இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0975



பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

(அதிகாரம்:பெருமை குறள் எண்:975)

பொழிப்பு (மு வரதராசன்): பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

மணக்குடவர் உரை: பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர் செய்தற்கு அருமையுடைய செயல்களை என்றவாறு.
இது, செய்தற்கு அரிய செய்வார் பெரியர் என்றது.

பரிமேலழகர் உரை: பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர்.
('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை உடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பெருமையைக் காத்துக் கொண்டவர் முறையாக அருமையான காரியங்களைச் செய்து முடிப்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருமை உடையவர் அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார்.

பதவுரை: பெருமை-உயர்வு, பீடு; உடையவர்- உடையராயினவர்; ஆற்றுவார்-செய்யவல்லவர்; ஆற்றின்-நெறியால்; அருமை-எய்தற்கு அருமை; உடைய-உரிமையாகக் கொண்ட; செயல்-செய்தல்.


பெருமை உடையவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருமையுடையவர்;
பரிப்பெருமாள்: பெருமையுடையவர்;
பரிதி: ஒருவராலும் செய்தற்கரிய செய்வார் பெரியோர்;
காலிங்கர்: தம் குடிமையால் பெருமை உடையவர் சாலவல்லவர்;
பரிமேலழகர்: அவ்வாற்றால் பெருமையுடையராயினார்;
பரிமேலழகர் குறிப்புரை: 'வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை உடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.

'பெருமை உடையவர்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருமைப் பண்புடையவர்', 'தன்னம்பிக்கை என்ற மனப் பெருமை உடையவர்கள்', 'பெருந்தன்மையுடையவர்கள்', 'பெருமைக்குணம் உடையவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெருமை பெற்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.

ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெறியினானே செய்யவல்லர் செய்தற்கு அருமையுடைய செயல்களை என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது, செய்தற்கு அரிய செய்வார் பெரியர் என்றது.
பரிப்பெருமாள்: நெறியினானே செய்யவல்லவராவர் செய்தற்கு அருமையுடைய செயல்களை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, செய்தற்கு அரிய செய்வார் பெரியர் என்றது.
பரிதி: செய்ய மாட்டார் சிறியவர் என்றவாறு.
காலிங்கர்: யாதினை எனின், நூல் நெறிபொருள் பலவற்றினும் வைத்துப் பலராலும் செய்தற்கு அருமை உடையவற்றைச் செய்து கோடல் என்றவாறு.
பரிமேலழகர்: தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். [கடைபோகச் செய்தல் - முடிவுபெறச் செய்தல்]

'செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்தற்கரிய செயல்களை உரிய முறைப்படி செய்து முடிக்க வல்லவராவர்', 'மற்றவர்கள் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடிப்பார்கள்', 'பிறர் செய்வதற்கு முடியாத செயல்களை முறையாகச் செய்து முடிப்பர்', 'பிறரால் செய்தற்கரிய செயல்களை நெறி முறைப்படி செய்து முடிப்பவர் ஆவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரிய செயல்களை முறையாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவராவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெருமை பெற்றவர் அரிய செயல்களை ஆற்றுவார் ஆற்றின் என்பது பாடலின் பொருள்.
'ஆற்றுவார் ஆற்றின்' என்ற தொடரின் பொருள் என்ன?

பெருமை கருதுபவர் எளிய செயல்களை ஆற்றமாட்டார்.

பெருமைக்கு உரிய குணம் உடையவர் செய்வதற்கு அரியனவற்றை முறையாகச் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவராவர்.
பெருமையின் மற்றுமோர் இலக்கணமாக செயற்கரிய செய்தல் இங்கு சொல்லப்படுகிறது.
பெரியார் தம் மேன்மை நிலை தாழாது அருஞ்செயல்களையே ஆற்றுவர். பெருமை எளிய செயல்களால் கிடைப்பதில்லை. சிலர் சிறப்பில்லாச் செயல்களைச் செய்துகூட பெருமதிப்பை எதிர்பார்ப்பர். மற்றும் சிலர் தாம் செல்வக் குடும்பத்தில் பிறந்ததற்காகப் பெருமை வேண்டுவர். வேறு சிலர் தாம் பெற்றுள்ள பதவிகளுக்காகப் பெருமை கேட்பர். இன்னும் சிலர் ஒன்றுமில்லாததற்கே பெருமையை எதிர்பார்ப்பர். பெருமையென்பது எளிதில் கிடைப்பது அல்ல. அது அருமையில் பிறப்பது. பெருமை பொருந்தியவர்கள் செய்யும் பணிகள் ஒளியுடையன. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (நீத்தார் பெருமை 26 பொருள்: செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள்; அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர்) என்ற குறள் தன்னலம் நீத்த பெரியவர் அரிய செயல்கள் செய்வர் என்றது. இங்கு பெருமை பெற்றவர் அருமை உடைய செயல்களை முறையாகச் செய்வர் எனச்சொல்லப்படுகிறது. அரும்செயல்களை உரிய முறையில் செவ்வனே செய்பவர்களே மேன்மையுறுவர்.

'ஆற்றுவார் ஆற்றின்' என்ற தொடரின் பொருள் என்ன?

'ஆற்றுவார் ஆற்றின்' என்றதற்கு நெறியினானே செய்யவல்லர், ஒருவராலும் செய்தற்கரிய செய்வார், நூல் நெறிபொருள் பலவற்றினும் வைத்து, செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர், தரித்திரரானாலும் விடாமற் செய்வர். உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர், செய்யும் நெறிமுறையை அறிந்து அவற்றின்படி செய்து முடிக்கவல்லவராவர், செயல்களைச் செய்து முடித்தல், முறையாகச் செய்து முடிப்பர், உரிய முறைப்படி செய்து முடிக்க வல்லவராவர், செய்தற்கு உரிய வழியில் செய்து முடிப்பார், முறையாகச் செய்து முடிப்பர், நெறி முறைப்படி செய்து முடிப்பவர் ஆவார், அவற்றிற்குரிய வழியிலே செய்யவல்லவர் ஆவர், நெறிப்படி செய்து முடிப்பர், திறம்படச் செய்தேவிடுவார்கள் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காலிங்கர் 'ஆற்றின் -நூல் நெறியான்' எனக் கொண்டு 'நூல் நெறிபொருள் பலவற்றினும் வைத்துப் பலராலும் செய்தற்கு அருமை உடையவற்றைச் செய்து கோடல்' எனப்பொருள் காண்பார்.
பலரும் 'ஆற்றுவார் ஆற்றின்' என்பதை ஆற்றின் ஆற்றுவார் எனக் கொண்டு உரை செய்வர். ஆற்றுவார் என்ற சொல் செய்வார் என்ற பொருளது. ஆற்றின் என்ற சொல்லுக்குப் பொருள் காண்பதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர். சிலர் 'செய்தால்' அல்லது 'செய்வதில்' என்றும் பிறர் 'நெறியானே' என்றும் பொருள் கூறினர். இவற்றுள் நெறியானே என்பது பொருந்தும். எனவே 'ஆற்றின் ஆற்றுவார்' என்ற தொடர் உரிய முறைப்படி செய்து முடிக்க வல்லவராவர் எனப் பொருள்படும்.

பிறிதோரிடத்தில் ஆற்றின் வருந்தா வருத்தம் .... (தெரிந்து செயல்வகை 468 பொருள்:........தக்க செயல்முறைகள் வழி முயலாத முயற்சி) எனத் தக்க வழியறிந்து செய்யாத ஒரு செயல் குறையாகவே முடிந்து விடும் எனச்சொல்லப்பட்டது. அங்கும், செயலை மட்டும் கருத்திற் கொள்ளாமல், அந்தச் செயலைச் செய்யும் வழியும் முறையையும் கருதவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. இக்குறளில் 'ஆற்றுவார்' என்று ஒரு சொல்லோடு மட்டும் நிறுத்தாமல் 'ஆற்றின் ஆற்றுவார்' (முறையறிந்து செய்வர்) என இரு சொல்லை இணைத்தே பயன்படுத்தியுள்ளது நோக்கத்தக்கது.

'ஆற்றுவார் ஆற்றின்' என்ற தொடர் முறைதவறாது வகையறிந்து செய்துமுடிப்பார்கள் என்ற பொருள் தரும்.

பெருமை பெற்றவர் அரிய செயல்களை முறையாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவராவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செயற்கரிய செய்தல் பெருமை தரும்.

பொழிப்பு

பெருமை உடையவர் அரிய செயல்களை முறையாகச் செய்து முடிக்க வல்லவராவர்.