோரது சால்பு தளராமல் ஊன்றி நிற்கின்ற தூண் என்ற பொருளது.

அன்புடைமை, இழிசெயலுக்கு நாணுதல், பொதுநல ஈடுபாடு, இரக்கம், வாய்மை ஆகிய ஐந்தும் சால்பினைத் தாங்கிநிற்கும் தூண்களாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சான்றாண்மைக்கு ஆதாரமான குணங்கள்.

பொழிப்பு

அன்பு பழிநாணுதல் பொதுநலஈடுபாடு இரக்கம் வாய்மை ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண்களாகும்.