இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0980



அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்

(அதிகாரம்:பெருமை குறள் எண்:980)

பொழிப்பு (மு வரதராசன்): பெருமைப்பண்பு பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

மணக்குடவர் உரை: பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும்.
இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார்.
(மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: பெருந்தன்மையுடையோர்கள் பிறரது மானக் கேட்டை மறைத்துப் பேசுவர்; சிறுமை யுடையவர்கள் பிறர் குணத்தை மறைத்து அவரது குற்றத்தையே தூற்றி விடுவார்கள்.
மறைத்து-நீக்கி.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருமை அற்றம் மறைக்கும்; சிறுமைதான் குற்றமே கூறி விடும்.

பதவுரை: அற்றம்-மறைத்தற்கு உரிய பகுதி, மானக்கேடானது, குறைபாடு; மறைக்கும்-நீக்கும், மூடி வைக்கும்; பெருமை-பெருந்தன்மை, பெருமை, பெருமையுடையார்; சிறுமை-சிறுமையுடையோர்; தான் -(அசைநிலை); குற்றமே-குற்றமே; கூறிவிடும்-திண்ணமாகச் சொல்லிவிடும்.


அற்றம் மறைக்கும் பெருமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்;
மணக்குடவர் குறிப்புரை: இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: பெருமை பிறருடைய குறையை மறைத்துச் சொல்லும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே புறம் கூறாமை பெருமை என்று கூறப்பட்டது.
பரிதி: பெரியாரானோர் சிறியோர் செய்த குற்றத்தை மறைப்பர்;
காலிங்கர் ('அற்ற மறைக்கும் சிறுமை பெருமை தான், குற்றமாக் கொண்டு விடும்' என்பது பாடம்): மற்றுப் பெருமையானது தான் அதனைக் குற்றமாகக் கொண்டுவிடும் எனவே அதனை ஒரு பொழுதும் தன்கண் அடக்க நிலை இல்லை என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்;
பரிமேலழகர் குறிப்புரை: அற்றம் - ஆகுபெயர். [அற்றத்தால் (சோர்வால்) உண்டாகும் அவமானத்தை அற்றமென்று கூறினமையின் இது கருவியாகு பெயராம்]

மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்' என்று இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'பெரியாரானோர் சிறியோர் செய்த குற்றத்தை மறைப்பர்' என்றார். காலிங்கர் 'அற்ற மறைக்கும் சிறுமை பெருமை தான், குற்றமாக் கொண்டு விடும்' எனப் பாடங்கொள்வதால் அவர் உரை வேறுபடுகிறது. பரிமேலழகர் 'பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்' எனப் பொருள் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் குற்றம் மறைத்தல் பெருமையின் இயல்பு', 'பெருமையுடையவர் பிறர் குணநலன்களைக் கூறிக் குற்றங்குறைகளை வெளிப்படுத்தாது மறைப்பார்', 'பெருமைக் குணமுடையவர்கள் பிறருடைய குற்றங்களை வெளிப்படுத்தாமல் (குணங்களையே பாராட்டிப் பேசுவார்கள்)', 'பெருமைக் குணம் உடையார் பிறர் குற்றங்களை மறைப்பர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெருமையுடையவர் பிறரது மானக் கேட்டை மறைப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

சிறுமைதான் குற்றமே கூறி விடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும்.
பரிப்பெருமாள்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும்.
பரிதி: சிறியோர், பலர் செய்த குற்றத்தைத் தூற்றுவர் என்றவாறு.
காலிங்கர் ('அற்ற மறைக்கும் சிறுமை பெருமை தான், குற்றமாக் கொண்டு விடும்' என்பது பாடம்): சிறுமையானது என்றும் தான் செய்யும் நெறி அற்றங்களை அடக்கிக்கொண்டு ஒழுகும்;
காலிங்கர் குறிப்புரை: இவ்வாறு அன்றி 'அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான், சுற்றமாச் சூழ்ந்து விடும்' என்பது பாடமாயின், தன்கண் ஓர் நெறி அற்றமாகிய குற்றம் வந்து உளதாம் ஆயின் அதனை அப்பொழுதே மாய்த்துவிடும் பெருமையானது; மற்று இனிச் சிறுமைதான் தன் நட்பின் இனிய கிளையாகக் கொண்டு ஒழுகும் என்றவாறு. இன்னும் பிறவாறு பாடம் ஓதுவாரும் உளர் என்னின், அதற்கு ஏற்குமாறு அறிந்து உரைக்க.
பரிமேலழகர்: மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார்.
பரிமேலழகர் குறிப்புரை: மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன. [இருவர் செயலும்- பெருமையுடையார், சிறுமையுடையார் ஆகிய இருவர் செயலும்]

'சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'சிறியோர், பலர் செய்த குற்றத்தைத் தூற்றுவர்' என்றார். காலிங்கர் வேறு பாடங்கொண்டதற்கேற்பப் பொருள் கூறினார். பரிமேலழகர் 'சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றமே கூறுதல் சிறுமையின் இயல்பு', 'ஆனால், சிறுமையுடையவர் மாறாகக் குணநலன்களை மறைத்துக் குற்றங் குறைகளை வெளிப்படுத்துவர்', 'சிறுமைக் குணமுடையவர்கள் பிறருடைய (குணங்களை விட்டுவிட்டு) குற்றங்களை மட்டும் பேசித் தீர்த்துவிடுவார்கள்', 'சிறுமைக் குணம் உடையார் பிறர் குற்றங்களையே கூறுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சிறுமையுடையவர் பிறர் குற்றங்களை மட்டும் கூறிவிடுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெருமை பிறரது அற்றம் மறைக்கும்; சிறுமையுடையவர் பிறர் குற்றங்களை மட்டும் கூறிவிடுவர் என்பது பாடலின் பொருள்.
'அற்றம் மறைக்கும்' குறிப்பது என்ன?

பிறரது மானக்கேடான செய்திகளை வடிகட்டியே வெளியே சொல்வர் பெரியோர்.

பெருமை உடையார் பிறருடைய குறைபாட்டை மறைத்துப் பேசுவர்; சிறுமை உடையவர் பிறரது குணத்தை மறைத்து அவருடைய குற்றத்தையே கூறுவர்.
அடுத்தவர் பற்றிய அவதூறான செய்திகளைச் சொல்லிக்கொண்டிருப்பது நயமற்ற செயல். பிறரது மானக்கேடான செய்திகளைப் பற்றிப் பேசினால் தான் உயர்ந்து காணப்படுவோம் என்ற கருத்து சிலரிடம் உண்டு. இது ஓர் கீழானகுணம். பெருமையுடையார் பிறரது குறைபாடுகள் தமக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றை நீக்கி அவரது நல்லியல்புகளை மட்டுமே பேசுவர். இன்னொரு வகையில் கூறுவதானால் பெருமைக்கு உரியவர்கள் மற்றவர்களின் நன்மையைப் பாராட்டிக் குற்றங் குறைகளை வெளியே கூறமாட்டார்கள்; சிறுமைக் குணம் உடையவர்கள் மற்றவர்களின் நல்லியல்புகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறுவார்கள்.

பிறர்பால் உள்ள அவமானமானவற்றை பெரிதுபடுத்தாமலும், அவற்றைப் வெளியில் சொல்லித் தூற்றாமலும் இருப்பது பெருமைக்குரிய செயலாகும். பெரியவர்கள் பிறர் பற்றிய நிறைகளை மட்டுமே உரைப்பர். சிறியோர் பிறர்பாலுள்ள நிறைகளைச் சிறிதும் நோக்காது, குறைகளைத் தேடித் தேடிக் கண்டுபிடித்துத் தூற்றுவதில் இன்பம் காண்பர். அவர்கள் கருத்தில் மற்றவர்களது நன்மை தெரிவதில்லை; தீமைமட்டுமே கண்ணிற்படும்; அவர்கள் இகழ்ச்சியால் பெருமை பெற முயல்பவர்கள்.
உலகில் குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. குறைபாடுகளால் சிலவேளைகளில் அவமானமும் உண்டாவதுண்டு. அவை வெளியில் சொல்லத்தகாதவைகளாக இருக்கலாம். அச்செய்திகளை பெரியவர்கள் அறிந்திருந்தாலும் பிறரிடம் அவற்றை மறைத்து அவமானப்பட்டோரது நல்லனவற்றை மட்டுமே கூறுவர் என்கிறது பாடல். எல்லாக் குற்றங்களையும் மறைக்க வேண்டுமா? குற்றங்களை மறைப்பதினால் சமுதாயத்திற்குக் கேடு உண்டாகுமென்றால் மறைக்கக் கூடாது. மறைக்கத் தக்க குறைகள் ஒருவரது தனிப்பட்ட தொடர்பானவை என்றால் அவற்றை ஏன் சொல்ல வேண்டும்? ஒருவருக்குத் தனிப்பட்ட முறையில் நேர்ந்த அவமானங்களை வெளியில் கூறித் திரிவதால் கிடைக்கும் இன்பம் சிறுமையானது; அதுவும் அந்நேரத்திற்கு மட்டும்தான் அது சொல்பவர்க்குக் கிடைக்கும். எனவே நாகரிகம் கருதி பெரியார் இத்தகைய மறைக்கத்தக்க குறைகளை நீக்கியே உரைப்பர். மாறாக, சிறியோர் தம் பெருமை உயரும் என்ற நினைப்பில் பிறர்க்கு உண்டான மானக்கேட்டினை வெளிச்சம் போட்டுக் காட்டி மகிழ்ச்சியடைவர்.
புறங்கூறாமை அதிகாரத்தில், பிறர் இல்லாதவிடத்தில் அவர் குறையைக் கூறலாகாது என்பது வற்புறுத்தப்பட்டது. இங்கு பெருமைஉடையார் பிறர் குறை நீக்கிக் கூறுவர் எனச் சொல்லப்படுகிறது.

குற்றமே என்பதில் உள்ள ஏகாரம் குற்றத்தைத் தவிர்த்துப் குணங்களைக் கூறார் என்பதைத் தெரிவிக்க வந்த இடைச்சொல்.
காலிங்கர்,
அற்றம் மறைக்கும் சிறுமை பெருமைதான்
குற்றமாக் கொண்டு விடும்
என வேறு பாடம் கொண்டுள்ளார். முன்னர்ச் சிறுமையையும் பின்னர் பெருமையையும் வைத்துச் சொல்லும் ஒழுங்கை மாற்றி உரை கண்டுள்ளார் இவர். இவ்வுரையின் கருத்து: 'சிறியோர் தாம் செய்த குற்றத்தைப் பிறர் அறியாதவாறு அடக்கிக் கொண்டு ஒழுகுவர். பெருமையுடையார் தாம் சோர்வான் செய்த குற்றங்களையும் குற்றமாகவே கொண்டுவிட்டுத் திருந்தி ஒழுகுவர்' என்பது. மேலும் இக்குறளுக்கான விரிவுரையில்,
'அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடும்
என்பது பாடமாயின்' என்று பிற பாடத்தைக் கூறி அதற்குத் 'தன்கண் ஓர் நெறி அற்றமாகிய குற்றம் வந்து உளதாம் ஆயின் அதனை அப்பொழுதே மாய்த்துவிடும் பெருமையானது; மற்று இனிச் சிறுமைதான் தன் நட்பின் இனிய கிளையாகக் கொண்டு ஒழுகும் என்றவாறு' என்று உரையும் கூறுகின்றார். 'இன்னும் பிறவாறு பாடம் ஓதுவாரும் உளர் என்னின், அதற்கு ஏற்குமாறு அறிந்து உரைக்க' என்றும் உரைக்கின்றார். இக்குறட்குப் பாட வேறுபாடுகள் பல என்பது காலிங்கர் உரையால் தெரியவருகிறது.

'அற்றம் மறைக்கும்' குறிப்பது என்ன?

'அற்றம் மறைக்கும்' என்றதற்கு பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும், குற்றத்தை மறைப்பர், (சிறுமையானது என்றும் தான் செய்யும்) நெறி அற்றங்களை அடக்கிக்கொண்டு ஒழுகும், பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர், பிறர் குற்றத்தை மறைத்து, பிறர் நன்மையைப் பாராட்டிக் குற்றத்தை மறைப்பர், பிறருடைய குறைபாட்டை மறைக்கும், பிறருடைய குற்றங் குறைகளைக் கூறாது மறைத்து நிறைகளையே வெளிப்படப்பேசும், பிறர் குற்றம் மறைத்தல், பிறர் குணநலன்களைக் கூறிக் குற்றங்குறைகளை வெளிப்படுத்தாது மறைப்பார், பிறருடைய குற்றங்களை வெளிப்படுத்தாமல் (குணங்களையே பாராட்டிப் பேசுவார்கள்), பிறர் பெருமையைக் கூறிச் சிறுமையை மறைக்கும், பிறரது மானக் கேட்டை மறைத்துப் பேசுவர், பிறர் குற்றங்களை மறைப்பர், பிறருடைய குறைபாட்டை மறைத்துப் பேசுவர், அடுத்தவர் குற்றங்களை மறைத்து நல்லனவற்றைப் பாராட்டுவது, பிறர் மானச் செய்திகளையே கூறி அவமானச் செய்திகளை மறைத்து விடுவர், பிறர் செய்த தீமைச் செயலைப் பேசாது மறைத்து வைத்திருப்பர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அற்றம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் 'இடையூறு, துன்பம், முடிவு, குற்றம் செய்தல்' என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. குறளிலே அது முடிவு, மறைத்தற்கு உரிய பகுதி, குற்றம், கேடு, நேரம் ஆகிய பொருளில் வந்துள்ளது. இங்கு அவமானம், குற்றம் என்று பொருள்படும்படி உள்ளது.
'அற்றம் மறைக்கும்' என்பது அவமானத்தை மறைத்தல் எனப்பொருள் கொள்ளப்படுகிறது. இனி, மறைத்தல் என்பது அறமற்ற செயலாகாதா என்ற வினா எழுகிறது. உடலில் ஆடையுடன் இருப்பது உண்மையை மறைப்பது ஆகுமா? அதுபோல ஒருவர் உற்ற மானக்கேட்டை மறைத்து உரைப்பது அறமற்ற செயல் ஆகாது. எல்லா இடங்களிலும் உடுப்பற்ற உண்மை (naked truth) கூற வேண்டுவதில்லை. அற்றம் மறைத்தலோ புல்லறிவு..... (புல்லறிவாண்மை 846 பொருள்: ஆடையால் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் மறைத்தல் புல்லறிவாகும்.....) என்பதில் உள்ள அற்றம் என்ற சொல் மனிதஉடலில் மறைத்தற்கு உரிய பகுதியைக் குறித்தது. அதனால்தான் பரிமேலழகர் 'அற்றம் மறைக்கும்' என்றதற்கு அவமானத்தை மறைக்கும் எனப் பொருள் கூறினார் போலும்.

'அற்றம் மறைக்கும்' என்பது பிறரது மானக் கேட்டை நீக்கிப் பேசும் என்ற பொருள் தரும்.

பெருமையுடையவர் பிறரது மானக் கேட்டை மறைப்பர் சிறுமையுடையவர் பிறர் குற்றங்களை மட்டும் கூறிவிடுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெருமை உண்மைக்கும் உடையணிவித்தே பேசும்.

பொழிப்பு

பெருமையுடையவர் பிறரது மானக் கேட்டை மறைப்பர்; சிறுமையுடையவர் குற்றங் குறைகளையே கூறிக்கொண்டிருப்பர்.