இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0922



உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்

(அதிகாரம்:கள்ளுண்ணாமை குறள் எண்:922)

பொழிப்பு (மு வரதராசன்): கள்ளை உண்ணக்கூடாது; சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

மணக்குடவர் உரை: கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.

பரிமேலழகர் உரை: கள்ளை உண்ணற்க - அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க.
(பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: கள் குடியற்க; பெரியோரிடம் மதிப்புப் பெற விரும்பாதார் வேண்டுமானால் குடிக்கட்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கள்ளை உண்ணற்க; உணில் சான்றோரால் எண்ணப்படவேண்டாதார் உண்க.

பதவுரை: உண்ணற்க-அருந்தாதொழிக; கள்ளை-கள்ளை; உணில்-உண்பதானால்; உண்க-உண்ணுக; சான்றோரால் எண்ணப்பட-மதிக்கப்பட; வேண்டாதார்-விரும்பாதவர்.


உண்ணற்க கள்ளை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கள்ளினை உண்ணாதொழிக;
பரிப்பெருமாள்: கள்ளினை உண்ணாதொழிக;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கள் உண்டலைத் தவிர வேண்டும் என்றது.
பரிதி: கள்ளின் மேல் ஆசை உண்டாகில் அப்படிச் செய்க;
காலிங்கர்: எஞ்ஞான்றும் உண்ணாது ஒழிக கள்ளினை;
பரிமேலழகர்: அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக;

'கள்ளினை உண்ணாதொழிக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கள்ளை எப்பொழுதும் குடிக்காதே', 'கள்ளைக் குடிக்க வேண்டாம்', 'கள்ளையுண்டல் கூடாது', 'கள்ளை உண்ணாதொழிக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கள்ளைக் குடிக்க வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

உணில்உண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.
பரிப்பெருமாள்: உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க.
பரிதி: நல்லோர் எண்ணப்பட வேண்டினால் கள்ளை விடுக என்றவாறு.
காலிங்கர்: மற்று உண்ணினும் உண்க; யார் எனின், சான்றோரால் மற்று இவரும் எம்மில் ஒருவர், என்று உடன் எண்ணப்படுதலை வேண்டாதவர்' என்றவாறு.
பரிமேலழகர்: அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க. [அன்றியே-கள்ளினை உண்ணுதல் ஒழியாமல்]
பரிமேலழகர் குறிப்புரை: பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார். [அஃது இல்லாத - அவ்வறிவில்லாத]

'உண்ணவேண்டின் சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரியோரால் நன்மக்களாக எண்ணப்பட விரும்பாதார் வேண்டுமானால் குடிக்கலாம்', '(ஒழுக்கத்திலும் அறிவிலும் உயர்ந்த) மேன்மக்களால் மதிக்கப்படுவதை வேண்டாதவர்கள் குடித்தால் குடிக்கட்டும்', 'உண்ண வேண்டுமாயின், சான்றோரால் ஒரு பொருளாக மதிக்கப்பட விரும்பமில்லாதவர்கள் அதனை உண்ணுக', '; உண்ணல் வேண்டுவோர் உளராயின் பெரியோர்களால் மதிக்கப்பட விரும்பாதார் உண்ணுக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்லோரால் மதிக்கப்பட விருப்பமில்லாதவர்கள் அதனைக் குடிக்கட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கள் உண்ண வேண்டாம்; உணில் நல்லோரால் மதிக்கப்பட விருப்பமில்லாதவர்கள் அதனை உண்க என்பது பாடலின் பொருள்.
'உணில்உண்க' என்பது குறிப்பது என்ன?

கள்குடிப்பவர்கள் சான்றோரின் மதிப்பிலிருந்து கீழ் இறக்கப்படுவர்.

கள் அருந்துதலை தவிர்க; அதை உண்ணத்தான் செய்வேன் எனில் அவர் சான்றோரால் நன்கு மதிக்கப்பட மாட்டாதவர் என அறியலாம்.
அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த பெரியோர் சான்றோர் எனப்படுவர். சான்றோரின் நன்மதிப்பைப் பெறப் பலரும் விரும்புவர். ஆனால் அவர் நற்குணம் கொண்டவரையே விரும்புவர். கள்ளுண்ணல் பொதுவாகத் தீய பழக்கம் என்று அறியப்படுவதாதலால் கள்ளுண்ணுபவர் நற்குணம் கொண்டவர் ஆகார். எனவே அவரைச் சான்றோர் மதிப்பதில்லை. அவரால் மதிக்கப்பட்டால் என்ன அல்லது எண்ணப்படாமல் போனால் எனக்கு என்ன? என்று நினைப்பவர் குடிக்கட்டும். அதாவது அச்சான்றோர்முன் பண்பு கெட்டுத் திரிய நினைக்கிறவன் குடிக்கட்டும் என்கிறார் வள்ளுவர். சான்றோரின் நன்மதிப்பு தேவையில்லை என்று நினைத்தால் அதை அருந்துக என நல்லுரை பகரப்படுகிறது.

'உண்ணற்க கள்ளை' என்று சொல்பவரைப் பார்த்து உண்டால் என்ன என்று வினாத் தொடுப்போர்க்கு 'உண்க சான்றோரால் எண்ணப்பட வேண்டாதார்' என்று விடையிறுக்கப்படுகிறது.
இவ்வதிகாரம் கள் உண்ணுதலைக் கடிவது. கள்ளின் இனிமை பற்றிக் காமத்துப்பாலில் பலமுறை பேசப்படுகிறது. உண்டால் களிப்புத் தருவது கள் என்று பலவிடங்களில் அங்கு வள்ளுவரே கூறியுள்ளார். களிப்புத் தந்தாலும் அதானால் பல தீமைகளும் உண்டு என்பதால் 'உண்ணற்க' கள் என்று கேட்போரை மதிக்கும் வகையிலே அறிவுரையாகக் கூறுகிறார் அவர். பின்பு சான்றோரின் நன்மதிப்பைப் பெற வேண்டா என்று எண்ணுபவர்கள் உண்டு கெடட்டும் எனச் சலிப்புடன் கூறுகிறார்.

'உணில்உண்க' என்பது குறிப்பது என்ன?

'உணில்உண்க' என்ற தொடர்க்கு உண்ணவேண்டின் உண்க, ஆசை உண்டாகில் அப்படிச் செய்க, மற்று உண்ணினும் உண்க, உண்ணல் வேண்டுவார் உளராயின் உண்க, உண்ண வேண்டுவாருஞ் சிலர் உளராயின் உண்க, உண்ண வேண்டுமானால் உண்ணலாம், மீறிக் குடிக்க விரும்புவீராயின் வேண்டுமேல் குடிப்பீர்களாக!, வேண்டுமானால் குடிக்கட்டும், வேண்டுமானால் குடிக்கலாம், குடித்தால் குடிக்கட்டும், குடிக்க விரும்பினால் குடிப்பாராக, உண்ண வேண்டுமாயின் உண்ணுக, உண்ணல் வேண்டுவோர் உளராயின் உண்ணுக, உண்ண விரும்பினால் உண்ணக்கடவர், குடிக்கத்தான் விரும்புவேன் என்றால் நன்றாகக்குடி, உண்ணவே விரும்பின் உண்க, அப்படி உண்பதாக இருந்தால் உண்க என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘உணில் உண்க’ என்பதினும் ‘உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க’ எனப் படித்தால் தெளிவுபயக்கும். கள்ளை உண்ணக்கூடாது என்று சொன்னபின் 'உணில்' அதாவது 'உண்டால் என்ன?' என்று வினவுவோர்க்கு சான்றோரால் மதிக்கப்படா நிலை தோன்றும் என்பதறிந்து உண்க என விடையளிப்பதுபோல் பிற்பகுதி அமைந்துள்ளது. ஒருசிலர் நாம் திரும்பத் திரும்ப சொன்னாலும் கேளாது, தான் மேற்கொண்டுள்ள கெட்டபழக்கத்தை விட மாட்டார்கள். இத்தகையோர் எவரது அறிவுரையையும் புறக்கணிப்பர். அதுசமயம் எதிர்ப்புணர்ச்சி காட்டி கேட்காவிட்டால் கெட்டுப்போ என விட்டுப்பிடித்தால் பயனளிக்கலாம். கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு (பெரியாரைப்பிழையாமை893 பொருள்: தான் கெட விரும்பினானாயின் பெரியாரைக் கலக்காது செய்க; விரும்பியபொழுது கொல்லவல்ல அவரிடத்துக் குற்றம் செய்க) என்ற குறள்நடையில் அமைந்தது இப்பாடல். எற்றுஎன்று இரங்குவ செய்யற்க ...(வினைத்தூய்மை 655 பொருள்: 'என்செய்தேன்' என்று பின் தானே இரங்குதற்குரிய செயலைச் செய்யக்கூடாது......) என்ற குறள் வரியையும் எண்ணிக்கொள்ளலாம்.
உன் நல்லதுக்குத்தான் சொல்கிறோம். அதையும் மீறிக் குடிப்பேன் என்றால் குடித்துக்கொள்; அப்படியும் கள்ளை உண்டால் சான்றோர் உன்னை இகழ்வர் என்பதையும் தெரிந்துகொள் எனச் சொல்லப்பட்டது. கட்குடிக்கு அடிமையானவரை எளிதில் திருத்தமுடியாது என்ற சோர்வுற்ற ஒலியை இத்தொடரில் கேட்கமுடிகிறது.

'உணில்உண்க' என்றது மீறி கள் உண்ண விரும்பினால் உண்க என்பதைச் சொல்வது.

கள் உண்ண வேண்டாம்; உணில் நல்லோரால் மதிக்கப்பட விருப்பமில்லாதவர்கள் அதனை உண்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சான்றோர் தொடர்பு விழைபவர் கள்ளுண்ணாமை மேற்கொள்ள வேண்டும்.

பொழிப்பு

கள் குடிக்க வேண்டாம்; மற்று சான்றோரால் மதிக்கப்பட விரும்பாதார் வேண்டுமானால் குடிக்கட்டும்.