இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0956



சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்

(அதிகாரம்:குடிமை குறள் எண்:956)

பொழிப்பு (மு வரதராசன்): மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார்.

மணக்குடவர் உரை: பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார்.
இது சான்றாண்மை விடார் என்றது.

பரிமேலழகர் உரை: மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார்.
(அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நற்குடும்பத்துக்கு ஏற்ப நடக்கின்றோம் என்பவர் வஞ்சகங் கொண்டு பொருந்தாதன செய்யார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாசற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார் சலம்பற்றிச் சால்பில செய்யார்.

பதவுரை: சலம்-வஞ்சனை; பற்றி-பொருந்தி; சால்பு--நிறைகுணம்; இல-இல்லாதவை; செய்யார்-செய்யமாட்டார்கள்; மாசற்ற-குற்றமற்ற, வசையில்லாத; குலம்-குடிமரபு; பற்றி-ஒத்து; வாழ்தும்-வாழக்கடவோம்; என்பார்-என்று சொல்லுபவர்.


சலம்பற்றிச் சால்பில செய்யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார்;
பரிப்பெருமாள்: பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார்;
பரிதி: கோபம் பற்றி நெறியல்லாதன செய்யார்;
காலிங்கர்: பிறரோடு நெஞ்சினால் சலம் பற்றி நின்று தமது தகுதிக்கு அமைவு இல்லன எஞ்ஞான்றும் செய்யார்; [சலம் - வஞ்சனை; அமைவு இல்லன - பொருந்தாத]
பரிமேலழகர்: வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார்.
பரிமேலழகர் குறிப்புரை: அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை.

'பொய்யைச் சார்ந்து/கோபம் பற்றி/நெஞ்சினால் சலம் பற்றி/வஞ்சனையைப் பொருந்தி அமைவில்லாதன செய்யார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வஞ்சனை கொண்டு அறமற்ற செயல்களைச் செய்ய மாட்டார்', '(ஒருவர் மீது தமக்குள்ள) வெறுப்பின் காரணத்தால் முறை தவறிய காரியங்களைச் செய்துவிடமாட்டார்கள்', 'பகை காரணமாக அல்லது வஞ்சனை பற்றி இழிவான செயல்களைச் செய்யமாட்டார்', 'வறுமையுற்றவிடத்தும் வஞ்சனையைப் பொருந்தி நற்பண்பில்லாச் செயல்களைச் செய்யார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வஞ்சனை கொண்டு பண்பற்ற செயல்களைச் செய்ய மாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

மாசற்ற குலம்பற்றி வாழ்தும்என்பார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார்.
மணக்குடவர் குறிப்புரை: இது சான்றாண்மை விடார் என்றது.
பரிப்பெருமாள்: குற்றமற்ற குலத்தைச் சார்ந்து வாழ்வோ மென்று கருதுவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சான்றாண்மை விடார் என்றது.
பரிதி: மாசற்ற குலத்தொழிலே நிற்பார் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் குற்றம் அற்ற தம் குடிப்பண்பினைச் சலியாமல் இறுகப் பற்றிக்கொண்டு நின்று யாம் வாழும் உயிர் வாழ்க்கையை இங்ஙனம் வாழ்தும் என்னும் இயல்பினர் என்றவாறு. [சலியாமல் - சிறிதும் நழுவாமல்]
பரிமேலழகர்: வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; [வசையற்று - குற்றம் நீங்கி]
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது. [அவ்வியல்பின் - தம்குடி மரபினின்றும்]

'குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றமற்ற குடிமரபுக்கேற்ப வாழ்வோம் என்னும் குறிக்கோளோடு வாழ்பவர்', 'குற்றமற்ற (தம்முடைய இனமரபைப் பின்பற்றி வாழ விரும்புகிறவர்கள்', 'குற்றமற்ற குலநலத்தைப் பாராட்டி வாழ்வோமென்பார்', 'குற்றமற்ற குடி மரபோடு ஒத்துவாழ்வோம் என்ற கொள்கையுடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

குற்றமற்ற குடிமரபுக்கேற்ப வாழ்வோம் என்று சொல்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குற்றமற்ற குடிமரபுக்கேற்ப வாழ்வோம் என்று சொல்பவர் சலம்பற்றிப் பண்பற்ற செயல்களைச் செய்ய மாட்டார் என்பது பாடலின் பொருள்.
'சலம்பற்றி' என்பதன் பொருள் என்ன?

எத்து ஏமாற்று குணங்கள் இல்லாதவராயிருப்பர் குலமரபினர்.

குற்றமற்ற நற்குடிப் பண்புடன் வாழ்வோம் என்று எண்ணிவாழ்பவர், வஞ்சிக்கும் எண்ணம் கொண்டு பண்பில்லாத இழிசெயல்களைச் செய்யமாட்டார்.
குடி என்பது ஒரு குடும்பம்; குலம் என்பது பல நற்குடிகள் சேர்ந்த கூட்டம். மாசற்றகுலம் என்பது பழியற்ற நற்குடியைக் குறிக்கும். 'மாசற்றகுலம் பற்றி வாழ்தும் என்பார்' என்பது குற்றமற்ற நல்ல குடியிற் பிறந்து அந்த நல்ல குடியின் மரபு காக்கப்படவேண்டுமென்ற விருப்பமுள்ளவர்களைக் குறிக்கும். அவர்கள் வஞ்சனை கொண்டு பண்பற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

ஒருவர் 'நான் குற்றமற்ற குலத்திலிருந்து வருபவன்; அக்குல மரபைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறேன்' என்று பெருமிதத்துடன் சொல்கிறார். அவர் வஞ்சக எண்ணத்துடன் பெருமையற்ற புன்செயல் புரியார் என்கிறார் வள்ளுவர். குலம்பற்றி வாழ்தும் என்பார் நல்ல குலத்தில் பிறந்து வாழ்வோராவர். அவர் குற்றங் குறையில்லாமல் வாழ நினைப்பவர். வஞ்சக உள்ளத்தோடு தகாத செயல்களை எண்ணவோ செய்யவோ செய்யமாட்டார். குடிப்பண்பைக் கருதாதவர்கள் எப்படியும் வாழலாம் என்று வாழ்வார்கள். குடிப்பிறப்புடையோர் உள்ளத்தாலும் உயர்ந்து நிற்பவராம்.

'சலம்பற்றி' என்பதன் பொருள் என்ன?

'சலம்பற்றி' என்றதற்குப் பொய்யைச் சார்ந்து, கோபம் பற்றி, பிறரோடு நெஞ்சினால் சலம் பற்றி, வஞ்சனையைப் பொருந்தி, வஞ்சனைகொண்டு, வஞ்சனை பொருந்திய, வஞ்சகங் கொண்டு, வெறுப்பு காரணமாக, ஆரவாரம் கொண்டு, பகை காரணமாக அல்லது வஞ்சனை பற்றி, கோபம் காரணமாக அல்லது வஞ்சிக்கும் எண்ணம் கொண்டு, வஞ்சனை மேற்கொண்டு, வஞ்சனையைக் கையாண்டு, சூழ்நிலை அதாவது மன நடுக்கம் அதாவது பயம் எனப் பலவாறு பொருள் கூறினர்.

இப்பாடலிலுள்ள சலம் என்ற சொல் வஞ்சனை என்ற பொருளில் வந்து, மாசற்ற குலத்தில் தோன்றி குடிமரபு காக்க எண்ணுபவர் வஞ்சக குணம் அறவே இல்லாதவராக இருப்பர் என்பதைச் சொல்வது. சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று (வினைத்தூய்மை 660 பொருள்: ஏமாற்றிப் பொருளீட்டி மகிழ்ந்திருத்தல் சுடாத பச்சை மண்பானையில் நீரை ஊற்றி வைப்பதைப் போன்றது) என்று குறளில் மற்றோர் இடத்திலும் 'சலத்தாற் பொருள்செய்து' என்ற தொடர் வஞ்சனை(ஏமாற்றுதல்) யென்ற பொருளிலேயே ஆளப்பட்டது.

'சலம்பற்றி' என்றது வஞ்சனை பொருந்திய என்ற பொருளது.

குற்றமற்ற குடிமரபுக்கேற்ப வாழ்வோம் என்று சொல்பவர் வஞ்சனை கொண்டு பண்பற்ற செயல்களைச் செய்ய மாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மனஒழுக்கம் குடிமைப் பண்புகளில் ஒன்று.

பொழிப்பு

நற்குடும்பத்துக்கு ஏற்ப வாழ்வோம் என்பவர் வஞ்சனை கொண்டு பண்பற்ற செயல்களைச் செய்ய மாட்டார்.