இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0930



கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

(அதிகாரம்:கள்ளுண்ணாமை குறள் எண்:930)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ?



மணக்குடவர் உரை: தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்துத் தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்; நினைப்பானாயின் தவிரும்.

பரிமேலழகர் உரை: கள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும்.
(சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: கள்ளுண்பான் ஒருவன் தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு மயங்கிக் கிடக்கும் பிறனொருவனைக் காணும்போது கள்ளுண்டு மயங்குவதனால் அடையும் இழிந்த நிலையை நினைத்துப் பார்க்க மாட்டான் போலும்; (அந்த இழிந்த நிலையை நினைப்பானாயின் அவன் கள்ளுண்டலைக் கைவிடுவான் என்பது கருத்து.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
கள் உண்ணாப் போழ்தில் களித்தானை காணுங்கால், உண்டதன் சோர்வு உள்ளான் கொல்?

பதவுரை: கள்-கள், நறவு; உண்ணா-குடிக்காத; போழ்தில்-நேரத்தில்; களித்தானை-மகிழ்ந்தானை, மயங்கினானை; காணுங்கால்-பார்க்கும்போது; உள்ளான் கொல்-நினைக்கமாட்டானா?; உண்டதன்-குடித்ததன்; சோர்வு-தளர்வு.


கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்து;
பரிப்பெருமாள்: தான் கள்ளுண்ணாதபோது கள்ளுண்டு களித்தவனைக் கண்டவிடத்து;
பரிதி: கள்ளுண்ணாமல் தெளிந்திருக்கிற வேளையில்;
காலிங்கர்' ('போதில்' என்பது பாடம்): ஒருவன் ஒருபொழுது கள்ளுண்டான் ஆயினும் பின் ஒருபொழுது அது செய்யாதும் இருக்கும் அன்றே; மற்று அப்பொழுதின்கண்ணே கள் பருகித் தன்னை அறியாது கலங்கி வருவானையும் தான் கண்டிருக்கும் அன்றே; அங்ஙனம் கண்ட இடத்தாயினும்;
பரிமேலழகர்: கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே;

'கள்ளுண்ணாமல் தெளிந்திருக்கிற வேளையில் களித்தவனைக் கண்டவிடத்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தான் குடியா நிலையில் குடித்தவனைக் காணின்', 'தான் கள்ளைக் குடிக்காத பொழுதில், குடித்து மயங்கியவன் ஒருவனைக் காணும் பொழுது', 'கள்ளுண்ணும் பழக்கமுள்ளவன், கள்ளை உண்ணாதிருக்கிற சமயத்தில், கள்ளுண்டு போதையினால் மெய்ம்மறந்து தள்ளாடுகிற வேறொருவனைப் பார்க்கும்போதாவது', 'கள்ளுண்பான் ஒருவன் தான் குடியாதபோது மற்றொரு கட்குடியன் அறிவிழந்து தளர்தலைக் கண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தான் கள்ளுண்ணாமல் தெளிந்திருக்கிற வேளையில் குடித்துக்கூத்தாடுபவனைக் காணும் பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்.
மணக்குடவர் குறிப்புரை: நினைப்பானாயின் தவிரும்.
பரிப்பெருமாள்: தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நினைப்பானாயின் தவிரும். இது தமக்கு உளதாகும் குற்றம் காணார் என்றது.
பரிதி: கள்ளுண்டு மெய் அசந்தவன் பட்டபாடு காணானோ என்றவாறு.
காலிங்கர் ('உண்பவன்' பாடம்): கருதி நோக்கானோ அக்கள்ளினைப் பருகுவானது சோர்வினை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை; எனவே எவன் உணர்ச்சிச் சோர்வும், கண் சோர்வும், உடல்சோர்வும், உடைச் சோர்வும் கண்டு, யாமும் அங்ஙனம் கெடுவேம் ஆகாதே என்று உள்ளும் உபாயம் அறியாது, மற்று இதுவே சோர்வு என்று அறிக என்றவாறு.
பரிமேலழகர்: காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.

'தான் கள்ளுண்டபோழ்து தளக்குள்ளதாகுஞ் சோர்வினை நினையான்போலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் குடிமயக்கத்தை ஒருவன் உணரமாட்டானா?', 'அவன் மயங்கிக் கிடக்கும் சோர்வு நிலையை நினைத்துப் பார்க்க மாட்டானா?', 'கள்ளுண்பதனால் தனக்கும் அந்தத் தடுமாற்றம்தானே என்பதைச் சிந்திக்கமாட்டானா! (சிந்தித்தால் ஒருக்கால் திருந்தலாம்)', 'அப்படிப்பட்ட தளர்வு தனக்கும் வருமே என்று மனத்தில் நினைக்கமாட்டான் போலும்!' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கள்ளுண்டதன் சோர்வை நினைத்துப் பார்க்க மாட்டான் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தான் கள்ளுண்ணாமல் தெளிந்திருக்கிற வேளையில் குடித்துக்கூத்தாடுபவனைக் காணும் பொழுது கள்ளுண்டதன் சோர்வை நினைத்துப் பார்க்க மாட்டான் போலும் என்பது பாடலின் பொருள்.
'சோர்வு' குறிப்பது என்ன?

குடித்து மயங்கிக் கிடப்பவனது இழிநிலையைக் கண்டாவது தான் திருந்த வேண்டும் என்று நினைக்க மாட்டானா!

தான் கள்ளுண்ணாத வேளையில், கள்ளுண்டு தாறுமாறான நிலையில் இருப்பவனைக் காணும்போது, தானும் கள்ளுண்டபோது இவ்விதம்தானே ஒழுகியிருப்போம் என எண்ணமாட்டானா!
களித்தான் என்பவன் மிகையாகக் குடித்து மகிழ்பவன்; குடிக்காமல் தன்னால் இருக்கமுடியாது என்று சொல்கின்றவன். மொந்தை மொந்தையாகக் குடிப்பதால் அவனுடைய நடத்தை இழிவுநிலைக்குச் செல்லும். அவன் தன் ஆடைநெகிழ்வதை அறியமாட்டான். வாய் குழறிப் பேசுவான். அறிவு மங்கிவிடும். பின் சோர்வுகண்டு கண்ட இடத்தில் விழுந்து எழமுடியாத நிலையில் மானங்கெட்டுக் கிடப்பான். மனத்தாலும் பேச்சாலும் செயலாலும் தன் கட்டுப்பாட்டை இழந்து இழிந்த நிலையில் தோற்றம் தருவான். குடி என்னும் தீயபழக்கத்தால் உண்டாகும் தீமைகளை பற்றிப் பிறர் சொன்னாலும் கேட்காதவன், அந்தக் கட்குடியன் அடையும் சோர்வையும் அதனால் வரும் இழிவையும் பார்த்துத் தானும் குடித்தபின் அந்நிலையிலேதானே இருந்திருப்போம் என்று எண்ணியாவது, வெட்கப்பட்டு, அத்தகைய சீரழிந்த நிலைக்குத் தன்னைக் கொண்டு வந்த குடிப்பழக்கத்தை விட்டுவிடக்கூடிய மனநிலை ஏற்படாதா என்று இரங்கிக் கூறுகிறார் வள்ளுவர்.

மக்கள் ஒன்றைத் தீமையென்று தாமே உணர்ந்தால் அதைக் கைவிடுவார்கள். கள்ளுண்ணுதலால் உண்டாகும் தீமையையும் இழிவையும் அவர்களே அறியும்படி செய்ய வேண்டும்.
பெருஞ்சாலை விபத்துக்களைக் குறைக்கும் நோக்கத்துடன் விபத்துப் புள்ளிவிவரங்களைப் ஓட்டுநர் பார்வைக்குத் தெரியும்படி பெரிதாக எழுதி வைப்பது, விபத்தில் சிதைவுற்ற ஊர்திகளைச் சாலை ஓரத்தில் போட்டு வைப்பது, விபத்து நடந்த படங்களைக் காட்சிக்கு வைப்பது போன்ற காட்சி அளவை உத்திகளைக் கொண்டு ஊர்திகளைக் கருதல் அளவையால் விழிப்புடன் ஓட்டச் செய்வதை இக்குறள் நினவு படுத்தலாம்.

'சோர்வு' குறிப்பது என்ன?

'சோர்வு' என்ற சொல்லுக்கு மெய் அசந்தவன், உணர்ச்சிச் சோர்வும் கண் சோர்வும் உடல்சோர்வும் உடைச் சோர்வும், மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல், மயங்கிக் கிடக்கிறது, மயங்கிக் கிடத்தல், களித்து மயங்குவது, குடிமயக்கம், மயங்கிக் கிடக்கும் சோர்வு நிலை, மெய்ம் மறந்த தடுமாற்றம், மயக்கம், தளர்வு, விளைவு, அவலம், மயக்கத்தில் தள்ளாடுவது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

சோர்வு என்றதற்குக் காலிங்கர் கள்ளுண்டவனின் உணர்ச்சிச் சோர்வு, கண் சோர்வு, உடல் சோர்வு, உடைச் சோர்வு ஆகிய வகைகளைக் குறிப்பிடுகிறார். பரிமேலழகர் 'மனமொழி மெய்கள் தன் வயத்தவல்லவாதல்' அதாவது 'உள்ளம், சொல், உடல் ஆகியன தம்வழிப்படாமை' எனச் சோர்வுக்கு விளக்கவுரை தருவார். மிகையாகக் கள்ளுண்டவன் ஒருவகையான மயக்க நிலையை அடைவான். அப்பொழுது அவனுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது தெரியாமலே போகும். தன்னையே அறியாது கலங்கித் தள்ளாடி நிற்பான். பின் அயர்ந்துபோய் ஏதாவது ஒரு இடத்தில் விழுந்துவிடுவான். இது குடிமயக்கம் என்று அறியப்படுவது. இந்நிலையே சோர்வு ஆகும்.

'சோர்வு' என்றது இங்கு கள்ளுண்டவன் மயங்கித் தடுமாறும் நிலையைக் குறிக்கும்.

தான் கள்ளுண்ணாமல் தெளிந்திருக்கிற வேளையில் குடித்துக்கூத்தாடுபவனைக் காணும் பொழுது அவனது சோர்வு நிலையை நினைத்துப் பார்க்க மாட்டான் போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கள்ளுண்ணாமை சீரழிவான நடத்தையைத் தவிர்க்கும்.

பொழிப்பு

கள்ளுண்ணாமல் இருக்கிற வேளையில் ஒருவன், கள்போதை நிலையில் உள்ளவனைக் கண்டபொழுது, கள் உண்டதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானா?