இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0945



மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

(அதிகாரம்:மருந்து குறள் எண்:945)

பொழிப்பு (மு வரதராசன்): மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

மணக்குடவர் உரை: சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை.
மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்

பரிமேலழகர் உரை: மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது.
(உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று. இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: உடம்பிற்கு ஒத்த உணவையே மனம் வேண்டிய அளவு கொள்ளாமல் மறுத்துச் செரிக்கும் அளவாக உண்டால், உயிர்க்கு வரக்கூடிய பிணித்துன்பம் யாதும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் உயிர்க்கு ஊறுபாடு இல்லை.

பதவுரை: மாறுபாடு-ஒத்துக் கொள்ளாமை, ஒவ்வாமை; இல்லாத-இல்லாத; உண்டி-உணவு; மறுத்து-ஒழித்து; உண்ணின்-உண்டால்; ஊறுபாடு-துன்பம் விளைதல்; இல்லை-இல்லை; உயிர்க்கு-உயிருக்கு.


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின்;
மணக்குடவர் குறிப்புரை: மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்
பரிப்பெருமாள்: சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் மாறுபடாத உணவை உண்ண என்றார்; இதனானே எவ்விடத்தும் மாறு ஆகாமை வருதலின், அஃது எய்தியது விலக்கிச் சுவையும் வீரியமும் மாறுபட்டன நுகர வேண்டும் என்றது. அஃதாவது பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.
பரிதி: தன் சரீரத்திற்கு மாறுபாடு இல்லாத உண்டியை விரும்பின்;
காலிங்கர்: கைப்புப் புளிப்புத் தித்திப்புக் காழ்ப்பு உவர்ப்புத் துவர்ப்பு என்று சொன்ன அறுவகைச் சுவையும் இப்படி மாறுபட வகுத்து உண்ணாது ஒருபடியே உண்ணும் சில்சுவை உண்டியை ஒழித்து மருத்துநூல் கூறியாங்கு உண்ணப்பெறின்; [சில்சுவை உண்டி- சிலவாகிய சுவை வாய்ந்த உணவு]
பரிமேலழகர்: அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; [மாறுகோளும்-மாறுபாடும்; தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றி- மனவிருப்பம்போல் அல்லாமல்]

'சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின்' என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'தன் சரீரத்திற்கு மாறுபாடு இல்லாத உண்டியை விரும்பின்' என்பது பரிதியின் உரை. காலிங்கர் உரை 'ஒரு சுவையையே எப்போதும் உண்ணாது கலந்து மாறி மாறி உண்ணின்' என்ற பொருள்படுவது. பரிமேலழகர் 'மாறுபாடு இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒத்துக்கொள்வதையும் அளவோடு உண்டால்', 'இயற்கைக்கு மாறுபாடில்லாத உணவாயினும், உடலின் தன்மையும் தேவையும் ஆராய்ந்து மறுக்க வேண்டிய உணவை மறுத்துண்டால்', 'உடம்புக்கு மாறுபடாமல் ஒத்துக் கொள்ளுகிற உணவையும் சுவைக்காக ஆசைப்பட்டு மிதமிஞ்சி சாப்பிடுவதை விலக்கி அளவாக உண்டால்', 'மாறுபாடில்லாத உணவை, மிகுதியாக உண்ண வேண்டும் என்ற விருப்பத்தைக் கெடுத்து, அளவோடு உண்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உடம்பிற்கு மாறுபாடில்லாத உணவை, அளவு மீறாமல் மறுத்து, உண்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

ஊறுபாடு இல்லை உயிர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை.
பரிப்பெருமாள்: தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை.
பரிதி: ஊறுபாடில்லை உயிர்க்கு என்றவாறு.
காலிங்கர்: ஓர் இடையூறு படுதல் இல்லை மக்கட்கு என்றவாறு.
பரிமேலழகர்: அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது.
பரிமேலழகர் குறிப்புரை: உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று. இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.

'தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிர்க்கு யாதும் நோய் இல்லை', 'ஒருவனது உயிர்க்குத் துன்பம் உண்டாகாது', 'உடலுக்கும் நோய் வராது; உயிருக்கும் துன்பம் இல்லை', 'உடலுக்குப் பிணிகள் உண்டாகா' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒருவனது உயிர்க்கு இடையூறு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

நிறையுரை:
உடம்பிற்கு மாறுபாடில்லாத உணவை, அளவு மீறாமல் மறுத்து, உண்டால் ஒருவனது உயிர்க்கு இடையூறு இல்லை என்பது பாடலின் பொருள்.
'மாறுபாடு இல்லாத உண்டி' என்பது என்ன?

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

உடல்நலத்துக்கு மாறுபாடு இல்லாத உணவை அளவுக்கு மீறாமல் தடுத்து உண்டால் உயிருக்கு இடையூறு இல்லை.
மாறுபாடு இல்லாத உணவையும் மனம் விரும்பும் அளவு உண்ணாமல், உடலுக்கு ஊறு விளைக்காத அளவு உண்ண வேண்டும்; அவ்வாறு உண்டால் உயிர் வாழ்க்கைக்கு நோயால் வரும் ஊறு இல்லையாகும்.

'மறுத்துண்ணின்' என்ற தொடர்க்கு நீக்கி யுண்பானாயின், கைப்புப் புளிப்புத் தித்திப்புக் காழ்ப்பு உவர்ப்புத் துவர்ப்பு என்று சொன்ன அறுவகைச் சுவையும் இப்படி மாறுபட வகுத்து உண்ணாது ஒருபடியே உண்ணும் சில்சுவை உண்டியை ஒழித்து மருத்துநூல் கூறியாங்கு உண்ணப்பெறின், தன் உள்ளம் வேண்டிய அளவினான் அன்றிப் பிணிவாரா அளவினால், தனது மனது வேண்டியபடியல்லாமல், வியாதி வராதபடிக்குச் சாப்பிட்டால், மிகாமல் மறுத்துண்பானாயின், அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், தன் விருப்பத்திற்கு ஏற்ப உண்ணாமல் தனக்கேற்ற உணவைப் பொருந்திய அளவினதாக ஒருவன் உண்பானாயின், சுவை காரணமாக மேலும் உண்ணும் வேட்கை எழுந்தாலும் அந்த வேட்கையை மறுத்து அளவோடு உண்ணில், அளவோடு உண்டால், உடலின் தன்மையும் தேவையும் ஆராய்ந்து மறுக்க வேண்டிய உணவை மறுத்துண்டால், சுவைக்காக ஆசைப்பட்டு மிதமிஞ்சி சாப்பிடுவதை விலக்கி அளவாக உண்டால், மிக உண்ணுதல் வேண்டும் என்னும் ஆர்வத்தை மறுத்து அதனை அளவோடு உண்டால், மனம் வேண்டிய அளவு கொள்ளாமல் மறுத்துச் செரிக்கும் அளவாக உண்டால், மிகுதியாக உண்ண வேண்டும் என்ற விருப்பத்தைக் கெடுத்து அளவோடு உண்டால், அளவுக்கு மீறாமல் உண்டால், ஒருவன் தன் விருப்பத்திற்கு இடங்கொடாது மேலும் இரு கவளத்திற்கு வயிற்றில் இடமிருக்குமளவு குறைத்து உண்பானாயின், மனம் போனபடி உண்ணாது, உடலின் வளர்ச்சியளவுக்கு உண்ணுவானானால் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மறுத்து என்ற சொல்லுக்கு நீக்கி, ஒரே சுவையை ஒழித்து, நோய் வராத அளவு மறுத்து, மனம் வேண்டிய அளவு கொள்ளாமல் செரிக்கும் அளவாக மறுத்து என்றபடி உரைத்தனர்,
'மறுத்துண்ணின்' என்ற தொடர் மனம் கொள்ளும்படி வயிறு நிரப்பும் பேராசையை மறுத்து உண்பதைச் சொல்வது. உடலுக்கு ஊறு விளைக்காத அளவு தெரிந்து அந்தளவுக்கு உணவு உட்கொள்ள வேண்டும்; அதற்கு மேலானதை தானாகவே மறுத்துவிட வேண்டும்; உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் சுவையான உணவு தனக்குத் தரப்பட்டாலும் அது மிகும் போது, அவற்றை மறுத்து ஒதுக்குக எனச்சொல்லப்பட்டது. உண்டிபோதும் என்று தோன்றுவதற்கு முன்பே உண்பதை நிறுத்திக் கொள்வது நல்ல பழக்கமாம்.
இவ்விதம் அளவு அறிந்து உண்டு வந்தால் உடம்பை உறுத்தும், உயிரை வாட்டும் நோய்கள் வாரா.
மாறுபாடு இல்லாத உணவாயினும் உடலின் தன்மையும் தேவையும் ஆய்ந்து தவிர்க்க வேண்டிய உணவை தவிர்க்க வேண்டிய காலத்தில் மறுத்து கலவைச் சுவையானதும் வீரியம் மிகுந்ததுமான உணவை உட்கொண்டால் உடலை நோய் இன்றிக் காக்க முடியும் என்பது கருத்து.

'மாறுபாடு இல்லாத உண்டி' என்பது என்ன?

மாறுபாடில்லாத உண்டி என்பது மாறுகொள்ளாத உணவு எனப் பொருள்படும். மாறுகொள்வது என்பது ஒவ்வாமை எனவும் அறியப்படும். சில உணவுப் பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் (Diabetics) உள்ளவர்க்கு சர்க்கரை ஆகாது. இதயநோய் உள்ளவர் கொழுப்புச்சத்துகள் உள்ளவற்றைத் தவிர்ப்பார்கள். வயிற்றுப்புண் உள்ளவர்கள் உறைப்பை ஒதுக்குவர். மீறி அந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் உடல் நலத்திற்கு அவை ஊறு விளைவிக்கும்.
பரிப்பெருமாள் 'எவ்விடத்தும் மாறுஆகாமைவருதலின் அஃது எய்தியது விலக்கிச் சுவையும் வீரியமும் மாறுபட்டன நுகர வேண்டும்' என இதை விளக்குவார். காலிங்கர் 'அறுவகைச் சுவையுள் ஒன்றனையே எஞ்ஞான்றும் உண்ணாது அதாவது ஒரே சுவையுணவையுண்ணுதலை ஒழித்துச் சுவைக் கலப்புணவை உண்பதைச் சொல்கிறது; கைப்புப் புளிப்புத் தித்திப்புக் காழ்ப்பு உவர்ப்புத் துவர்ப்பு என்று சொன்ன அறுவகைச் சுவையும் மாறுபட வகுத்து உண்ணவேண்டும் என்கிறார் இவர். பரிமேலழகர் மூவகை மாறு கோளில்லாமையைக் குறிக்கிறார். அவை: உண்பான் பகுதியோடு மறுகொள்ளாமை அதாவது உணவுகள், உண்பவன் உடல் இயல்போடு மாறுகொள்ளதிருத்தல், காலவியல்புகளோடு மாறு கொள்ளாமை, சுவை வீரியங்களான் தம்முள் மாறு கொள்ளாமை என்பன.
‘மாறுபாடில்லாத உண்டி’ என்றதற்கு உடலுக்கும் உள்ளத்திற்கும் மாறுபாடில்லாத என்றும் இயற்கைக்கும் மாறில்லாத என்றும் சூழலுக்கு மாறுபாடில்லாத என்றும் திணைப்புலத்திற்கு மாறுபாடில்லாத என்றும் பருவ நிலைக்கு மாறுபாடில்லாத என்றும் பொருள் கூறினர்.

உடலுக்கு ஏற்ற உண​வே மாறுபாடில்லாத உண்டி.

உடம்பிற்கு மாறுபாடில்லாத உணவை, அளவு மீறாமல் மறுத்து, உண்டால் ஒருவனது உயிர்க்கு இடையூறு இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உடம்புக்கு ஒவ்வாததை உண்ணாது மறுப்பதும் மருந்துதான்.

பொழிப்பு

ஒத்துக்கொள்ளும் உணவாய், வயிற்றுத் தேவையை அறிந்து மறுக்க வேண்டியதை மறுத்து உண்டால் ஒருவனது உடலுக்கு நோய் ஒன்றும் இல்லை.