இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0958



நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்

(அதிகாரம்:குடிமை குறள் எண்:958)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.

மணக்குடவர் உரை: ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின் அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.

பரிமேலழகர் உரை: நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம்.
(நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: குடும்பப் பண்பில் பற்றில்லா விட்டால் அவன் குடும்பப் பிறப்பில் ஐயம் தோன்றும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்.

பதவுரை: நலத்தின்-குடிநலத்தின், குடும்பப் பண்பில்; கண்-இடத்தில்; நார்-அன்பு, பற்று; இன்மை-இல்லாதிருத்தல்; தோன்றின்-உண்டாவதாயின்; அவனை-அவனை; குலத்தின்-குடிப்பிறப்பின், குடும்பப் பிறப்பில்; கண்-இடத்தில்; ஐயப்படும்-ஐயப்படத்தகும், ஐயப்படுக.


நலத்தின்கண் நாரின்மை தோன்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின்;
பரிப்பெருமாள்: ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின்;
பரிதி: மனிதனாகப் பிறந்து கிருபையற்றவனாகில்;
காலிங்கர்: நல்லொழுக்கத்தின்கண் தமக்குச் சிறிதும் கிருபை இல்லாமை தோன்றின்; [கிருபை- கருணை]
பரிமேலழகர்: குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. [நார் - அன்பு]

'குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையே அன்பின்மை காணப்படுமேல்', 'ஒருவன் செல்வ நலங்களுடன் சுகமாக வாழும் போதும் அவனிடத்தில் அன்பில்லாத தன்மை இருக்கக் கண்டால்', 'ஒருவனுக்கு நன்மையில் விரும்பமில்லாமை காணப்படுமாயின்', 'ஒருவனுடைய பண்பில் அன்பு இன்மை தோன்றினால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குடிநலமுடையவன் கண்ணே அன்பின்மை காணப்படுமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('ஐயப்படல்' பாடம்): அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.
பரிப்பெருமாள் ('ஐயப்படல்' பாடம்): அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனானும் குடிப்பிறந்தார் நீரல்ல செய்யார் என்று நன்கு மதித்தவறாயிற்று.
பரிதி: அவனது குலம் யாது என்று சந்தேகப்படுவர் என்றவாறு.
காலிங்கர் ('ஐயப்படல்' பாடம்): மற்று அவரைப் பிறந்த குலத்தின் கண் ஐயப்படுதல்; எனவே அவர் ஏக்கழுத்தின்கண் நலம் இல்லாமையால் அவர்மாட்டு அஞ்சத் தகும் என்றவாறு. [ஏக்கழுத்தின் கண் - இறுமாப்பின் கண்]
பரிமேலழகர்: அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம்.
பரிமேலழகர் குறிப்புரை: நலமும் குலமும், ஆகுபெயர். உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

'அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக/அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகம் அவனைக் குடிப்பிறப்பில் ஐயப்படும்', 'அவன் நல்ல குடிப்பிறப்பு உள்ளவன் அல்ல என்று சந்தேகிக்க இடமுண்டு', 'அவன் குலப்பிறப்பைப்பற்றி உலகத்தார் ஐயப்படுவர்', 'அவனுடைய குலப் பிறப்பில் உலகம் ஐயப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவனது குடிப்பிறப்பில் ஐயம் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குடிநலமுடையவன் கண்ணே நாரின்மை காணப்படுமானால் அவனது குடிப்பிறப்பில் ஐயம் உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
'நாரின்மை' குறிப்பது என்ன?

அன்புடைமையின் அடியாக அமைந்ததே நற்குடியாம்.

நற்குடியாளன் என்று சொல்லப்படுபவனிடத்தில் அன்பின்மை தோன்றினால் அவன் குடிப்பிறப்பின்கண் ஐயங்கொள்ள நேரும்.
'நலத்தின்கண்' என்றதற்குக் குடிநலத்தின்கண்ணே, நல்லொழுக்கத்தின்கண், குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே, நல்ல குலத்திலே பிறந்தவனிடத்திலே, ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில், நல்ல பண்புகளுக்கிடையே, நன்மையானவற்றில், குடிச் சிறப்புடையவனாய்ப் பிறந்தவனிடத்தில், குடும்பப் பண்பில் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் குடிநலத்தின்கண்ணே என்ற பொருள் பொருத்தமாகிறது.
ஒருவன் குடிச்சிறப்புடைய கூட்டத்திலிருந்து வருபவன் என்று அறியப்படுகிறவன். அவனிடம் ஈகைக் குணம் தென்படவில்லை. உதவும் குணம் சிறிதளவும் இல்லை. யாவரிடமும் அருளில்லாத தன்மையுடன் நடந்து கொள்கிறான். அவன் அக்குலத்திலிருந்து வந்தவன் தானா என்று உலகம் ஐயப்படும் என்கிறது இக்குறள்.

ஒரு குடியளவில் அமையாமல் பலநற்குடிகளும் கூடியது குலமாகும். குலநலம் அதாவது அக்குலத்தில் காணப்படும் குணங்கள் இங்கு பேசப்படுகின்றன.
பல தலைமுறைகளாக நற்பண்புகளைக் கட்டிக்காத்து குலம் உண்டாகிறது. அக்குலத்திலிருந்து வருபவன் எது செய்தாலும், அது அவனது குலத்தை, குலத்தின் தன்மையை அடையாளம் காட்டுவதாகவே அமையும். நல்லது நடந்தால் குலத்தின் இயல்பால் உண்டாயிற்று என்பர். அதுபோல் அவன் குற்றம் செய்தால் அதனால் அவனுக்குமட்டும் இழிவு ஏற்படுவதில்லை; அது குலத்துக்கே இழிவை உண்டாக்கும்.
நற்குலம் என்னும்போது நல்ல குணங்களைக் கொண்டவர்களைக் கொண்டது என்று உலகோர் துணிவர். நற்குலத்திலிருந்து தோன்றியவன் என்று அறியப்படுகிறவனிடத்து ஈரம் இல்லாவிட்டால் அவன் குடிச்சிறப்புடையவன் எனச் சொல்லத்தக்கவனல்ல என்கிறார் வள்ளுவர். அன்பில்லாமல் எப்படி அவன் குடிமையன் ஆவான்? என அவர் கேட்கிறார். அது மட்டுமல்ல 'அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்' அதாவது 'இவன் இக்குலத்தில்தான் பிறந்தானா? என உலகம் ஐயப்படும் என அரிதான சினமும் வெறுப்புக் கொண்டு பேசுகிறார் வள்ளுவர். குலநலமுடையானிடத்தே ஈவு இரக்கம் இருந்தே ஆகவேண்டும் என வற்புறுத்துகிறார். அன்பில்லாமை என்றதால் அவன் கொடுஞ்செயல்கள் புரிபவன்/ கடுமொழி பேசுபவன் என்பது பெறப்படும். 'குடும்பப் பண்பில் பற்றில்லா விட்டால் அவன் குடும்பப் பிறப்பில் ஐயம் தோன்றும்' என்பது வ சுப மாணிக்கம் உரை.

சிலர் நற்குடிப் பிறப்பினராயிருந்தாலும் அவர்களிடம் குலப்பிறப்பாளரிடம் காணப்படும் ஈரம் சற்றும் இல்லாமலிருக்கும். அத்தகையோரைக் காணும் போது, இவர் இக்குலத்தில் பிறந்தவர்தானா என்ற ஐயம் தோன்றுவது இயற்கை.
இக்குறளுக்கு மேற்கோளாகப் புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் கூறுவர்; சோழவேந்தன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் புலவர் தாமற்பல்கண்ணனாரும் வட்டாடினர். வட்டுக்களில் ஒன்று தாமற்பல்கண்ணனாரை யறியாமல் அவர்க்கீழ் மறைந்து விட்டபோது வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய சோழன் சினமுற்று, அவ்வட்டை எடுத்து அவர் மீது எறிந்தான். அச்செய்கையைக் கண்டு புலவர் வெகுண்டு “வேந்தே, நின் செயல் பொருந்துவ தன்று; நின் குடிப் பிறந்தோர்க்கு இச் செயல் இயல்பன் றாதலின், நின் பிறப்பின்கண் ஐயமுறுகின்றேன்” என வருந்தி யுரைத்தார்:
ஐயம் உடையேன்:
‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு?'
(புறநானூறு 43 பொருள்: நினது பிறப்பின்கண் ஐயப்பாடுடையேன்; ஆத்தியாற் செய்யப்பட்ட தாரையுடைய நின் முன்னோர் யாவரும் பார்ப்பார் துன்புறும்படி செய்யார் மற்று இச்செய்கை நினக்கு நீர்மையை யுடைத்தோ?)
இக்குறளுக்குக் குறிப்பு தந்த தண்டபாணி தேசிகர் 'மகனறிவு தந்தையறிவு; வித்தொன்று போடச் சுரையொன்று முளையாது என்பாராகலின், வித்தில் மாறுபாடுள்ளது என்பது இடக்கரடக்கிக் கூறப்பட்டது எனலாம்' எனக் கருத்துரைத்தார்.

ஐயப்படும் என்ற சொல்லுக்கு ஐயப்படுக என்றும் ஐயப்படும் என்றும் பொருள் கூறுவர்.

'நாரின்மை' குறிப்பது என்ன?

'நாரின்மை' என்றதற்கு நீர்மை யின்மை, கிருபையற்றவன், தமக்குச் சிறிதும் கிருபை இல்லாமை, ஈரம் இன்மை, தயையில்லாமை, அன்பும் அருளும் இல்லாமை, அன்பற்ற தன்மை, பற்றுஇன்மை, மாறான இயல்புகள், பற்றில்லாமை, அன்பின்மை, அன்பில்லாத தன்மை, நன்மையில் விரும்பமில்லாமை, பாரம்பரியப் பண்பில் ஈடுபாடு இல்லாமை, எல்லாவிதக் குணநலன்களும் அமையாதிருத்தல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நாரின்மை என்பது கொடாமையும் கடுஞ்சொல்லும் எனப் பரிமேலழகர் விளக்கம் தந்தார். தேவநேயப்பாவாணர் பொழிப்புரையில் அன்பின்மை எனக்கூறி விரிவுரையில் 'நகையீகையின் சொல் இகழாமை நான்கும் இன்மை' என்றார். நாரின்மை என்ற சொல்லுக்கு அன்பின்மை என்ற பொருள் பொருத்தம். நல்ல குடும்பத்திலிருந்து வந்தவனிடம் அன்பு என்ற குணத்தில் குறைபாடு காணப்பட்டால், அந்தக் குறைபாடுடையவன் நல்ல குடியிலிருந்து வந்தவன்தானா என்ற ஐயம் எழத்தான் செய்யும்.
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரிற் பிறந்தமை ஈரத்தி னறிப (முதுமொழிக்காஞ்சி 2.1 அறிவுப்பத்து பொருள்: கடல் சூழ்ந்த உலகத்தில் மனிதர் எல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடியிற் பிறந்ததை உயிர்களிடத்தில் அவனுக்குள்ள அன்பினால் அறிவர்) என நற்குடியில் பிறந்தவன் என்பதற்கு அவனிடத்துள்ள ஈரமே அறிகுறி என இச்சங்கப்பாடலும் கூறிற்று.

அன்பில்லாத உயிரைக் காணுந்தொறும் வள்ளுவருக்கு சினம் மிக உண்டாகிறது. முன்னர் ...................அன்பி லதனை அறம் (அன்புடைமை 77 பொருள்: அன்பிலாததை அறம் (வருத்தும்)) என அன்பில்லாதவனை 'அன்பிலதனை' என்ற அஃறிணைச் சொல்லால் இகழ்ந்தார். இங்கு அன்பில்லாதவனது குலப்பிறப்பே ஐயத்திற்குரியது என வெறுப்பின் எல்லைக்கே சென்று சுடுசொல் உரைக்கிறார்.

குடிநலமுடையவன் கண்ணே அன்பின்மை காணப்படுமானால் அவனது குடிப்பிறப்பில் ஐயம் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நல்ல பண்பில்லாவிட்டால் குடிமைப் பிறப்பே ஐயத்துக்குள்ளாகும்.

பொழிப்பு

குடும்பநலமுடையவனிடத்தே அன்பின்மை காணப்பட்டால் அவன் குடும்பப் பிறப்பில் ஐயம் ஏற்படும்.