இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0934



சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்

(அதிகாரம்:சூது குறள் எண்:934)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.

பரிமேலழகர் உரை: சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை.
(அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: துன்பங்கள் பலவற்றைச் செய்து பெருமையைக் கெடுக்கும் சூதைப்போல வறுமையைத் தரவல்லது வேறொன்றும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல்.

பதவுரை: சிறுமை-துன்பம், கீழ்மை; பல-பல; செய்து-செய்து; சீர்-புகழ்; அழிக்கும்-கெடுக்கும்; சூதின்-சூதாட்டம்போல். சூதாட்டத்தைவிட; வறுமை-ஏழ்மை; தருவது-கொடுப்பது; ஒன்று-ஒன்று; இல்-இல்லை.


சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல;
பரிப்பெருமாள்: துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல;
பரிதி: சூது விரும்புகையில் யாவர்க்கும் சிறுமையாவது;
காலிங்கர்: தனக்குக் கீழ்மைகள் பலவற்றையும் செய்வதாய் இங்ஙனம் மேன்மை ஆகிய சீர்மைப் பாட்டினைத் தலையழிக்கும் சூதின் மேற்பட; [சீர்மைப்பாட்டினை - சிறப்பினை; தலையழிக்கும் - வேரோடழிக்கும்]
பரிமேலழகர்: தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்;
பரிமேலழகர் குறிப்புரை: அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார்.

'துன்பமாயின/கீழ்மைகள் பலவற்றையுஞ் செய்து மேன்மை ஆகிய சீர்மைப் பாட்டினை யழிக்கும் சூதுபோல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல இழிவு தந்து பண்பைக் கெடுக்கும் சூதுபோல்', 'துன்பங்கள் பல செய்து புகழைக் கெடுக்கும் சூதுபோல', '(சூதாட்டம்) பல குற்றங்களுக்கு ஆளாக்கி வாழ்க்கையைச் சீரழித்துவிடும்; சூதாட்டத்தைக் காட்டிலும்', 'தாழ்மையான பல கெடுதிகளைச் செய்து ஒருவனது புகழையும் கெடுத்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பங்கள் பல தந்து சீரழிக்கும் சூதுபோல என்பது இப்பகுதியின் பொருள்.

வறுமை தருவதுஒன்று இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.
பரிப்பெருமாள்: வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய எல்லாவற்றையும் தொகுத்து நன்கு மதித்துக் கூறப்பட்டது.
பரிதி: மனத்தில் லட்சுமி துலங்கிய பவிசையுங் கெடுக்கும் என்றவாறு. [துலங்கிய - விளங்கிய; பவிசை -அழகு]
காலிங்கர்: ஒருவர்க்கு வறுமையைத் தரவல்லது மற்று ஒன்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.

'வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமை தருவது வேறில்லை', 'வறுமையைக் கொடுப்பது வேறொன்றில்லை', 'மனிதனுக்குத் தரித்திரத்தை உண்டாக்குவது வேறொன்றும் இல்லை', 'எளிமையையுந் தருவதில், சூதிற்கு இணையானது யாதும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வறுமையை உண்டாக்குவது வேறொன்றில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்பங்கள் பல தந்து சீரழிக்கும் சூதுபோல வறுமையை உண்டாக்குவது வேறொன்றில்லை என்பது பாடலின் பொருள்.
'சிறுமை பலசெய்து சீரழிக்கும்' என்பதன் பொருள் என்ன?

நல்லாயிருப்பவன் சூதாடச் சென்றால் நடுத்தெருவுக்கு வந்துவிடுவான்.

துன்பம் பலவற்றையும் செய்து, சிறப்புகளை இழக்கச் செய்யும் சூதினைப்போல வறுமையைத் தருவது வேறொன்றும் இல்லை.
ஒழுங்குபட்ட வாழ்க்கை நடத்திச் சீரும் சிறப்புடனும் வாழும் ஒருவன் சூதாடத் தொடங்கினால் அதுவரை இல்லாத பலவகைப்பட்ட துன்பங்கள் அவனைத் துரத்தும்; அவனுக்கு இருக்கும் பெருமையெல்லாம் இல்லாததாகிவிடும்; அவனது பொருளாதாரம் உருக்குலைந்து போய் மீளமுடியாத ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவான். இவ்வாறு சூதானது சிறுமை அடையச் செய்து சீரழித்து வறுமையில் வாட வைத்துவிடும் என்கிறது பாடல்.
'சூதின் வறுமை தருவதுஒன்று இல்' என்ற பகுதி, சூதன், உறுதியாக வறுமையில் உழலவேண்டிவரும் என்பதை அழுந்தச் சொல்வது. தனது சீர்மைப்பாட்டைக் காக்கவும் பொருள்நிலை கெடாமல் இருக்கவும் ஒருவன் சூதின் பக்கம் செல்லாமலிருப்பதை வாழ்வு நெறியாகக் கொள்ள வேண்டும் என வள்ளுவர் அறிவு கொளுத்துகிறார்.

'சிறுமை பலசெய்து சீரழிக்கும்' என்பதன் பொருள் என்ன?

சிறுமை: இன்று சிறுமை என்ற சொல் கீழ்மை என்ற பொருளிலே வழங்கப்படுகிறது. ஆனால் சிறுமை என்பது சிறுமை நமக்கொழியச் சேண்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் (உறுப்புநலனழிதல் 1231 பொருள்: பிரிவாற்றாமையாகிய துன்பம் நம்மிடம் நிற்ப நெடுந்தொலைவு போனவரை நினைத்துக் கண்கள் நல்ல மலர்களுக்குத் தோற்று வெட்கப்படுமளவு நலமழிந்தன) என்ற குறளில் (ஆற்றாமைத்) துன்பம் என்ற பொருளில் பயின்று வந்துள்ளது. உரையாசிரியர்களில் பெரும்பான்மையோர் இச்சொல்லுக்குத் துன்பம் என்றே பொருள் கூறுகின்றனர். துன்பம் என்ற பொருளும் இங்கு பொருந்திவரும்.
சூதால் உண்டாகும் துன்பங்கள் யாவை? சூதன் பொருள் இழப்பான்; வயிறார உண்ணமாட்டாதவனாவன்; பழகிய செல்வமும் பண்பும் கெடும்; பொய் சொல்லத் தொடங்குவான்; அருள் கெடுவான்; உடை செல்வம் ஊண், ஒளி, கல்வி ஆகியவற்றை அடையமாட்டான். இவை யாவும் பின்வரும் குறட்பாக்களில் கூறப்பட்டுள்ளன.
'நளன்போல் மக்களைவிட்டுப் பிரிவதும், காதல் மனைவியைக் காட்டில் விட்டு நீங்குவதும், பாண்டவர் போல் மனைவியையும் பணையமாக வைத்திழப்பதும்; பகைவர் அவள் கூந்தலைப்பிடித்து அம்பலத்திற்கு இழுத்து வந்து மானக்கேடாய்ப் பேசி துகிலுரியப் பார்த்திருப்பதும், வென்றவர்க்கு அடிமையராகி மேலாடையைக் களைவதும், பல்வகைச் சிறுமைகளாம்' எனச் சான்று காட்டுவார் தேவநேயப்பாவாணர்.

சீரழிவு: இச்சொல்லுக்குப் பெருமை கெடும், புகழ் குன்றும், பண்பு கெடும் எனப் பொருள் கூறினர். ஒவ்வொருமுறை ஆட்டத்தில் தோல்வியுறும்போது மன உளைச்சல் உண்டாவது, சூதாடுபவனிடமிருந்து நல்லோர் நீங்குவது அவனிடம் சிற்றினத்தார் சேரவருவது நற்செயல்களில் நாட்டம் இழந்து தீச்செயல்களில் ஈடுபடும் காட்டாயம் உண்டாவது போன்றவை சீரழிவைச் சொல்வன. சூதாட்ட ஆசையானது பல குற்றங்களையும் புரிய வைக்கும். அக்குற்றங்களாவன: சூதாட்டப் பணம் அற்றுப் போகும்போது வீட்டிலுள்ள அனைத்து உடைமைகளையும் விற்பது அல்லது கடுமையான வட்டிக்கு அவற்றை அடகு வைப்பது, பொய் சொல்லியோ திருடியோ பணம் திரட்டுவது போன்றன. சூதன் பேசும் சொற்கள் சான்றோர் அவையில் ஏறாதது மனைவி மக்களைப் பேணும் அக்கறை இல்லாதவன் என்ற ஏச்சும் பேச்சும் எழுவது முதலியன பிற சீரழிவுகள்.

துன்பங்கள் பல தந்து சீரழிக்கும் சூதுபோல வறுமையை உண்டாக்குவது வேறொன்றில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஏழ்மைநிலைக்குத் தள்ளும் தீயபழக்கங்களில் முதன்மையானது சூது.

பொழிப்பு

பல துன்பங்கள் தந்து சீரழிக்கும் சூதுபோல் வறுமை தருவது வேறில்லை.