இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0972



பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

(அதிகாரம்:பெருமை குறள் எண்:972)

பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.



மணக்குடவர் உரை: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.
எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.

பரிமேலழகர் உரை: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான்.
(வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)

வ சுப மாணிக்கம் உரை: ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும் செயல் வேற்றுமையால் சிறப்பு வேறுபடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும்; செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா.

பதவுரை: பிறப்பு ஒக்கும்-பிறப்பு ஒத்திருக்கும், ஒரே தன்மையுடையதாக இருக்கும்; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிருக்கும்; சிறப்பு-பெருமை; ஒவ்வா-ஒத்திருக்காது; செய்-செய்யும், செய்கின்ற; தொழில்-தொழில்; வேற்றுமையான்-வேறுபாட்டினால்.


பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை;
பரிப்பெருமாள்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை;
பரிதி: மனிதர் எல்லோரும் சனனத்தால் ஒப்பர்; [சனனத்தால்-பிறப்பால்]
காலிங்கர்: மக்கள் ஆகிய அனைவர்க்கும் பிறப்பின்கண் ஒரு வேற்றுமை இல்லை;
பரிமேலழகர்: எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்;
பரிமேலழகர் குறிப்புரை: வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும்;

பிறக்கு ஒக்கும் என்பதற்கு பிறப்பின்கண் வேறுபாடில்லை என்ற கருத்தில் தொல்லாசிரியர்கள் பொருள் கூறினர். பரிமேலழகர் விளக்க உரையில் 'முந்தையவினைப் பயனால் உடல் எடுத்து அதன்படிச் செயல்பட்டு அதன் விளைவுகளை அனுபவித்தல் எல்லா வருணத்தாருக்கும் சமம்' என்று மயங்க வைக்கும் பொருளில் 'பிறப்பொக்கும்' என்பதற்கு சமயக்கருத்து கலந்ததான பொருள் தருகிறார். எல்லா உயிர்க்கும் என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் குறளில் உள்ளபடி 'எல்லா உயிர்க்கும்' எனப் பொருள் கூற மற்றவர்கள் 'மக்கள் உயிர்க்கும்' எனக் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறப்பால் ஒக்கும் ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும்', 'எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு ஒரே மாதிரிதான்', 'எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும்', 'எல்லா உயிர்கட்கும் பிறப்பு இயல்பு ஒக்கும்; உயிரென்றது மக்களுயிரை' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் வேறுபாடில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.
மணக்குடவர் குறிப்புரை: எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
பரிப்பெருமாள்: ஆயினும் தத்தம் செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
பரிதி: ஆசாரத்தினாலே நற்குலத்தராவர் என்றவாறு.
பரிதி குறிப்புரை: நற்குலத்தவாராவர் என்றதால் இழிதொழிலாலே இழிகுலமாவார் என்பதாம்.
காலிங்கர்: அம்மக்கட்குச் சிறப்பு ஒவ்வாது என்பது என்னையோ எனில், இயல்பு நீங்கிய இழிவு தொழில் ஒருவர்க்கு உளதாயின் இவர் சாலச் சிறியர் என்றும், தமக்கு இயல்பாகிய பேரொழுக்கத்தின்கண் பிழையாது ஒழுகின் இவர் சாலப் பெரியார் என்றும், இங்ஙனம் வழங்கி வருதலால் யாவர்க்கும் சிறப்பு ஒவ்வாது என்பதனைத் தெரிந்துகொள்ளப்படும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: சிறப்பு என்பது பெருமை.
பரிமேலழகர்: பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான்.
வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.

இப்பகுதிக்கு உரை காண்பதில் பழைய உரையாசிரியர்கள் வேறுபட்டு நிற்கின்றனர். மணக்குடவர் பெருமை என்பது செய்யும் தொழிலால் மாறுபடும் என்று பொழிப்புரையில் கூறி விளக்க உரையில் 'பெருமையாவது குலத்தினால் அறியப்படாது' என்று அழுந்தத் தெரிவிக்கிறார். பரிதியார் இழிதொழில் செய்தால் இழிகுலத்தார் என்று கூறுகிறார். காலிங்கர் 'மக்களுக்கு இயல்பானது பேரொழுக்கமுடையராதல். இயல்பில்லாதது இழி தொழிலைச் செய்தல். பேரொழுக்கத்தால் சிறப்பும், அஃதின்மையானும், இழிதொழில் செய்தலானும் விளைவது சிறப்பின்மை' என உரை வரைகிறார். இதை 'பேரொழுக்கம் உடையனாதல் பெருமை' என்பது பெறப்படும் என விளக்குவர். பரிமேலழகர் சிறப்புரையில் வருணத்தையும் பிறவிச் சுழற்சியையும் காட்டி அதனாலேயே ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்கிறார். எல்லா உயிருக்கும் பிறப்பு சமானமானதே என்றாலும் செய்யும் தொழில்கள் வரையறுக்கப்பட்டிருப்பதனால் (வருணாசிரமம்) அவை சிறப்பு அடிப்படையில் சமானமல்ல என்று இக்குறள் சொல்வதாகப் பரிமேலழகர் கருத்துரைக்கிறார். மணக்குடவர் குலத்திற்கும் சிறப்புக்கும் தொடர்பில்லை என்று கூற பரிமேலழகர் அதற்கு மாறாக வருணவேறுபாடு பற்றிப் பேசுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் சிறப்புக்கள் ஒவ்வா', 'ஆனால் அவரவர்கள் காரியம் செய்யும் திறமை வேறுபடுவதனால் சிறப்புகள் ஒரே மாதிரியாக இருக்கமாட்டா', 'அவைகள் செய்கின்ற தொழில் வேறுபாட்டினால் பெருமை ஒத்திருப்பது இல்லை', 'செய்யப்படுகின்ற தொழில்களின் வேறுபாட்டால் சிறப்பு இயல்புகள் ஒவ்வா-அவரவர்கள் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பு ஒவ்வாமை-ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதலாம். எல்லா மக்களும் பிறப்பினால் ஒரு தன்மையினரே. செய்யும் தொழிலுக்குத் தக்கவாறு பெரியார் சிறியார் என்னும் பெயர் பெறுகின்றனர். அவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என்பதாம். 26-ம் குறளைப் பார்க்க', என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது இப்பகுதியின் பொருள்.


நிறையுரை:
பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

உயிர்களின் பெருமையை மதிப்பீடு செய்வது எது?

எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே; செய்யும் தொழிலின் வேறுபாட்டால் சிறப்பு ஒத்திருப்பதில்லை.
பிறப்பால் சிறப்பு உண்டாவதில்லை; செய்யும் தொழிலால் பெருமை வேறுபடும். சிறப்பு என்பது இங்கே பெருமையை குறிக்கின்றது; அது ஒருவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது. பெருமையும் சிறுமையும் அவரவருடைய செய்தொழில்களின் ஏற்றத் தாழ்வுகளால் மதிப்பிடப்படும் என்பது இக்குறளால் உணர்த்தப்பட்டது.
பிறப்பில் அதாவது பிறக்கும்பொழுது எல்லோரும் சமம். பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியாத குழந்தைகளே; இன்ன பெருமைக்குரியதாகப் போகிறது என்றோ இந்தத் தொழில் செய்யப்போகிறது என்றோ அப்பொழுது தெரிவதில்லை. நீரின்றி அமையாது உலகு என்பது போன்றதோர் இந்த அடிப்படை உயிரியல் உண்மையைத் திரிவுபடாமல் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உரைக்கிறார் வள்ளுவர். இத்தொடரை எல்லா உயிர்கட்கும் பிறப்பு இயல்பு ஒக்கும் எனவும் உயிர்கள் பிறப்பிலே ஒத்த உரிமையுடையன எனவும் விளக்குவர்.
பிறப்பினால் பெருமையோ இழிவோ உண்டாவதில்லை என்பதைச் சொல்வதுதான் பாடலின் முதல்பகுதி. அருளுடையவன் அந்தணன்; அருளற்றவன் இழிந்தோன்; ஒழுக்கமுடையவன் உயர்ந்தோன்; ஒழுக்கமற்றவன் தாழ்ந்தோன்; தொழில்திறன் கொண்டவன் மேலானவன்; தொழில்திறன் குறைபாடுடையவன் கீழானவன்; இவ்வாறு அறத்தாலும், ஒழுக்கத்தாலும், தொழில் செய்திறனாலும் பெருமை மக்களுக்கு உண்டேயன்றிப் பிறப்பால் உயர்ச்சியோ தாழ்ச்சியோ இல்லை என்ற வள்ளுவரின் உறுதியான கோட்பாட்டைக் குறள் நெடுகக் காணலாம். பெருமை பேசப்படும் இவ்வதிகாரத்திலும் அது தெளிவுறுத்தப்படுகிறது.

குறளின் இரண்டாவது பகுதி 'சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்கிறது. வ சுப மாணிக்கத்தின் இக்குறளுக்கான 'ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும் செயல் வேற்றுமையால் சிறப்பு வேறுபடும்' என்ற உரை குறட்கருத்தைத் தெள்ளிதின் விளக்குகிறது. இவ்வுரை .... பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும், சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும் (புறநானூறு 183: பொருள்: ...பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும் கல்வியின் சிறப்பால் தாயும் மனம் வேறுபடும்) என்ற புறநானூற்றுப் பாடலைத் தழுவியதாக உள்ளது.
'நல்ல தொழில் செய்கின்றவர்கள் குற்றமான தொழில் செய்கின்றவர்களை விட மேலானவர்கள். அரிய பெரிய தொழில் செய்கின்றவர்கள் சிறு சிறு தொழில்களைச் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்கள்' என்று மு. வரதராசன் செய்தொழிலுக்கும் சிறப்பு நிலைகளுக்கும் உள்ள தொடர்பை விளக்குவார்.
தேவநேயப் பாவாணர் கூறும் தொழில் வேறுபாடுகளும் சிறப்புநிலை வேறுபாடுகளும்: 'அதிகாரமுள்ளது, அதிகாரமில்லது ; வருமானம் மிக்கது; வருமானங் குறைந்தது; தற்சார்பானது, மற்சார்பானது; நிழலிற் செய்வது, வெயிலிற் செய்வது; மனவுழைப்புள்ளது; உடலுழைப்புள்ளது; துப்புரவானது, துப்புரவற்றது; ஒழுக்கக் கேட்டிற் கிடமுள்ளது, ஒழுக்கக் கேட்டிற் கிடமில்லது; இன்றியமையாதது. இன்றியமையாத தல்லாதது; பிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது; நல்லது தீயது என்பன. இவற்றுள் ஒவ்வோரிணைக்கும் இடைப்பட்ட நிலைமையுமுண்டு. தொழில்வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன'.
தண்டபாணி தேசிகர் 'பெருமை சிறுமைகள் பிறரால் மதிக்கப்படுவனவே அன்றித் தாமே கருதுவனவல்ல. ஆதலால் தொழிலின் உயர்வினைக் கொண்டே பெருமையும் மதிக்கப்படுகிறது எனப் பெருமையிலும் உயர்வும் தாழ்வுமுண்டு என்பதை உணர்த்துவதே இக்குறளின் நோக்கம். பெருமையை மதிப்பீடு செய்வதே பெருமை என்னும் இவ்வதிகாரத்தின் பொருணோக்கிற்கும் ஏற்றதாகும்' என்று சொல்லி 'ஆதலால், மக்களுக்கு மட்டும் என்ன? பிறப்பால் ஒத்த எல்லாவுயிர்கட்குமே செய்தொழிலால் பெருமை ஒப்பாதல் இல்லை என்பதனைப் பட்டத்துயானையையும் படையானையையும் சுமைதூக்கும்யானையையும் கொண்டே துணியலாம்' என்று எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் செய்வார்.
செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுகிறது என்ற உரையை வளப்படுத்தும் நோக்கில், செய்தொழில் வேற்றுமையால் என்பதை 'தொழில் செய் வேற்றுமை'யால் என வாசித்து, 'பிறப்பில் அனைவரும் சமம்; அவர்கள் செய்யும் தொழில்களிலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லை; அவர்கள் செய்யும் தொழில் திறமையில்தான் வேறுபாடுகள் உண்டு; அவையே ஒருவரது பெருமை-சிறுமைக்குக் காரணம்' என்றும் இக்குறளுக்கு உரை வரைந்தனர். தொழில் என்ற இடத்தில் தொழில் செய்திறன் எனக் கூறி 'உயிர்கள் தொழில் செய்யும் ஆற்றலினால் சிறப்பும் சிறப்பின்மையும் சேர்கின்றன' எனச் சிலர் பொருள் உரைத்தனர். தொழில் என்பதற்குச் செயல் எனப் பொருள் கொண்டு, நல்ல செயல்கள் தீய செயல்களால் வேறுபாடுகள் அமைகின்றன என்றவகையிலும் உரைகள் உள.

தொழிலால் சிறப்பு வேறுபடும் என்பதை உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் (உழவு 1033) என்று உழவுத்தொழிலைப் பெருமைப்படுத்திய வள்ளுவரின் குறளே உறுதிப்படுத்துகிறது.

வேறுபல குறள் அறிஞர்களும் ஆய்வாளர்களும் இப்பாடல் பற்றிக் கூறிய கருத்துக்களிலிருந்து சில:

  • எல்லா மனிதர்களும் சமமானவர்களாகவே பிறக்கிறார்கள். ஆனால் உயரிய செயல்களே அவர்களை உயர்ந்தவர்களாக ஆக்கும். எனவே கீழ் நிலையில் உள்ள ஒருவரும் பெருமைக்குரியவனாக ஆகிறான்.
  • தொழில் வாழ்விற்கு இன்றியமையாததாய், உலகநடைக்குத் தேவையாய் இருப்பது. அதனுள் ஏற்றத்தாழ்வு இல்லை. தோட்டியும் தொண்டைமானும் ஒரு தன்மையரே. ஆனாலும் அவரவர்கள் அந்தந்தத் தொழில்களை ஆற்றுகின்ற காலத்து ஒழுக்கத்தோடும் அஃது இன்றியும் ஆற்றுகின்ற முறையாலேயே வேறுபாடு விளைகின்றதென்பதை விளக்கியவாறு.
  • உயர்வு தாழ்வு கணித்தற்கு உரிய செங்கோல் யாது? தன் கடனைச் செவ்வன செய்து முடிப்பவன் உயர்ந்தவன், முடிக்க மாட்டாதவனோ பிழைபட முடிப்பவனோ இழிந்தவன். ஒருவர்க்கு மேன்மை, கீழ்மை அவர் வினைமேல் வைத்துக் காணவேண்டுமே யன்றி, ஒருவர் நிலையை ஏனையோர் நிலையோடு ஒப்பிடப் புகுவதே முதற்கோணல் என்று அறிக. உலகிற்கு வேண்டிய தொழில்களுள் சிறப்பென இழிவென ஒன்றின்று. அவ்வினையைச் செய்யும் திறத்தாற்றான் சிறப்பும் இழிவும் தோன்றும் என்ற கருத்தால், 'சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான் என்றார். அவரவர் செய்யும் தொழில் வேற்றுமை காரணமாகச் சிறப்புநிலைகள் வேறுபடும் என்பது கருத்து.
  • உடல் உழைப்பு, மன உழைப்பு, அறிவு உழைப்பு எதுவானாலும் மனிதன் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணுகின்றான். அம்முன்னேற்றத்திற்கேற்ப உயர்வு தாழ்வுகள் மக்களிடையே உண்டாகின்றன. எனவே, ஒருவன் செய்கின்ற தொழிலை அளவுகோலாகக் கொண்டு ஒருவனைச் சிறப்புடையவன் என்றும், மற்றொருவனைச் சிறப்பற்றவன் என்றும் கருதுதல் கூடாது.
  • தொழில் வேற்றுமையாலும் பெருமை, சிறுமை பேசலாகாது. சிறப்பும் ஒவ்வாது; ஏனெனில் பிறப்பால் ஒக்கும் மனிதகுலம், தம்தாம் செய்யும் தொழில்களாலும் சிறப்புடையது சிறப்பற்றது எனப் பிரிக்கப்படாது. வேதம், கீதை, மனுஸ்மிருதி - எல்லாம், நான்கு வருணத்தார்க்கும் நான்கு வகைத் தொழில் வேறுபடுகளைச் சுட்டி, அதனாலும் பேதம் பேசுவதை மறுப்பது இது. பிறப்பினால் உயர்வுதாழ்வு பேசிய ஆரியரின் வருணாசிரமக் கோட்பாட்டைத் தகர்த்து, மறுத்து எழுதிய வள்ளுவர்தம் புரட்சிச் சிந்தனை. தொழில்களிலும் உயர்வு தாழ்வு கூறவில்லை; அவ்வவற்றிற்கேற்ற தனிச்சிறப்புண்டு என்பதே வள்ளுவர் கருத்து.
  • அவரவர் எய்தும் பெருமைக்கு வள்ளுவர், ஊழ் முதலானவற்றைக் காரணமாகக் கொண்டிலர். அவரவர் பெருமைக்கு அவரவர்களும் அவரவர்கள் செய்கை வேறுபாடுகளுமே காரணம்.
  • வள்ளுவர் சமயச் சார்பற்றவராய் இருந்தாலும், வைதிக-வருண தருமங்களைத் துணிவுடன் எதிர்த்த மெய்யியல் போராளியாகத் திகழ்ந்தார். பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகப் பிளவுகளை, ஏற்கமறுத்த வள்ளுவர், மனித நேயத்துடனும் பேராண்மையுடனும், பிற்போக்கான அந்த சமூக அநீதிக்கு, 'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குடியியலின் குறள்வரியால் பதிலடி கொடுத்தார். மக்களிடம் நடைமுறையில் காணப்பட்ட வேறுபாட்டு நிலைகளை விளக்க, 'சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்ற உலகியலைக் குடியியலின் 'பெருமை' என்ற அதிகாரத்தில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
  • ஒவ்வொருவரும் அவரவர் தொழிலுக்கேற்பச் சிறப்புக்கு உரியவரே. இருவரில் எவரேனும் தம் தொழிலுக்கு இழுக்கு நேரும் வகையில் தவறாகச் செயல்பட்டால் சிறப்புக் குன்றுவர். எந்தத் தொழிலாயினும் அதனை அதற்குரிய நெறியில் செய்தல் வேண்டும்.
  • ஒரு சமுதாயத்தில், மக்களிடையே ஒரு தொழிலின் பயன் கருதி, அதற்கிருக்கும் பெருமை, அல்லது மதிப்பு, அல்லது அதனால் சமுதாயம் பெறும் 'செல்வம்' அல்லது 'நன்மை' வேறுபடலாம் என்று கொண்டாலும் தொழிலில் உயர்வு, தாழ்வு காண்பதற்கு வள்ளுவரின் அணுகுமுறையில் இடமில்லை.

எல்லா உயிர்க்கும் என்ற தொடர்க்கு 'எல்லா மக்களுக்கும்' என ஒரு சாரார் பொருள் கூற அது 'எல்லா உயிர்களுக்கும்' என உயிர்ப்பொதுமையை உணர்த்திற்று எனப் பிறிதொரு சாரார் கூறுவர். 'எல்லா உயிர்க்கும்' என்ற தொடர் குறளில் இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் (இகல் 851 பொருள்: உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோயை இகல் என்று சொல்வர்), ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு (நாண் உடைமை 1012 பொருள்: உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்) என்ற இடங்களிலும் ஆளப்பட்டது. இவ்விரு இடங்களிலும் அது உயிர்ப்பொதுமையையே உணர்த்துவதால் இக்குறளிலும் 'எல்லா உயிர்க்கும்' என்பதற்கு உயிர்கள் அனைத்துக்கும் எனப் பொருள் கொள்வதே தகும்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

அதிகாரம் பெருமை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பிறப்பில் பெருமை அனைவருக்கும் ஒத்தது என்று சொல்கிறார் வள்ளுவர். இது அதிகார இயைபுடைய நேரான கூற்றே. ஆனால் இக்குறள் உயிர்களுக்கிடையே உள்ள பெருமைநிலை வேறுபாடுகள் ஏன் உண்டாகின்றன என்பது பற்றி ஆராய வந்தது மட்டுமல்லாமல், இப்படிச் சொன்னதற்கு வேறு காரணங்களும் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் எண்ணினர். அடிமை முறையின் பண்பு கொண்ட பிறப்பு அடிப்படையிலான சாதிப்பிரிவினை இந்தியப் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருந்தது; தொல்காப்பியத்தில் காணப்படும் நான்கு பிரிவுகளையோ, மனு வகுத்த நான்கு வருணங்களையோ, சமூகவியல் பகுப்பாகவோ-மேலிருந்து கீழாக அவை தரவரிசைப்படுத்தப்பட்டதையோ வள்ளுவர் ஒப்பவில்ல என்பதை அறிவிக்கவே இக்குறள் யாத்தார் என்றனர் இவர்கள். மணக்குடவர் 'இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று' என இக்குறட்பாவின் உட்கருத்தைத் தெளிவுபடுத்தினார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவர் ஏன் கூறினார் என்பதை விளக்கம் செய்ய வந்தவர்கள் மனுதரும நூலில் உரைக்கப்பட்டதையும், கீதையில் சொல்லப்பட்ட உபதேசங்களயும் எடுத்துக்காட்டினர். 'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணாத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' என்ற மனுவின் கருத்துக்களையும் 'நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருணதர்மம் படைத்த என்னால்கூட முடியாது' என்று பகவான் கிருஷ்ணனே கூறுவதாக எழுதப்பட்ட கீதையின் சுலோகங்களையும் மேற்கோள் காட்டி இவற்றை மறுப்பதற்காகவே வள்ளுவர் இவ்வாறு பாடினார் என்று கடிதில் உரைத்தனர்.

வருணாசிரமம் என்றது மனித உரிமைகளுக்கு எதிரான வரலாற்றின் மிகப் பெரிய மோசடியாகும். இது இங்குள்ள சிந்தனைப் போக்கைச் சிதறடித்து சமூக அமைப்பைச் சீர்குலைத்தது. வருணாசிரமம் என்பது பிறப்பால் உயர்வும் இழிவான தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறாது என்று சொல்லி நால்வேறு வகையில் வாழ்க்கையுரிமை வகுத்துக் கொடுத்து சாதிக்கொரு நீதி விதித்தது. கல்வி போன்றவை குலத்துக்கொரு நீதி முறையில், பெரும்பாலோர்க்கு அவற்றை விரும்பினாலும் குற்றமாகும் என்று சொல்லப்பட்டது; இவ்வாறு சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அறமற்ற முறையில், ஒரு சாரார்க்குமட்டும் தனிஒதுக்கீடு வழங்கும் முறை (reservation) அறிமுகப்படுத்தப்பட்டுச் செயலாக்கம் பெற்றது. இந்தக் கோட்பாட்டை மறுத்து எழுதப்பட்டதே ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் முழக்கம். பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்ட இந்தியச் சமூகச் சூழலில் வள்ளுவர் முன்வைத்த பிறப்பொக்கும் என்றது ஒரு பெரிய புரட்சிக் கருத்தாகும். பிறப்பு ஒப்புமையை வள்ளுவர் ஓர் வாழ்வியல் விழுமியமாக மொழிந்தார்.
இக்குறட்பா வள்ளுவரை ஒரு சமுதாயப் புரட்சியாளராகவும் அடையாளம் காட்டுகிறது. வருணம் சார்ந்த சொல்லாட்சியோ பொருள் ஆளுமையோ குறளில் எங்கும் காணப்படவில்லை. வடமொழி நூல்களில் வழங்கி வந்த சாதி வேற்றுமைகளையும் அவற்றின் அடிப்படையில் உண்டாக்கப்பட்ட ஆசாரங்களையும் மறுப்பதாக உள்ளது இது. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகப் பிளவுகளை ஏற்கமறுத்த வள்ளுவர், போராட்டக் குணம்கொண்டு, இயற்கைஅறம் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில், பிற்போக்கான அந்த அநீதிக்கு, இக்குறள் மூலம் பதிலடி கொடுத்தார்.

மனிதகுலம் தோன்றியதிலிருந்து அதற்குண்டான உரிமைகள் உணரப்பட்டு வந்தன; வளர்ந்த நாகரீக நாடுகள் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிலைநாட்டப் போராடி வெற்றி கண்டன. நம்நாட்டில் 'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்' என மேற்பால் கீழ்ப்பால் எனப் பிரித்துக் காணும் போக்கு சங்க காலத்திலேயே இருந்தது என்றாலும் அதை எதிர்க்கும் குரல்களும் இருந்தன. இனம், குலம், பிறப்பென்னும் சுழிப்படாமல், உறுதியாக, மனிதர்களில் பிறப்பால் உயர்வு தாழ்வு கூறும் நூல்களை மறுத்து, எல்லா உயிர்களும் பிறப்பால் ஒக்கும் என்றும் அவரவர்களின் செயல்களாலேயே பெருமை உண்டு என்றும் இக்குறள் மூலம் அதை இன்னும் ஓங்கி உரைத்தார் வள்ளுவர். பிறப்பு ஒருவனின் சிறப்புக்கு காரணமாய் அமைவதில்லை என்று சொல்லி, வேறுவேறுமக்களிடம் நடைமுறையில் காணப்பட்ட பெருமை நிலை வேறுபாடுகளை விளக்க, 'சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்ற உலகியலை உறுதிபடச் சொல்கிறார் வள்ளுவர்.

சம வாய்ப்பு (Equal opportunity), வாழ்க்கைத்தொழிலைத் தேர்வு செய்வதில் கட்டாயமின்மை, எப்பணியிலும் ஈடுபடும் உரிமை (Freedom to choose an occupation and right to engage in work) போன்ற அடிப்படை உரிமைகள் உள்ள சமுதாயத்தில் எந்தச் சிறப்பையும் யாரும் பெறமுடியும். இவை மறுக்கப்பட்ட சமூகத்தில் கோணல் கோட்பாடுகள் கோலோச்சிக் குழப்பங்களை விளைவிக்கும். அப்படிப்பட்ட சமூக அமைப்பு வள்ளுவர்க்கு ஏற்புடையது ஆகாது. இயற்கையில் அமைந்த மனித குலத்தின் உரிமைகளை அரசியல் வழியோ, சமய அமைப்புகளின் மூலமோ, புன்மையான சாதி குல அமைப்புகளின் மூலமோ மறுக்க முயலக் கூடாது. இவையும் இக்குறட்பாவில் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் வேறுபாடில்லை; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்தொழில் திறனால் பெருமை கணிக்கப்படும்.

பொழிப்பு

அனைத்து உயிர்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் தொழில்களால் பெருமை வேறுபாடு உணரப்படும்.