இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0946



இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்

(அதிகாரம்:மருந்து குறள் எண்:946)

பொழிப்பு (மு வரதராசன்): குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலை நிற்பது போல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

மணக்குடவர் உரை: அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம், மிக உண்பான்கண் நோய்.

பரிமேலழகர் உரை: இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவன் மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும்.
(அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறையஉண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள் அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்'என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.)

வ சுப மாணிக்கம் உரை: கழிவறிந்து உண்பவனிடம் உடல்நலம் இருக்கும்; நிரம்பத் தின்னியிடம் நோய் குடிகொள்ளும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் கழிபேர் இரையான்கண் நோய் நிற்கும்.

பதவுரை: இழிவு-கழிவு, குறைவு; அறிந்து-தெரிந்து; உண்பான்-உண்பவன்; கண்-இடத்து; இன்பம்-மகிழ்ச்சி; போல்-போல; நிற்கும்-நிலைத்திருக்கும்; கழி-மிகுதியான; பேர்-பெரியதாகிய; இரையான்கண்-தீனியை விழுங்குவான் மாட்டு; நோய்-உடற்பிணி.


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம்;
பரிப்பெருமாள்: அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம்;
பரிதி: தீபாக்கினி அறுந்து அசனம் பண்ணுவாரிடத்தில் இன்பம்போலே நின்றது;
காலிங்கர் ('இழிபறிந்து' பாடம்): அளவின்கண் இழிவதாகிய இழிவறிந்து உண்போன் யாவன். அவன் மாட்டு இன்பம்போல இனிது நிற்கும்;
பரிமேலழகர்: அக்குறைதலை நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவன் மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல;
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறையஉண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள் அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம்.

'அறும் அளவறிந்து/குறைதலை நன்று என்று அறிந்து உண்பவன்கண் இன்பம் போல உண்டாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செரிமானம் ஆயினமை அறிந்து அளவாக உண்பவனிடத்து இன்பம் நிலைத்து நிற்குமாறு போல', 'மலசலக் கழிவுகளைக் கவனித்து, உணவோ நீரோ உண்கின்றவனிடத்தில் தேக ஆரோக்கியம் குடிகொண்டிருக்கும்', 'குறைவாக உண்ணுதல் நல்லதென்று அறிந்து உணவு கொள்பவனுக்கு நலம் நிலைப்பதுபோல', 'குறைவான அளவை அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைத்திருப்பதுபோல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கழிவறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைப்பது போல என்பது இப்பகுதியின் பொருள்.

கழிபேர் இரையான்கண் நோய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிக உண்பான்கண் நோய்.
பரிப்பெருமாள்: மிக உண்பான்கண் நோய்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறியவற்றான் உண்ணாதாற்கு நோய் உண்டாம் என்றது.
பரிதி: வெகுவான இரை தின்னும் பேரிடத்திலே நோய் என்றவாறு.
காலிங்கர் ('இழிபறிந்து' பாடம்): யாவர்மாட்டு யாதுஎனின், அங்கி அளவு அறியாத மிகுபேரிரையனிடத்து நோயானது.
பரிமேலழகர்: மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்'என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.

'மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகப்பெரிய அளவு தீனி தின்பவனிடத்து நோய் நிலைத்து நிற்கும்', 'அதைப் போலவே (மலசலக் கழிவைக் கவனிக்காமல்) மேலும் மேலும் உண்டு வயிற்றை அடைக்கிறவனிடத்தில் நோய் குடி கொண்டிருக்கும்', 'மிகுதியான உணவைக் கொள்பவனிடம் பிணியும் நிலைபெறும்', 'மிகப் பெரிய இரையை விழுங்குபவனிடம் நோய் நீங்காது நிலைத்து நிற்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மிகப்பெரும் இரையைத் தின்பவனிடம் நோய் குடிகொள்ளும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கழிவறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைப்பது போல கழிபேர் இரையானிடம் நோய் குடிகொள்ளும் என்பது பாடலின் பொருள்.
'கழிபேர் இரையான்' யார்?

பேராவலுடன் உண்ணும் பெருந்தீனி தவிர்க.

கழிவறிந்து உண்பவனிடம் இன்பம் நீங்காது நிற்றல் போல் அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோய் நிலைத்து நிற்கும்.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம் என்பது ஓர் நல்லின்பமாம். அது என்ன இன்பம்? இழிவு அறிந்து என்பதற்குப் பழம் ஆசிரியர்கள் அறும் அளவறிந்து அதாவது செரிக்கும் அளவு அறிந்து என்றும் உண்ணலாம் அளவில் சிறிது குறைய உண்டல் என்றும் பொருள் கூறினர். பின்வந்தவர்களில் பெரும்பான்மை ஆசிரியர்களும் உடலுக்குத் தேவையான உணவை ஆராய்ந்து குறைந்த அளவு இன்னது என்று அறிந்து உண்பது என்றனர். இழிவறிந்து என்பதற்கு அளவு மீறி உண்பதன் இழிவை உணர்ந்து எனவும் பொருளுரைத்தனர்.
வ சுப மாணிக்கம் இழிவறிந்து என்றதற்குக் 'கழிவறிந்து' எனப் பொருள் கண்டார். நாமக்கல் இராமலிங்கம் இழிவு என்பதற்குக் அறுதற்குக் காரணமான கழிவு என்று பொருள் எனக்கூறி இழிவறிந்து என்பதற்கு கழிவை அறிந்து கொண்டு என்பதுதான் பொருள் என்றார். மேலும் இழிவறிந்து என்பதற்கு 'மலக்கழிவைக் கவனித்துக் கொள்ளவேண்டும்' என்பதோடுமட்டும் பொருள் கொண்டு, காலா காலத்தில் மலங்கழிக்க வேண்டும் என்ற விதியைக் குறிப்பதாக மட்டும் கொள்ளாமல், அந்த மலக் கழிவில் ஏதாவது மாறுதல் இருக்கிறதா என்பதையும் கவனித்து, ஏதேனும் குற்றமிருந்தால் அதற்குத் தக்கபடி அடுத்த உணவைமாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் விரித்துக் கொள்ளலாம் எனவும் கூறுவார். இவ்வுரைகள் இழிவறிந்து என்ற தொடர் செரித்தது உடலினின்று நீங்குவதைக் குறிப்பது எனச் சொல்கின்றன.
குறைவாக உணவு உண்பவன் மிகுதியான இன்பம் அடைவான் என்பதினும் உண்டது செரித்து உடலிலிருந்து கழிவு நீங்கியதை அறிந்து உண்பவனிடத்து இன்பம் நிலைத்திருக்கும் என்பது சிறக்கிறது. அளந்துண்ணல் முன்பே கூறப்பட்டுவிட்டது. இங்கு உண்ணும் அளவு கூறப்படவில்லை; எப்பொழுது உண்பது இன்பமாக இருக்கும்; எப்பொழுது அது துன்பத்திற்குக் காரணமாகும் என்பன சொல்லப்படுகின்றன.

உணலின் உண்டது செரிமானம் ஆகி நீங்குவது இன்பம். அதுபோல் அளவுக்கு மிகையாக உண்டால் நோய்த்துன்பம் வரும். செரித்து நீங்கிய பிறகு உண்பவனிடத்து இன்பம் நிலைத்திருக்கும் என்று பாடலின் முற்பகுதி கூற, அளவுமீறி மிகுதியாக உண்பவனிடம் துன்பம் நிலைத்திருக்கும் என்கிறது பாடலின் பின்பகுதி. குறைவாக உண்டு இன்பம் ஏற்படும் என்பதை உவமையாக ஆக்கிப் பெருந்தீனி கொள்வது நோய் நிலைக்கச் செய்யும் என்பதை வள்ளுவர் உவமேயம் ஆக்கி உள்ளதால், பின்னதே கருத்து அழுத்தம் பெறுகிறது- அதாவது மீதூண் நோய்க்குக் காரணம் என்பதே இங்கு வலியுறுத்தப்படுவது.
அளவுக்கு மீறி இரையை விழுங்கி மகிழ்பவன் இடத்து நோய் நீங்காது நிலைத்து நிற்கும் என அவனை எச்சரிக்கவும் செய்கிறார். அளவோடு உண்டால் ஒருவனிடம் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். பெருந்தீனிக்காரன் உண்டது செரிக்க இயலாமல் உடல் நோய் துன்பத்திற்கு ஆளாவான்; இதயநோய், உடல் பருமனாதல், கொழுப்பு மிகையான அளவில் ஏற்படுதல், வயிறு வீங்கிக்காட்சியளித்தல் உள்ளிட்ட பல உடற் கோளாறுகளும் உண்டாகும்.
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (கேள்வி 412) என்று சொல்லும்போதும் சிறிதுதான் உண்ணவேண்டும் என்பவர் வள்ளுவர்.

ஒரு நீதிக்கு ஒரு நீதி கூறுவதாக அமைந்த மற்றொரு குறள் இது. இழிவறிந்து உண்பதன் இன்பத்தையும் மிகையாக உண்பதன் துன்பத்தையும் வள்ளுவர் இங்கே ஒரே குறட்பாவில் ஒருங்கு கூறியிருக்கிறார். இழிவறிந்துண்பான்கண் இன்பம் உண்டாதல் உறுதி; அது போலக் கழிபேரிரையான்கண் துன்பம் உண்டாதலும் உறுதி என எதிர்மறை உவமையால் அமைந்த பாடல் இது. உவமையின் தன்மை ஒன்றாகவும் பொருளின் தன்மை பிறிதொன்றாகவும் கூறப்பட்டது.
இக்குறளில் முரண் சொற்களில் ஒன்று உவமையாகவும், மற்றொன்று பொருளாகவும், பயன்படுத்தப்பட்டுள்ளது. செரிமானம் அறிந்து உண்பது-மிகையாக உண்பது ஆகிய இரண்டும் முரண்தொடர்கள். அளவு மாறுபாடு (குறைவு/நிறைவு) உண்ணும் நேரம் (செரித்த பிறகு) ஆகிய இரண்டு கூறில் முரண் அமைந்துள்ளது (செ வை சண்முகம்).

செரிமானமடைந்து வெளியேறியபின் உணவு உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்கும். பெருந் தீனிக்காரனிடம் நோய் நீங்காமல் நிலை கொள்ளும் என்பது கூறப்பட்டது.

'கழிபேர் இரையான்' யார்?

'கழிபேர் இரையான்' என்றதற்கு மிக உண்பான், வெகுவான இரை தின்னும் பேர், அங்கி அளவு அறியாத மிகுபேரிரையன், மிகப்பெரிய இரையை விழுங்குவான், வெகுவாகச் சாப்பிடுகிறவன், செரிக்கும் அளவறியாது மிகப் பெரிய இரையை விழுங்குவான், மிகப் பெரிதும் உண்பவன், ஆசையால் மிக அதிகமாக அளவு கடந்து இரையைத் தின்பவன், பெருந்தீனி தின்போன், நிரம்பத் தின்னி, மிகப்பெரிய அளவு தீனி தின்பவன், மேலும் மேலும் உண்டு வயிற்றை அடைக்கிறவன், மிகப் பேரளவு உண்பவன், மிகுதியான உணவைக் கொள்பவன், மிகப் பெரிய இரையை விழுங்குபவன், மிகப் பெரிய உணவை உட்கொள்பவன், ஓயாது இரை எடுப்பவன், மிகப் பேரளவாக வுண்பவன், அளவுக்கு மிகவும் அதிகமான தீனியைத் தின்பவன் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கழிபேர்இரை' என்பதற்கு மிகப்பெரிய அளவு தீனி என்பது நேர்பொருள். இது அளவு மிகுதியை மட்டுமன்றி வேளை மிகுதியையும் குறிக்கும். நாம் இப்பொழுது ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். 'ஒருநாளில் ஒரு பொழுது உண்பான் யோகி, இருபொழுது உண்பான் போகி, முப்பொழுது உண்பான் ரோகி. நாற்பொழுது உண்பான் துரோகி' என்னும் பேச்சு வழக்கு இங்கே நினையத்தக்கது. இன்று மக்களுக்குப் பெரிதும் ஏற்படும் உடல் தொல்லை, அளவிற்கு மிஞ்சிய உடல் வளர்ச்சியாகும். அதாவது உடற்பருமன் அல்லது தடித்தன்மை (obesity) என்பதாகும். இதற்கு முக்கியமான காரணம் அளவு தெரியாமல் தொடர்ந்து உணவு அருந்துவது ஆகும். கண்டநேரமெல்லாம் உண்ணும் பெருந்தீனிக்காரனிடம் நோய் நிலையாகக் குடிகொண்டுவிடும்.

உணவு இன்றேல் உயிர்கள் வாழமுடியாது. ஆனால் எவ்வளவு உணவினை உட்கொள்ளவேண்டும் என்பது தெரிந்து உண்ணவேண்டும். உண்பது இன்ப வாழ்க்கைக்குத்தான். துன்பம் வருவதற்காக யார் உண்ணுவார்? சிலர் தமக்கு பிடித்த உணவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நன்றாக, எவ்வளவு உண்ண முடியுமோ அவ்வளவும் உட்கொண்டுவிட்டு இனி வயிறு ஏற்காது என்று உணர்ந்த பிறகுதான் 'போதும்' என்று உண்பதை நிறுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் கழிபேரிரையான் என அழைக்கிறார் வள்ளுவர். அளவுகடந்து விருப்பம் போல் உண்பவர்களை மக்களாக மதிக்காமல் அவர்களை விலங்கினத்தில் சேர்க்க வேண்டியவர்கள் என்று குறிப்பிட விரும்புகிறார் அவர். ஆனால் வெளிப்படையாக 'விலங்கு' எனச் சொல்லாமல் இரை தின்பவன் என்கிறார். அஃறிணைகளுக்கு இடப்படும் தீனியைத்தான் இரை என வழங்குவோம். பறவைகள் இரை தின்னுகின்றன என்போம். மிகையாக உண்பவனைக் காணும்போது வள்ளுவருக்கு வெறுப்பு உண்டாகிறது. 'ஏன் இப்படி மாடு மாதிரி தின்கிறான்' என எண்ணுகிறார். எனவே அவனை மிகைஉண்பான் எனக் கூறாமல் 'மிகப்பெரிய இரைதின்னி' என்ற பொருள்படும்படி கழிபேர் இரையான் என அழைக்கிறார்.
முதலில் செரித்து நீங்கியது அறிந்து உண்ண வேண்டும் என்று அறிவுரை வழங்கும்போது 'இழிவறிந்து உண்பவன்' என்று சொல்கிறார். அவனைக் குறிக்கும்போது 'உண்பான்' என்று சொன்னவர். மிகுதியாகத் தின்பவனை 'இரையான்' என்று அழைத்து விலங்கினத்தான் என்ற பொருள் தோன்ற வைகிறார். அளவிறந்து பசி எடுத்தாலும் அது விலங்குப் பண்பைத்தான் குறிக்கும்.

'கழிபேர் இரையான்' என்றது மிகப்பெரிய அளவு தீனியை விழுங்குவானைக் குறிக்கும் தொடர்.

கழிவறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைப்பது போல மிகப்பெரும் இரையைத் தின்பவனிடம் நோய் குடிகொள்ளும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கழிவறிந்து உண்ணல் இன்பம் தரும் மருந்து.

பொழிப்பு

கழிவறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைக்கும்; பெருந்தீனிக்காரனிடம் நோய் குடியிருக்கும்.