இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0951



இல்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு

(அதிகாரம்:குடிமை குறள் எண்:951)

பொழிப்பு (மு வரதராசன்): நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

மணக்குடவர் உரை: உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா.
இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.

பரிமேலழகர் உரை: செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா.
(இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல, செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம், பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்.)

இரா இளங்குமரன் உரை: நல்ல குடியில் பிறந்தவர்களிடத்து அல்லாமல் மற்றவர்களிடத்து, நடுவு நிலைமையும் பழிநாணும் தன்மையும் ஒருசேர இயல்பாக அமைவது இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செப்பமும் நாணும் ஒருங்கு இல்பிறந்தார் கண்அல்லது இயல்பாக இல்லை.

பதவுரை: இல்பிறந்தார்- நற்குடியில் தோன்றியவர், நல்ல குடும்பத்தில் பிறந்தவர்; கண்-இடத்தில்; அல்லது-அல்லாமல்; இல்லை-இல்லை; இயல்பாக-இயற்கையாக; செப்பமும்-செம்மையும், எண்ணம் சொல் செயல் மாறாமையும்; நாணும்-தீயன செய்தற்கு அஞ்சுதலும், இழி தொழில்களில் மனஞ் செல்லாமையும்; ஒருங்கு-ஒரு சேர.


இல்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு இயல்பாக உண்டாகா;
பரிப்பெருமாள்: உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது இயல்பாக உண்டாகா;
பரிதி: குடிப் பிறந்தார்க்கல்லது;
காலிங்கர்: குடிப்பிறந்தார்மாட்டு அல்லது பிறர்மாட்டு இல்லை;
பரிமேலழகர்: குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா;
பரிமேலழகர் குறிப்புரை: இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல.

'குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இயற்கையாகவே நற்குடிப் பிறந்தாரிடம்', 'நற்குடிப் பிறந்தாரிடத்து அல்லது பிறரிடத்து இயற்கையாகத் தோன்றா', 'வழக்கமாக நல்ல குடியிற் பிறந்தவர்களிடத்திலன்றி மற்றவர்களிடத்தில் இருப்பதில்லை', 'நல்ல குடியில் பிறந்தோர்க்கு அல்லது இயல்பாக அமைவதில்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நற்குடிப் பிறந்தாரிடத்து அல்லது பிறரிடத்து இயல்பாக அமைவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

செப்பமும் நாணும் ஒருங்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடுவு நிலைமையும், பழி நாணுதலும், ஒருங்கே.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.
பரிப்பெருமாள்: நடுவு நிலைமையும், பழி நாணுதலும், ஒருங்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இல்பிறந்தார் இவ் இரண்டும் இயல்பாக உடையரென்றது.
பரிதி: நடுவு நிலைமையும், நாணுடைமையும் கைவராது என்றவாறு.
காலிங்கர்: நாம் கீழ் விரித்துச் சொன்ன நடுவுநிலைமையும் மேல் விளங்கக் காட்டி விடுவதாகிய நாணுடைமையும் இவை இரண்டும் ஒருங்கு உளவாதல்.
பரிமேலழகர்: செம்மையும் நாணும் சேர.
பரிமேலழகர் குறிப்புரை: செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம், பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம். [மடங்குதல் - செய்வதற்கு அஞ்சுதல்; பிறர்க்காயின் - நற்குடியில் தோன்றாதவர்]

'செம்மையும் நாணும் ஒருங்கே' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுங்கும் நாணமும் சேர்ந்து இருக்கும்', 'நடுவு நிலைமையும் இழிசெயலுக்கு நாணும் நாணமும் ஒருசேர', 'உபகாரக் குணமும் பழிபாவங்களுக்கு அஞ்சி நடக்கும் தன்மையும் சேர்ந்தாற்போல்', 'கருத்துஞ் செயலும் ஒத்திருப்பதாகிய செம்மையும், பழிபாவங்கட்கு அஞ்சும் நாணமும் ஒருங்கே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செம்மையும், இழிசெயலுக்கு அஞ்சும் நாணமும் ஒருசேர என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செப்பமும், இழிசெயலுக்கு அஞ்சும் நாணமும் ஒருசேர நற்குடிப் பிறந்தாரிடத்து அல்லது பிறரிடத்து இயல்பாக அமைவதில்லை என்பது பாடலின் பொருள்.
'இயல்பாக' குறிப்பது என்ன?

குடிப்பிறந்தாரிடம் சில நற்குணங்கள் இயல்பாக அமைந்துளவாக ஏற்றுக்கொள்ளப்படும்.

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் அல்லாமல் மற்றவரிடம் நேர்மைக் குணம், தீயவை செய்ய மனஞ்செல்லாமை ஆகியன ஒருசேர இயல்பாக அமைவதில்லை.
இற்பிறந்தார் என்று நற்குடியில் பிறந்தவர் குறிக்கப் பெறுகிறார். உலகத்து மாந்தர் அனைவருமே இற்பிறந்தார் தாமே எனின், இல்லை என்கிறர் வள்ளுவர். அவரது பார்வையில் நற்குடியிற் பிறந்தாரே இற்பிறந்தார்; மற்றவர் இற்பிறப்பினும் இற்பிறந்தார் ஆகார். ஒழுக்கம் என்பது நல்லொழுக்கதையே குறிப்பது போல் இற்பிறப்பு என்பது நற்குடிப்பிறப்பாம் (இரா இளங்குமரன்).
'இல்- சரவடி அல்லது கொடிவழி என்பார் தேவநேயப்பாவாணர்; இது கொண்டு கொடுத்தலால் வரும் உறவு எனப்பொருள்படும்.

நல்ல குடியில் பிறந்தோருக்கான பண்பு நலன்களைக் கூறவந்த அதிகாரப் பாடல் நற்குடிப்பிறந்தாரிடம் செப்பமும் நாணும் ஒருசேர அமைந்திருக்கும் என்கிறது.
செப்பம் என்ற சொல் செம்மை என்ற பொருளது. செம்மை என்பதற்கு நடுநிலை என்றும் கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை அதாவது எண்ணம் சொல் செயல் மூன்றும் ஒத்திருக்கும் பண்பு - நினைப்பதொன்று, சொல்வ தொன்று, செய்வதொன்றுமாய் இராமை என்றும் விளக்கம் தருவர். சொற்கோட்டம் இல்லது செப்பம்...... (நடுவுநிலைமை 119 பொருள்: சொல்லில் சாயாமல் நேர்மையாகப் பேசுவது நடுநிலைமையாகும்.....), செப்பம் உடையவன் ஆக்கம் ........ (நடுவுநிலைமை 112 பொருள்: நடுவு நிலைமையை உடையவனது ஆக்கம்.....) ஆகிய குறள்களிலே செப்பம் என்பதற்கு நடுநிலை நிற்றல் என அவற்றிற்குள்ளாகவே விளக்கம் உள்ளது. செப்பம் என்பதற்கு நேர்மை தவறாத குணம் என்பது பொருள்.
கூசாமல் குற்றம் செய்பவர்களும், எவ்வகையான தீய செயல் ஆற்றினாலும் அதற்காகச் சிறிதும் வெட்கப்படாத குணம் கொண்டிருப்பர்களும் நாணில்லாதவர்கள் எனப்படுவர். நாண் என்பது இழிதொழில்களில் மனம் செல்லாமை அல்லது தீயன செய்தற்கு அஞ்சுதலைக் குறிப்பது. இங்கு இழிதொழில்களை செய்ய அஞ்சுதல் என்பதே பொருத்தமானது. நாண் என்றதற்கு அடக்க குணம் எனவும் உரைத்தனர்.
எண்ணமும் சொல்லும் செயலும் ஒத்திருக்கும் நடுநிலைமைத் தன்மை, தீயன செய்யக் கூசுதல் என்றிவையிரண்டும் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என்பதை ஒருங்கு என்ற சொல் உணர்த்துகிறது. குடிப்பிறந்தாரிடம் இவை இயல்பாக இயைந்திருக்கும்; மற்றவர்களிடத்தில் அவை இயல்பாக அமைவதில்லை.

'இயல்பாக' குறிப்பது என்ன?

'இயல்பாக' என்பதற்கு இயல்பாக, கைவருதல், இயற்கையாக, சுபாவமாக, வழக்கமாக என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நற்குடிப்பிறந்தாரிடம் நேர்மை, தீமைசெய்ய நாணுதல் போன்ற குணங்கள் அமைந்திருக்கும் என்பதை நாம் ஆராயமலே ஏற்றுக்கொள்ளலாம் (presume) என்பதைச் சொல்ல இயல்பாக என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பிறர் கற்பிக்காமலேயே, இக்குணங்களை இற்பிறந்தார் கொண்டிருப்பர்; சமுதாயம் ஐயத்துக்கிடங்கொடாமல் இச்சிறப்பை ஏற்றுக்கொள்ளும். நற்குடிப் பிறந்தவனாக இல்லையேல் அவனது பண்புகளை முதலில் ஐயுற்று, பின்னர் தெளிந்து, அதன்பின்னரே ஏற்றுக்கொள்ளுமாம். குடிச்சிறப்பில்லாரிடத்துப் பதவியும் நிலையுங் காரணமாகவும் முயற்சியாலும் இப்பண்புகள் அமைத்துக் கொள்ளப்படும் என்பது உட்கிடக்கை.

'இயல்பாக' என்ற சொல் இயற்கையாக என்ற பொருளது.

செம்மையும், இழிசெயலுக்கு அஞ்சும் நாணமும் ஒருசேர, நற்குடிப் பிறந்தாரிடத்து அல்லது பிறரிடத்து, இயல்பாக அமைவதில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உயரிய குடிமைப் பண்புகள் நற்குடிப்பிறந்தாரிடம் மட்டுமே இயல்பாக உள.

பொழிப்பு

செம்மையும், இழிசெயலுக்கு அஞ்சும் நாணமும் ஒருசேர, நற்குடிப் பிறந்தாரிடத்து அல்லது பிறரிடத்து இயற்கையாக. அமைவதில்லை