இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0957



குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

(அதிகாரம்:குடிமை குறள் எண்:957)

பொழிப்பு (மு வரதராசன்): உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

மணக்குடவர் உரை: உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும்.
ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும்.
(உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: நற்குடிப் பிறந்தாரிடம் உளதாகும் குற்றம், வானத்தின் கண் உள்ள மதியிடத்துள்ள களங்கம்போல ஓங்கி யாவரும் அறியத் தெரியும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குடிப்பிறந்தார் கண் குற்றம் உயர்ந்து விளங்கும் விசும்பின் மதிக்கண் மறுப்போல்.

பதவுரை: குடிப்பிறந்தார்-நற்குடியில் பிறந்தவர்; கண்-இடத்தில்; விளங்கும்-தோன்றும்; குற்றம்-பிழை; விசும்பின்-வானில்; மதிக்கண்-திங்களிடத்தில்; மறு-களங்கம்; போல்-போன்று; உயர்ந்து-ஓங்கி.


குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின்;
பரிப்பெருமாள்: உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின்;
பரிதி: குடியிலே பிறந்தார் குற்றம்;
காலிங்கர்: ஒழுக்க நலத்திற்குரிய குடிப்பிறந்தோர் மாட்டும் குற்றம் உளதாமாயின்;
பரிமேலழகர்: உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்;

'உயர்குடி/ஒழுக்க நலத்திற்குரிய பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயர்ந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும்', 'உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்துக் குற்றம் தோன்றுமாயின்', 'நல்ல இனத்தைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால்', 'உயர்ந்த குடிப் பிறந்தாரிடத்தே யுண்டாகும் குற்றம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நற்குடியில் பிறந்தவரிடத்து உண்டாகும் குற்றம் என்பது இப்பகுதியின் பொருள்.

விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். [மறு- களங்கம்]
மணக்குடவர் குறிப்புரை: ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அது வானத்து மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
பரிதி: விசும்பில் மதியிடத்துக் களங்கம் போலத் தோன்றும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அது வானின் திகழும் மதியிடத்து உண்டாகிய மறுப்போலுயர்ந்து விளங்கும் என்றவாறு.
பரிமேலழகர்: தான் சிறியதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும். [விசும்பு- ஆகாயம்]
பரிமேலழகர் குறிப்புரை: உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம். [உலகெங்கும் பரந்து வெளிப்படும்- குடிப்பிறந்தார் குற்றம் உலகெங்கும் பரந்து தோன்றும்]

'வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வானத்தில் மதிக்கண் களங்கம் போல', 'அது வானத்திலுள்ள மதியிற் காணும் களங்கம்போல வெளிப்படையாய் விளங்கும்', 'அது ஆகாயத்தில் சந்திரனிடத்திலுள்ள களங்கத்தைப் போல உலகத்திலுள்ள எல்லாருக்கும் தெரியும்', 'சிறிதாயிருந்தாலும், வானத்திலுள்ள திங்களது களங்கம் போல் எங்கும் வெளிப்பட்டுத் தோன்றும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வானத்து மதிக்கண் களங்கம் போல விளங்கித் தோன்றும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நற்குடியில் பிறந்தவரிடத்து உண்டாகும் குற்றம் வானத்து மதிக்கண் மறு போல விளங்கித் தோன்றும் என்பது பாடலின் பொருள்.
'மதிக்கண் மறு' குறிப்பது என்ன?

நற்குடியாரிடம் தோன்றும் குறை வெளிப்படையாகவும் பெரிதாகவும் தெரியும்.

நல்ல குடும்பத்தாரிடம் உண்டாகும் குற்றம் வானத்தில் உள்ள நிலவில் காணப்படும் களங்கம் போல உலகத்தாரால் காணும்படி உயர்ந்து தோன்றும்.
குடிப்பிறந்தார் என்றது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களைக் குறிப்பது.
நற்குடி எனப் பெயர் பெற்ற குடும்பம் அது. அக்குடும்பத்திலுள்ள ஒருவர் தவறு செய்துவிட்டார். அந்த வீட்டுப் பிள்ளையா இப்படிச் செய்தது? என்று ஊரே பேசும். இதைக் குடிப்பிறந்தார் கண் குற்றம் வானில் உள்ள நிலவின் களங்கம் எவ்விதம் உயர்ந்து விளங்குகிறதோ அது போன்றது என விளக்குகிறது இக்குறள்.
நிலவின் குளிர்ந்த ஒளி இன்பம் தருவது. அதே சமயம், வெகு தொலைவில் நிலவில் உள்ள மறுவும் பார்க்கிறவர் கண்களை உறுத்தும்வகை வெளிப்படையாகத் தெரிகிறது. திங்கள் மிகத்தூய்மை உடையதாதலாலும் அதன்கண் களங்கம் அதற்கு மாறாக இருத்தலாலும் அது விளங்கித் தோன்றிற்று.

பிறர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாழ்வது ஒருவகையான வாழ்க்கை. மற்றவர்கள் நம் மீது குறை காணும்படி வாழக்கூடாது என்று நினைப்பவர்கள் இன்னொருவகை. நற்குடியினர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். நற்குடிப்பிறந்தார் எவ்வாற்றானும் தமக்கொரு குறையுண்டாகாமல் நடப்பதில் விழிப்புடன் இருப்பர்; கறைபடியும்படியானவற்றைச் செய்வாரேயானால் அது பலரும் பளிச்சென அறிந்து பழிக்கும்படியாகிவிடும். அதே குற்றத்தை நல்ல குடும்பத்தில் தோன்றாதவர்கள் செய்தால் ஊரார் அதுபற்றி வியப்படைய மாட்டார்கள். பழித்துப் பேசவும்மாட்டார்கள்; குற்றம் புரிவதே அவர்கள் இயல்பு என்று பொருட்படுத்தாமல் விடுவார்கள். ஆனால் தவறு செய்வதற்கு அஞ்சும் குடியிலேபிறந்தவர்கள் குற்றம் புரிந்தால் அது வானில் நிறைமதியினிடம் களங்கம்போல மிகுந்து தெளிவாகத் தோன்றும்; அது ஊர்ப்பேச்சாகிவிடும். ஆகையால் குடிப் பெருமைக்குக் கேடு நேராதவாறு காப்பாற்றிக் கொள்ள விரும்புவோர் சிறு சிறுகுற்றங்கள்கூட செய்யாமல் மிகவும் கருத்துடன் நடந்து கொள்வர்.

'மதிக்கண் மறு' குறிப்பது என்ன?

நிலவில் உள்ள வட்டவட்டக் குழிகளை நிலாக் குழிவுகள் (craters) என்பர் வானியல் அறிவியலார். அது உலகத்தார் கண்களுக்கு, ஒளிரும் மதிக்கண் ஓர் மறு அதாவது களங்கம் போல் தோன்றுகிறது, இதை உவமையாக்கி நற்குடியில் பிறந்தோரின் குற்றம் நிலவின் மறு போல் எல்லோருக்கும் ஓங்கித் தெரியும் என இப்பாடலில் கூறுகிறார் வள்ளுவர்.
இம் மறுவே அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து (நலம்புனைந்துரைத்தல் 1117 பொருள்: நிறைந்து ஒளிரும் திங்களில் உள்ளது போல இப்பெண் முகத்தில் களங்கம் உண்டோ?) என்ற குறளிலும் உவமிக்கப்பட்டுள்ளது.

நற்குடிப்பிறப்பாளரின் குற்றத்தை மதியின் களங்கத்தோடு ஒப்பு நோக்கும் இலக்கியங்கள் பல உள:
பழமொழிப்பாடலொன்று பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்தில் பட்ட மறு (பழமொழி 258 பொருள்: ஊர் போற்ற வாழ்பவர் பிறர் பழிக்கத் தக்க செயல்களைச் செய்தல் நிலாவில் நிழல்மறு தோன்றுவது போன்றதாகும்) என்கிறது.

மணிமேகலை
அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம்
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசறு விசும்பின் மறுநிறம் கிளர
(மணிமேகலை 6 சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை 61-5 பொருள்: அந்திப்பொழுதாகிய மாலைக் காலம் கழிந்த பின்னர் வந்து உதித்த பரந்த கிரணங்களையுடைய திங்கள் மண்டிலம், மேன்மக்கள்பாலடைந்த குற்றமானது, தோன்றுமிடத்து விளங்குமியல்பினைப்போல, விசும்பின்கண் மாசற்ற நிறத்தினிடம் களங்கம் விளங்க) என்கிறது.

நாலடியார்
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
(நாலடியார் மேன்மக்கள் 151 (பொருள்: அழகிய இடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப் பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மிற் பெரும்பாலும் ஒத்த பெருமையுடையவராவர்; ஆனால்; திங்கள் களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள் தமதொழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அது பொறாராய் உள்ளங் குழம்பி அழிவர்) எனத் திங்களைப்போற் சான்றோர் மறுவாற்றாராதலின், அவர் அதனினுஞ் சிறந்தவராவர் என்கிறது.

கம்பஇராமாயணமும்
இராமன் பிறந்ததால் சூரிய குலம் களங்கத்தைப் பெற்றது என இவ்வுவமையை இவ்விதம் ஆள்கிறது:
கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ
(கம்பராமாயணம் வாலிவதைப்படலம் 4133 பொருள்: (வானத்தில்) ஊர்ந்து செல்லுதலைப் பொருந்திய மதிக்கு, கருமை பொருந்திய நிறத்தை உடைய களங்கம் ஒன்று உள்ளது என்று எண்ணி சூரிய குலத்திற்கும் தொன்மையுடையதாய்த் தொடரும் ஒரு களங்கத்தை பெருமைக்குரிய நீ பிறந்து உண்டாக்கிவிட்டாய் போலும்.)

'மதிக்கண் மறு' என்ற தொடர்க்கு திங்களது களங்கம் என்பது பொருள்.

நற்குடியில் பிறந்தவரிடத்து உண்டாகும் குற்றம் வானத்து மதிக்கண் களங்கம் போல விளங்கித் தோன்றும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

குடிமைப் பண்புடையாரிடம் காணப்படும் குற்றம் விளங்கித் தோன்றும்.

பொழிப்பு

வானத்து மதியிற் காணும் களங்கம்போல நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடத்து உண்டாகும் குற்றம் விளங்கித் தோன்றும்,