இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0974



ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு

(அதிகாரம்:பெருமை குறள் எண்:974)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

மணக்குடவர் உரை: .........................

பரிமேலழகர் உரை: ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.
(பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.)

இரா இளங்குமரன் உரை: ஒருப்பட்ட கற்புடைய மகளிரைப்போல ஆடவன் ஒருவனும் தன்னைத்தான் காத்துக் கொண்டு ஒழுகினால் பெருமையும் அவனுக்கு உண்டு. (ஒருவனுக்கு ஒருத்தி என்பதே உயர் ஒழுக்கம்)


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு.

பதவுரை: ஒருமை-ஒருமுகப்பட்ட மனத்தினையுடைய(கற்புடைய); மகளிரே-பெண்ணே; போல-ஒக்க; பெருமையும்-பீடும், உயர்வும்; தன்னை-தன்னை; தான்-தான்; கொண்டு-கைக்கொண்டு; ஒழுகின்-நடந்து கொண்டால்; உண்டு-உளது.


ஒருமை மகளிரே போல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: தன்னைப் பிறர் விரும்பும் காலத்தினும், தன் உள்ளம் பிறரை விரும்பும் காலத்தினும் வேண்டியவாறு ஒழுகாத கற்புடைய மகளிரைப்போல;
பரிதி: குலமகள் தன் கற்பு நிலையில் நிற்றல் போல;
காலிங்கர்: பிற மதில் காவலும் மக்கள் காவலும் அன்றித் தன் மனக்காவல் ஆகிய நெஞ்சு ஒருமைப்பாட்டால் கொண்டானைப் பிழையாத மகளிரைப் போல;
பரிமேலழகர்: கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; [கவராத மனம் - பிளவுபடாத (ஒருமுகப்பட்ட) மனம்; நிறை - கற்பு, காப்பன காத்து கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்]

'தன் மனக்காவல் ஆகிய நெஞ்சு ஒருமைப்பாட்டால் கொண்டானைப் பிழையாத மகளிரைப் போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மகளிர் கற்பைத் தாமே காத்தல் போல', 'கற்புடை மகளிர் மனத்திண்மையால் பொறிகளை அடக்கித் தம்மைக் காத்தொழுகுதல் போல', 'பெண்களுடைய கற்பைப் போலவே', 'ஒரு நிலையில் மனத்தை வைத்துக் கொள்ளும் கற்புடைப் பெண்டிர்போல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒரு நிலையில் மனத்தை வைத்துக் கொள்ளும் மாதர்போல என்பது இப்பகுதியின் பொருள்.

பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: பாதுகாத்து ஒருவன் ஒழுகுவானாயின் பெருமையுண்டாம்; அல்லது இல்லையாம் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, பெருமையாவது நிறை உடைமை என்று கூறப்பட்டது.
பரிதி: பெருமையும் நன்னிலையில் நிற்கில் பெருமை பெறுமாம் என்றவாறு.
காலிங்கர்: குடிப்பிறந்தோனது பெருமையும் அக்குடிப் பிறப்பிற் பிழையாவண்ணம் தன்னைத் தானே அமைத்துக் கொண்டு ஒழுகின் உண்டு என்றவாறு.
பரிமேலழகர்: பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது. [பொருள் உவமேயம், அஃது இங்கு ஒருவன் என்ற பொருளைக் குறிக்கிறது]

'பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருமையும் அவரவர் காத்தால் உண்டு', 'பெருமைப்பண்பும் ஒருவன் தன்னை விழிப்போடு காத்தொழுகின் உண்டாகும்', 'பெருமை என்பதும் ஒருவன் தன்னைத் தானே காத்துக் கொள்வதனால் உண்டாவது', 'ஒருவன் தன்னைத்தானே உறுதியில் வழுவாமற் காத்து நடந்தால், அவனுக்குப் பெருமை ஏற்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெருமையும் ஒருவன் நிறையில் வழுவாமல் தன்னைத்தானே காத்து நடந்தால் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு நிலையில் மனத்தை வைத்துக் கொள்ளும் மாதர்போல, பெருமையும் ஒருவன் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
'தன்னைத்தான் கொண்டுஒழுகின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

மனைவிக்கு உண்மையாக இருக்கும் கணவன் பெருமைக்குரியவன்.

ஒருமை மகளிர் போல ஒருவன் தன் மனத்தை அலையவிடாமல் பாலியல் ஒழுக்கத்தில் உறுதியோடு இருந்து தன்னைத்தான் காத்துக்கொண்டு வாழ்ந்து வருவானாயின் அவன் பெருமை உடையவனாவான்.
ஒருமை மகளிர் யார்? ஒரு மை-ஒருமை; 'மை' விகுதி 'தன்மையை' உணர்த்துகிறது. தன்மை-நிலை; ஒருமை-ஒரு தன்மை அதாவது ஒரு நிலை. ஒரு தன்மையான கற்புடைய மகளிர் ஒருமை மகளிராவர். மனம் திறம்பாது நிறைகாக்கும் பெண்டிரை ஒருமைமகளிர் என்ற சிறப்புப் பெயர் தந்து அழைக்கிறார் வள்ளுவர். இவர்கள் கற்பென்னும் திண்மை உண்டாகப் பெற்றவர்கள்; தன் கணவன் தவிர வேறு ஆடவரை விரும்பமாட்டாதவர்கள். பரிப்பெருமாள் 'தன்னைப் பிறர் விரும்பும் காலத்தினும், தன் உள்ளம் பிறரை விரும்பும் காலத்தினும் வேண்டியவாறு ஒழுகாத கற்புடைய மகளிர்' என ஒருமை மகளிர் என்பதற்கு விளக்கம் தருவார்.
ஒருமை மகளிருக்கு மாறான இருமனப் பெண்டிர் என்ற ஒரு தொடர் இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (வரைவில்மகளிர் 920 பொருள்: இரண்டுமனத்தினை உடைய மகளிரும், கள்ளும், சூதும் செல்வத்தினின்றும் நீக்கப்படப்போவார்க்கு உறவு) என்ற குறளில் ஆளப்பட்டது. மனத்தில் பொருளாசையும், முகத்தில் மகிழ்ச்சியுங் காட்டக்கூடிய பொதுமகளிர் இருமனப் பெண்டிராகக் காட்டப்பட்டனர். இங்ஙனம் மனம் வேறு செயல் வேறுபட்ட மகளிரை இருமனப் பெண்டிர் என்ற வள்ளுவர், பிறிதோரிடத்தில் இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் (கூடாநட்பு 822 பொருள்: நட்புறவினர் போன்று பழகி உள்ளத்தில் நட்பில்லாதார் உறவு மகளிர் மனம்போல் மாறுபடும்) என்கிறார். 'இருமனப் பெண்டிரும்...' என்ற குறள் ஓராயிரம் மனம் உடைய மகளிரைச் சொல்கிறதென்றால் 'இனம்போன்று இனமல்லார்...' என்றது குலமகளிர் போலக் காணப்பட்டு காலமும் இடமும் வாய்த்தபோது மனம் வேறுபடும் பெண்களைக் குறித்தது.
தன் கணவருடன் இணைந்து, இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, உள்ளும் புறம்பும் ஒத்து இல்லறவாழ்வில் இனிது இருக்கும் மகளிர் ஒருமனப் பெண்டிர் அல்லது ஒருமை மகளிர் எனப்படுவர். எத்தகைய சூழ்நிலையிலும் அசைவின்றி, உள்ளத்தாலும் உடலாலும், தன்னை மணந்தவனையே அன்புகொண்டு போற்றிக் கொண்டிருப்பவள் மனவொருமைப்பாடுடைய ஒருமை மகள். அத்தகைய ஒருமை மகளிர் போல, ஒருவன் எத்தனை விதமான பாலியல் இன்பங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், மனக் கட்டுப்பாட்டுடன் இருந்து நிறை காத்தால் பெருமை எய்துவான் என்கிறது இப்பாடல். கற்பு என்பது பொதுவில் வைக்கப்பட்டு ஆண்களும் கற்புநெறியுடன் வாழவேண்டும் என்ற அறிவுரையும் இங்கு கூறப்படுகின்றது.

'தன்னைத்தான் கொண்டுஒழுகின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'தன்னைத்தான் கொண்டுஒழுகின்' என்ற தொடர் தம்மைத் தாமே காத்துக் கொண்டு ஒழுகப்பெற்றால் எனப்பொருள்படும். மனத்திண்மை கொண்ட கற்புடைய பெண் ஒப்பிட்டுச் சொல்லப்படுவதால் இங்கு கூறப்படுவது பாலியல் ஒழுக்கமாம். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் ஒழுகுமுறையைக் குறிக்கிறது.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் (வாழ்க்கைத்துணை நலம் 56 பொருள்: தன்னைக் காத்து, தன்னைக் கொண்ட கணவன் நலனில் அக்கறை செலுத்தி, நற்பெயர் காத்து, இல்லறக் கடமைகளில் தளர்வு அடையாதவளே நல்ல மனைவியாவாள்) என்று மனைவியானவள் தன்னைத்தான் காத்துக்கொள்பவள் என்று முன்பு சொல்லப்பட்டது. இங்கு கணவன் 'தன்னைத்தான் கொண்டுஒழுகின்' அவனுக்குப் பெருமை உண்டாகும் எனச் சொல்லப்படுகிறது.
சிறைக் காவலும் மக்கள் காவலும் அன்றித் தன் மனக்காவல் ஆகிய நெஞ்சு ஒருமைப்பாட்டால் கொண்டானைப் பிழையாதவர் ஒருமை மகளிர். இதுவே தற்காத்துக் கொள்தல் எனச்சொல்லப்படுவது. அதைப் போலவே ஆண்மகன் ஒருவனும் தன்னைத்தான் கொண்டொழுகி அதாவது தானாகவே தன்னை வரன் முறைப் படுத்திக் கொண்டு பாலியல் வரம்புகள் மீறாமல் காத்துக் கொள்ளவேண்டும். இத்தற்கட்டுப்பாடு அரிய பண்பாகும். பிறர் கட்டுப்படுத்தித் தாம் கட்டுப்பாடாக வாழ்வதைவிடத் தாமே தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்வது பெருமைக் குரியது. இன்னொரு வகையில் சொல்வதானால் பிறருக்கு, அரசுக்கு, சட்டத்திற்கு, இகழ்ச்சிக்கு அஞ்சி நடப்பதை விட, தமக்குத் தாமே அடங்கி நடப்பதுதான் பெருமைக்குரியது. தன்னைத்தான் கொண்டு 'ஒழுகின்' என்றதால் அது அரிது என்பதும் பெறப்படுகிறது.

பெண்தான் நிறையுடன் அதாவது காப்பன காத்து கடிவன கடிந்து, ஒழுகும் ஒழுக்கத்துடன் திகழவேண்டும் என நெடுங்காலமாகக் கூறி வந்தனர். இக்குறட்பாமூலம், பெண்ணுக்கு விதிக்கப்பட்ட கற்பை ஆணுக்கும் உரியதாக்கி, புதிய அறச்சமத்துவத்தை வகுக்கிறார் வள்ளுவர்; ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளையே எடுத்துக்காட்டாகவும் கூறுகிறார் இங்கு. குலமகளிர் மனம் திண்ணியராய்த் தம்மைக் காத்துக்கொண்டு ஒருமுகப்பட்டிருப்பது யாவருமறிந்த ஒன்று. அறிந்ததுகொண்டு அறியாததை விளக்குகின்ற முறையினைப் பின்பற்றி, உலகறிந்த ஒருமனப் பெண்டிரின் உயர்நிலை உவமையாக்கப்பட்டது.
ஒருமனப்பட்ட பெண்கள் தம்மைத் தாம் காத்துக்கொண்டு நிறையுடையவர்களாக வாழ்வதால் சிறப்பு அடைகின்றார்கள். அவ்விதம் வாழும் பெண்களைப் பார்த்து ஆடவர்கள் அவ்வொழுக்கத்தை கற்றுக் கொள்ளவேண்டும் எனச் சொல்கிறார் வள்ளுவர். அப்படி அதைப் பற்றிக் கொண்டால் அவளுக்குரிய பெருமை அவனுக்கும் உண்டு என்கிறது இக்குறள். இவ்வாறு ஆணுக்கும் கற்பு வலியுறுத்தப்பட்டது.
கற்பு என்னும் திண்மையுடைய பெண்களைப் (ஒருமை மகளிர்) போல் ஆண்மகனும், பிறன்மனை, பரத்தையர், காமக்கிழத்தி இவர்களிடம் சேறல் என்றவாறு தன் மனத்தை அலையவிடாமல், தன்னைத் தானே உறுதிபட நிலை நிறுத்திக் கொண்டால், அவன் பெருமைக்குரியவனாகக் கருதப்படுவான் என்று இக்குறள் உரைக்கிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே ஒழுக்கம் அமைய வேண்டும் என்பது வள்ளுவர் விரும்புவது. வள்ளுவர்தான் முதன்முதலில் ஆண்களும் குடும்பப்பெண்கள் போல ஒருதுணையுடன் வாழ்க்கை நடத்த வேண்டுமென அறிவுறுத்தியவர் ஆவார் என அறிஞர்கள் போற்றுவர்.

ஒரு நிலையில் மனத்தை வைத்துக் கொள்ளும் மாதர்போல, பெருமையும் ஒருவன் தன்னைத்தானே உறுதியில் வழுவாமற் காத்து நடந்தால் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புறம்போகாமை ஆடவர்க்குப் பெருமை தரும்.

பொழிப்பு

மகளிர் மனத்திண்மையால் தம்மைக் காத்தொழுகுதல் போலப் பெருமையும் ஒருவன் தன்னைக் காத்தொழுகின் உண்டாகும்.