இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0954



அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

(அதிகாரம்:குடிமை குறள் எண்:954)

பொழிப்பு (மு வரதராசன்): பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் நற்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.



மணக்குடவர் உரை: பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார்.
இது சான்றாண்மை விடாரென்றது.

பரிமேலழகர் உரை: அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார்.
('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: கோடானு கோடி பணம் வருவதாக இருந்தாலும் குடிப்பிறந்தவர்கள் கண்ணியக் குறைவான காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.



பொருள்கோள் வரிஅமைப்பு:
அடுக்கிய கோடி பெறினும், குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.

பதவுரை: அடுக்கிய-அடுக்கடுக்காக குவித்து வைக்கப்பட்ட; கோடி-கோடி அளவினதாகிய பொருள்; பெறினும்-அடைந்தாலும்; குடி-நற்குடி; பிறந்தார்-தோன்றியவர்; குன்றுவ-தாழ்வாயின, கீழான செயல்கள்; செய்தல் இலர்-செய்யமாட்டார்கள்.

அடுக்கிய கோடி பெறினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பல கோடிப் பொருளைப் பெறினும்;
பரிப்பெருமாள்: பல கோடிப் பொருளைப் பெறினும்;
பரிதி: கோடி தனம் பெற்றாலும்;
காலிங்கர்: ஒன்று இரண்டு அன்றிப் பிற பல அடுக்கிய கோடி பெறினும்;
பரிமேலழகர்: பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; [அளவிற்றாய - அளவினதாகிய; கோடி என்னும் எண்ணளவைப் பெயர் அவ்வளவினதாகிய பொருளை உணர்த்துதலால் எண்ணளவை ஆகுபெயர்]
பரிமேலழகர் குறிப்புரை: 'அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது.

'பல கோடிப் பொருளைப் பெறினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கோடி கோடி பெற்றாலும்', 'பல கோடிப் பொருள்களைப் பெற்றாலும்', 'தொகுதியான பலகோடிப் பொருளைப் பெற்றாலும்', 'பலவாகிய அடுக்கிய கோடி அளவிற்கான பொருளைப் பெற்றாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கோடி கோடியாகப் பொருள் பெறுவதாயிருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார்.
மணக்குடவர் குறிப்புரை: இது சான்றாண்மை விடாரென்றது.
பரிப்பெருமாள்: உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மானம் விடார் என்றது.
பரிதி: குடிப்பிறந்தார் குலநெறிக்குக் குறை செய்யார் என்றவாறு.
காலிங்கர்: குடிப்பிறந்தோர் இந்நாணமும் நடுவும் குன்ற வருவன என்றும் கடிவதல்லது செய்வது இலர் என்றவாறு. [கடிவதல்லது- நீக்குவதல்லது]
பரிமேலழகர்: உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார்.
பரிமேலழகர் குறிப்புரை: குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.

'குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயர்குடியாளர் குறைவான காரியங்களைச் செய்யார்', 'நற்குடியில் தோன்றியவர் தம்குடிக்குத் தாழ்வுதரும் செயல்களைச் செய்யமாட்டார்', 'உயர்ந்த குடியிற் பிறந்தார் தமது சீர் குன்றுதற்குரிய செயல்களைச் செய்யமாட்டார்', 'நல்ல குடியில் பிறந்தார், ஒழுக்கம் குறைவதற்குரிய செயல்களைச் செய்யார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்ல குடியில் பிறந்தார் தம் குடிக்குத் தாழ்வாயின செய்தல் இல்லாதவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கோடி கோடியாகப் பொருள் பெறுவதாயிருந்தாலும் நல்ல குடியில் பிறந்தார் தம் குடிக்குத் தாழ்வாயின செய்தல் இல்லாதவர்கள் என்பது பாடலின் பொருள்.
'அடுக்கிய கோடி' என்றால் என்ன?

எவ்வளவு தரப்பட்டாலும் நற்குடியினர் விலைபோக மாட்டார்கள்.

கோடிக்கணக்கில் பொருள்களைக் கொட்டிக் கொடுத்தாலும் தம் குடிப்பெருமை குன்றுவதற்குரிய செயலை மேற்கொள்ளமாட்டார் நற்குடிமக்கள்.
குடிப்பிறந்தார் என்றது நற்குடியில் பிறந்தவர்களைக் குறிக்கும் சொல். நல்ல குடும்பத்தில் தோன்றியவர்கள் செல்வச் செழிப்புறுவதற்காகத் தம் குடிப்பெருமைக்கு இழுக்கு நேரும்படியான செயல்களைச் செய்யமாட்டார்கள்.
'குன்றுவ' என்ற சொல்லுக்குத் தம் குடிக்குத் தாழ்வாயின, குல நெறிக்கு உளதாம் குறை, நாணமும் நடுவும் குன்ற வருவன, ஒழுக்கம் குன்றுந் தொழில்கள், பெருமைக்குக் குறைவான, தம் நிலைக்குத் தாழ்ந்த செயல், உலகு குன்றுவ, உள்ளஞ்சிறுகுவ, தமது சீர் குன்றுவதற்குரிய செயல், அறங்குன்றும் செயல்கள், என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் குடிக்குத் தாழ்வாயின என்னும் மணக்குடவர் உரை பொருத்தம். வெட்கத்திற்கும் நாணத்திற்கும் ஆளாகி விட்ட நிலையை மனம் குன்றியது எனப் பேச்சுவழக்கில் சொல்கிறோம். மனம் அடையும் துக்கத்தையும் கசப்பையும் வருத்தத்தையும் 'குன்றுதல்' என்ற சொல் உணர்த்தும். 'குன்றுவ செய்தல் இலர்' என்ற தொடர்க்குச் சிறுமை உண்டாக்கக் கூடிய செயலைச் செய்யமாட்டார் என்பது பொருள். இக்குறளில் அது குடிச்சிறப்புத் தாழவரும் செயலைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். தமது மனம் 'என்ன செய்துவிட்டோம்' என நினைந்து இரங்குதற்குரிய செயல் என்ற கருத்தில் 'உள்ளஞ்சிறுகுவனவுமாம்' என்று உரைத்தார் மு கோவிந்தசாமி (மு கோ). 'குன்றுவ செய்தல் இலர்' என்றதன் கருத்தினை உட்கொண்டு. 'இது மானம் விடார் என்றது' என்று தனது சிறப்புரையில் கூறினார் பரிப்பெருமாள். செய்தல் இலர் என்று சொல்லப்பட்டதால் அத்தகைய செயல்கள் அவர்களுடைய இயல்புக்கும் தன்மைக்கும் பொருந்தாமல் இருத்தலால் அத்தகைய செயல்கள் இல்லாதவர்களாகவே அவர்கள் ஆகிவிடுகிறார்கள் என்ற பொருள் பெறப்படுகிறது.

நற்குடிப் பிறப்பாளர்களின் நேர்மைத் திறம் இங்கு விதந்தோதப்படுகிறது. அடுக்கி வைத்து, 'கோடிப் பணம் இங்கே உள்ளது பெற்றுக்கொள்ளுங்கள்; எனக்கு அந்தச் செயலை முடித்துக்கொள்ள உதவுங்கள்' என்று ஒருவர் வேண்டப்படுகிறார். வேண்டப்படும் அச்செயல் அறமற்றது, சட்டத்திற்குப் புறம்பானது, பலருக்கும் தீமை விளைவிக்கக் கூடியது. தன் கண்முன் கொட்டப்பட்ட பணத்தாசையால் பலரும் அதைச் செய்ய முன்வரலாம். ஆனால், அச்செயலை முடித்துதர வல்லவராக இருந்தாலும், அப்பெரும்பணத்தைப் பெற்றுக்கொண்டால், தங்கள் குடியைப் பற்றித் தப்பாகப் பேசுவார்களே என்பதால் நற்குடிப் பிறந்தார் தீயசெயல்களுக்கு உடம்பட மாட்டார்கள். இங்கு பேசப்படும் பணம் கையூட்டாகக் கொடுக்கப்பெறுவதாகலாம்.
குடிப்பிறப்பாளர்களின் நல்ல செயல்களால்தான் அவர்களுக்கு சிறப்பு உண்டாகியது; அதுவே நற்குடி என்ற பெயரைத் தக்க வைக்கவும் செய்யும். கோடிப் பொருளுக்காக தவறான செயல் புரிந்தால் அவர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவராக இரார் என்றே உலகம் கூறும். எப்பொழுது அவர் தீயசெயல்களில் ஈடுபடுகிறாரோ அப்பொழுதிலிருந்தே நற்குடியாளர் என்ற பெயர் அழியத் தொடங்குகிறது. குடியின் பெருமைக்குத் தாழ்வு வராமல் காத்துக் கொள்ளவேண்டுமானால் அத்தகைய நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டக்கூடாது.
பணம் பாதாளம் வரை பாயும் என்பது பழமொழி. கோடிகள் கொடுத்து எதையும் சாதிக்கலாம்; யாரையும் வளைத்து விடலாம் என்பதுதான் உலகியல். வறுமையாளரோ வளமானவரோ, பணத்துக்காக இழிவான செயல்கள் எவற்றையும் ஆற்ற இவ்வுலகில் பலர் இருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு பெரிய செல்வம் வருவதாக இருந்தாலும் நற்குடிப்பிறந்தார் தம் குடிக்குச் சிறுமை பயக்கும் செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். நல்ல குடும்பத்திலிருந்து தோன்றியவர்கள் தன்னை மட்டுமல்லாமல் தன் குடியையும் சேர்த்தல்லவா உலகம் பழிக்கும் என்பதால் தமது குடிப்பெருமையைக் குலைக்கும் எதையும் நற்குலத்தில் பிறந்தவர்கள் செய்ய மாட்டார். அவர்கள் தம்குடிக்கு மேலும் பெருமை தரும் செயல்களையே எப்பொழுதும் நினைந்து செய்வர். பொருள்பல கிடைக்கும் என்றாலும் குடிப்பண்பிற்குக் களங்கும் உண்டாகும் செயல்களைச் செய்ய இணங்கமாட்டார். கோடி கோடியான செல்வமும் அவரை நற்குணங்களிலிருந்து விலகச்செய்யாது.

........பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் (புறநானூறு: 185-6 பொருள்: பழியால் உலக முழுதும் ஆளும் உயர்வு வரினும் வேண்டார்) என்று சங்கப் பாடல் கூறிற்று.

'அடுக்கிய கோடி' என்றால் என்ன?

'அடுக்கிய கோடி' என்ற தொடர்க்குப் பல கோடிப் பொருள், கோடி தனம், ஒன்று இரண்டு அன்றிப் பிற பல அடுக்கிய கோடி, பலவாக அடுக்கிய கோடி, அநேக கோடி திரவியங்கள், பலவாக அடுக்கிய கோடிப்பொருள், அடுக்கப்பட்ட பல கோடிகள் கொண்ட செல்வம், கோடி கோடி, அடுக்காக உள்ள கோடி செல்வம், அடுக்கிய கோடி, அடுக்கப்பட்ட பலகோடி அளவான செல்வம், தொகுதியான பலகோடிப் பொருள், பலவாகிய அடுக்கிய கோடி அளவிற்கான பொருள், அடுக்கடுக்காகக் கோடிகள் நிதி, பலவாக அடுக்கியகோடிக்கணக்கான பொன், பலப்பலவாக அடுக்கிய கோடி செல்வம், கோடிப் பணம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அடுக்கிய கோடி என்ற சொற்றொடரில் அடுக்குக்கும் வரையறை இல்லை; கோடிக்கும் வரையறை இல்லை. ஆகவே எண்ணற்ற கோடியை அது குறிக்கும். வழக்கிலே சொல்லப்படுவதுபோல் அது கோடானு கோடியாகும். அதாவது, அளவற்ற செல்வமாம்.
கோடி என்பதற்குக் கடைசி என்ற ஒரு பொருளும் உண்டு. அதன் அடியாக முற்காலத்துக் கடைசியெண்ணாக கோடி என்ற சொல் பயிலப்பட்டிருக்கலாம். வள்ளுவர் தொல்காப்பியர் காலத்திற்கும் முன்பே, கோடியென்னும் எண்ணும் அடுக்கிய கோடிகளாகிய எண்களும் வழங்கபட்டமையை அறிகிறோம். அடுக்கிய கோடிகளைக் குறிக்கும் மாபேரெண்களிற் சில வருமாறு:
கும்பம்= ஆயிரங் கோடி
கணிகம்= பத்தாயிரங் கோடி
தாமரை= கோடா கோடி
சங்கம்= பத்துக் கோடா கோடி
வாரணம்= நூறு கோடா கோடி
பரதம்= நூறாயிரம் (இலட்சம்) கோடிக் கோடா கோடி (1-ன் பின் 24 சுன்னங் கொண்டது.)

அடுக்கிய கோடி என்ற தொடர் அடுக்கடுக்காகக் கொண்ட பலகோடிப் பொருள்களைப் பெறுவதாக இருந்தாலும் எனப் பொருளாசைக்கான மேல்வரம்பைக் குறிக்க வந்தது.
குறளில் பிற இடங்களிலும் கோடி (337), பத்து அடுத்த கோடி (அதாவது பத்துக் கோடி) (817), எழுபது கோடி (639), எனப் பேரெண்கள் குறிக்கப்பெறுகின்றன.
'பணம் பத்தும் செய்யும்', 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்' என்பன பழமொழிகள். பணமோ பசியோ நற்குடிப்பிறந்தாரை அசைக்க மாட்டா. எந்தவகையான தாக்குதல்களையும் ஒருமுகமாக வெல்லும் வீறுடையார் நற்குடிப்பிறப்பினர். பலப்பலவாக அடுக்கிய கோடி செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், குடிமையர் தம்இயல்பு மாறாத் தகைமையராவர். தங்கள் குடியின் மதிப்பைக் குறைக்கக் கூடிய தாழ்ந்த செயல்களைச் செய்யமாட்டார்கள்.

'அடுக்கிய கோடி' என்ற தொடர் கோடானு கோடி அதாவது அளவற்ற பொருள் என்பதைக் குறிக்கும்.

கோடி கோடியாகப் பொருள் பெறுவதாயிருந்தாலும் நல்ல குடியில் பிறந்தார் தம் குடிக்குத் தாழ்வாயின செய்தல் இல்லாதவர்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செல்வத்தினும் குடிமைச் சிறப்பு மதிப்பு மிக்கது.

பொழிப்பு

பல கோடிப் பொருள்களைப் பெறுவதாக இருந்தாலும் நற்குடியில் தோன்றியவர் தம் குடிக்குத் தாழ்வுதரும் செயல்களைச் செய்யமாட்டார்.